» இனி எல்லாமே நீயல்லவோ 10

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

சந்தனா ஓரளவு எதிர்பார்த்தது போலவே, விரைவிலேயே ஒரு நாள், அவளுடைய தந்தை வேலையென்று அவனது அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டிருந்த நேரத்தில், மித்ரா அவளைத் தேடி வந்து நன்றி தெரிவித்தாள்.

"அன்றைக்கு அப்பாவுக்குக் கோபம் என்றதும் ரொம்பப் பயந்துவிட்டேன், ஆன்ட்டி! பெரியவர்கள் யார் கிட்டேயும், நான் பேசினால் அப்பாவுக்குப் பிடிக்காது! ஒரு தரம் போனிலே பேசினதுக்கே, அப்பா போனையே உடைச்சிட்டார்! இப்போ, போன் இல்லையே, என்னையே உடைச்சிடுவாரோன்னு பயமாய் இருந்தது..."

முகத்தில் பாவனை காட்டி அவள் பேசிய தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!

அதைக் காட்டிக் கொள்ளாமல், "அதனாலே, ஆன்ட்டியை உடைத்தால் பரவாயில்லை என்று, என் தலையில் பழியைப் போட்டுவிட்டாயாக்கும்!" என்றாள் கிண்டலாக.

ஒரு கணம் பேந்த விழித்துவிட்டு, "நீ பெரிய ஆள் இல்லையா? பெரியவர்களை உடைக்கவே முடியாது, அடித்தாலும் திருப்பி அடிப்பாங்களோன்னு பயந்து, அடிக்க மாட்டாங்கன்னு, மிச்சி சொன்னானே! அதனாலேதான், அப்படிச் சொன்னேன்!" என்றவள் சந்தனாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "உன்னை உடைக்கலை! ஆனால், அப்பா உன்னை அடித்தாரா?" என்று கண்கள் விரியக் கவலையுடன் கேட்டாள் குழந்தை.

இல்லை என்பது போலத் தலையசைத்தவளுக்கு, சின்னப் பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. காரணகாரியம் கண்டுபிடித்து, இப்படித்தான் என்று முடிவு வேறு!

ஆனால், கோபத்தில் போனை உடைப்பது என்றால்?

யார் மீதோ உள்ள கோபத்துக்கு போன் பலியாகியிருக்க வேண்டும்!

யார் மீது? என்ன கோபம்?

அர்த்தமற்று, அவளிடம் ஆத்திரப்படுகிறானே, அது போலத்தானா?

அல்லது, அதற்கு அர்த்தம் இருக்கிறதா?

தீபனின் திருமணமும், மனைவியின் பிரிவும், பத்திரிகையாளர்களால், பெரிய பிரச்சினை ஆகியிருக்குமா?

அவனுடைய மனைவியின் பிரிவு பற்றி, ஒரே ஒருதரம் குறிப்பிட்டது தவிர, மீனாட்சி ஆன்ட்டியும், மகனின் வாழ்வு பற்றி எதுவும் சொன்னது இல்லை!

தன்னைப் பற்றி எதுவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்ற மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார் என்பது, சந்தனாவின் ஊகம்!

மனதை மறையாது அவளிடம் பேசும் ஆன்ட்டியே சொல்லாத போது, அதைத் துருவிக் கேட்டு, அவருக்குத் தருமசங்கடத்தை ஏற்படுத்தச் சின்னவளுக்கும் விருப்பம் இல்லை!

அத்தோடு, மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் என்பது தவிர, தீபனுக்கும் அவளுக்கும் என்ன இருக்கிறது?

ஆன்ட்டியே சொல்லுகிற மாதிரி, அவனது பணி பற்றிய அழைப்பு வந்ததும், திரும்பவும் யுஎஸ்சுக்கு ஓடப் போகிறான் என்பதும் நிச்சயம்! அப்படித் திட்டம் இல்லையென்றால் தான், மருத்துவமனை நிர்வாகத்தை தாய்க்கு உதவியாக நேரில் போய்ப் பார்த்திருப்பானே!

