» இனி எல்லாமே நீயல்லவோ 14

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

ஆவலும், ஆர்வமுமாக எல்லாரும் அவளை வரவேற்ற விதத்தில், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, அங்கிருந்து சென்றோமே என்று, சந்தனாவுக்கு உள்ளூர மனம் நெகிழ்ந்தது. உருகிப் போயிற்று!

தீபன் சொன்ன மாதிரி, என்னிடம் இந்த வேலை வைத்துக் கொள்ளாதே என்று அவனிடம் கண்டிப்பாக சொல்லியிருந்தால் போதுமா?

பழைய காலக் கதாநாயகி போல வீட்டை விட்டு ஓடி, படாத கஷ்டத்தில் மாட்டி... சரியான சமயத்தில் தீபன் வந்திராவிட்டால், அப்படியும் கூட நேர்ந்திருக்கலாம்!

மற்றவர்கள் எப்படி உணர்வார்கள் என்றும் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு என்ன நடக்கக் கூடும் என்றும் யோசிக்கவில்லை!

அதையெல்லாம் யோசியாது செல்வது, எந்த நாட்டிலும் பெண்களுக்கு நல்லதில்லை, என்றானே!

எண்ணிப் பார்க்கையில், அது எவ்வளவு சரியாகத் தோன்றுகிறது!

கடைசியில் சற்று நேரம் மனது என்னமாகப் பதறிப் போயிற்று!

இருந்திருந்து தீபனின் பேச்சு சரியாக இருப்பதாக, அவள் எண்ணுகிற காலம் கூட வரும் என்று அவள் கனவிலும் கருதியது இல்லை!

தன்னை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக... மீனாட்சி ஆன்ட்டி என்ன சொன்னாள்... அவளது கையில் காலில் விழுந்தேனும் அழைத்து வருவதாகச் சொன்னானாமே! அப்படி அவன் வந்து அவளை அந்த வீட்டுக்கு அழைத்து வருவான் என்பதும், கற்பனைக்கு எட்டாத விஷயமே!

ஆனால், எதிர்பாராதது நடப்பதுதானே வாழ்க்கை!

அவளுடைய தந்தையின் மறைவைப் போல!

சட்டென அதிர்ந்து, படுக்கையில் இருந்து, எழுந்து அமர்ந்தாள் சந்தனா!

'எஸ்கேப்பிஸம்' என்று கூடச் சில பேர் சொல்லலாம்!

ஆனால், சந்தனா அவளுடைய தந்தையின் மறைவு குறித்து நினைத்துப் பார்ப்பதே கிடையாது!

அருமையான தந்தையான அவரை தினந்தோறும் நினையாதிருக்க அவளால் முடியாதுதான்! ஆனால், அவரைப் பற்றிய பலப்பல மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்ந்து பார்த்து, உருகிப் போவாளே தவிர, அவரது முடிவை, கடைசிப் பகுதியை அப்படியே மனதில் இருந்து ஒதுக்கியே தான் வைத்திருந்தாள்.

பூஞ்சை மனம் படைத்தவள் அல்ல என்பதால், அவளால், அது முடிந்தது!

ஆனால், இன்று திடுமென, ஏன் இந்த நினைவு வந்தது?

அன்று அனுபவித்த பல்வேறு உணர்ச்சிகளால் அவள் மனம் பலவீனப்பட்டு விட்டிருந்ததா?

அப்பாவின் மரணமும், அதற்கு முன்னிருந்த...

மனம், அதைத் தொடர்ந்து நினைப்பதைத் தவிர்க்க எண்ணி, அவசரமாகப் படுக்கையை விட்டு இறங்கினாள் சந்தனா.

முக்காலியின் மீது இருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த தண்ணீரை குடித்தாள்!

வழக்கமாக இரவு உணவுக்காகச் செல்லும் போது, இந்த பாட்டிலை எடுத்துப் போவாள். தூங்குவதற்காக மீண்டும் மேலே வரும் போது, பாட்டிலை நிரப்பிக் கொண்டு வருவாள்.

இன்று என்னென்னவோ நடந்து, கீழேயே இருந்து விட்டுப் படுப்பதற்காக மட்டுமே, அறைக்கு வந்தததில், வழக்கம் விட்டுப் போயிற்று!

