» இனி எல்லாமே நீயல்லவோ 11

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

தீபனின் பார்வையைச் சந்தனா பெரிதாக நினைக்கவில்லை!

அவனைப் பொறுத்தவரையில், சந்தனா கெட்டவள்! அவனைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து, அதாவது அவனைப் பற்றிய மோசமான விவரங்களைக் கண்டறிந்து, ஏதோ அமெரிக்கப் பத்திரிகைக்கு அனுப்புவதற்காகவே, வேறு ஏதோ காரணத்தைக் காட்டி அவனுடைய அன்னையை ஏமாற்றி, இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள்!

யார் என்ன சொன்னாலும், இந்த எண்ணத்தை அவன் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை!

போகட்டும்! அவனது கருத்து அவனோடு என்று சந்தனாவும் அதைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டாள்!

எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை அவனாக ஏற்படுத்தியதோடு, அதையே குரங்குப் பிடியாக ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தால், அதைப் பற்றி நினைப்பதே, நேர விரயம் தானே?

தன்னை ஒருவர் தப்பாக நினைப்பது, அதுவும் மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் அப்படி எண்ணுவது அவளுக்கு வருத்தம் தான்!

ஆனால், ஆன்ட்டியின் அபிப்பிராயப்படியே, தீபன் இன்னும் சில நாட்களில், தன் மாபெரும் சொர்க்கம் அமெரிக்காவுக்குப் பறந்துவிடப் போகிறான்! அங்கே போய், அவன் என்ன நினைத்தாலும், அது அவளைப் பாதிக்கப் போவது இல்லையே!

இங்கேயே, அப்படித்தான், பாதிப்பின்றி தான் இருக்க வேண்டும்! ஆனால், ஏனோ அவளால் ஒரேயடியாக அப்படி அலட்சியப் படுத்த முடியவில்லை!

அதனாலேயே ஒருவேளை, அவன் இங்கேயே இருந்து விடக் கூடுமோ என்ற எண்ணத்தில், தங்குவதற்கான இடத்துக்காக, நல்ல விடுதி ஒன்றைத் தேடிக் கொண்டேதான் இருந்தாள்!

ஆனால் மித்ரா?

அவளைப் பற்றிய கவலை, சந்தனாவுக்கு இருந்தது!

தந்தை சங்கமித்ரனின் பெயரில் பாதியை மகளுக்கு வைத்ததோடு மகள், தந்தை இருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதாகத் தீபன் எண்ணுகிறான் என்பது, சந்தனாவின் அபிப்பிராயம்!

மற்றபடி, தந்தை விட்டுச் சென்ற தொழிலையும் அவன் பார்க்கவில்லை!

பெற்ற மகளுக்கு வேண்டியதையும் செய்யவில்லை!

இந்த வயதில் அவள் அங்கே தனிக் குழந்தையாக வளர்வது போலத்தானே தெரிகிறது!

எப்போதோ ஒரு முறை சந்திக்கும் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் தவிர, அங்கே மித்ரா தனிமைச் சிறையில் தான் இருந்திருக்கிறாள்!

அவனுக்குப் பிடிக்காதுதான்! ஆனாலும், குழந்தையின் தனிமை ஏக்கம் பற்றித் தீபன் கிளம்பும் முன், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று, சந்தனா தீர்மானித்திருந்தாள்!

மித்ராவிடம் இருந்த பரிதாபத்தினாலேயே அவளுடைய தந்தைக்கு மறைத்து, அவளுடன் நெருங்கிப் பழக, சந்தனாவுக்குத் தயக்கமே வரவில்லை!

இங்கே இருக்கும் வரையேனும், மித்ராவுக்கு ஒரு துணை இருக்கட்டுமே!

இந்த எண்ணத்தினால், தீபன் அறியாமல், மித்ரா அவளது அறைக்கு வருவதும், பேசிப் பழகுவதும், தொடர்ந்து நடந்தது!

