» இனி எல்லாமே நீயல்லவோ 12

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

அன்றைய மதியத் தூக்கம் முடிந்து, மாலைக் காபிக்காக மீனாட்சி அம்மாள் கீழே வந்து உட்கார்ந்த போது, மகன் தீபனும் உடன் வந்து அமர்ந்தான்.

எப்போதேனும் வேலை இல்லாத சமயங்களில், அவன் அப்படி வருவது உண்டுதான் என்பதால், மீனாட்சிக்கு அதில் அதிசயம் ஏதும் தோன்றவில்லை!

ஆனால், "சந்தனாவுடைய அண்ணன் எங்கேம்மா இருக்கிறார்?" என்று கேட்டது ஆச்சரியமாகத்தான் இருந்தது!

சந்தனாவின் பெயரைக் கேட்டாலே, எண்ணெயில் விழுந்த அப்பமாகக் குதிக்கிறவன், அவளுடைய உறவைப் பற்றியெல்லாம் விசாரிக்கிறானே!

வியப்புடன் நோக்கி, "ஏன் கேட்கிறாய்?" என்று பதில் கேள்வி கேட்டாள் அன்னை!

"என்னம்மா நீங்கள்? அதிகப் பழக்கம் இல்லாத பெண்! அவளை வீட்டுக்குக் கூட்டி வந்து வைத்திருக்கிறீர்கள்! அவளுடைய உற்றம், சுற்றம் எப்படி, எங்கே என்று விசாரிக்கக் கூடாதா?" என்று குறையோடு கேட்டான் மகன்.

பழக்கம் இல்லாத ஒருத்தியைத் திருமணமே செய்தவன், என்னைக் கேட்கிறாயா என்று எழுந்த கேள்வியை உள்ளேயே அடக்கினாள் அன்னை!

அவனே, அதில் நொந்துவிட்டவன்! அதை, இப்போது குத்திக் கிளறுவதில் என்ன லாபம்?

ஒருவேளை, அவளை வைத்து எடை போடுவதால் தான், சந்தனாவிடம், இப்படிக் காய்கிறானா?

அத்தோடு, இந்தப் பத்திரிகைப் பிரச்சினை வேறு!

மகனை நியாயப் படுத்துகிறோம் என்று உணர்ந்து, அந்த வகை எண்ண ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக் கொண்டு, அவன் கேட்ட விவரங்கள் அனைத்தையுமே தாயார் தெரிவித்தாள்.

"தாய் இல்லாததால், உறவுகள் பழக்கம் ரொம்பவே விட்டுப் போயிற்று போல! ஆனால், அண்ணன் தங்கைக்குள் பாசம் அதிகம்! தந்தை இறந்த பிறகு, தங்கையைத் தனியாக இங்கே விட்டுவிட்டு, யுஎஸ் போகவே அவனுக்கு மனமில்லை. ஆனால், போக மறுத்தால், தந்தை இவ்வளவு காலம் சேர்த்து வைத்தது அனைத்தையுமே கட்ட வேண்டிய நிலைமையாம்! அதனால் சந்தனா தான், அண்ணனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாள்! மொத்தத்தில், ஆறு மாத வேலை என்றாலும், முடிந்தவரை, அதைச் சீக்கிரமே முடித்துவிட்டுத் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறானாம்!"

எல்லாமே, சந்தனாவாகச் சொன்னவையாகத்தான் இருக்கிறது!

"அந்த அண்ணனின் முகவரி உங்களிடம் இருக்கிறதாம்மா?"

திரும்பி மகன் முகத்தைப் பார்த்தாள் பெற்றவள். "என்னடாப்பா சந்தேகமா? பூபாலன் வந்துவிட்டால், சந்தனாவைக் கூட்டிப் போய்விடுவானே, அவளைப் பிரிய நேருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! நீயானால்..."

"ஐயோ, என்னம்மா நீங்கள்! ஓர் அன்னியப் பெண்! நம் பொறுப்பில் இருக்கிறாள்! ஏதோ ஓர் அவசரம் என்றால், ஒரு காய்ச்சல் என்றால் கூடத் தகவல் தெரிவிக்கவேனும், அவளுடைய உறவினர் முகவரி வேண்டாமா? அதற்காகக் கேட்டால், என்னென்னமோ சொல்லுகிறீர்களே!

"அவள் இங்கே என்னோடு தங்க வந்தபோது, தங்கை தனியே தவிக்க நேராமல், உடன் வைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்து, அந்தப் பையன் யுஎஸ்சில் இருந்து ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனது விலாசம் முழுதாக இருக்கிறது! பாவம்! தாயில்லாவிட்டாலும், பெரியவர், பிள்ளைகளைப் பண்போடு வளர்த்திருக்கிறார்!"