அப்போதும், அதில் அருந்த தண்ணீர் போதுமானதாக இருந்ததால், அதைக் குடித்துவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க முயன்றாள்.

மனம் அதில் பதியாததோடு, உடலும் அயர்ந்திருந்ததால், சற்று நேரம் படிப்பதற்குள் கண் சொக்கிவிட, விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கிவிட்டாள்.

நல்ல அயர்ந்த உறக்கம்!

திடுமென, சந்தனா படுக்கையில் உருண்டு புரளலானாள்!

கடற்கரையில் கூட நடந்து கொண்டிருந்த தந்தை, திடுமென வீசத் தொடங்கிய சூறாவளியில், அவளை விட்டு விலகி எங்கே போனார்?

இங்கும் அங்கும் ஓடி ஓடித் தேடினால், நுரைத்துக் கொண்டு உயரே எழும்பிய அலை, முகத்தில் ரத்த காயத்துடன் அவரது முகம்!

அலை, அவரை இழுத்துப் போய்விடாமல் பிடிப்பதற்காக ஓடினாள், கால் தடுக்கிக் கீழே விழுகிறாள்!

தவிப்புடன் அலை நீரின் இழுப்பைச் சமாளித்து எழ முயலும்போதே, நடந்ததெல்லாம் கனவு என்பது, சந்தனாவுக்குப் புரியத் தொடங்கிவிட்டது.

என்னதான் முயன்றும், உடனடியாக முழு விழிப்பை கொண்டு வர முடியாமல், உடல் சண்டித்தனம் செய்தது!

சிரமப்பட்டு எழுந்து, குளியலறைக்குப் போய், வியர்த்து வடிந்த முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து, தண்ணீர் பாட்டிலுக்காகக் கையை நீட்டும் போதுதான், பாட்டிலில் தண்ணீர் இல்லை என்பது, அவளுக்கு நினைவு வந்தது!

அதொன்றும் பெரிய விஷயம் இல்லை!

வியர்த்துக் கொட்டியிருந்ததால், சற்றுக் குளிர்ச்சியாகக் குடிக்க வேண்டும் போலத்தான் சந்தனாவுக்கும் இருந்தது! எப்படியும், கீழே போய் ஐஸ் வாட்டரைத்தான் குடித்திருப்பாள்.

கூடவே, எப்போது விழித்தாலும், மீண்டும் உறங்குமுன் அவளுக்கு ஒரு மிடறேனும் தண்ணீர் குடிக்க வேண்டும்!

மீண்டும் தூக்கம் கலைந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமே என்று காலி பாட்டிலையும் எடுத்துக் கொண்டு, மெல்லப் படியிறங்கி சாப்பாட்டு அறைக்குச் சென்றாள் அவள்.

ஃபிரிஜ்ஜைத் திறந்து, உள்ளிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறக்கும் போது, "சந்தனா?" என்று தீபனின் குரல் கேட்கவும், அவள் அதிர்ந்த வேகத்தில், பாதி திறந்த நிலையில், கையில் இருந்த தண்ணீர் பாட்டில், கீழே விழுந்து உருண்டது!

"என்ன சந்தனா?" என்றபடி, விளக்கைப் போட்டுவிட்டு, அவள் அருகில் வந்தான் அவன்.

இன்னமும் தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்த பாட்டிலை அவசரமாக எடுத்தவளின் கைகள் நடுங்குவதைக் கண்டதும், பாட்டிலை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டு அறை நாற்காலி ஒன்றை இழுத்து, அதில் அவளை உட்கார வைத்தான்!

அவள் வந்த நோக்கம் உணர்ந்து ஒரு தம்ளரில் குளிர்ந்த நீர் நிரப்பி அவளிடம் கொடுத்துவிட்டு, "என்ன சந்தனா? என் குரலைக் கேட்டதும் பயந்து விட்டயா?" என்று இதமான குரலில் வினவினான்.

இல்லை என்று தலையாட்டினாள் அவள். "அந்தக் க... கனவு! தி...திரும்பவும், இன்று வந்து விட்டது!" என்றாள் கலங்கிய குரலில்!

அருகிருந்த இன்னொரு நாற்காலியை இழுத்து, அதில் அமர்ந்து, "திரும்பவும், என்றால்? இதே கனவு முன்னேயும் வந்திருக்கிறதா?" என்று கேட்டான் தீபன்.

