» இனி எல்லாமே நீயல்லவோ 17

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

அண்ணன் இங்கே எப்படி வந்தான் என்பதே தோன்றாமல், அடிப்பட்ட குழந்தை போல, அவனை நோக்கி ஓடப் போன போதுதான், கூடவே ராசையாவும் நிற்பது தெரிந்தது.

"உங்க அண்ணாருன்னு சொன்னாங்கம்மா! அதான் கூட்டியாந்தேன். உள்ளாரப் போங்க சாரு!" என்று விட்டு, மீண்டும் தன் இடத்துக்குச் சென்றான் அவன்.

"உள்ளே வாண்ணா!" என்றாள் தங்கையும்! "ஆனால் இப்போது நீ எப்படி..." என்ற தங்கையின் பேச்சில் குறுக்கிட்டு, "இது யார் வீடு, சந்தனா? என்னிடம், அதை ஏன் சொல்லவில்லை?" என்று சினந்து கேட்டான், அவன்.

டீவியைக் காட்டினாள் சந்தனா.

ஹாலிவுட் படத் தொடக்க விழா முடிந்து கொண்டிருந்தது!

"எனக்கே, இ...இப்போதுதான் தெரியும்!" என்றாள் அவள் வாடிச் சுண்டிய முகத்துடன்.

"வேண்டும் என்று மறைத்திருக்கின்றான், ராஸ்கல்!" என்றான் அண்ணன் ஆத்திரத்துடன்! "ரொம்ப மோசமானவன், சந்தனா! சரியான பொம்பளைப் பொறுக்கி! அங்கே அவனுக்கு மிகவும் கெட்ட பெயர்! கொஞ்ச நாளாக இந்தியாவில் இருக்கிறான் என்றதுமே, இங்கே எவளைப் பிடித்தானோ என்றுதான் பேச்சு! அது... அது, நீயாக... நீயில்லையே, சந்தும்மா" என்று தவிப்புடன் கேட்டான். "நீ ஒன்றும் அவனிடம் ஏமாந்து போய்விடவில்லையே?"

மறுப்பாகத் தலையசைத்த போதும், சந்தனாவின் கண்கள் நீரைப் பொழிந்தன!

தங்கையின் முகத்தை ஒருதரம் கூர்ந்து பார்த்தான் பூபாலன். "சந்தனா?"

மீண்டும் தலையசைத்து, "மனம் கொஞ்சம் ஈடுபட்டிருப்பது உண்மைதான்! ஆனால் நான் உன் தங்கை! நம், அப்பாவுடைய மகள்! எந்தவித இழிநிலைக்கும் ஆளாக மாட்டேன்!" என்றாள் அவள்.

ஆறுதலும், வருத்தமுமான ஒரு பெருமூச்சுடன், "போகட்டும்! இனியும் இவன் வீட்டில் நீ இருப்பது நல்லதல்ல! வா! போகலாம்!" என்றான் அண்ணன். "ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன். இப்போதைக்கு, அங்கே போவோம். சீக்கிரமே வீடு பார்த்துக் கொள்ளலாம்!"

போய்விடலாம்! காலின் கீழ் தரையே எரிவது போலத் தான் இருக்கிறது! ஆனால், எந்த மாதிரி நிலையில் இங்கே வந்தாள்!

சற்று யோசித்துவிட்டு, "திடீரென்று, நீ எப்படிண்ணா வந்தாய்?" என்று கேட்டாள் தங்கை!

