» இனி எல்லாமே நீயல்லவோ 16

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

மித்ராவும் அவளும் பேசிக் கொண்டிருக்கையில், பேச்சின் நடுவே புகுந்து, மகளைக் கூட்டிப் போகிறான் என்றாள், அதற்கு என்ன அர்த்தம்?

தொடர்ந்து மகளை அவளோடு பேசவிடக் கூடாது என்று தானே?

அதற்கு முன்னரும், போர்டிகோவில் நின்றவாறே, சந்தனாவும் மகளும் பேசுவதை... இல்லை, சந்தனா மகளிடம் என்ன கேட்கிறாள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான்!

அதுதான், அந்த ஒரு கேள்வியில் ஓடி வந்து விட்டான்!

அப்படி என்ன நம்பிக்கையில்லாத்தனம்?

ஒரு சாதாரணக் கேள்வியைக் கூட சந்தேகப்படுவது என்றால், அந்த முதல் நாள் ஐயம் அப்படியே இருக்கின்றது என்று தானே பொருள்!

சந்தேகம் போய்விட்டது என்றதெல்லாம் சும்மா! பொய்! அவன் அம்மாவுக்காக, இப்படிச் சொன்னால்தான் வீட்டுக்கு வருவாள் என்று கூறிய பொய்!

என்ன முயன்றும் கொதிப்பை அடக்க, சந்தனாவால் முடியவில்லை!

என்ன இலகுவாக, தீபனின் பேச்சை நம்பிவிட்டாள்!

நம்பி, என்னென்னவோ நினைத்து...

அதுதான் அவளால் தாள முடியாது போயிற்று!

அறையின் தனிமையில், சற்று நேரம் கண்ணீருகுத்த பிறகே, அவளால் யோசிக்க முடிந்தது!

ஏதோ, அவளது நல்ல நேரம்! மயக்கம் ஒரேயடியாகத் தலைக்கேறு முன், ஒரு சிறு செயலில், தீபன் தன்னைக் காட்டிக் கொண்டு விட்டான்!

அண்ணன் வந்ததும், இந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை விட்டுக் கிளம்ப நேருமே என்று, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்! இனி, அந்த வருத்தம் இல்லாமல் நிம்மதியோடு கிளம்பலாம்!

அதுவரை... மீனாட்சி ஆன்ட்டிக்கு வாக்குக் கொடுத்திருப்பதால், அதுவரை இங்கே தானே இருந்தாக வேண்டும்! அப்படி இந்த வீட்டில் இருக்கும் காலத்தில், முதலில் இருந்தது போலவே, முடிந்தவரை ஒதுங்கி விட வேண்டும்!

ஆனால், அப்படி அவள் இரண்டு நாட்கள் ஒதுங்கு முன், தீபன் அவளைத் தேடி வந்தான்!

அப்போது அவள் மீனாட்சி அம்மாளுடன் தான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

மித்ராவுக்கென, வெளேர் துணியில் சிறுத்தைத் தோல் போல பிரின்ட்! அதைப் பார்த்ததும் வாங்கி வந்து, உடம்போடு ஒட்டினாற் போல டிசைன் கொடுத்து, தைத்து வந்திருந்தது!

அதில், ஒவ்வொரு சிறுத்தைப் புலிக்கும் நடுவே, நகம் அளவில் பிரௌன் கலர் கல்லை ஒட்டிக் கொண்டிருந்தாள் சந்தனா!

"அவளை ஃபேஷன் ஷோ மாடல் மாதிரி ஆக்கி விடுவாய் போல இருக்கிறது!" என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கையில், டெலிபோன் மணி அடித்தது!

வெளிநாட்டு அழைப்புச் சத்தம்!

எலிசாவா?

இரு பெண்களுமே, ஒரு திகைப்புடன் டெலிபோன் கருவியை பார்த்தனர்!

முதலில் போல அல்லாமல், இப்போதெல்லாம் தீபனே நேரடியாக, போனை எடுக்கத் தொடங்கியிருந்தான்.

அன்றும் அதுபோலவே, அவனே எடுத்துப் பேசினான்.

ஒரு முறை மட்டும், "வீட்டில் இந்த போன் இருக்கும் போது செல் எதற்கு? அதனால் தான் அணைத்துப் போட்டிருக்கிறேன். சும்மா இதிலேயே பேசு!" என்றான், ஒரு விளக்கம் போல.
மற்றபடி வெகு நேரம் வெறுமனே "ஊம்" கொட்டிக் கொண்டிருந்தது தவிர, அவன் வேறு எதுவும் பேசவே இல்லை!

"சரி யோசித்து சொல்கிறேன்!" என்று ரிசீவரை வைத்தவன், நேரே, தாயும் சந்தனாவும் இருந்த சிட் அவுட்டுக்கு வந்தான்.

"மித்ராவுக்குக் கொஞ்சம் துணிமணி வாங்க வேண்டும்! தேர்ந்தெடுப்பதற்கு, என்னோடு வருகிறாயா? ப்ளீஸ்!" என்று சந்தனாவை அழைத்தான்!

"நான்... இது..." என்று கையில் இருந்த துணியைப் பார்த்தாள் அவள்.

துணி வேலை முடியவில்லை என்று, அதைச் சாக்கிட்டு இருந்து விடலாம் என்று நினைத்தாள் சந்தனா!

ஆனால் மீனாட்சி குறுக்கிட்டு, "இந்த வேலைதான் முடிந்துவிட்டதேம்மா! போய் வாங்கி வா! அவள் அளவு தான் உனக்கேத் தெரியுமே! சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மித்ரா விழிக்கு முன் வந்து விடுங்கள்!" என்று சொன்னபோது, சந்தனாவுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை!

அத்தோடு, இந்த உடை வாங்குகிற பேச்செல்லாம் சும்மா என்பது, அவளுக்குப் புரியாமல் இல்லை! புரிந்தது!

ஆனால் அப்படி தீபன், அவளிடம் என்ன தான் சொல்லப் போகிறான்? மகன் சந்தனாவிடம் ஏதோ சொல்லப் போகிறான் என்று எண்ணித்தான், மீனாட்சி ஆன்ட்டியும் அவளை அனுப்புகிறாள்!

என்ன என்று தான் அறிந்து கொள்ளலாமே!

முகத்தை மட்டும் கழுவித் துடைத்துக் கொண்டு, சந்தனா அவனோடு கிளம்பினாள்!

சற்றுத் தூரம் சென்றதுமே, காரை ஓரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, இருக்கையில் லேசாகத் திரும்பி, சந்தனாவைப் பார்த்தாற் போல அமர்ந்தான் தீபன்.

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு, "இரண்டு நாட்களாக என் மேல் கோபம் என்று தெரிகிறது" என்றான் அவன்.

அவள் பேசாதிருக்கவும், "இப்போது, என்னால் எதையும் விளக்கமாகச் சொல்ல இயலாது, சந்தனா! ஆனால் இப்போது, மித்தியை நான் விலக்கி, அழைத்துப் போனதற்குக் காரணம் இருக்கிறது" என்றான் தொடர்ந்து.

மௌனம் கலைந்து, "நாங்கள் பேசும்போது, வெளியே நின்று ஒட்டுக் கேட்டதற்குக் கூடவா?" என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள் சந்தனா.

"ஒட்டுக் கேட்டேனா? எப்... ஓ! நீயும், மித்தியும் பேசியதை, மகிழ்ச்சியோடு கேட்டு ரசித்ததற்குப் பெயர் ஒட்டுக் கேட்பதா? சரியாகச் சொல்வதானால், சற்று முன் நானும், எலிசாவும் போனில் பேசியதை, நீயும் அம்மாவும் கவனித்தீர்களே, அதைத்தான் ஒட்டுக் கேட்டல் என்று சொல்ல வேண்டும்!" என்றான் அவன், சிறு கண்டிப்பும், கிண்டலும் கூடிய குரலில்!

லேசாக முகம் சிவந்த போதும், அதை மீறி, "எலிசாதான், இல்லையா?" என்று கவலையுடன் கேட்டாள் சந்தனா!