"இம்!" என்றாள் அவள் ஒப்புதலாக. "இது மூன்றாவது தடவை!"

"என்ன கனவு?" என்று கேட்டான் தீபன்.

அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு, அவள் பேசாதிருக்கவும், "தயங்க வேண்டாம், சந்தனா. ஒரே கனவு, திரும்பத் திரும்ப வந்தால், அதற்குக் காரணம் இருக்கும்! உன் நிலைமையைப் பார்த்தால், அது பயங்கரக் கனவு என்றும் தோன்றுகிறது! அதிலிருந்து உன்னை மீட்கும் முயற்சியாகத்தான் கேட்கிறேன் சொல்லு!" என்று, தீபன் மறுபடியும் கேட்கவும், ஒரு சிறு தயக்கத்தின் பின், சந்தனா தன் கனவுகளை விவரித்தாள்!
"ம்ம்ம், எல்லாக் கனவுகளும் கடைசியில்... சந்தனா, உன் அப்பாவின் மறைவில் பிரச்சினை இருந்ததா?" என்று கேட்டான் தீபன்!

ஆம் என்பது போலத் தலையாட்டினாள் அவள்.

"என்ன அது?"

மடியில் கோத்திருந்த விரல்களைப் பார்த்தபடி, அவள் சொன்னாள், "திருட்டு! ஒரு... ஓர் ஒன்றாம் தேதி சமயம். பள்ளியில், ஸ்டாஃப் மீட்டிங் முடிந்து, அப்பா வர நேரம் ஆகும் என்று நான் முன்னதாக வந்து விட்டேன்! பிறகு பார்த்தால், வெகு நேரம் அப்பா வரவே இல்லை! கடைசியாக ஏழு மணிக்கு மேலே, கதவைத் தட்டிக் கொண்டு, அப்பா நிற்கிறார்! அவரிடமும் ஒரு சாவி உண்டு. பிறகு தான் தெரிந்தது, சாவி துவாரத்தில் சாவியை நுழைக்கும் அளவுக்கு, அவருக்குக் கை நிதானம் இல்லை! வீட்டு வாயில் வரை அப்பா எப்படி வந்தார் என்பதே அதிசயம்! அந்த அளவுக்கு அவரது தலையில் அடி! முகமெல்லாம்... ரத்தம்!

"ஒன்றாம் தேதி அல்லவா? சம்பளம் வாங்கி வந்திருப்பார் என்று, அவரைத் தலையில் அடித்துக் கீழே தள்ளி, எல்லாவற்றையும் பிடுங்கியிருக்கிறார்கள்...!" தொடங்கி விட்ட பிறகு, நிறுத்த முடியாதவள் போல, சந்தனா சொல்லிக் கொண்டே போனாள்.

அவனும் குறுக்கிடாமல் கேட்டான்.

"...ஆனால், அப்பா சம்பளத்தைச் செக்காக வாங்கி, பள்ளியில் இருந்த பாங்கில் கட்டி விடுவார் என்று தெரியாத முட்டாள்கள்!

"அப்படி, என் அப்பாவிடம் அவர்கள் திருடியது எவ்வளவு தெரியுமா? சுமார் முன்னூறு ரூபாயும், ஒரு வெள்ளி மோதிரமும் மட்டும்தான்!

"இதைப் பிடுங்க, என் அப்பாவின் உயிரையே எடுத்து விட்டார்கள்!

"எவ்வளவு நல்லவர் தெரியுமா, என் அப்பா! தேவை என்று கேட்டிருந்தால், அவரே கொடுத்திருப்பார்! அவரைப் போய், அநியாயமாய் அடித்துக் கொன்று விட்டார்களே!" என்று முடித்த போது, அவளது கண்களில், கண்ணீர் பொங்கி வழியலாயிற்று!

சற்று நேரம் குறுக்கிடாமல் அவளை அழ விட்டுவிட்டு, அதன் பின், "அந்தக் குற்றவாளிகளைப் பிடித்தார்களா?" என்று கேட்டான் தீபன்.