அவன் இங்கே தங்கப் போவதில்லை என்பதற்கு, இது ஒன்றே, நிச்சயமாக சான்று!

அப்படியே, இந்தியாவிலேயே அவன் இருப்பதானாலுமே, இங்கே உள்ள கோடிக் கணக்கான மனிதர்களில், அவனும் ஒருவனாக இருக்கப் போகிறான்!

அவனைப் பற்றி யோசித்து, மனதைக் குழப்பிக் கொள்ளுவானேன்?

அதை விடவும், நல்ல தங்குமிடம் ஒன்றைக் கண்டு பிடித்துப் போய்விட்டால், தீபனுக்கும் அவளுக்கும் தொடர்பே இருக்கப் போவதில்லை!

முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும்!

சந்தனா யோசித்து ஒரு முடிவுக்கு வருகையில், "என் மேலே கோபமா ஆன்ட்டி?" என்று கேட்டது ஒரு சின்னக் குரல்!

திகைப்புற்றுப் பார்த்தால், தன் பொம்மையை இறுகக் கட்டி அணைத்தபடி, அவள் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சிறுமி!

பொம்மையை அவள் அணைத்திருந்த விதம், சந்தனாவை ஒரு மாதிரித் தாக்கியது!

ஏதோ, தனக்கு வேறு துணையே இல்லாத மாதிரி...

இவளை என்ன செய்வது?

சட்டென மனம் உருக, அவளை அருகிழுத்து, "அப்படி யார் சொன்னது? மித்ராக் குட்டிகிட்டே கூட யாருக்காவது கோபம் வருமா என்ன? மித்ரா என்றாலே என்ன அர்த்தம் தெரியுமா? சினேகிதி! உலகத்தில் எல்லோருமே, உன்னிடம் நட்பாகத்தான் இருப்பார்கள்! அதாவது, நீ எனக்கு சினேகிதி. நான் உனக்குச் சினேகிதி!" என்றுரைத்து, சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சந்தனா!

சிறுமியும் சந்தோஷமாகப் பதிலுக்கு அவளை முத்தமிட, அவர்களுக்கிடையே, ஒரு ரகசிய ஒப்பந்தம் அமுலாகத் தொடங்கிற்று!

அன்றிலிருந்து சந்தனா வீட்டில் இருக்கும் சமயங்களில் தீபன் வேலை என்று அவனது அறைக்குள் புகுந்துவிட்டான் என்றால், மித்ரா விழுந்தடித்துக் கொண்டு, சந்தனாவிடம் ஓடி வந்து விடுவாள்.

அது, இது என்று சிறுமி ஏதாவது தன் யுஎஸ் தோழர்கள், அவர்களோடு சேர்ந்து விளையாடும் இடம், அங்கே இருக்கும் விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் பற்றிச் சொல்லுவாள்.

பொறுமையாகக் கேட்பதோடு, இங்குள்ளது பற்றி சந்தனா சொல்லுவாள்.

படக்கதைப் புத்தகங்களை வாங்கி வந்து, இதிகாசக் கதைகளைக் கற்றுக் கொடுத்தாள். அவளுடைய தந்தை செய்தது!

கிரேயான், க்ளே வாங்கி வந்து கொடுக்கவே, படங்கள் வரைவதும், உருவங்கள் செய்வதும், உற்சாகமான பொழுது போக்காயிற்று!

முதலில், மீனாட்சி அம்மாள் சத்தம் கேட்டாலும் மித்ரா ஓடி விடுவாள்.

ஆனால், விரைவிலேயே பாட்டி தன் பக்கம் என்று தெரிந்து விடவும், அவ்வப்போது, அவளையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டாள் பேத்தி!

ஆனால் எல்லாமே, எப்போதுமே வெகு சுமுகமாகவே இருந்தது என்று சொல்ல முடியாது!

