» சகோதரத்துவம்

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

உறுதி உறுதி உறுதி!
ஒன்றே சமுகம் என்றெண்ணார்க்கே - இறுதி!
உறுதி உறுதி உறுதி ...

உறவினர் ஆவார் ஒரு நாட்டார் - எனல்
உறுதி உறுதி உறுதி ...

பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்
பிழைநீக் குவதே உயிருள் ளாரின் கடமை - நம்மிற்
குறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங் குங்கோள் - உங்கள்
குகையினை விட்டே வௌிவரு வீர்சிங் கங்காள்
உறுதி உறுதி உறுதி ...

நாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை - நாமே
நம்பித் தேடிக் கொண்டோம் மீளாப் பழியை - நாட்டின்
கோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக்
குற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள்
உறுதி உறுதி உறுதி ...

வாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே - நம்மில்
வஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை - புவியில்
வாழ்வோ ரெல்லாம் சமதர் மத்தால் வாழ்வோர் - மற்றும்
வரிதிற் றாழ்வோர் பேதத் தாலே தாழ்வோர்
உறுதி உறுதி உறுதி ...

தேசத் தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத்
தௌியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் - மிகவும்
நேசத் தாலே நாமெல் லாரும் ஒன்றாய் - நின்றால்
நிறைவாழ் வடைவோம் சலியா வயிரக் குன்றாய்.
உறுதி உறுதி உறுதி ...

பத்துங் கூடிப் பயனைத் தேடும் போது - நம்மில்
பகைகொண் டிழிவாய்க் கூறிக் கொள்ளல் தீது - நம்
சித்தத் தினிலே இருளைப் போக்கும் சொல்லைக் - கேளீர்
செனனத் தாலே உயர்வும் தாழ்வும் இல்லை
உறுதி உறுதி உறுதி ...

Advertisement