» மரணத்தை வெல்லும் வழி

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்;
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கை யில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ,
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார்.

பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதியை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றேயங் கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர்புகழும் இமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை;சாவுமில்லை,கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.