» கோவிந்த ஸ்வாமியுடன் சம்பாஷணை

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

சர்வ மத சமரசம்

மீளவுமங் கொருபகலில் வந்தான் என்தன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன்;
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப் போலே
நம்பிரான் வரவுகண்டு மனம்ம லர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்.
வெளிலுள்ள போதினிலே உலத்திக் கொள்வோம்;

காற்றுள்ள போதேநாம் தூற்றி கொள்வோம்;
கனமான குருவையெதிர் கண்ட போதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை அடித்துக் கொல்வோம்;
பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்” என்றேனுள்ளே

சிந்தித்து“மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயோ!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கேட்டேன் கூறாய்” என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்;
“அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை பந்தமில்லை; பந்தம் இல்லை;
பயமில்லை; பயமில்லை; பயமே இல்லை.

“அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் மன்னிற்கும் பொரளின் நாமம்;
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்; நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை; ஆத லாலே,
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய், சீடா!

“பாரான உடம்பினிலே மயிர்க ளைப்போல்
பலப்பலவாம் பூண்டுவரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்த வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன்செத்தா லன் றிமண்மேல் செழுமை உண்டு

“ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்;
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேரு மிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டிநினை அன்னை காத்தாள்;
பாரினிலித் தருமம் நீ பகரு வாயே.

“ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி “ஓம் நமச் சிவாய”வென்பர்:
“ஹரி ஹரி” யென் றிடினும் அஃதே “ராம ராம”
“சிவ சிவ” வென் றிட்டாலும் அஃதே யாகும்;
தெரிவுறவே“ஓம் சக்தி” யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.

“சாரமுள்ள பொருளினைநான் சொல்லி விட்டேன்;
சங்சலங்கள் இனிவேண்டா. சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக்கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க விகைள் செய்வாய்;
பேருயர்ந்த யேஹேவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.

“பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்று மார்க்கம்.
சநாதன மாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்.
நாமமுயர் சீனத்துத் “தாவு”மார்க்கம்,
நல்ல‘கண் பூசி’மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே

“பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமி நீ: சாமி நீ:கடவுள் நீயே;
தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
சதாகாலம் சிவோஹ’ மென்று சாதிப் பாயே