"அந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்!" என்று தீபன் கேட்கவும், "கேட்பாய் என்று நினைத்தேன்!" என்றாள் தாய் ஒரு மாதிரிக் குரலில்! "நல்ல மனிதர்களைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சந்தேகப்படுகிறாயே!" என்று சற்று வருத்தமும் பட்டாள்!

இப்போது, மகன் தன்னை மறைக்க முயற்சிக்கவில்லை! "என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தாலும், போதாது என்று தான் சொல்வேன், அம்மா! அத்தோடு, எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவரை, நம்பாமல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஏமாற்றத்துக்கு இடமிராது! அந்த முகவரியைத் தருகிறீர்களா?"

யாரை நம்பலாம் என்று கூட அறிந்து கொள்ளத் தெரியாமல், இவன், அங்கே என்ன தான் வாழ்க்கை நடத்துகிறானோ என்று உள்ளூர அலுத்தபடி, "தாராளமாகத் தருகிறேன்! அவர்கள் யாருமே, தங்கள் முகவரியையோ, டெலிபோன் எண்ணையோ யாருக்கும் தரக்கூடாது என்று சொன்னதே இல்லை!" என்று மகனுக்கு ஒரு சிறு குட்டுக் கொடுத்துவிட்டு, பூபாலனின் முகவரியை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள் அன்னை!

தாயின் செல்லை வாங்கி, எலிசாவோடு தொடர்பு கொண்டு, பூபாலனின் முகவரியை அவளிடம் சொன்னான் தீபன்.

"இந்த முகவரி சரிதானா என்று செக் பண்ண வேண்டும், எலிசா!" என்றான்.

எதிர் முனையில் அவள் ஏதோ கேட்கவும், "என் அம்மா மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண்ணுடைய அண்ணன்! அம்மா ஏமாந்துவிடக் கூடாதே என்று தான்! என்னது? நான் வருவதா? பா...ர்க்கலாம்! கொஞ்ச நாள் ஆகட்டும்! அதன் பிறகு சொல்கிறேன்! வைத்துவிடு...பை!" என்று செல்லை அணைத்தான் தீபன்!

"என்ன? கூப்பிடத் தொடங்கிவிட்டாளா? என்றைக்கு டிக்கெட் எடுக்கப் போகிறாய்?" என்று மீனாட்சி எரிச்சலோடு கேட்க, "இப்போதைக்கு இல்லைம்மா! நிஜம்!" என்று அழுத்திச் சொன்னான் அவன்.

தன் பொம்மையோடு வந்து, "பசி!" என்றாள் மித்ரா. "இன்றைக்கு ஏன் கிராண்ட்மா, சந்தனா சிற்றுண்டி சாப்பிட வரவில்லை? என்னை மட்டும், கட்டாயம் சாப்பிடணும் என்பாளே?" என்று, சந்தனாவைத் தேடினாள்.

"ஆமாம், அவள் ஏன் இன்னும் வரவில்லை?" என்றாள் மீனாட்சியும்!

சமயத்தில் சமையல்காரம்மாவும் வந்து, "அவங்க அறைக் கதவு சாத்திருக்கம்மா! நானும், கூப்பிட்டுப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்! சந்தனாப் பொண்ணு, பதிலே சொல்லவில்லை! பாத்ரூமிலே இருக்கிறாளோ என்று வந்துவிட்டேன்!" என்றாள்.

ஆட்டம் காட்டுகிறாளா, அல்லது அவனைச் சந்திக்கக் கூடாது என்று எண்ணுகிறாளா?

எதுவானாலும் வயிறு காய்ந்தால், தானாக வருவாள் என்று நினைத்த தீபன், "ஏதாவது முக்கியமாக முடிக்க வேண்டிய வேலையாக இருக்கும், அம்மா! நோட்டுத் திருத்துவது, பாடம் தயார் பண்ணுவது என்று நீங்கள் தான் கடமை, கண்ணியத்தோடு வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே! ஆனால், அப்படி ஒன்றும், ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யமாட்டாள் என்று நினைக்கிறேன்! பசித்தால், தானாக வந்து சாப்பிடுவாள், நீங்கள் முதலில் சாப்பிட வாருங்கள்!" என்று, தாயையும் மகளையும் உண்ண அழைத்துப் போனான்.

மகனோடு பேசிக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் அவனோடு உணவருந்தச் சென்றாலும், உள்ளூர ஏதோ நெருட சந்தனாவை அழைத்து வருமாறு, சமையல்காரம்மாவை மீண்டும் அனுப்பி வைத்தாள் மீனாட்சி.

