» இனி எல்லாமே நீயல்லவோ 13

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

சந்தனா வீட்டை விட்டுப் போனதற்கும், அவனுக்கு வேலையில் மனம் ஈடுபடாததற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்கக் கூடும் என்று, தீபனால் மெய்யாகவே நம்ப முடியவில்லை!

அவனுடைய மனைவி, அவனுடைய குழந்தையைப் பெற்றவள் பிரிந்து போன போது கூட, அவனது வேலைக்கு எந்த விதமான தடையும் நேரவே இல்லை!

அவளுக்கு விமான நிலையத்துக்குப் போவதற்குக் கார் அனுப்பும்படி எலிசாவிடம் சொல்லிவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காட்சியை முழுதாக முடித்து விட்டுத்தானே, அறைக்குள் இருந்து அவன் வெளியே வந்ததே!

வந்து, பத்திரிகைகளுக்குப் பேட்டி, போஸ் எல்லாம் கொடுத்து, "ஓர் அத்தியாயம் முடிந்தது" என்று சொன்னது எல்லாமே, அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறதே!

இரவில் 'காஸ்டிங்' டைரக்டரோடு டின்னர் பேச்சு கூட!

எதிலுமே, அவனுக்கு எந்தத் தடையும் நேரவே இல்லை!

மனைவியே அப்படி என்றால், யாரோ ஒருத்தியான சந்தனா இல்லாதது அவனைப் பாதித்திருக்க வாய்ப்பில்லை!

ஆனால், தன்னால் தான், அந்த முட்டாள் பெண் வீட்டை விட்டுப் போனாளோ என்ற குற்ற உணர்ச்சி... ஒரு வேளை, அது காரணமாக இருந்திருக்கலாம்!

சொல்லப் போனால், சந்தனா வீட்டை விட்டு வெளியேறியதால், ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகி விட்டதில், அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்.

சந்தனா பத்திரிகைக்காரி அல்ல என்ற முக்கியமான விஷயம்!

அவனைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக வந்தவள் அவள் என்றால், இப்படி இடையில் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டாள்.

செய்தி கிடைக்கும் வரை, உடும்பாய் ஒட்டிக் கொண்டு, அங்கேயே இருந்திருப்பாள்.

அந்த வகையில், அவனது சந்தேகம் நிவர்த்தியாகி, அங்கங்கே வீட்டில் அவளைப் பார்க்கும் போது, என்ன குறிப்பு எடுக்கிறாளோ என்ற எரிச்சல் இல்லாமல் இருக்க முடிவது, அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்!

மாரீட்டா பிரிந்து போனதும் நிம்மதியாக இருந்த மாதிரி!

ஆனால், அப்போது போல, இப்போது ஏன் எழுத முடியவில்லை?

ஒரு வேளை, தாய், மகள் இருவரின் வாடிய முகங்களும் அவனது எழுத்தைக் கெடுத்தனவோ என்று எண்ணி முடிக்கப் பார்த்தால், அந்த எண்ணத்திலும் ஒரு பெரிய பிழை இருந்தது!

வேலை ஓடாமல் அறையை விட்டு வெளியே வந்த பிறகுதான், வீட்டினரின் வாடிய முகங்களை அவன் பார்த்ததே! எனவே, அவனது வேலை கெட்டுப் போனதற்கு, அதைக் காரணம் காட்ட, அடியோடு முடியாது!

பின்னே?

காரணம் கண்டுபிடிக்க முடியாததால், எரிச்சல் இன்னமும் அதிகமாக, அதை யாருக்கும் காட்ட மனமற்று, தீபன் மீண்டும் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.

குறைந்த பட்சமாய் வெளியே இருந்தவர்களாவது, அவன் மும்முரமாய் வேலை செய்வதாக நினைக்கட்டுமே!

சந்தனா சென்றது, அவனைப் பாதிக்கவில்லை என்றும்!

இரவு உணவும் ஏனோ தானோ என்று, எப்படியோ முடிந்தது!

"எந்த விடுதி? அது எங்கே இருக்கிறது என்று, சந்தனா ஒன்றுமே குறிப்பிடவில்லையே! என்ன, இப்படி செய்து விட்டாள்! எதற்காக என்று, உனக்கு ஏதாவது புரிகிறதா, தீபு?" என்று வருத்தத்துடன் மீனாட்சி அம்மாள் முனகவும், தீபன் பொறுமை இழந்தான்.
"என்னைக் கேட்கிறீர்கள்! இத்தனை நாளும், அவளைக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருந்தது நீங்கள் தான்! உங்களையே மதிக்காமல் கிளம்பிவிட்டாள்! போகிறாள் என்று அவளை மறக்க முயற்சிப்பீர்களா, அதை விட்டு... விடுங்கள், அம்மா!" என்றான் அவன்.

