» தாய் மாண்பு

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
“கண்டார்க்கு நகைப்” பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்?
பண்டாய்ச்சி ஔவை: “அன் னையும் பிதாவும்”
பாரிடை “முன் னறிதெய்வம்” என்றாள் அன்றோ?

தாய்க்குமேல் இங்கேயோர் தெவ் முண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
“தாயைப்போ லேபிள்ளை” என்று முன்னோர்
வாக்குளதன் றோபெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ?

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே....... .... .... ...
நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோம்,அப்பா‘
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலைநான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே.