» இனி எல்லாமே நீயல்லவோ 15

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

யோசித்துச் செய்த முடிவைச் செயலாற்றுகிறவளாக சந்தனா எப்போதும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

தீபன் முன்னிலையை, முடிந்தவரை தவிர்த்ததோடு, அவனைப் பற்றிய கேள்விகளையும், மனதுக்குள்ளேயே மறைத்து வைத்தாள்!

மித்ராவிடம் இருந்தும் ஒதுங்கத்தான் முயன்றாள்.

ஆனால் ஒரு தரம் சொல்லாமல் கொள்ளாமல் போனாளே என்ற பயத்தில், சிறுமி அவளிடம் பசை போட்ட மாதிரி ஒட்டிய போது அவளால் விலக்க முடியவில்லை!

வீட்டின் மற்றவர்களிடம் எப்போதும் போல் நல்லுறவு தான்!

சொல்லப் போனால், அவளைச் சந்தோஷப்படுத்த முயன்றார்கள் என்றே சொல்லலாம்!

மீனாட்சி மட்டும், ஒரு தரம் அவளைத் தனியே அழைத்து, அவளுக்கு ஏதேனும் மனக்கஷ்டம் என்றால், தன்னிடம் நேரில் சொல்லும்படி கூறி, இனி இப்படிப் போவது இல்லை என்ற வாக்குறுதியும் வாங்கிக் கொண்டாள்!

மொத்தத்தில் வீடு பிரச்சினையற்று அமைதியாக இருந்தது!

அன்று காலை உணவு முடிந்ததும், "இன்று சாப்பிட்ட நூடுல்சை அன்னம்மா என்னவென்று சொன்னாள்?" என்று கேட்டாள் மித்ரா!

அன்று காலைக்கு அன்னம்மா இடியாப்பம் வைத்திருந்தாள். தொட்டுக் கொள்ள, இனிப்புக்குத் தேங்காய்ப்பூ சர்க்கரையும், காரத்துக்குக் குருமாவும்!

சுவை பிடித்துப் போகவே, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அதன் பெயரைக் கேட்டாள் மித்ரா.

முறுவலோடு, "சொல்வதற்கு, உனக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கக் கூடும்! அதனால், இப்படிப் பிரித்து சொல்லிப் பார். இடி...யாப்பம்!" என்று பெயரை இலகுவாக உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தாள் சந்தனா!

மித்ராவும் அதே போலச் சொல்லிவிட, இருவரும் சந்தோஷமாகக் கைதட்டி மகிழ்ந்தனர்.

புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "மித்ராவுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்று பார்க்கிறேன் தீபு! சும்மா, வீட்டில் பேசும் அளவுக்கேனும் கற்றுக் கொடுக்கும்படி, யாரையேனும் ஏற்பாடு செய்யட்டுமா?" என்று மகனிடம் அனுமதி கேட்டாள் மீனாட்சி.

ஒரு வகையில், இது சற்றுத் துருவும் கேள்விதான்!

விரைவிலேயே யுஎஸ்சுக்குக் கிளம்புகிற திட்டத்தில் இருந்தால் எதற்கம்மா என்று மறுத்துவிடுவான் அல்லவா?

ஆனால், தீபன் இன்னொரு பதில் சொல்லி, எல்லோரையும் திகைக்க வைத்தான்! "அதென்னம்மா 'யாரையேனும்?' வீட்டிலேயே ஒரு டீச்சரம்மாவை வைத்துக் கொண்டு, இன்னொருவரை எதற்காக ஏற்பாடு செய்வது? பேசாமல் சந்தனாவையே கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள்! மித்ராவும், அவளிடம் முரண்டு பிடிக்காமல் படிப்பாள்!" என்றான் இலகுவாக!

சந்தனா பிரமித்துப் போனாள்!

'மித்ராவை வசியம் செய்கிறாய்' என்று குற்றம் சாட்டிய அதே தீபன்!

என்னதான், உன்மேல் இருந்த சந்தேகம் போய்விட்டது என்றாலும், விலகியிருக்குமாறும் சொன்னான் தானே?

அவன் வாயால், மகளுக்குக் கற்றுக் கொடுக்கச் சொல்வது என்றால்?

'வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம்' என்பது, இதுதான் போலும்!