"அதில்லைப்பா! என்னவோ, இது அவள் குணத்தோடு ஒத்துப் போகவில்லை!... சரி சரி, விடு. உனக்குத்தான் அவளை எப்போதுமே பிடிக்காதே!"

"கிராண்ட்மா, எனக்கு சந்தனா ஆன்ட்டி பிடிக்கும்!" என்றாள் மித்ரா கண்ணீருடன். "இப்போது யார் எனக்கு கதை சொல்வது?" என்று அழுதபடியே பாட்டியிடம் சென்று, அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள் சிறுமி!

பாட்டியும் பேத்தியும் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து, செய்கையற்று நின்றான் தீபன்.

அந்த வேளையில், பக்கக் கதவைக் கைவிட்டு திறந்து கொண்டு வந்த ராசையா, பின்புறமாய்ச் சாப்பிட போகாமல், வீட்டினுள் குடும்பத்தார் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும், "என்ன ராசையா, உன் தங்கை குடும்பத்தை வழியனுப்பி விட்டாய் அல்லவா? ரயில் சரியான நேரத்துக்குக் கிளம்பியதா?" என்று, அவனிடம் பொதுவாக விசாரித்தாள் மீனாட்சி.

கிராமத்துப் பக்கம் போக முடிவு செய்து கிளம்பிய தங்கை குடும்பத்தை ரயிலேற்றி விடுவதற்காக, ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தான் அவன்.

திரும்பி வந்துவிட்டதைத் தன்னிடம் சொல்லவே, அவன் அங்கே வந்திருப்பதாக எண்ணிய மீனாட்சி, அதற்குத்தக பணியாளரிடம் விசாரித்தாள்.

"ஆமாம்மா, பிள்ளை குட்டியோட, மூட்டை முடிச்சு எல்லாம் ஏற்றி அனுப்பி விட்டேம்மா! ஆனா... நான் சொல்ல வந்தது, வேறேம்மா! அங்கே..." என்று குழப்பத்துடன் இழுத்தான் அவன்.

"அங்கே என்ன?"

"அங்கே... நம்ப சந்தனாம்மா வீட்டிலே இல்... வந்து, சந்தனாம்மா, எங்கயாச்சும் வெளியூரு போறாங்களாம்மா?" என்று அவன் கேட்கவும், எல்லோருமே ஷாக் அடித்தது போலத் திகைப்புடன் அவனைப் பார்த்தனர்!

இரண்டெட்டில் அவன் அருகே வந்து, "சந்தனாவை அங்கே பார்த்தாயா?" என்று ராசையாவின் தோளைப் பற்றிக் கேட்டான் தீபன்!

"விடுதிக்குப் போனவள், ரயில் நிலையத்திலா? அதுவும் இந்த நேரத்தில் எப்படி? நீ சரியாகத்தான் பார்த்தாயா, ராசையா?" என்று கேட்டாள் வீட்டுத் தலைவி.

"சொல்லு! நீ, சந்தனாவைத்தான் பார்த்தாயா?" என்று மறுபடியும் கேட்டான் தீபன்.

"ஆமாங்கய்யா! அவங்க மாதிரியேதான் இருந்தது! ஆனா, ரயிலுக்கு வெளியிலே நிக்கலை! ராவு ரயிலுக்குக் காத்திருப்பாங்களே, அந்த ரூம்புக்குள்ளார ஒரு மாதிரித் தலையைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க! நம்ப அம்மா, எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்களே, அப்படி இல்லையேன்னு, எனக்கு சந்தேகமாப் போயிட்டுதும்மா. முக்காடும் போட்டிருக்க மாட்டாங்களே! சரி பொம்பளைங்க உட்கார்ந்திருக்கிற ரூம்பு! ஆள் அம்பு சரியாத் தெரியாம, உள்ளே போனா வம்பாப் போகுமோன்னு பயந்து விட்டேன்! அம்மா, வீட்டிலே இருக்கிறாங்களா இல்லியா?" என்று கவலையுடன் விசாரித்தான் வேலையாள்.

"என்னவோ நடந்திருக்கின்றது..." என்று மீனாட்சி சந்தேகமாகக் குழம்புகையில், தீபனுக்கு விஷயம் புரிந்து போயிற்று!