"அதாம்மா இன்னமும், உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களுக்கு ஒரேயடியாகக் கெடுதல் நேர்ந்து விடாது என்று, நான் நம்புவது! பெயரைச் சொல்லாமலே ஓர் உதவி கிடைத்தது! கொஞ்ச நாட்களுக்கு முன்பாகவே, ஒரு சிறு குறிப்பு, சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டுப் போவது நல்லது என்று! சென்ற முறை வந்துவிட்டுப் போனதிலிருந்து, நீ தனியாக இருக்கிறாயே என்று நானுமே அதற்குத்தானே முயன்று கொண்டு இருந்தேன்! அசுர கதிதான். வேலை முடியவும், இப்படி இன்னார் வீட்டில் இருக்கிறாய், இவன் இப்படிப்பட்டவன் என்பதால், உனக்கு ஆபத்து என்று ஓர் எச்சரிக்கை! எதற்கும் இருக்கட்டும் என்று விசாரித்துப் பார்த்தேன்! பத்திரிகைகளில், என்னென்னவோ வந்திருக்கிறது! படித்ததும், பயந்தே போனேன்! இந்த வீட்டில் தங்குவதற்கு நானே ஒத்துக் கொண்டேனே என்று, அவ்வளவு கவலை! நல்லவேளையாக, வேலையும் முடிந்து விடவும், விழுந்தடித்துக் கொண்டு, கிடைத்த முதல் விமானத்தில் ஏறி வந்துவிட்டேன்! வாம்மா, சீக்கிரமாகப் போய்விடலாம்!" என்றான் அண்ணன்!

இவ்வளவு தூரம் எந்தப் பரோபகாரி, அண்ணனுக்கு எச்சரிக்கை தந்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால், அண்ணன் பத்திரிகைகளில் பார்த்தும் இருக்கிறான்!

பத்திரிகைகள் என்றாலே தீபனுக்கு அலர்ஜ்! அது, உண்மையை வெளிப்படுத்தியதாலா? அன்றி, பரபரப்புக்காகப் பொய்யைப் பரப்பியதாலா?

அவள் யோசிக்கையிலேயே, "பாவம்! அந்த டைரக்டர் நடிப்பை நம்பி, மகா நல்லவன் என்று நினைத்திருப்பாய்! அப்படியில்லை என்பதே, உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்!" என்று தங்கைக்காக இரங்கினான் பூபாலன்.

சட்டென உறுத்தியது!
இல்லையே! அவன் நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே! மோசமாக வாழ்ந்ததாகத்தானே சொன்னான்! அதுவும் மித்ராவின் விபத்தின் போது, தப்பாக நடந்ததை, மிகுந்த வருத்தத்துடன் கூறினானே!

அல்லது, அந்த வருத்தமே நடிப்பா?

எப்படியாயினும், ஒன்றுமே செய்யாமல், ஒரு கேள்வியேனும் கேட்காமல் போகக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு.

தப்புச் செய்யாதவள்! அவள் எதற்காகக் கோழையைப் போல ஓடி மறைவது?

அத்தோடு, பதில் சொல்ல, அவனுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்?

பூபாலனுக்கும் பிடிக்கவில்லைதான்!

ஆனால், கோழைத்தனம் கூடாது என்பதில் அவனுக்கும் ஒப்புதல் இருக்கவே, அரை மனதாய் அவன் சம்மதிக்க, தீபன் கொடுத்த எண்ணுடன் தொடர்பு கொண்டு, அவனுடன் பேச வேண்டும் என்றாள் சந்தனா.

"யார், சந்தனாவா? எப்படி இருக்கிறாய். வந்ததில் இருந்து, மித்ராவுக்கு உன்னைப் பற்றிய பேச்சுதான்! அவள் இல்லாமல், அங்கே போரடிக்கிறதா?" என்று சந்தோஷமாகக் குசலம் விசாரித்தாள் எலிசா.

ஆனால், தீபனுடன் பேசுவது பற்றி, சந்தனா மீண்டும் கேட்கவும், "சாரி!" என்று வருத்தம் தெரிவித்தாள் அவள். "இது லாஸ் ஏஞ்சலிஸ், சந்தனா! வேறே மாதிரி உலகம்! நேற்றுதான், தீபனின் அடுத்த படத்துத் தொடக்கவிழா நடந்தது! படத்துக் கதாநாயகியும், டைரக்டரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இப்போது, இங்கே இரவு நேரம்! வேண்டுமானால், நாளைக் காலையில் தீபனைச் சந்திக்கும் போது, நீ கூப்பிட்டாய் என்று சொல்லட்டுமா?"