அன்று முழுவதும், தரையிலேயே கால் பரவவில்லை அவளுக்கு!

மித்ராவுக்கும் ஆர்வம் இருந்ததால், உட்கார்ந்து இருக்கும் போதும், நடக்கும் போதும், சாப்பிடும் போதும், போக வர... ஓரொரு வார்த்தைகளாக, அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததே, சந்தனாவுக்கு சந்தோஷம்.
அதைத் தீபன் அவ்வப்போது கவனித்து, ஒப்புதலாக முறுவலித்தது, இன்னமும் ஆனந்தமாக இருந்தது!

முறுவலித்தது மட்டுமல்ல, கூடச் சேர்ந்து அவனும் ஏதாவது சொல்லுவான்.

சில சமயங்களில் ஓரோர் எழுத்துக்களை மாற்றிச் சொல்லி, மித்ரா இருவருக்குமே சிரிப்பு மூட்டுவாள்!

சாப்பிடுகிற சமயத்தில், தமிழில் சொல்லுகிறேன் என்று, 'அப்பா, செருப்பு சாப்பிடுகிறார்!' என்பாள்!

பருப்பு, செருப்பான விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு பிய்த்துக் கொண்டு போகும்!

புத்திசாலிப் பெண் என்பதால், எதற்குச் சிரிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, தானாகவே, இதுபோலத் தோசையையும் மீசையையும் குழப்பி, "ராசையா முகத்திலே 'தோசை' வளர்த்திருக்கிறார்" என்று விட்டு எல்லோரும் சிரிக்கையில் கண் சிமிட்டலோடு சேர்ந்து கொள்வாள், சிறுமி!

இது, இன்னமும் மகிழ்ச்சியைப் பெருக்கும்!

மீன் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்த பின், மீனாட்சி, 'ஃபிஷ்'மா ஆகிப்போனாள்.

அன்னம்மா, 'ரைஸ்மா'.

"என் பெயரை, இப்படிக் கெடுக்கக் கூடாதும்மா" என்று தீபன் சொன்ன பிறகுதான், மித்ராவின் இந்த விளையாட்டு நின்றது!

அவளோடு ஓடியாடி விளையாடுவதும், பெரும்பாலும் தீபனும் கூடவே இருந்ததும், பள்ளி முடிந்து, எப்போது வீட்டுக்குப் போவோம் என்ற துடிப்பை, சந்தனாவுக்கு ஏற்படுத்தின!

இடையில் ஒரு கலக்கமும் நேர்ந்தது!

சிதம்பரநாதனிடம் திருடி, அவரது மரணத்துக்குக் காரணமானவர்களைப் பிடித்துவிட்டதாகவும், அவர்களிடமிருந்து கைப்பற்றிய, அவளுடைய தந்தையின் பேனா, மோதிரம், பர்ஸ் முதலியவற்றை அடையாளம் காட்ட வருமாறும், சந்தனாவைப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்தார்கள்!

சந்தனாவின் கலக்கம் புரிந்து, தீபனே, அவளை அழைத்துச் சென்றான்!

அவன் தாய்க்கு, அதுவே அதிசயம்!

யாராவது பத்திரிகைக்காரர்கள் மோப்பம் பிடித்து விடுவார்கள் என்று சென்னையில் தீபன் வெளியே போகவே மாட்டான்!

அன்று ரயில் நிலையத்துக்குச் சந்தனாவை அழைத்து வர அவன் போனதே மீனாட்சிக்கு ஆச்சரியம்தான்!

ஏதோ மடத்தனமாகச் சொல்லி, அவளை விரட்டிவிட்டுப் பிறர் அறியாமல் மன்னிப்பு கேட்கப் போகிறான் என்பது, அவளது ஊகம்!

அத்தோடு, அப்போது இரவும் கூட!

ஆனால், இப்போது பட்டப்பகலில் சந்தனாவோடு கிளம்புகிறான் என்றால், அவளது ஆறுதல் மற்ற எதையும் மறக்கடிக்கிறது என்று தானே அர்த்தம்?