மீண்டும் பதில் இல்லை என்றானதும், சந்தனா யாரையும் அலட்சியம் செய்கிற பெண் இல்லையே என்று எண்ணி சமையல்காரி, என்னவோ என்று, சட்டெனப் பதறிப் போனாள்.

கீழே விழுந்து, கிழுந்து அடி ஏதும் பட்டிருந்தால்?

கதவுக் குமிழைத் திருகினால், கதவு உடனே திறந்து கொண்டது! உட்புறம் தாளிடவே இல்லை!

அறையின் உள்ளேயோ, குளியல் அறையிலோ சந்தனா இல்லை என்றானதும், சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு, படுக்கையை ஒட்டியிருந்த முக்காலி மீது மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதம் கண்ணில் பட்டது!

அதைப் பிரித்துப் படிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று உணர்ந்து, கடிதத்தை அப்படியே எடுத்துப் போய், மீனாட்சியிடம் கொடுத்தாள்.

"அறையில் சந்தனா இல்லையம்மா! இந்தக் கடிதாசி மட்டும் முக்காலி மேலே இருந்தது!"

ராட்சசி! எல்லாவற்றையும் எழுதியிருப்பாளோ என்று, சட்டென தீபனின் முகம் கன்றிவிட்டது!

அன்னையின் ஒழுக்க விதிகளே வேறாயிற்றே!

"என்னது?" என்று பதட்டத்துடன் மீனாட்சி கடிதத்தைப் பிரிக்கையிலேயே, "நான் படிக்கிறேன் அம்மா! நீங்கள் அமைதியாக இருங்கள்!" என்று பிடுங்காத குறையாகக் கடிதத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு, அப்பாடி என்றிருந்தது!

சந்தனாவின் சுருக்கமான கடிதத்தில், அவனது பெயரே இல்லை!

அவளுக்குத் தங்குவதற்கு, ஒரு நல்ல் விடுதியில் இடம் கிடைத்துவிட்டது! இன்றே வந்தால் தான், இடம் உறுதி என்பதால், ஒரே செடி மாற்றுடையோடு போவதாகவும், பிறகு வந்து மற்றவைகளை எடுத்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.

"உங்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்புவதுதான் சரியான முறை, ஆன்ட்டி! ஆனால், என் மீதுள்ள அன்பினால், தடுக்கப் பார்ப்பீர்கள்! உங்களை மீறிச் செல்ல நேருமே என்றுதான், இப்படிக் கிளம்புகிறேன், ஆன்ட்டி! நீங்கள் எனக்குச் செய்திருக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி!" என்றவள், அந்த வீட்டில் இருக்கையில் தன் மீது அன்பு காட்டிய சமையல்காரம்மா, ராசையா, பணிப்பெண் எல்லோருக்குமே நன்றி தெரிவித்ததோடு, 'மித்திக் குட்டிக்கு அன்பைச் சொல்லவும்' என்று முடித்திருந்தாள்!

கடிதத்தை உரக்கப் படித்து முடித்த போது, அவனது பெயர் விடுபட்டிருந்ததே, இப்போது முகத்தில் அறைந்தது போலத் தீபனுக்குத் தோன்றியது!

அவனால் தான் போயிருக்கிறாள் என்று காட்டியிருக்கிறாள்!

அவளது இந்தியப் பண்பாட்டுக்கு, அவனது செயலைச் சாதாரணமாக எடுத்து, உரிய மதிப்புக் கொடுத்து, ஒன்றுமில்லை என்று விட்டுவிடத் தெரியவில்லை!

அப்படி, அவன் என்ன முரட்டுபலம் காட்டி, அவளை பலாத்காரமா பண்ணிவிடப் போகிறான்? முட்டாள், என்று எண்ணியவனுக்குத் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்கையில், சந்தனா மீது கோபமும் வந்தது!

ஏதோ, சரியாக இதே சமயத்தில், அவளுக்கு ஒரு விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது! இல்லாவிட்டால் முழுங்கிக் கொண்டு சும்மாதானே இருந்திருப்பாள்! இப்போதும், அப்படியே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே என்று எரிச்சலுடன் நினைத்தான்!

அழத் தயாராக இருந்த மகளையும், முகம் வாடியிருந்த தாயையும் சமாதானம் செய்து, வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசி உற்சாகப் படுத்துவதிலேயே, அன்றைய மாலை முழுவதையும் தீபன் செலவிட நேர்ந்தது!

அப்போதும், அதில் முழு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாத நிலைதான்!

இபப்டி வீட்டை விட்டுப் போவாள் என்று தெரிந்திருந்தால் எப்போதும் போல ஒதுங்கியே இருந்திருப்பான்!

சந்தனா, இவ்வளவு அழகாக இல்லாமல் இருந்து தொலைந்திருந்தாலும், இந்தப் பிரச்சினை நேர்ந்திராது!