பெரும்பாலும் தனித்திருந்து வளர்ந்தவள் என்பதால், சில பிடிவாதங்கள், முசுட்டுத்தனம், காட்டுக் கத்தல் எல்லாம் மித்ராவுக்கும் இருக்கவே செய்தது!

இவள் நம்மிடம் பிரியமாக இருக்கிறாளே, இன்னும் எவ்வளவு சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்று, குழந்தைகளுக்கே உரிய முறையிலும், மித்ரா நடந்துகொள்ளத்தான் செய்தாள்.

ஆனால், பள்ளி ஆசிரியை என்கிற முறையில், இந்த மாதிரிப் பிள்ளைகளையும் சமாளித்துப் பழகியிருந்ததால், மித்ராவைச் சமாளிப்பதும், சந்தனாவுக்குக் கடினமாக இருக்கவில்லை!

மீனாட்சிக்குச் சந்தனாவிடம் நம்பிக்கை இருந்ததால் இதில் தலையிடுவது இல்லை!

தீபன், அவனது கம்ப்யூட்டர் வேலையில் முழுகிவிட்டால், அவனை வெளியே பார்க்கவே முடியாது என்பதால், அவனது தலையீடும் இராது போகவே, கண்டிப்பும் கனிவுமாகச் சந்தனா, மித்ராவைக் கவனித்ததில், சிறுமியின் உடலும் தேறலாயிற்று!

அத்தோடு, ஒரே வீட்டில் இருக்கையில், ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருப்பது கடினம் என்று தீபனுக்குமே புரிந்திருந்ததால், சில பொதுவான நேரத்துக்கு உரையாடல்களை, அவனும் தடுக்க முயன்றதில்லை.

அதனால், தீபன் முன்னிலையிலும் கூட, ஒரேயடியாக அன்னியமாகக் காட்டிக் கொள்ளாமல், ஓரளவுக்குச் சந்தனாவும் மித்ராவும் சாதாரணமாகப் பேச முடிந்தது! ஆனால், அவன் அறியாமல் அறைக்குள் கொட்டமடிப்பதை மட்டும் இருவருமே அவன் அறியக் காட்டிக் கொள்வதில்லை!

அன்று இரு பெண்களும் மட்டுமாகச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்!

தீபன் வேலையிலிருந்து வெளியே வரவில்லை!

மீனாட்சி, மருத்துவமனை வேலையாகச் சென்றவள், இன்னமும் திரும்பியிருக்கவில்லை!

அன்றையச் சிற்றுண்டி, புட்டு!

பொதுவாக இங்குள்ள சிற்றுண்டி வகைகளை பிடிக்காவிட்டால், ரொட்டியில் வெண்ணை, ஜாம் தடவிக் கொடுத்துவிட்டால், மித்ரா சந்தோஷமாகச் சாப்பிட்டு விடுவாள்.

அவளே, இப்படிச் சாப்பிடு நன்றாக இருக்கும் என்று சந்தனா சொன்னால், அவளிடமிருந்து வாங்கி ருசி பார்த்துவிட்டு, உரிய அளவு உண்ணவும் பழகி இருந்தாள்.

ஆனால், அன்றைக்கு என்னவோ, தனக்கு எதுவும் வேண்டாம், ஃபிரிஜ்ஜில் இருக்கும் சாக்லேட்டுகள் அத்தனையும் வேண்டும். பார்க்கவே நன்றாக இல்லாத புட்டுக்குப் பதிலாகச் சாக்லேட்டைத்தான் சாப்பிடப் போகிறேன் என்று அடம் பிடித்தாள் மித்ரா!

தானாகச் சொல்லிப் பார்த்துவிட்டு, சமையல்காரம்மா, சந்தனாவிடம் முறையிட்டாள்.

சந்தனா மென்மையாகச் சொல்லச் சொல்ல, மித்ராவின் பிடிவாதம் அதிகம் ஆயிற்று!