"இல்லை! இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்! ஆனால், அவர்களை எப்படியாவது பிடித்து முன்னூறு ரூபாயும் வெள்ளி மோதிரமும், நான் தருகிறேன். என் அப்பாவின் உயிரைத் திருப்பித் தருவாயாடா என்று கேட்க வேண்..." என்று ஆத்திரத்துடன் சொல்லும் போதே, அதன் பயனற்ற தன்மையை உணர்ந்து, உச்சிக் கொட்டினாள், சந்தனா! "என்ன பிரயோஜனம்? யாரை, என்ன கேட்டும் தான் என்ன பிரயோஜனம்?" என்றாள் சோர்வுடன்.

"உண்மைதான்!" என்றான் அவனும்!

சில வினாடி அமைதியின் பின், "இந்தக் கனவைப் பற்றி, யாரிடமும் சொன்னாயா, சந்தனா?" என்று வினவினான்.

"லேசாக ஒரு தரம், அண்ணனிடம் தொடங்கினேன். முதலில் வந்த படகுக் கனவு! ஆனா, டைட்டானிக் பார்த்ததின் பாதிப்பு என்று சொல்லிச் சிரித்தானா? அதற்குப் பிறகு, அண்ணனைப் பிடித்து வைத்துச் சொல்ல, மனது வரவில்லை! அத்தோடு, அவனும் என்னை இங்கே விட்டுவிட்டு வெளிநாடு செல்ல வேண்டிய நிலை! அவனும் வருத்தம்தானே படுவான் என்று..."

தன்னிச்சையாக எழுந்த கையை அடக்கிக் கொண்டு, "அதுதான் காரணம்!" என்றான் தீபன்.

சந்தனா ஏறிட்டுப் பார்க்கவும், "பெரிய இழப்பு, அநியாயமான முறையில் அது நேர்ந்த விதம், இவற்றால் ஏற்பட்ட துக்கம், ஆத்திரம் என்று எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே போட்டு அடைத்து வைத்ததுதான் இந்தக் கனவுகளின் காரணம் சந்தனா. எல்லாமே உள்ளே கிடந்து முட்டி மோதிக் கொண்டு இருந்திருக்கின்றன! உன் மனமோ, உடலோ களைப்படையும் போது, கனவாக வெளிப்பட்டிருக்கிறது! இன்றைய தினத்தை, அப்படிப்பட்ட நாளாக ஆக்கியதற்கு, சாரிம்மா! ஆனால், உள்ளே அடைத்து வைத்திருந்ததை எல்லாம் இப்போது கொட்டிவிட்டாய் அல்லவா? இனி, இந்தக் கனவுகள் வர வாய்ப்பில்லை! அதனால், இனிக் கவலையற்றுப் படுத்துத் தூங்கு!" என்றான் அவன்.
என்னவோ, சர்வமும் அறிந்தவன் போல, தீபன் கூறிய விதம், சந்தனாவுக்கு வியப்பாக இருந்தது!

நம்ப முடியாததாகவும்!

அவளது கனவுகள் கூடவா, இவன் பேச்சுக்குக் கட்டுப் படும்? ஆனால், இவன் சொல்லும் போது, நம்ப முடியாததைக் கூட நம்பலாம் போலவும் தோன்றியது!

"என்ன? உன் கனவுகள் கூட, என் பேச்சுக்குக் கட்டுப்படுமா என்று யோசிக்கிறாயா?" என்று கேட்டு, அவளைத் திகைக்கச் செய்து விட்டு, "இது, சாதாரண மனோ தத்துவம், சந்தனா! வைத்தியத்தில், மனோ தத்துவம் ஓர் அங்கம்! உனக்குத் தெரியுமோ, என்னவோ, நான் வைத்தியம் படித்தவன் தான்! அதில் மேல் படிப்பையும் முடித்திருக்கிறேன்! யுஎஸ்சில்தான்!" என்றவன், அத்தோடு பேச்சை நிறுத்தி, தோளைக் குலுக்கினான்.

முதல் நாளே, 'சுகம்' மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கருவிகள், அவை தொடர்பான செலவுகள் பற்றித் தெரிந்தவன் போலத் தீபன் பேசியது, சந்தனாவுக்கு இப்போது நினைவு வந்தது!

பிறருக்கு உதவும் பணி என்று மருத்துவத் தொழிலைச் சொல்வார்கள்! அதைப் படித்து முடித்துவிட்டு, இங்கே சொந்த மருத்துவமனையும் வைத்துக் கொண்டு, இவன் ஏன், அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறான்?