தீபன் அறியாமல் இது நடப்பதாகத்தான் சந்தனா நினைத்திருந்தாள்!

ஆனால், சில நாட்கள் கழித்து, ஒரு விடுமுறை தினத்தன்று, மீனாட்சியும், மித்ராவும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்த பிறகு, அவளது அறைக் கதவைத் தட்டி, அறைக்குள் வந்த தீபன் வேறு சொன்னான்!

அந்த நேரத்தில், அவனை, அதுவும் அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றவளின் தோளைப் பற்றி நகர்த்திவிட்டு, அறையினுள் வந்து, தன் மகள், சந்தனாவின் அறைக்கு அடிக்கடி வருவது, தனக்குத் தெரியும் என்றவன், "நீ எதற்காக என் மகளுக்கு இப்படி வலை விரிக்கிறாய் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்" என்றும் சேர்த்துச் சொன்னான்!
வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா என்ன, மீனா? என்ன உளறல் என்று தோன்றியது சந்தனாவுக்கு! அத்தோடு, எப்போது பார்த்தாலும், ஏதாவது இல்லாத பொல்லாத குறை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று அவளுக்குக் கோபமும் வந்திருந்தது!

"வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா மீனோ, மானோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! ஆனால், உங்களுக்கு என்னவோ தெரியும் என்றீர்களே, அது என்னது, என் மனதுக்குள்ளே எனக்கே தெரியாமல் ஒளித்து வைத்திருந்தது, நீங்கள் கண்டுபிடித்துவிட்ட சிதம்பர ரகசியம்?" என்றாள் கிண்டலாக. "சொன்னால், அய்யோ பாவம், எதையும் அறியாத நானுமே அதைத் தெரிந்து கொள்ளுவேனே!"

"ஓகோ! இப்படி ஏளனமாகப் பேசினால், உண்மை, பொய்யாகிவிடும் என்கிற எண்ணமா?"

"அந்த உண்மை எது என்று சொன்னால் தானே, அது உண்மையா, பொய்யா என்பது தெரியும்?" என்று, மீண்டும் மட்டம் தட்டும் குரலிலேயே கேட்டாள் சந்தனா!

நல்லவேளை, ஆன்ட்டி இங்கே இல்லை! அவர்கள் எதிரில், அவர்களுடைய மகனை இப்படி மட்டம் தட்ட மனம் வராது!

"எது உண்மை என்று எனக்குத் தெரியும்! உன் சர்டிஃபிகேட் அவசியம் இல்லை!" என்றான் அவன் உதாசீனமாக.

"சந்தோஷம்! ஆனால், உண்மை உண்மை என்கிறீர்களே, அந்த உண்மை என்னவென்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! உண்மை சொல்வது, உங்களுக்கு அவ்வளவு கடினமா?"

இது நிஜமாகவே, நன்றாகத் தைக்கும் என்று எண்ணுகையில், சந்தனாவுக்கு உற்சாகமாகக் கூட இருந்தது!

தானுண்டு, தன் வேலையுண்டு என்று சும்மா இருக்கிறவளை, எத்தனை முறை இப்படி வலிக்கப் பேசியிருப்பான்! இப்போது, அவன் முறை! படட்டுமே என்று எண்ணும்போதே, இதற்காக வேறு தன் மீது ஆத்திரப்படுவானே என்று, அவளுக்குப் பெருமூச்சும் வந்தது!

"என்ன? கிண்டலாகப் பேசினால், சமாளித்து விடலாம் என்று எண்ணமா?"

"நீங்கள் தான், என்னவென்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே!"

"சொல்லாமலேதான், தெரியுமே என்று நினைத்தேன்! காது குளிரக் கேட்கத்தான் ஆசை என்றால், இதோ சொல்கிறேன், கேட்டுக்கொள்! அம்மாவை ஏமாற்றி, இந்த வீட்டுக்குள் வந்தாய்! அடுத்துச் சின்ன குழந்தையை மயக்கி, அவள் மூலமாக, என்னையும் வளைத்துப் போட்டு விடலாம் என்பது உன் திட்டம்...!"

சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை!

வந்ததில் இருந்து, அவளிடம் கடுமையாக மட்டும் தான் பேசியிருக்கிறான்! நல்ல வார்த்தையே.. நல்ல வார்த்தை இருக்கட்டும், மனிதனுக்கு மனிதன் காட்டும் சுமுகம் கூடக் கிடையாது. இருந்திருந்து, இவனை வளைத்துப் போடுவதா?

எதற்கு?

அருகில் இருந்து கொத்திப் பிடுங்கிக் கொண்டே இருப்பதற்கா?

என்ன மடத்தனம்!

அவனிடமே கேட்டாள், "அப்படி உங்களை எதற்காக சார், நான் வளைத்துப் போட்டாக வேண்டும்?" என்று, புருவம் உயர்த்தி விசாரித்தாள் அவள்.

எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டு, அவளை ஊடுருவுவது போலப் பார்த்தான் தீபன்.

பிறகு, "எத்தனையோ காரணங்கள்! முக்கியமாக யுஎஸ் மோகம்! அதுதானே, உங்களுக்கெல்லாம் தலையாய குறிக்கோள்! அதை அடைவதற்குத்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாமே!" என்றான் ஏளனமாக.

"இதை, நீங்கள் சொல்லுகிறீர்களா? தன் முதுகு தனக்குத் தெரியாது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! என்னவோ படிக்கப் போய், அந்த நாட்டிலேயே ஐக்கியமானவர்!..."
மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் உன்னைப் பற்றிச் சொன்னேன்! அதற்குப் பதில் சொல்!" என்றான் அவன்.

"தாராளமாகச் சொல்லுகிறேன்!" என்று நிமிர்ந்தாள் சந்தனா. "யுஎஸ் ஒன்றும், யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத பூலோக சொர்க்கம் அல்ல. அதை அடைவதற்காக என்னத் தியாகம் வேண்டுமானாலும் செய்வதற்கு! இப்போது, என் அண்ணனே அங்கேதான் இருக்கிறான்...!"

"யாரை மோப்பம் பிடிக்க?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் தீபன்!

எரிச்சலுற்று "சே!" என்றாள் சந்தனா.

"எப்போது பார்த்தாலும், இதே பேச்சா? என் அண்ணனை, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அங்கே அனுப்பியிருக்கிறார்கள்! எனக்காகவே, அண்ணன் திரும்பி வந்து விடுவதாக இருக்கிறான். அவனே இங்கே திரும்பி வந்துவிடும் போது, நான் எதற்காக அங்கே போக ஆசைப்பட வேண்டும்?"

"இதை, நம்பச் சொல்லுகிறாயா?" என்றான் அவன் பதிலுக்கு.

இதைவிட, நம்ப மாட்டேன் என்று நேராகவே சொல்லியிருக்கலாம்!

அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் சந்தனா.

"நான் நிஜத்தைச் சொன்னேன்! நம்புவதும், நம்பாததும், உங்கள் விருப்பம்! குதிரையைத் தண்ணீரிடம் கொண்டு போய் நிறுத்தத்தான் முடியும்! குடிக்க வைக்க முடியுமா? அது போலத்தான் இதுவும்! சொல்ல மட்டும் தான் முடியும்! ஆனால் ஒன்று! உங்களைப் போல, உண்மை சொல்லுவது, எனக்குக் கடினம் அல்ல!" என்றாள் அவள்.

சற்று அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றத்தான் செய்தது!

ஆனால், அவனுக்கு இது அவசியம்! எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றும் தோன்றிவிட, சற்று அலட்சிய பாவனையுடனேயே நின்றாள்.