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "இந்தப் புட்டைத் தான் சாப்பிட வேண்டும்! பிடிக்காவிட்டால், ரொட்டி, சாக்லேட் கிடையவே கிடையாது!" என்று சாவி கொண்டு பூட்டக் கூடிய, அந்தப் பழைய காலத்து ஃப்ரிஜ்ஜைப் பூட்டிச் சாவியைச் சமையல்காரம்மாவிடம் சந்தனா கொடுத்துவிட, மித்ரா அழத் தொடங்கினாள்!

"ஷ்! என்ன மித்ரா..." என்று சந்தனா அவளை அமைதிப் படுத்த முயலுகையில், "அவள் கேட்பதைக் கொடுத்துவிட வேண்டியதுதானே?" என்று தீபனின் குரல் கேட்கவும், திகைப்பில் சந்தனா துள்ளிக் குதிக்காத குறை எனலாம்!

தந்தையைக் கண்டதும், மித்ரா சலுகையாக, இன்னும் அழுதாள்.

"எலிசா ஆன்ட்டி, எனக்கு எவ்வளவு சாக்லேட் கேட்டாலும் கொடுப்பாளே! சந்தனாவையும் கொடுக்கச் சொல்லு!" என்று அழுதாள் சிறுமி!

சந்தனா முகத்தில் ஐயம் தெரிந்ததோ, என்னவோ, "உடனே, தப்பாக நினைக்க வேண்டாம்! எலிசா என் ஏஜண்ட்! என்னை விடப் பத்து வயது பெரியவளும் கூட!" என்று எரிச்சலுடன் மொழிந்தான் தீபன்!

அத்தோடு நிறுத்தாமல், "பெரிய ஒழுக்க சிகரம்! தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே, மோசம் என்று எண்ணிக் கொள்வது! அல்லது, தன்னைப் போல என்றோ, என்னவோ?" அவள் காதுகளில் விழுமாறு, தெளிவாகவே முணுமுணுத்தான்!

ஆத்திரமுற்று, "சாக்லேட்டை அள்ளி அள்ளிக் கொடுப்பாளாமா? அப்படியானால், ஆன்ட்டி அன்று சொன்னது போல, அவள் உங்களைக் கெடுப்பதோடு நில்லாமல், மித்ராவையும் கெடுக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று சுள்ளெனச் சொல்லிவிட்டாள் சந்தனாவும்!

"ஏய், ஜாக்கிரதையாகப் பேசு! மித்ராவுக்கு விபத்து நடந்த போது, உடனே வந்து செயல்பட்டு, அவளது உயிரைக் காப்பாற்றியது, எலிசாதான்! அவளுக்கு இல்லாத அக்கறையும் அன்பும், உனக்கு இருக்க வாய்ப்பில்லை! வெறும் பந்தாக் காட்ட வேண்டாம்!" என்று கோபத்துடன் தூக்கி எறிந்து பேசினான் அவன்!

உண்மையான அக்கறையை, அவன் அலட்சியமாகப் பேசியது எரிச்சலூட்ட, "அப்படி அவள் வந்து காப்பாற்றுகிற நிலையில் மகளை விட்டுவிட்டு, நீங்கள் அப்படி என்ன வெட்டி முறித்துக் கொண்டு இருந்தீர்களாம்?" என்று குத்தலாகக் கேட்டு, அவனை மட்டம் தட்டினாள் அவள்.
அவள் மட்டந் தட்டத்தான் சொன்னாள்! ஆனால், உண்மை சுடும் அல்லவா?

சூடு தாங்காமல், அவளிடம் தப்புத் தேடினான் தீபன்.

"அப்படியானால், அதைத் தெரிந்து கொள்ளத்தான், இத்தனை முயற்சியுமா? என்னவோ, வேலை அது, இது என்று நிஜம் போல அளந்தாயே!" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் விஷயம் மறக்கப்பட்டு விடப் போகிறதே என்று எண்ணிய மித்ரா "சாக்லேட், சாக்லேட்!" என்று, காலை உதைத்துக் கத்தினாள்!

"அதைக் கொடுத்துதான் தொலையேன்!" என்றான் அவன் எரிச்சலுடன்.