எலிசா சொல்லாமல் சொன்னதில், சந்தனாவின் மனம் நொந்து போயிற்று!

காட்டிக் கொள்ள மனம் இன்றி, மித்ராவைப் பற்றி மட்டும் விசாரித்து விட்டு போனை வைத்தாள்!

ஒரு வேளை, இந்த எலிசா கெட்டவளாக இருக்கலாமோ?

ஆனால், அதற்குக் காரணமே இல்லையே! அவள் வெறும் ஏஜெண்ட்! சில ஆண்டுகளாகப் பழகியதில், மித்ராவைப் பார்த்துக் கொள்கிறாள்! மற்றபடி, தீபனின் சொந்த வாழ்வில் அவளுக்கு இடம் இல்லை என்பது, சந்தனாவுக்குத் தெரியும்.

தீபனுமே, வேறு எண் எதுவும் தரவில்லையே!

முழுக்கத் தோற்றுவிட்ட, உணர்வுடன், தன் பொருட்களை எடுத்து வைத்தாள் சந்தனா!

மீனாட்சி வந்ததும், அவளிடம் சொல்லிக் கொண்டு, அண்ணனும் தங்கையும் கிளம்பினர்.

ஒரு தரம் தடுத்த போதும், சின்னவர்கள் வெளியேறுவதில் பிடிவாதமாக இருந்தனர்.

சந்தனாவின் கண்களில் இருந்த நிராசையைப் பார்த்த பிறகு, மீனாட்சியும், அதற்கு மேல் அவர்களை வற்புறுத்தவும் இல்லை!

அவர்கள் சென்ற பிறகு, உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்தாள்!

அன்றிரவு 'லேட்நைட் டின்னர்!'

திரைப்படத்தின் கதைப் போக்கு, அதன் பாத்திரங்களின் மன நிலை போன்றவைகளை, நடிப்பவர்களுடன் பேசி முடித்துவிட்டு, தீபனும் எலிசாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்!

எலிசாவை அவளது கார் நிற்கும் இடத்தில் விட்டுவிட்டு, தீபன் தன் வீடு செல்ல வேண்டும்!
மறுநாளைய வேலைத் திட்டத்தைப் பேசியவாறே, இருவரும் சென்று கொண்டிருந்த போது திடுமென, "உன் மகளைத் தாய்க்குத் தாயாக, நான் பார்த்துக் கொள்கிறேன்! உடம்பு சுகத்துக்கும், இங்கே பிரச்சினையே கிடையாது! நல்ல, ஆரோக்கியமான பெண்களை, நானே ஏற்பாடு செய்து தருகிறேன் அனாவசியமாக மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே! நீ முழுக்கவனத்தையும், படம் எடுப்பதில் செலுத்து!" என்று அறிவுரை கூறினாள் எலிசா!

ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு!

திடீரென்று, இப்படி ஓர் அறிவுரை எதற்கு?

மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே என்றால், திருமணம் செய்யாதே என்றல்லவா கூறுகிறாள்!

அவனது திருமணத்தை எலிசா விரும்பவில்லை என்றால், அதன் அர்த்தம் சரியில்லையே!

ஆனால், நலபடியாகக் குடும்பம் நடத்துகிறவள் என்பதால், இவளுக்குத் தப்பான எண்ணம் இருக்க முடியாது!

ஆனால், ஏதோ இருக்கிறது!

உள்ளே குறுகுறுப்பு அதிகம் ஆகவும், "என்ன எலிசா, என்னவோ விஷயம் இருக்கிறாற் போலத் தெரிகிறதே! உனக்கே என் மேலே ஒரு கண்ணா?" என்று வேடிக்கைப் போலத் தீபன் கேட்டுவிட்டான்!

அவளது மேக்கப்பிலும் நிறம் மாறி, "ஓ, ஷட்டப், டீப்! ஒரு தமக்கையைப் போல, உன் மேல் உள்ள அக்கறையில், உனக்கு நல்லது சொன்னேன்! பிரச்சினை இல்லாத ஆரோக்கியமான எத்தனையோ பேர்..." என்று அதிலேயே நின்றாள் அவள்.