மறுபடியும் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு, "ஆசிரியர் மகள் என்றாயில்லையா? அதற்கு ஏற்பப் பிரமாதமாகப் பேசுகிறாய்! அந்த வகையில், உன்னைப் பாராட்டத்தான் வேண்டும்! ஆனால், உன் நோக்கம் எனக்குத் தெரியும்!" என்று தீபன் கூறவும், சந்தனாவின் மனம் சோர்ந்தது!

இவனிடம் பேசியது எல்லாம் வீண்!

விடையை வைத்துக் கொண்டு கணக்கு எழுதுவது போல, இவன் முடிவு செய்துவிட்டு, அதற்காக ஆதாரங்களைச் சேகரிக்கிறான். அவள் என்ன சொன்னாலும், செய்தாலும், அவன் விரும்பிய விதமாகத்தான், அதைச் சித்தரிக்கப் போகிறான்!

எனவே, இவனிடம் என்ன சொன்னாலும், எந்தப் பயனும் இராது!

எப்போதும் இப்படித்தானே, போகிறான் என்று அலட்சியப்படுத்த முடியாமல் உள்ளே வலித்தது!

ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், தலையைத் திருப்பிக் கொண்டு, "தெரிந்து விட்டதல்லவா? ரொம்பவும் சந்தோஷம். இனி வெளியே போங்கள்!' என்று அசட்டை காட்ட முயன்றாள் அவள்.

"போவதா? உன் நோக்கம் தெரிந்து விட்ட பிறகும், அதற்கு வேண்டியதைச் செய்யாமல் வெளியே போனேன் என்றால் என்னைப் பற்றி என்ன நினைப்பாய்?" என்றதோடு, கதவைத் தாளிட்டான் அவன்!

"என்ன..." என்று அவள் திகைப்புற்றுத் திரும்பவும், "திருமணத்துக்கு மட்டும் ஆசைப்படாதே! ஒரு சூடு எனக்குப் போதும்! ஆனால், மற்றபடி உனக்கு ஏமாற்றம் இராது! பண விஷயத்தில், நான் எப்போதுமே தாராளமாகத்தான் இருப்பேன்!" என்றபடி, அவளைப் பற்றி அணைத்தான் தீபன்!

தீபன் இப்படிச் செய்யக்கூடும் என்ற எண்ணம் சற்றும் இல்லாததாலோ என்னவோ, சந்தனா சில வினாடி நேரம் செயலற்றுப் போனாள்!

ஆனால், அதைச் சம்மதமாக எண்ணி, அவன் செயல்பட்ட விதத்தில் வெகுண்டு, இரு மடங்கு பலத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு, அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
சற்றுத் தடுமாறியபோதும், இலகுவாகவே சமாளித்துக் கொண்டு, "ரொம்பவும் பிகு பண்ண வேண்டாம், சந்தனா!" என்றான் தீபன்! "அப்புறம், அதை நிஜம் என்று நான் நம்பிவிட்டால், உனக்குத்தான் நஷ்டம்!"

என்ன மனிதன் இவன்...?

நிஜத்தை, நிஜம் என்று நம்பிவிட்டால் என்கிறான்!

உண்மை, பொய் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத...

ஒரு கணம் தயங்கிய போதும், 'அடிமுட்டாள்' என்று வாக்கியத்தை, மனது முடிக்கத்தான் செய்தது!

பட்டப் பகலில்! அவனுடைய தாய் வீட்டில்! அந்தத் தாயும், அந்த வீட்டிலேயே இருக்கையில்!

இதிலெல்லாம் நீக்குப் போக்காக இருக்கிற நாட்டில் இப்போது வாழ்ந்தாலும், இவன் பிறந்து வளர்ந்தது, இங்கே தானே?

அப்படியென்ன ஒரு வெறி, அவளை நம்பவே கூடாது என்று?

ஏன் இப்படி?

ஏன், எப்படி என்று யோசிக்கிற நிலையெல்லாம் முடிந்து போயிற்று!

என்னதான் வெறி என்றாலும், கடைசி எல்லையையும், தீபன் தாண்டிவிட்டான்.

இனி...