கையை நீட்டி, அவளது நெற்றியில் புரண்ட கூந்தலை, மென்மையாக ஒதுக்கி விட்டான் தீபன்.

அந்தக் கையைப் பற்றிக் கன்னத்தில் அழுத்திக் கொள்ள வேண்டும் போலத் தோன்றிய ஆவலை அடக்கிக் கொண்டு அசையாமல் வீற்றிருந்தாள் அவள்!

ஒரு பெருமூச்சுடன், "ஆமாம்! உடனே கிளம்பி, அங்கே வரச் சொன்னாள்! அதை, அப்புறம் பார்ப்போம்! ஆனால் நான் கிளம்பும் முன், உன்னிடம் ஒன்று சொல்லியாக வேண்டும், சந்தனா! நான் மித்ராவுடைய தந்தை! ஒருத்தியை மணந்து, மணவிலக்கும் வாங்கியவன்! அது மட்டுமல்ல! அதற்கு மேலும்... நான் அவ்வளவு நல்லவனாக நடக்கவில்லை சந்தனா! அங்கே... அந்த நாட்டில், அது எனக்குத் தப்பாகத் தெரியவில்லை என்றாலும், இங்கே, உன் முன்னிலையில் தலை குனிவாகத்தான் இருக்கிறது! உனக்கும் வெறுப்பாக இருந்தால், சொல்லிவிடும்மா!" என்று குரலில் வருத்தத்துடன் கேட்டான் தீபன்!

வெறுப்பா? அவனிடமா?
இல்லை என்பது போலத் தலையை அசைத்தாள், சந்தனா!

"அன்று... மித்ராவின் விபத்தின் போது கூட... அரை நினைவில், என்னைத் தேடியிருக்கிறாள் குழந்தை! யாராலும், என்னோடு தொடர்பு கொள்ளக் கூட முடியாத நிலை! அப்போதுதான், அங்கே எல்லாம் வெறுத்துப் போயிற்று! எந்த நிலைக்குப் போயிருக்கிறேன் என்று புரிந்தது! விழுந்தடித்துக் கொண்டு, மித்திக்குக் கொஞ்சம் குணமானதும் இங்கே அழைத்து வந்துவிட்டேன்! இங்கே உன்னைப் பார்த்ததும்..."

சந்தனாவின் பார்வையில் கூர்மை ஏறிற்று!

"முதலில், அங்கே நான் ஒதுக்கிவிட்டு ஓடி வந்த கூட்டம் தான் நினைவு வந்தது! நீ கதவைத் திறந்த விதம் வேறு! மேலும், உடல் ரீதியான உணர்வுகளை உன் கவர்ச்சி தூண்டி விடுவது போல... அதை, நீ தெரிந்தே ஒரு நோக்கத்துடன் செய்வது போல... உனக்கு இப்போது புரிகிறது இல்லையா? அப்போதே, என் மனம் உன்னிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறது! ஆனால், அதை நான் புரிந்து கொண்ட விதம் தான் வேறு! அதை வெறுத்து ஓடி வந்தவன், அந்த ஈர்ப்பை எதிர்க்கச் செய்த முயற்சி! ஆனால், எப்படியும் நான் அவ்வளவு பேசியிருக்கக் கூடாது... அப்படியெல்லாம் குதறிவிட்டு, உன்னிடம் இதைக் கேட்க எனக்குத் தயக்கம் தான்! ஆனால், அதை முழுதாக மறந்து, என்னை ஏற்பாயா சந்தனா?" என்று கேட்டான் தீபன்.

ஒரு கணம், சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியாது போயிற்று!

ஆனால், உச்சி முதல், உள்ளங்கால் வரை, ஒரு பூரிப்பும், பொலிவும் ஏற்படுவதை, அவளால் உணர முடிந்தது!

முகம் பிரகாசமுற, "நி... நிஜமாகவா, கேட்கிறீர்கள்? ஆனால்..." என்று கேட்டாள்.