இடையிட்டு, "நான் தான் பெண்களே வேண்டாம் என்கிறேனே. பிறகு எதற்கு, இந்த ஆரோக்கியமான... அல்லாத... எல்லாம்?" என்று கேட்டான் தீபன்.

"இல்லை, டீப்! அது இயற்கைக்குப் புறம்பானது! அவ்வப்போது அதுவும் இல்லாவிட்டால், உன்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது! அதனால் தான்..."

"அதற்காகத்தான் ஓர் ஏற்பாடு செய்ய எண்ணியிருக்..." என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "அதைத்தான் சொன்னேன்! முன்னைப் போல மாட்டிக் கொள்ளாதே என்று. சொன்னால், கேள்!" என்று கிரீச்சிட்டாள் எலிசா.

தீபன் வியப்புடன் திரும்பிப் பார்க்கவும், சட்டெனக் குரலைத் தணித்தாள்.

"சொன்னால் கேட்டு நட, டீப்! ஓர் அனுபவம் போதாதா? நிரந்தரத் திட்டம் எதுவும் உனக்குச் சரிப்பட்டு வராது! அதனால், சும்மா அவ்வப்போது..." என்று மீண்டும் பழைய பல்லவியையே அவள் பாடவும், அவன் பொறுமையிழந்தான்!

"இந்தப் பேச்சு இனி வேண்டாம்! விடு எலிசா!" என்று, மறுக்க முடியாத, ஓர் இறுகிய குரலில் கூறி முடித்தான் அவன்!

அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், அவனுக்கு ஒரே யோசனை!

ஓர் உறவினரைப் போலப் பழகிய எலிசா, அவன் ஒழுங்காகத் திருமணம் செய்து வாழ்வதை விரும்பவில்லை என்பதை அறியும் போது, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது!

அதுவும், இன்று அவள் இந்தப் பேச்சை எடுத்து, இவ்வளவு தீவிரமாகப் பேசுவானேன்?

என்னவோ நடந்திருக்கிறது!

பொதுவாகச் சென்னையில் தாயோடு, தீபனது தொடர்பு, எலிசாவின் செல் மூலமாகத்தான்!

பரபரப்பான செய்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதை அறிந்த பிறகும், தன் போனில் தாயோடு பேசி, அவளையும் இவர்கள் கொத்திக் குதற விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், அவன் செய்த ஏற்பாடு!
அதே கருத்தோடுதான், சந்தனாவிடமும் எலிசாவின் செல் எண்ணையே தந்திருந்தான்!

அவள் எதற்கேனும், அவனோடு தொடர்பு கொள்ள முயன்றிருப்பாளா என்று யோசிக்கும் போதே, அவனது நெஞ்சுத் துடிப்பு வேகமாயிற்று!

என்னவாக இருக்கும்?

அன்னைக்கு எதுவும் இராது என்று, அவனுக்குத் தெரியும்! அவனை பெற்றவளுக்கு ஏதேனும் சுகவீனம் என்றால், 'சுகம்' பெரிய டாக்டர், அவனை அப்போதே தொடர்பு கொண்டிருப்பார்! அதற்கு அவன் வேறு ஏற்பாடு செய்திருந்தான்!

இப்போது பார்த்தால், சந்தனாதான் எதற்கோ பேசியிருக்க வேண்டும் என்று, தீபனுக்கு நிச்சயமாகத் தோன்றியது!

திருமணம் பற்றி, எலிசா பேச வேண்டுமானால்...

சந்தனாவிடம், எந்தக் கழுகு மூக்குக்காரருக்கும் தெரியாமல் எப்படிப் பேசுவது என்று யோசித்தபடியே வீட்டை அடைந்தால், மித்ராவுடைய விளையாட்டுத் தோழனான மிச்சியும், அவனுடைய தந்தை நாகோட்டாவும், நள்ளிரவு தாண்டிய அந்த நேரத்திலும் அவனுக்காக, அங்கே காத்திருந்தார்கள்!