"நல்ல பொறுப்புள்ள தந்தை! இப்படி யாருக்குக் கிடைப்பார்!" என்று ஏளனமாகச் சிலாகித்துவிட்டு, மித்ராவிடம் திரும்பினாள்.

தீபன் ஆத்திரத்துடன் முறைத்ததை, அவள் கண்டுகொள்ளவே இல்லை!

அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியவள், பள்ளி அனுபவம் கைகொடுக்க, கண்டிப்பான குரலில், "மித்ராம்மா, நீ எவ்வளவோ நல்ல பெண் என்று நினைத்தேன்! இப்படிக் காலை உதைத்துக் கத்துவது, நல்ல பெண்கள் செய்வதா? சொல்லு!" என்று அதட்டிக் கேட்டாள்.

"அது..." என்று ஒரு கணம் தடுமாறிவிட்டு, "ஆனால், நீ சாக்லேட் தரமாட்டேன் என்கிறாயே!" என்று காரணம் சொன்னாள் சிறுமி!

"எப்படித் தருவது? நீ நல்ல பெண்ணாக இருந்தால், அதற்குப் பரிசாகச் சாக்லேட் மாதிரி இனிப்புகளைத் தரலாம்! ஆனால், ஒழுங்காகச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது, எப்படிப் பரிசு கொடுப்பது? அதற்கும் மேலாக, இப்போது மோசமாக வேறு நடக்கிறாயே! இந்த வீட்டில் வேறு யாரும் சாக்லேட் சாப்பிடுவதில்லை! மித்ரா நல்ல பெண். அவளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்று நல்ல நல்ல சாக்லேட் எல்லாம் வாங்கி வைத்தால், அதை உனக்குக் கொடுக்க விடாமல், நீயே பண்ணுகிறாயே!"

சற்று விழித்து விட்டு, "ஆனால், எனக்குச் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதே!" என்றாள் சிறுமி.

"சாப்பிடு! முதலில் இந்தச் சிற்றுண்டி எவ்வளவு ருசி தெரியுமா? புட்டரிசி என்று இதற்கென்றே தனியாக உள்ள புட்டரிசி என்ற ஒரு தினுசு அரிசியில் மாவு செய்து, தேங்காய்ப் பூ, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய், இனிப்பு எல்லாம் போட்டு, மிகவும் நன்...றாக இருக்கிறது! இந்தப் பலகாரத்தில், நீ இவ்...வளவு வளருவதற்கு வேண்டிய எத்தனை சத்துக்கள் இருக்கிறது, தெரியுமா? இதெல்லாம் சாப்பிட்டால், சீக்கிரமே... உன் அப்பா மாதிரி, உயரமாக வளர்ந்து விடலாமே! சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு, சாக்லேட்டை வாங்கிக் கொள்! வா! சீக்கிரம்!" என்று, சந்தனா நிறைய ஆசை காட்டவும், மித்ரா யோசித்தாள்.

அவளும் வெறும் அழும்பு பிடிக்கும் பெண் அல்ல என்பதால், "அப்படியானால், சாப்பிட்டதும் சாக்லேட் தரணும்!" என்ற நிபந்தனையோடு புட்டை உண்ண வந்தாள்.

"மித்திக் குட்டி நல்ல பெண் என்பதுதான் எனக்குத் தெரியுமே!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "கட்டாயம் தருவேன்! ஆனால், இன்னொரு தடவை இப்படிக் காலை உதைத்து அசிங்கமாகக் கத்தினால் அப்புறம், இரண்டு நாட்களுக்குச் சாக்லேட்டே கிடையாது!" என்று அதையும் பிள்ளை மனதில் பதிய வைத்தாள் சந்தனா!

கிண்ணத்தில் தனக்கென்று கொஞ்சம் புட்டை எடுத்து வைத்த தீபன், கீழ்க் கண்ணால் அவர்கள் இருவரையும் ஒரு தரம் பார்த்து விட்டுக் கிண்ணத்துடன் அங்கிருந்து அகன்றான்!