"ஆனால் இன்னும் நிறைய விஷயம், உனக்குத் தெரியாது! அதையெல்லாம் உன்னிடம் சொல்லுகிற நிலையில் இப்போது நானும் இல்லை! இப்போது உடனே நான் யுஎஸ்க்குப் போயாக வேண்டியிருக்கிறது, கண்ணம்மா! முடிந்த அளவு சீக்கிரமாக அங்கே எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, இங்கே வந்து விடுவேன்! இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும், கிளம்பி வந்து விடுவேன்! அப்போது, எனக்காக, இங்கேயே காத்திருப்பாயா, சது?"

சது!

இப்படி யாரும் அவளைச் செல்லமாக அழைத்தது இல்லையே!

"நிச்சயமாய்!" என்றாள் அவள்.

தீபன், மகளோடு யுஎஸ்சுக்குத் திரும்புகிறான் என்பது, மீனாட்சி அம்மாவுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது!

ஆனால், "அவர் சீக்கிரமாவே, மித்ராவோடு திரும்பி வந்து விடுவார், ஆன்ட்டி!" என்று ஒரு விதமான உறுதியோடு கூடிய குரலில் சந்தனா கூறியது, அவளுக்கு ஆச்சரியத்தோடு ஆறுதலையும் அளித்தது!

ஆயினும், "மித்ராவையாவது விட்டுப் போகக் கூடாதா?" என்றாள் தாய்.

"ஒரேயடியாகத் திரும்பி வருவதற்காக, நிறைய விதிமுறைகளை, அனுசரித்தாக வேண்டியிருக்கிறது! அவளும் கூட இருப்பது, தேவை" என்றான் தீபன்!

மித்ராவுக்கும், இந்தப் பயணம் பிடிக்கவில்லைதான். அவளுடைய யுஎஸ் நண்பர்களை நினைவுபடுத்தி, அவளை ஓரளவு சமாதானப்படுத்தி அழைத்துப் போனான் தீபன்!

கிளம்புவதற்கு முன்பாக, இன்னும் சிலது சொன்னான் அவன்.

"அங்கே எனக்கு வேலைக்கு நேரக் கணக்குக் கிடையாது என்பதோடு, அங்கிருந்து நான் பேசுவதும் கடினம், சந்தனா! அது பற்றி, அம்மாவுக்கும் தெரியும். அதனால் பேசக்கூட இல்லையே என்று எண்ண வேண்டாம்! நீயும் அப்படி இருப்பதே நல்லது! மிகமிக முக்கியம் என்றால், என் ஏஜெண்ட் எண்ணைத் தருகிறேன். அதற்கு போன் செய்தால், விஷயத்தை அவள் என்னிடம் சொல்லுவாள்... எப்படியும் விரைவில் வருவேன். வரும்போது..." என்று முடிக்காமலே, அவளைப் பார்த்து தலையசைத்து, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
கண்ணீருடன் தன் பொம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மித்ரா கிளம்பியது, இன்னும் வேதனையாக இருந்தது!

இரண்டு நாட்கள் கழித்து, "விமானம் பயணிகளைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தது!" என்று எலிசாவிடம் இருந்து சுருக்கமான ஒரு செய்தி மட்டும் வந்தது!

சந்தனாவின் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்டதும், ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு, "அங்கே இப்படித்தானம்மா! அதிலும், அந்த எலிசா, ரத்தினச் சுருக்கம் தான்! விடு! ஏதோ உன் பள்ளியில், பரீட்சை சமயம் தானே? ஒரு நாள் லீவு போட்டுவிட்டு, சினிமா, ஷாப்பிங் என்று எங்காவது போய் வாயேன்!" என்றாள் மீனாட்சி!

தாயின் தவிப்பும் பெரிதுதானே? அதை அடக்கிக் கொண்டு, தன்னைப் போகச் சொல்லுகிறாளே என்றிருந்தது சந்தனாவுக்கு!

"இல்லை ஆன்ட்டி! தேர்வு அரைநாள் தானே? போய்விட்டு வந்து, அறையில் என் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டு, நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்!" என்று முடித்தாள் சந்தனா.

மார்ச் மாதம் முடிவதால், மருத்துவமனைக் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிப்பதற்காக, மீனாட்சி பகலில் பெரும்பான்மை நேரம் மருத்துவமனையில் இருக்கும்படி ஆயிற்று!