தீபன் புரியாது திகைக்கவும், முகம் கன்றிய நாகோட்டா, "இந்தப் பையனின் பிடிவாதம், சார்! உங்கள் அம்மா, எங்கள் வீட்டுக்கு போன் செய்தார்களாம்! தன்னுடன் உடனே பேசும்படி, உங்களிடம் சொல்லச் சொன்னார்களாம்! செய்தியை நேரில் சொன்னால் நூறு டாலர் கொடுப்பீர்கள் என்றார்களாம்! உங்களிடம் விஷயத்தை சொல்லாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று இவன் ஒரேயடியாக நின்றுவிட்டான்! இல்லை, சார்! இவன் சொன்னான் என்பதற்காக, நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை!" என்று, தீபன் கோட்டுப் பையிலிருந்து பணப்பையை எடுப்பதைப் பார்த்துவிட்டு, அவசரமாகச் சேர்த்துச் சொன்னார்.

தாயின் கெட்டிக்காரத்தனத்தை உள்ளூர மெச்சியவாறே முறுவலித்து, "அதற்காக மட்டும் அல்ல மிஸ்டர் நாகோட்டா! உங்கள் செல்லைக் கொஞ்சம் பயன்படுத்துவதற்கு, எனக்குத் தரவேண்டும்!" என்று இரண்டு நூறு டாலர் நோட்டுகளை எடுத்து கொடுத்தான் தீபன்.

செல்லை நீட்டியவாறு, "இந்த நேரத்திலா, மிஸ்டர் டீப்?" என்று கேட்டார் அவர்.

"இந்தியாவில் இப்போது பகல் தான் மிஸ்டர் நாகோட்டா!" என்று விட்டு, செல்லை வாங்கிப் பேசினான்.

தாய் சொன்னதைக் கேட்டுவிட்டு, "இங்கே ஒருத்தியை, உங்களுக்கு எப்போதுமே பிடிக்காது! அவளது வேலைதான் என்று நினைக்கிறேன். சந்தனா பற்றிக் கவலைப்படாதீர்கள். அவள் பொறுப்பற்றவள் அல்ல! பள்ளி வேலையை அவசரப்பட்டு விடமாட்டாள். அதுவும், அடுத்த மாதம் முழுப் பரீட்சை எனும் போது, நிச்சயம் மாட்டாள். அதனால் அவளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்! அதனால் இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்! நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்! கவலைப்படாதீர்கள்! நான் பேசுவது, மிச்சி அப்பா போனில் தான். மித்தியிடம் இருந்து, அவன் எண்ணை நீங்கள் வாங்கி வைத்தது, ரொம்பவும் நல்லதாகிப் போயிற்று! உம்! கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தேன் என்று, என் மீது, இன்னமும் கோபமாக இருக்கிறாள்! சரியாகிவிடும் அம்மா! கவலை வேண்டாம். பை" என்று பேச்சை முடித்தான்.

மேலும் இரண்டு வார்த்தை பேசி, அவரை அனுப்பி வைத்தான்!

ஆக, எலிசாவிடம் பேசியது சந்தனாதான்!

அவளுடைய அண்ணனின் துணையோடுதான் இருக்கிறாள்!

ஒரு மாதம் முன்னதாக, அவளுடைய அண்ணன் போனதும்... அதற்கும் எலிசாதான் காரணமாக இருக்குமோ?

இங்கே தொடக்க விழாவை விரைவுப்படுத்தியது, அவளே!

அது, அவனை உடனே இங்கே வரவழைப்பதற்காக இருக்கலாம்!

ஆனால், எதற்காக உடனே வரவழைக்க வேண்டும்?
கண்மூடி யோசிக்கையில், உடனே புரிந்தது!

அன்று பூபாலன் பற்றிச் சொல்வதற்காக எலிசா போன் செய்த போது, மித்ரா அவளிடம் என்னவெல்லாம் சொன்னாள்!

வரிகளுக்கு இடையே தேடுவது என்பார்களே!