ஏனெனில் தொடங்கி வைத்தவன் அவன் அல்லவா?

இப்போது, அவனுக்கு இரண்டு பொறுப்புகள்!

சந்தனாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருவதோடு, நடந்தது எதுவும் அன்னையின் காதுக்குப் போய் விடாமல் சமாளிப்பதும்!

"ஏன் தீபு, நீ சந்தனாவை ஏதேனும் சொன்னாயா?" என்று பெற்றவள் திடுமென, அவனை நேரடியாகக் கேட்கவும், ஒரு கணம் தீபன் தடுமாறிப் போனான்.
"என்னம்மா நீங்கள்? இப்படி கேட்கிறீர்கள்!" என்று சும்மா சமாளிக்க முயன்றான்.

"பின்னே? இங்கே அவளிடம் ஏதாவது தகராறு பண்ணுகிற ஒரே ஆள் நீதானே?"

"அன்னம்மா, என் கைப்பையை எடுத்து வாருங்கள். ராசையா? டிரைவர் வீடு பக்கம் தானே? நீ அவனை அழைத்து..." என்று எழுந்த தாயின் பேச்சில் குறுக்கிட்டு, "அம்மா, இந்த நேரத்தில் நீங்கள் அலைய வேண்டாம்! நான் போய் அவளைக் கூட்டி வருகிறேன்! ராசையா, எழும்பூர் தானே?" என்று, கார் சாவியை எடுத்தான் தீபன்.

தாயார் சஞ்சலத்தோடு பார்க்கவும், "நம்புங்கள், அம்மா! சந்தனாவை கட்டாயமாக கூட்டி வருவேன்! நான் வழக்கம் போல ஏதோ சொன்னேன் தான்! ஆனால், சந்தனா, இவ்வளவு தூரம்... வீட்டை விட்டுப் போகும் அளவுக்குப் பெரிதாக, அதை எடுத்துக் கொள்வாள் என்று எதிர் பார்க்கவில்லை! அவள் கையில், காலில் விழுந்தேனும், மன்றாடிக் கூட்டி வருகிறேன்! உங்களுக்காகவும், மித்ராவுக்குமாக அவளைத் திரும்ப அழைத்து வந்தே தீருவேன்! நிச்சயம்!" என்று விட்டு, வேகமாகக் கிளம்பிச் சென்றான் அவன்!

சந்தனாவை அழைத்தும் வரவேண்டும்! அதற்கு முன், அவளிடம் தனியாக பேசவும் வேண்டும்!

நல்லவேளை! சந்தனா ஒரு மாதிரிப் பழி வாங்குகிற தினுசில்லை!

"ராசையாவை..." என்று தாயார் தொடங்கியதை கேட்க, அவன் அங்கே இருக்கவில்லை! அதற்குள் வேகமாக வெளியே சென்றுவிட்டிருந்தான்.

காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது, அவனது கவலையெல்லாம் சந்தனா எழும்பூரில் இருந்து, எங்கேயும் போய்விடக் கூடாதே என்பதுதான்.

காரை நிறுத்திவிட்டு, வெயிட்டிங் ரூம் எங்கே இருக்கிறது என்று பார்வையால் துழாவிய போது, யாரோ பேசும் குரல் கேட்டது!

"தனியாதான் இருக்குதுபா! எப்படியாவது, அறையை விட்டு வெளியே கொண்டு வர்றது என் பொறுப்பு! அப்புறம் நீதான் பார்த்துக்க வேணும்! இன்னா சொல்ற?"

பதைப்புடன் பார்த்த போது, வெயிட்டிங் ரூம் கண்ணில் பட்டது!

உள்ளே தலை தாங்கி அமர்ந்திருந்த அவளும்!

அந்த அறையின் பொறுப்பாளர் போலத் தோன்றிய பெண்ணிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, அருகில் வந்தவனைப் பார்த்ததுமே சந்தனா எழுந்துவிட்டாள்.

"வெளியே வா! உன்னிடம் பேச வேண்டும்!" என்ற போதும், மறுக்காமல் உடன் சென்றாள்.

ஓரளவு ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்துக்குப் போனதும், அவ்வளவு நேரம் இருந்த பதைப்பு முழுவதும் கோபமாக மாற, "பெரிய கதாநாயகி என்ற எண்ணமாக்கும்?" என்ற தீபன், ஆத்திரத்தோடு சீறினான்.

"வில்லனாக நடந்தது, நீங்கள் தானே?" என்றாள் அவள் பதிலுக்கு!