அப்படியானால்... அதற்கு மேல் யோசிக்கக் கூடாது. நடப்பது நல்லதாக இருந்தால், அவளுக்கு மகிழ்ச்சியே! ஆனால், வெறும் ஊகத்திலேயே கோட்டை கட்டுவது கூடாது என்று மீனாட்சி அம்மாள், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காவல் நிலையத்தில், தீபனின் கைப்பிடியிலேயே நிற்பதை, சந்தனா உணரவே இல்லை!

வெறும் முந்நூறு ரூபாய்க்கும், ஒரு வெள்ளி மோதிரத்துக்குமாக, என் தந்தையைக் கொன்றுவிட்டாயே என்ற தவிப்பில், அவளது உள்ளத்தோடு, உடலும் பதறியது! தீபனின் கைப்பிடி இல்லையென்றால், என்ன ஆகியிருப்பாளோ?
ஆனால், திருடர்களைப் பிடித்து வைத்திருந்த இன்ஸ்பெக்டர் வேறு சொன்னார்!

"உங்கள் அப்பா காந்தி மாதிரிம்மா! சாவில் கூடப் பிறருக்கு நல்லது செய்கிற விதம்! இந்த மூவரும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள். மற்றவர்களின் உயிர் இவர்களுக்குத் துச்சம்! இவர்கள் கணக்கில், ஆறு கொலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாள் இவர்களைப் பிடிக்கச் சரியான ஆதாரம் கிடைக்காமலே இருந்தது! இப்போது இந்த வெள்ளி மோதிரத்தைப் பிளாட்டினம் என்று நினைத்து விற்கப் போய், மாட்டிக் கொண்டார்கள்! பெரிய தலைமை ஆசிரியர், பாஸ் பண்ணிவிட, பள்ளியில் சேர்க்க என்று நிறைய வாங்கியிருப்பார். இருந்திருந்து வெள்ளியிலா போடுவார் என்று எண்ணினார்களாம்! மாட்டிக் கொண்டார்கள் அல்லவா? சிதம்பரம் சார் விஷயத்தில், நேரில் பார்த்த சாட்சிகளும் இருப்பதால், இனி இவர்கள் ஜெயிலை விட்டு வெளியே வராதபடி, நான் பார்த்துக் கொள்கிறேன்! சமூகத்துக்கு ஒரு பெரிய சாபக்கேடு தீர்ந்தது! உங்கள் அப்பா, தன் உயிரைக் கொடுத்துத் தீர்த்து வைத்திருக்கிறார்!" என்றார் அவர் நன்றியோடு!

கண்ணைக் கரித்தபோதும், இதை எங்கேயோ இருந்து கேட்டிருந்தால், அப்பாவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

திரும்பி வரும்போது கண்மூடி அமர்ந்திருந்தவளை மென்மையாக இழுத்து தன் தோள்மீது சாய்த்துக் கொண்டான் தீபன்.

வீடு வந்த பிறகு, காவல் நிலையத்தில் நடந்ததை மீனாட்சியிடம் விவரிக்கும் பாவனையில், சிதம்பரநாதனைப் பற்றி மிக உயர்வாகத் தீபன் பேசவும், உள்ளிருந்த வருத்தம் குறைந்து, பெருமையாக உணர்ந்தாள் சந்தனா!

அதன் பிறகும், சந்தனாவிடம் ஒரு கனிவுடனேயே அவன் நடந்த கொள்ள, அதைக் கவனித்த மித்ராவும், அவளைத் தடவிக் கொடுப்பதும், கொஞ்சுவதுமாக தன் அன்பைக் காட்ட, விரைவிலேயே, சந்தனாவின் முகத்தில் புன்னகையே மலரத் தொடங்கியது!

உள்ளூர அஞ்சியிருந்த போதும், அன்றிரவு, பழைய கனவு வராதது, சந்தனாவிற்குப் பெரும் ஆறுதலாக இருந்தது!

அதையே யோசித்தவன் போலத் தீபனும் அவளிடம் விசாரிக்க, அதில் தொடங்கி, இருவருமாகத் தனியே பேசிக் கொண்டிருப்பதும், இயல்பாகவே நடக்கலாயிற்று!

பாராதது போல, இதைப் பார்த்திருந்த மீனாட்சி அம்மாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியே!

தாயின் இந்த மகிழ்ச்சியை, மேலும் அதிகப்படுத்தும் விதமாக, இன்னொன்று நடந்தது!

