» எமனை எலி விழுங்கிற்று!

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

சர்க்கா ருக்குத் தாசன்நான்! ஓர்நாள்
பக்கத் தூரைப் பார்க்க எண்ணி
விடுமுறை கேட்டேன். விடுமுறை இல்லை!
விடுமுறை பலிக்க நோயை வேண்டினேன்.
மார்புநோய் வந்து மனதில் நுழைந்தது!

மலர்ந்தஎன் முகத்தினில் வந்தது சுருக்கம்!
குண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன.
என்பெண் டாட்டி என்னை அணுகினாள்.
எதிரில் பந்து மித்திரர் இருந்தார்.
தூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக்
காயம் அநித்தியம் என்று கலங்கினார்.
எதிரில் நிமிர்ந்தேன்; எமன்!எமன்! எமனுரு!

இரு கோரப்பல்! எரியும் கண்கள்!!
சுவாசமும் கொஞ்சம் சுண்டுவ தறிந்தேன்.
சூடு மில்லை உடம்பைத் தொட்டால்!
கடிகா ரத்தின் கருங்கோடு காணேன்;
கண்டது பிழையோ, கருத்தின் பிழையோ
ஒன்றும் சரியாய்ப் புரிய வில்லை
என்ற முடிவை ஏற்பாடு செய்தேன்!
என்கதி என்ன என்று தங்கை
சொன்னதாய் நினைத்தேன். விழிகள் சுழன்றன!
பேசிட நாக்கைப் பெயர்த்தே னில்லை.
பேச்சடங் கிற்றெனப் பெருந்துயர் கொண்டேன்.
இருப்புத் தூண்போல் எமன்கை இருந்ததே!
எட்டின கைகள் என்னுயிர் பிடிக்க!
உலகிடை எனக்குள் ஒட்டுற வென்பதே
ஒழிந்தது! மனைவி ஓயா தழுதாள்!
எமனார் ஏறும் எருமைக் கடாவும்
என்னை நோக்கி எடுத்தடி வைத்தது.
மூக்கிற் சுவாசம் முடியும் தருணம்
நாக்கும் நன்கு நடவாச் சமயம்,
சர்க்கார் வைத்தியர் சடுதியில் வந்து
பக்குவஞ் சொல்லிப் பத்துத் தினங்கள்
விடுமுறை எழுதி மேசைமேல் வைத்து
வௌியிற் சென்றார். விஷய முணர்ந்தேன்.
"அண்டையூர் செல்ல அவசியம் மாட்டு
வண்டி கொண்டுவா" என்றேன்! மனைவி
எமனிழுக் கின்றான் என்றாள். அத்ததி
சுண்டெலி ஒன்று துடுக்காய் அம்மி
யண்டையில் மறைந்ததும் அம்மியை நகர்த்தினேன்!
இங்கு வந்த எமனை அந்த
எலிதான் விழுங்கி யிருக்கும் என்பதை
மனைவிக் குரைத்தேன். வாஸ்தவம் என்றாள்!
மாட்டு வண்டி ஓட்டம் பிடித்தது!
முன்னமே லீவுதந் திருந்தால்,
இந்நேரம் ஊர்போய் இருக்க லாமே!

Advertisement