வீடு திரும்பிய சந்தனாவுக்குப் போரடித்தது!

சரிதான் என்று, டீவியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.

ஏதோ சானலில், வெளிநாட்டுப் படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

புதிய படம் ஒன்றின் தொடக்க விழா.

கதாநாயகி அழகாக இருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தீபன் சிரித்தவாறு திரையில் வந்தான்!

மருத்துவம் படிக்க போனவன்! மருத்துவத்துக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?

இமைகளைத் தட்டக் கூட முடியாமல், விழித்த கண் விழித்தபடி சந்தனா பார்த்திருக்கையில், புதிய திரைப்படத்தின் டைரக்டர் என்று அவனைச் சொன்னார்கள்! கதை வசனமும் அவன் தானாம்!

பெயர்... தீபன் லைட் மித்ரன் என்றார்கள்! திரைக்கான புனைப் பெயரை நன்றாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறான்! தீபன் என்றால் வெளிச்சம் - லைட்! கூடத் தந்தையின் பெயரையும் விடவில்லை! தீபன் லைட் மித்ரன்!

ஓகோ! என்ன கவனம்!

ஆனால், கவனம் இதில் மட்டுமா?

அவனது முந்தைய படத்துக்கு, 'ஆஸ்கார்' பரிசு கிடைத்தது என்றார்கள்!

மித்ரா சொன்ன அப்பாவின் பொம்மை ஆஸ்கார் சிலை!

தலை சுழன்ற போதும், அந்த வீட்டில் இருந்த ரகசிய சூழ்நிலை, பத்திரிகை, மீடியா அச்சம், ஒதுக்கம், யாரிடமும் சந்தேகம், அவளை நம்பாதது... எல்லாமே சந்தனாவுக்கு இப்போது புரிந்தது!

அனைத்தும் புரிந்த போதும், அவற்றுள், அவளை நம்பாததுதான் நெஞ்சில் வெகுவாக வலித்தது!

அவன், கடைசிவரை அவளை நம்பவே இல்லையே!

நம்பியிருந்தால், சொல்லியிருக்க மாட்டானா?

எப்படிச் சொல்லுவான்?

சொன்னால், அந்த உலகத்தை விட்டு, எப்படி எப்போது திரும்பி வருவான் என்றும் சொல்ல வேண்டுமே!

கோடிக் கணக்கில் புரளும் பணம்!
அதோ, இறுக அணைத்து உதட்டிலேயே முத்தமிடுகிறாளே, அவளைப் போன்ற எத்தனை எத்தனையோ பெண்கள்! விட்டுவிட்டு, எப்படி வர முடியும்?

சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தாள் சந்தனா!

ஒரு போதும், இங்கே வந்துவிடப் போவது இல்லை என்றால், அவன் வாழ்வில், அவளுக்கு என்ன இடம்?

அதுதான் சொன்னானே, இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும் வருவான். அப்படி வரும்போது, அவனுக்காகச் சந்தனா இங்கே காத்திருக்க வேண்டும் என்று!

காத்திருப்பது என்றால்?

தீபன் இந்தியாவுக்கு வரும்போது, அவனது விருப்பப்படி ஆடுகிற இரண்டு நாள் மனைவியா?

மனைவியாவது மண்ணாங்கட்டியாவது?

அதற்குத்தான் இப்போதெல்லாம் மகா கௌரவமாக ஓர் அருமையான பட்டம் உண்டே, 'பெண் சினேகிதி'!

சிதம்பரநாதன் சாருடைய மகள் சந்தனாவை, அந்தத் தீபன் என்னவென்று நினைத்துக் கொண்டான்?

பொங்கிச் சீறும் ஆத்திரத்துடன் அவள் எழுந்த போது, "சந்தனா..." என்ற குரல் கேட்டுத் திகைப்புற்றுத் திரும்பிப் பார்த்தாள்!

மெய்யாகவே, அங்கே நின்றவன், அவளுடைய அண்ணன் பூபாலன் தான்!

Advertisement