அன்று, யுஎஸ்சில் இருந்து தீபனுடைய ஏஜெண்ட் எலிசா போன் செய்தாள்.

"ஹல்லோ எலிசா..." என்று தீபன் சொன்னதுமே, மீனாட்சியின் முகம் மாறிவிட்டது!

தாய்நாட்டில் பெற்றவளோடு இருப்பதற்கு, மகனே விரும்பினால் கூட இவள் விடமாட்டாள் போல இருக்கிறதே என்று கலக்கமும் கடுப்பும்!

இவள் போன் செய்தால், தீபன் கிளம்பி விடுவான்! அப்புறமாக, அவன் திரும்பி வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

சலிப்புடன் பெற்றவள் திரும்பும்போதே, "எலிசா ஆன்ட்டியாப்பா?" என்று மகள் ஆவலோடு ஓடிவந்தாள்.

"நான் பேசணும்பா! ஆன்ட்டி கிட்டே, நான் தமிழ் படிப்பது சொல்லணும்!" என்று அவள் கேட்கவும், புன்னகையோடு போனை மித்ராவிடம் கொடுத்தான் தந்தை.

"ஆன்ட்டி நான் இங்கே தமிழ் படிக்கிறேன்! என் கிராண்ட்மா, சந்தனா ஆன்ட்டி, அன்னம்மா, ராசையா எல்லோரும் பேசுகிற பாஷை! நான்சி, மிச்சிகிட்டே எல்லாம் சொல்லு! என்ன? சந்தனா ஆன்ட்டிதான் சொல்லித் தருகிறான்னும் சொல்லு! சந்தனா ஆன்ட்டி ரொம்ப ஸ்வீட் தெரியுமா? ஆனால், உன் மாதிரி சாக்லேட்லாம் நிறையத் தரமாட்டாள்! என் உடம்புக்கு நல்லதில்லையாம்! அப்புறம், ஜேடி, இப்போதெல்லாம் ரொம்பத் தூங்கிப் போகுது. என்னோட விளையாடவே வராமல், என்னைத் தமிழ் படிக்க விடுது!" என்று மனதில் நினைத்ததை எல்லாம் அளந்தாள்.

"அப்போ சரி ஆன்ட்டி, எழுப்பி விளையாடுறேன். இதோ, உடனே அப்பாவிடம் கொடுத்து விடுகிறேன். பை ஆன்ட்டி!" என்று போனைத் தந்தையிடம் கொடுத்தாள்.
எதிர்முனையில், எலிசா என்ன சொன்னாளோ, "சேச்சே! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை! இது, என் அம்மாவின் வீடு! இப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேச வேண்டாம் எலிசா!" என்றான் ஒரு மாதிரியான குரலில்!

மீண்டும் அவள் பேச்சைக் கேட்டுவிட்டு, "அப்படியா! ஆனால், இது நான் சில நாட்களாக எதிர்பார்த்ததுதான்! உன்னிடம் பார்க்கச் சொல்லியிருக்கவே கூடாது! பழைய பழக்கத்தில், எதையும் நம்பாமல்... இல்லையில்லை! வேண்டாம், எலிசா. இதற்கு மேல் அவசியம் இல்லை! சந்தேகம் எல்லாம் ஏற்கெனவே இங்கேயே தீர்ந்துவிட்டது! விட்டுவிடு! நான் வருவதா? இருக்கட்டும்! கொஞ்ச நாள் ஆகட்டும். அப்புறம் பார்ப்போம்! ஊகூம்! இப்போது வருவதற்கு இல்லை. வைத்து விடுகிறேன்!" என்று ரிசீவரைக் கீழே வைத்தான்.

சற்று விலகி நின்றிருந்த தாயின் முகம் ஓரளவு மலர்ந்திருந்தது!

"அடுத்தவர் போன் பேச்சைக் கவனிப்பது அநாகரீகம் என்று எனக்குத் தெரியும்! ஆனால், இந்தப் பேச்சைக் கேளாமல் விட்டுவிட்டுப் போக முடியவில்லை! இந்த முறை வரவில்லை என்று விட்டாய்! இனித் தினமும் யுஎஸ் போனை எதிர்பார்க்கலாமா? எத்தனை தரம் தாக்குப் பிடிப்பாய்?" என்று புன்னகையும் கலக்கமுமாகக் கேட்டாள்.