பளிச்சென்று கண்ணைக் கவர்கிற அழகோடு, வீட்டில் ஒருத்தி வளைய வந்தால், ஓரிரு சமயம் இப்படியும் நடக்கக்கூடும் தானே?

இதற்குப் போய், இப்படி வீட்டை விட்டே வெளியேறி விட்டால், எத்தனை பேருக்கு மனது கஷ்டப்படும் என்று யோசிக்க வேண்டாமா என்று, சந்தனா மீதே எரிச்சல் பட்டான் தீபன்!

இந்த அழகில் அவள் ரொம்பத்தான் பாசம் உள்ள பெண் என்று உருகுகிறார்கள், இந்த அம்மா! அப்படிப் பாசம் இருக்கிறவள் என்றால், தன் பிரிவால் ஒரு முதியவளும் குழந்தையும் பாதிக்கப் படுவார்களே என்று, வீட்டை விட்டு வெளியேறு முன் யோசித்திருக்க மாட்டாளா என்ன?

என்னதான் முயன்றும், வீடு களையிழந்து தெரிந்தது!

மித்ரா, தன் பழைய வழக்கப்படி, பொம்மையை அணைத்துப் பிடித்தபடி, ஒரு சோபா மூலையில் முடங்கி விட்டாள்.

மீனாட்சி அம்மாள், மருத்துவமனைக் கணக்குகளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவள், கண்ணாடி கூடப் போடாமல், விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்!

ஹால் டீவி ஓடிக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்ப்பார் இல்லாமல், சமையல்காரம்மா கூடத் தலையைப் பிடித்துக் கொண்டு கண் மூடிக் கால் நீட்டி அமர்ந்திருந்தாள்!

தன் எழுத்து வேலையைத் தொடங்கிய தீபன், அதில் மனம் ஒன்றாமல் எழுந்து வெளியே வந்தபோது, கண்ட காட்சி இதுதான்!

என்ன இது?

எவளோ ஒருத்தி, ரத்த சம்பந்தமே இல்லாதவள், சில மாதங்கள் இருந்துவிட்டு, அவளுடைய அண்ணன் வந்ததும் அவனோடு இந்த வீட்டை விட்டுப் போய்விடப் போகிறவள்! அவள் இல்லை என்பதற்காக, எல்லோரும் ஏதோ வீடு மாதிரித் துக்கம் காக்கிறார்கள்!

இத்தனைக்கும், சந்தனா நல்லவளா, கெட்டவளா என்பது கூட, இன்னமும் நிச்சயமில்லை!

எரிச்சலோடு நடந்து போய், டீவியை ஆஃப் செய்தான் தீபன்!

என்ன என்பது போல, வெறுமனே அவனைப் பார்த்தாள் அவளுடைய அன்னை!

தூக்கம் கலைந்த மாதிரி, வாரிச் சுருட்டி எழுந்து, "நேரமாகிவிட்டதா, தம்பி? டிபன் எடுத்து வைக்கட்டுமா?" என்று வினவிய சமையல்காரம்மா, ஹாலின் பழைய காலத்துக் கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.

"இன்னும் நேரமாகவில்லையே! தம்பிக்குப் பசித்து விட்டதா? பலகாரமே வைத்து விடட்டுமா, அல்லது, கொறிக்கிற மாதிரி ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று மீண்டும் கேட்டாள்.

"ஒன்றும் வேண்டாம்! ஆனால், நீங்கள் எல்லோரும், ஏன் இப்படி ஒரேயடியாக டல்லடிக்கிறீர்கள்? அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, சாதாரணமாக இருங்களேன்!" என்றான் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்!

'உச்சு'க் கொட்டினாள் மீனாட்சி அம்மாள்.

"என்னவோ, சந்தனா இங்கே இருந்தால், பள்ளியில் நடந்தது, பேப்பரில் வந்தது என்று ஏதாவது சொல்லுவாள்! நாம் சொல்லுவதையும் கேட்பாளா, அவள் இல்லாதது, கையொடிந்த மாதிரி, வேலையே ஓட மாட்டேன் என்கிறது! நாலைந்து நாட்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! போகட்டும் போ! நாங்கள் எப்படியோ சமாளிக்கிறோம்! நீ போய், உன் வேலையைக் கவனி!" என்று தாயார் சொல்லவும் தான், தீபனுக்குச் சுரீலென உறைத்தது!

அவனும் வேலை ஓடாமல் தான் எழுந்து வந்தான்!

அப்படியானால், அவனும், சந்தனா வீட்டில் இல்லாததை உணர்கிறானா?

எப்படி?

நம்ப முடியவில்லை அவனால்!