ஒரு வேளை, 'அரை வைத்தியன்...' என்று ஏதோ சொல்லுவார்களே, அது போல ஏதோ செய்து விட்டானோ?

அதுதான் மீடியாவுக்கு அப்படிப் பயப்படுகிறானோ?

மனோதத்துவம் பயின்றவனுக்கு, அவளது முகம் காட்டிய பாவம் பிடிக்கவில்லை போலும்!

சட்டென எழுந்து, "ஓகே! என் விஷயம் போதும்! இனியாவது போய், நிம்மதியாகத் தூங்கு! இரவுத் தூக்கம் ரொம்பவும் குறைவது, ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? கூடக் கொஞ்ச நேரம் சேர்த்துத் தூங்கு! குட்நைட்!" என்று விட்டு, அவனது அறைப் பக்கம் சென்றான் அவன்.

திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!

அதாவது, அவனைப் பற்றிய பேச்சோ, நினைப்போ கூட, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால் ஏன்?

தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அவளது அறையை நோக்கி நடந்தவாறே சந்தனா யோசித்தாள்.

தீபனைப் பற்றிய ஒரு விவரமும், யாரும் சொல்வது இல்லை!

மீனாட்சி ஆன்ட்டியின் பர்சில் இருப்பது தவிர, அவனது புகைப்படங்கள் எதையுமே அந்த வீட்டில் அவள் பார்த்தது இல்லை! அவனது கட்டளையாகவே இருக்க வேண்டும்!

அவனது விருப்பப்படி அவனுடைய தாயாரே, அவனைப் பற்றிப் பேசுவது இல்லை எனும் போது, அவனைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

தெரிந்து கொள்வது பற்றி யோசிக்கும் போதே, சற்று முன் பேச்சை நிறுத்தி, அவன் திரும்பிப் பாராமல் சென்றது, அவளுக்கு நினைவு வந்தது!

அடுத்தவர் பாதையில் குறுக்கிடக் கூடாது என்று நேரடியாகவே சொன்னானே!

அவனைப் பற்றிய பேச்சு, கேள்விகள் எல்லாமே, அந்த வீட்டில், பெரும் குற்றங்களே!

கேட்கிறவர் குற்றவாளி என்பது குறைந்த பட்சமாய், அவனது கருத்து!
அதாவது, தீபனைப் பற்றிக் கேட்டு அறிய நினைப்பது, தீக்குள் விரலை வைப்பது போலத்தான்! சூடு பட்டுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால், அவனைப் பற்றி விசாரிக்கவும் கூடாது!

இருக்கிற நிம்மதியைக் கெடுத்துக் கொண்டு, அவளுக்கு எதற்கு வீண் வம்பு!

எப்படியும் அவள் இங்கே இருக்கப் போவதே, அண்ணன் பூபால் வருகிற வரையில் தான்! அது, ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ!

அதன் பிறகும் சந்தோஷமாகவே மீனாட்சி ஆன்ட்டியை வந்து பார்த்துப் பேசுகிற மாதிரி, சுமுகமான உறவோடு இருக்க வேண்டாமா?

இவ்வளவு பழகிய பிறகு, மீனாட்சி ஆன்ட்டியின் உறவை அடியோடு விடுவது வேதனையாக இருக்கும்!

மித்ராவும் அப்படித்தான்! ஆனால், அவளை எப்போது வேண்டுமானாலும், அவளுடைய தந்தை, நாட்டை விட்டு அழைத்துச் சென்று விடலாம்! அதனால், அவள் மீது பாசத்தை வளர விடுவது, மித்ராவுக்குமே நல்லதல்ல!

அப்படிக் குழந்தையோடு தீபன் சென்று விடுகின்ற சமயத்தில், ஆன்ட்டிக்கு ஆறுதலாகக் கூட, சந்தனா இங்கே அடிக்கடி வர வேண்டியிருக்கும்!

எனவே, எந்த வகையிலும், இந்த சுமுகமான உறவைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது!

அதற்காக, தீபன் சம்பந்தப்பட்ட அனைத்திலிருந்தும் தூர...தூரமாய் ஒதுங்கிப் போய்விட வேண்டும்!