"இல்லைம்மா! எனக்கே, இங்கே வந்து விடத்தான் இப்போது விருப்பம்! அதற்குத்தான் பெரிதும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்! கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பார்ப்போம்! அப்புறம், எலிசா இப்போது போன் செய்தது, என்னை அங்கே வருமாறு அழைப்பதற்காக இல்லை! சந்தனாவுடைய அண்ணன் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் விஷயம் எல்லாம் சரிதான், தப்பாக எதுவும் இல்லை என்று... அதைத் தெரிவிப்பதற்காகத்தான்!"

"சந்தனாவுடைய அண்ணன் என்ற பிறகு, அந்தப் பையன் மேல், நீ சந்தேகப்பட்டதே தப்பு! நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்பவும் வேண்டும்!" என்றாள் தாய்!

ஆனால், "இங்கே இருந்து கொண்டு, இலகுவாகச் சொல்லலாம்!" என்றான் பிள்ளை!

"அப்போது, அங்கே போகாதே!" என்றாள் அன்னை பதிலுக்கு!

"அம்மா, ப்ளீஸ்! அதிலேயே நில்லாதீர்கள்! நான் தான் முயற்சி செய்வதாக சொன்னேன் இல்லையா?"

"எப்போதும் இப்படித்தான்" என்றாள் தாயார், அவன் பேச்சில் அவ்வளவாக நம்பிக்கையற்று.

"ப்ராமிஸ், அம்மா! இந்த முறை, எல்லாம் வேறு! முன்பெல்லாம், அவ்வளவாக விருப்பமற்று, உங்களைச் சமாதானப்படுத்த மட்டுமே சொன்னேன். ஆனால் இந்தத் தடவை, நூறு சதவீதமாக என் மனதிலேயே நிச்சயமாக இருக்கிறேன்! எனக்கே சிலதிற்கு மிக அதிக விலை கொடுத்து விட்டதாக எண்ணம்! ஆனால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட என்னால் முடியாது! அது, உங்களுக்கும் தெரியும்! அதனால் இப்போதைக்கு, இது பற்றி யாரிடமும், குறிப்பாகக் கூடச் சொல்லி வைக்காதீர்கள்!" என்றான் தீபன்.

"இத்தனை ஆண்டுகளாக, உன்னைப் பற்றி, எதை யாரிடம் சொன்னேன்? சின்னப் பிள்ளைப் படம் தவிர, ஒரு போட்டோவேனும் வெளியே இருக்கிறதா, பார்! பின்னிப் பின்னிக் கேட்கிறார்கள் என்று சொந்த பந்தங்களைக் கூட விட்டுவிட்டேன்! என்னிடம் வந்து, இன்னமும் சொல்கிறாயே!" என்று குறைபட்டாள் அவள்.

"சாரிம்மா! உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்! ஆனால், இன்னும் கொஞ்ச காலம், இப்படியே இருந்து விடுங்கள், என்றேன். அவ்வளவுதான்!" என்றான் அவன்!

அப்படியே, வீடு சந்தோஷமாக நடந்து கொண்டும் இருந்தது!

இந்தச் சமயத்தில், வானில் மிதந்து கொண்டிருந்த சந்தனா, தரைக்கு இறங்கி வருகிற மாதிரி ஒன்று நடந்தது!
அன்று ஓர் அரசாங்க விடுமுறை தினம்.

நன்றாக தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்துவிட்டு வந்த சந்தனா, வெளியே போர்டிகோவில் நின்று, ராசையாவுடன் தீபன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி ஹால் சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் அருகில் அமர்ந்தாள்.

ஆனால், சிறுமி "அச்சச்சோ!" என்று கத்தவும் பதறி, "என்னம்மா?" என்று விசாரித்தாள்!

"என் ஜேடி!" என்று சோஃபாவை காட்டினாள் மித்ரா.

சோஃபாவின் இடுக்கில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பொம்மையின் கால் பகுதி, சந்தனாவின் கீழே இருந்தது!