எஃகு நாணின் விறைப்புடன் நிமிர்ந்து நின்று, கை நீட்டிக் கதவைக் காட்டினாள் சந்தனா. "போங்கள் வெளியே!"

"சந்தனா..."

"உடனே வெளியே போங்கள்! அல்லது... மூன்றாம் அறையில் உங்கள் அம்மா தூங்கிக் கொண்டு இருப்பது, உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்! இந்தப் பிற்பகல் தூக்கம், திடுமெனக் கலைந்து, பதற்றத்துடன் எழுவது, ஆன்ட்டியின் உடல் நிலைக்கு நல்லதல்ல என்பதும் தான்! இதற்கு மேல், நீங்கள் இங்கே நின்றால், அப்படி அவர்கள் விழித்தெழும்படியாக, நான் கத்திக் கூச்சலிட வேண்டியிருக்கும்! அதற்கு, ஒரு கணம் கூடத் தயங்க மாட்டேன். அதனால்... ம்! கெட் அவுட்!" என்றாள் உறுதியான குரலில், அழுத்தம் திருத்தமாகச் சந்தனா!

ஒரு வினாடி, அவள் முகத்தில் எதையோ தேடுவான் போலப் பார்த்தான் அவன்.

கருங்கல் சிலை மாதிரி, கதவைக் காட்டிய கை கூட இறங்காமல், அவள் அப்படியே நிற்கவும், சட்டெனத் திரும்பி வெளியே சென்றான்.

மாடிப் படிகளில், அவனது காலடியோசை தேய்ந்து மறையும் மட்டும், சந்தனா நின்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை!

அப்புறம் கூட, சில பல நிமிஷங்கள் அவளிடம் அசைவே இல்லைதான்.

அறை ஜன்னலின் அருகருகாகப் பறந்து சென்ற, அந்த விட்டு மாமரக் கிளியின் கீச்சிடல் மட்டும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வரவில்லை என்றால், இன்னும் எவ்வளவு நேரம், அப்படியே நின்றிருப்பாளோ!

பசிய நிறத்தில் அம்புகளாய் வானத்தில் பாயும், அந்தக் கிளிகளை, ஆன்ட்டியும், அவளும் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பார்கள்!

ஆனால், இனி, அது முடியாது!

ஒரு போதும்!

சட்டென சுற்றுப் புறம் புரிந்தவள் போன்று, சந்தனா ஓடிச் சென்று கதவைச் சாத்தி, உட்புறம் தாளிட்டாள்.

இந்தத் தாளிடலை, அந்த வீட்டில், அவள் முக்கியமாக நினைத்தது கிடையாது!

அதுவரை!

ஆனால், இனி இது முடியாது!

அந்தத் தேவையோடு, அவள் அங்கே இருப்பதே கூடாதே!

இருந்தால், அவளது மறுப்பு வெறும் பிகுதான் என்று, அவன் நிச்சயமாக நினைப்பான்!

அப்புறம்... சே!

தலைமை ஆசிரியருடைய மகள் என்பதாலோ, என்னவோ, சந்தனாவுக்கு, இந்த மாதிரியான அவமதிப்புகள் நேர்ந்ததே இல்லை எனலாம்!

எப்போதுமே மதிப்பும், மரியாதையும் தான்! பண்பும், பிரியமும் தான்!

எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்து, இன்று...

சேசே! அதைப் பற்றி நினைக்கக் கூடாது! இனி என்ன செய்வது என்று மட்டும் தான்...

'விண் விண்' என்று தெறித்த தலையைப் பிடித்தபடி, சந்தனா யோசிக்க முயன்றாள்.

எப்படியும், இந்த வீட்டை விட்டுப் போயாக வேண்டும்! எங்கே, எப்படி என்று மட்டும் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்!

சிரமப்பட்டு, வலியை ஒதுக்கி யோசித்ததில், உடனடித் தீர்வுக்கு, ஒரே ஒரு வழி அவளுக்குத் தென்பட்டது!