"அதற்கு? இப்படி எங்கோ வந்து மாட்டிக் கொள்வதா? உன்னை வெயிட்டிங் ரூமில் இருந்து வெளியே கொணர்ந்து, எப்படி அழைத்துக் கொண்டு போவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள், தெரியுமா? அப்படி நான் என்ன செய்திருப்பேன் என்று நினைத்தாய்? மூன்றாம் தர சினிமா வில்லன் மாதிரிக் கதறக் கதறக் கற்பழிப்பவன் என்றா? அம்மா இருக்கும் இடத்தில், அப்படி நடப்பேனா? நான் கெட்டவனாக இருந்தால் கூட, அங்கே அம்மா இருப்பதே உனக்குப் பாதுகாப்பு அல்லவா?" என்று படபடத்தான் அவன்.

அவன் வெளிப்படையாக பேசியது, அவளது முகத்தைச் சிவக்க வைத்த போதும், "மூன்றாம் அறையில் ஆன்ட்டி இருக்கும் பொழுதுதான், வந்தீர்கள்!" என்று குத்திக் காட்டினாள் அவள்.

"அது வேறு! உன்னைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தது! என்ன விரட்டினாலும், அட்டைப் போல ஒட்டிக் கொண்டு, இங்கேயே இருக்கிறாய். மித்ராவை வேறு வசியம் செய்து வைத்திருக்கிறாய். காரியம் நடப்பதற்காக, எதுவும் செய்வாய் என்று நினைத்தேன்! அழகாகவும் இருந்தாயா? ஒரு முயற்சி செய்யலாமே என்று தோன்றியது... அப்போதுமே, உண்மையிலேயே மறுக்கிறவளை விரட்டுவேனா?"
என்னவெல்லாம் பேசுகிறான்!

சிவந்த முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள் சந்தனா.

"அந்த மாதிரி, நீ நினைக்கும்படியாக, நான் நடந்திருந்தால் சாரி. தயவு பண்ணி, என்னை மன்னித்துவிடு! ஆனால், நீ வீட்டை விட்டு வெளியேறியதும், ஒரு வகையில் நல்லதாயிற்று! உன்னைப் பற்றிய என் சந்தேகம் அடியோடு தீர்ந்து போயிற்று! ஆனால், இந்த மாதிரி, எந்த விதமான ஏற்பாடும் இல்லாமல் தனியே பெண்கள் கிளம்புவது, எந்த நாட்டிலுமே நல்லதில்லைதான்! சரி! வா, வீட்டுக்குப் போகலாம்!" என்று அழைத்தான் தீபன்.

அசையாமலே நின்று, "நான் இங்கே இருப்பது எப்படித் தெரியும்?" என்று கேட்டாள் அவள்.

நடந்ததைச் சொன்னான் அவன்.

"ஓ! தங்கைக்காக ராசையா இரண்டு நாட்கள் லீவு கேட்டிருந்தான். இன்றைக்குத்தான் அனுப்பி வைத்தானா?" என்றாள் சந்தனா.

இல்லாவிட்டால் என்ற வார்த்தை இருவர் மனதிலும் தோன்றியது!

"முதலில் காருக்குப் போகலாமா? காரில் போய்க் கொண்டே பேசலாம்!" என்றவன், அவள் ஒரு வினாடி தயங்கவும், "என்னை முழுதாக நம்பலாம்! இனி, அது போல நடக்க மாட்டேன், காட் ப்ராமிஸ்!" என்றான் தீபன்.

காரில் ஏறியதும், "உன்னைச் சீக்கிரமாக வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்! இல்லாவிட்டால், மித்ரா அழுது கரைந்து விடுவாள்! அம்மாவும் தவிப்பில், உடம்பைக் கெடுத்துக் கொள்வார்கள்!" என்றான் தீபன்.

"அவர்களுக்காகத்தான் கூட்டிப் போகிறீர்களா?" என்ற கேள்வி, தன்னை அறியாமல் அவள் வாயிலிருந்து வந்தது.

நெரிசலில் காரைக் கவனமாகச் செலுத்திவிட்டு, "எல்லோருக்காகவும்தான்! எனக்காகவும் தான்! என்னால், வீட்டை விட்டுப் போனாய் என்பது, நினைப்பதற்குச் சுகமாக இருக்கும் என்றா நினைத்தாய்?" என்று கேட்டான் தீபன்.