குழந்தையின் உணர்ச்சியை புரிந்து கொண்டு, "அடடா! உன் ஜேடிப் பாப்பாவின் கால் மீதா உட்கார்ந்து விட்டேன்! பாப்பாவுக்கு வலித்திருக்குமே!" என்று பொம்மையின் கால்களை வருடிவிட்டாள் சந்தனா!

ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், "ஊகூம்! பாப்பா கால் உடைந்தே போய்விட்டதே! கட்டுப் போடணும்! எனக்குப் போட்ட மாதிரி!" என்றாள் மித்ரா!

எப்போதேனும் ஒரு தரம், தனக்கு நேர்ந்த விபத்துப் பற்றி, மித்ரா, இப்படிக் குறிப்பிடுவது உண்டு! முதலில் சாதாரணமாகவே குறிப்பிட்டாலும், தொடர்ந்து உடம்பு சரியாகாதது போலக் காலைத் தாங்கி நடப்பாள், அவள்.

அது அடியோடு மறக்கும் வரை, நடை அப்படியே இருக்கும்.

இந்த முறை அந்த நடையை தவிர்க்க எண்ணி, "பாப்பாவைப் பார்த்துக் கொள்!" என்று, மித்ராவின் மடியில் பொம்மையை வைத்துவிட்டு ஓடிப் போய், ஒரு துண்டு துணியை எடுத்து வந்தாள், சந்தனா.

பொம்மையின் காலில் அதைக் கட்டி, "இனிமேல் சரியாகிப் போகும்! எங்கள் மித்திச் செல்லத்துக்கு கட்டுக் கட்டியதும் குணமாகிப் போய், இப்பல்லாம் அவள் ஆன்ட்டியோடு ஓடி விளையாடுகிற மாதிரி, ஜேடிப் பாப்பாவுக்கும், சீக்கிரமாக சரியாகிவிடும்! இதோ, இதே மாதிரி, சுத்தமாகக் குணமாகிவிடும்!" என்று மித்ராவின் காலைத் தொட்டுக் காட்டினாள்.

"ஆமாம், நல்லாயிட்டது!" என்று காலை நீட்டிப் பார்த்துவிட்டு, "ஆமாம் ஜேடி. ஆன்ட்டி சொல்லுகிற மாதிரி, உனக்கும் நிஜம்மாக நல்லாயிடும்!" என்று பொம்மையை மறுபடியும் சோஃபாவில் கிடத்தப் போனவள், "ஊகூம்!" என்று அதைத் தூக்கிக் கொண்டாள். "திரும்பவும், யாராவது ஜேடி மேலே உட்கார்ந்திட்டால்? பாவம்! இன்னொரு காலும் உடைந்து, இன்னொரு காலும் வலிக்கும்!" என்று அவள் யோசித்து சொன்ன தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!

காட்டிக் கொள்ளாமல், "அது சரிதான்!" என்று அவள் தலையாட்டவும், பொம்மையை மடியில் போட்டுக் கொண்டு, "என்னோட ஜேடிக்குத்தான் இப்படி வலிக்கும்! அப்பாவோட பொம்மைக்கு வலிக்கவே வலிக்காது!" என்றாள் சிறுமி!

அதிசயப்பட்டு, "அப்பாவின் பொம்மையா?" என்று கேட்டுவிட்டாள் சந்தனா!

தீபனைப் பற்றி கேட்பது, பேசுவது எல்லாமே, அந்த வீட்டில் பெருங்குற்றமாகக் கருதப்படுவது, சந்தனாவுக்கும் தெரியும்!

ஆனால், ஒரு முழு மனிதனோடு, பொம்மையை சம்பந்தப்படுத்தி, அவனுடைய மகளே பேசவும், திடுக்கிட்டுக் கேட்டுவிட்டாள்!

அவ்வளவே!

அதற்குள் தீபன் அங்கே வந்துவிட்டான்!

மகளை எழுப்பி, "மித்தி, சும்மா பாப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாதுடா! அசந்து மறந்து, எங்கேயாவது வைத்துவிட்டால், இப்படி அடிபட்டுக் கொண்டே இருக்கும்! போய் அவளது தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வா!" என்றவன், மேலே பேசவிடாமல், மித்ராவின் கையைப் பிடித்து அங்கிருந்து கூட்டிப் போனான்!

முகத்தில் அறை வாங்கியது போல, அப்படியே உட்கார்ந்து விட்டாள்.