தொடர்ந்து அவனது முறையாக, "ஆனால், நீ என்ன, திடுமென இப்படிச் செய்து விட்டாய்? அங்கே ஏதோ எழுதி வைத்துவிட்டு, இங்கே வெயிட்டிங் ரூமில் வந்து இருந்து, என்ன இது?" என்று கேட்டான் தீபன்.

"என்ன செய்வது?" என்றாள் அவள்! "நீங்கள் அப்படி நடந்த பின், அங்கே தொடர்ந்து இருப்பது, மறைமுகமாக ஒப்புக் கொள்வது போலத் தோன்றும் என்ற பயம்! ஏற்கனவே, தங்குவதற்குக் கௌரவமான இடமாக்த் தேடித் தேடி அலுத்திருந்த சமயம். இன்றிரவுக்கு இங்கே பெண்கள் அறையில் தங்கி விட்டால், நாளைக்கு ஏதாவது இரண்டாம் தர விடுதியிலாவது சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன்..."

"நன்றாக நினைத்தாய்! அசட்டுத்தனமாய்!"

சிறு அமைதியின் பின் "சற்று நேரமாக, எனக்கும் அப்படித்தான் தோன்றத் தொடங்கியிருந்தது!" என்றாள் அவளும். "சும்மா உள்ளே வருவதும், போவதுமாக ஆண்கள் நடமாட்டம் தெரிந்தது! டிக்கெட் இருக்கிறதா என்று கேள்வி வேறு! கொண்டு வருவார்கள் என்று சொல்லி, அப்போதைக்குச் சமாளித்தேன்..."

"அதனால் தான், உன்னிடம் பேசவேண்டும் என்றதும், டிக்கெட் கொண்டு வந்தீர்களா என்கிற மாதிரி, ஏதோ கேட்டார்கள் போல! நான் சும்மா தலையாட்டிவிட்டு வந்தேன். ஆனால், இனி இந்த அசட்டுத்தனம் வேண்டாம். தேவையிராது" என்றான் தீபன்.

யோசனையோடு அவனைப் பார்த்தாள் சந்தனா.
பார்வையை உணர்ந்து, "நம்ப வேண்டும் சந்தனா. இங்கே பிறந்து வளர்ந்தவன் தான் என்றாலும், எனக்கு ஏழு ஆண்டுகளாக, அங்குள்ளதே பழகி விட்டதால், அனுசரிப்பது கொஞ்சம் கடினம். தற்செயலாகக் கை பட்டால் கூட உனக்கும் சட்டென சந்தேகம் தான் வரும்! எனவே, ஒன்று செய்வோம். பொதுவாகப் பார்த்துப் பேச வேண்டிய தருணங்கள் தவிர, இருவருமே, அடுத்தவர் பாதையில் குறுக்கிடாமல் ஒதுங்கிப் போய்விடலாம்! மித்தி, அம்மாவுக்காகத் தயவு செய்து, நீ இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்" என்றான் தீபன்.

ஏதோ யோசித்து, "ப்ளீஸ்!" என்று சேர்த்துச் சொன்னான்!

வேறு வழியும் தான் இல்லையே என்று யோசிக்கும் போதே, தனக்குமே, அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை என்று சந்தனா உணர்ந்தாள்!

அந்த வீட்டு வசதிகளுக்குப் பழகி விட்டதாலா என்று உள்ளூரக் கூசியவளுக்கு, அன்று, அவள் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அதே வசதிகள் இருக்கத்தானே செய்தன என்பது நினைவு வந்தது ஆறுதலைத் தர, "உம்" என்று சிக்கனமாய் சம்மதித்தாள்!

சற்று நேரம் பேசாமலே காரை ஓட்டிவிட்டு லேசாகத் தொண்டையைச் செறுமி, "வழக்கம் போலவே கடுமையாகப் பேசிவிட்டதாக அம்மாவிடம் சொன்னேன்..." என்று இழுத்தான் தீபன்.

அவன் மேலே பேசுமுன், "அப்படியே இருக்கட்டும்!" என்றாள் சந்தனா.

மற்றபடி, இதைப் போய், மீனாட்சி ஆன்ட்டியிடம் விலாவாரியாக விளக்குவாளா என்ன? கண்ராவி!

அதுவும், அவர்களுடைய பிள்ளையைப் பற்றி!

அத்தோடு, தீபனும்தான், ஒரு மாதிரியாக மன்னிப்பும் கேட்டுவிட்டானே!

"தாங்க்ஸ்!" என்றபடி, காரை வீட்டினுள் செலுத்தினான் தீபன்!

Advertisement