மித்தியின் பேச்சில், எத்தனையோ கண்டுபிடிக்கலாமே!

சந்தனாவுடைய அண்ணனைக் கிளப்பி அனுப்பியதும், அவளாகவே இருக்கக் கூடும்!

பூபாலனின் முகவரியைச் சொல்லி, அவளுக்கு வசதி பண்ணிக் கொடுத்ததே, தீபன் தான்...!

தொடக்க விழாவை முன்னே வைத்து, அவனை இங்கே கொணர்ந்து, பூபாலனை அங்கே அனுப்பி, அவன் தங்கையைக் கூட்டிப் போக வைத்து... எலிசா, எமகாதக வேலைதான் செய்திருக்கிறாள்!

வீட்டிலிருந்து யார் போன் பண்ணினாலும், தன் செல்லுக்குத்தானே பண்ணுவார்கள், சரியாகச் சொல்லாமல் படம் தொடங்கும் வரை, தள்ளிப் போட்டு விடலாம் என்று எண்ணியிருப்பாள்!

படம் தொடங்கிவிட்டால், இடையில் கிளம்புவது முடியாதுதானே?

ஆனால், அவனுடைய அன்னையின் அறிவுத்திறன் தெரியாமல், எலிசா திட்டம் போட்டுவிட்டாள்!

திறப்பு விழாவை முன்னே தள்ளியது, ஒரு வகையில் தீபனுக்கு வசதியாயிற்று!

படப்பிடிப்பு தொடங்குமுன் ஓர் இடைவெளி கிடைத்தது!

யாரிடமும், எதுவும் சொல்லாமல், தானே போய், டிக்கெட் எடுத்து வந்தான் தீபன்.

மீனாட்சி ஆன்ட்டியின் வீட்டை விட்டு சந்தனா வெளியே வந்து, இன்னமும் முழுதாக ஒரு வாரம் முடியவில்லை!

அதற்குள் மாதக் கணக்கில் நோய்ப்பட்டுக் கிடந்தது போன்ற உணர்வு அவளுக்கு!

அன்றும் அப்படித்தான்! பள்ளியில் இருந்து, சோர்வுடன் வீடு திரும்பினாள்.

அண்ணனின் அலுவலக கெஸ்ட் ஹவுஸ்! வேறு வீடு கிடைக்கும் வரை, தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்! அவர்கள் வீடே கிடைக்கும் இன்னும் ஒரு மாதத்தில்! அதுவரை, இங்கேதான்...

சோர்வுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்று கதவை மூட முயன்றால், கதவைத் தள்ளிக் கொண்டு, யாரோ உள்ளே வந்தார்கள்!

யாரோ அல்ல தீபன்!

உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் கட்டை விரலை விட்டு நின்றபடி, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அவன்!

"என்னம்மா, வெட்டிக் கொண்டு வந்தாயே! பிரிவு சந்தோ...ஷமாக இருக்கிறதா?"

குத்தலாகக் கேட்டபோதும், உடனேயே உருகி, அவளை இழுத்து அணைத்தான் அவன்!

"என்னடா இது? உடம்பை இப்படிக் காய விட்டிருக்கிறாயே! ஒரு வேளையாவது, ஒழுங்காகச் சாப்பிடுவாயா, இல்லையா?"

உண்மை அன்பு இல்லாதவனால், இப்படிக் கேட்க முடியுமா?

அவன் தோளில் சாய்ந்தபடியே நின்று, "நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று ஒரு விசும்பலுடன் கேட்டாள்!

ஒரு கணம் திகைத்து, "ஓ தெரிந்து விட்டதா? ஆனால், அதற்காகவா... அதற்கும் நீ பிரிந்து வருவதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான் தீபன்!
என்ன சாதாரணமாகக் கேட்கிறான்!

"பின்னே? எத்தனையோ மில்லியன் டாலர் பட்ஜெட் படம் என்றார்களே! அத்தனை மில்லியன் செலவு செய்து படம் எடுக்கிறவர், அதை விட்டு, அந்தத் தகதக வாழ்க்கையை விட்டு, அவர் என்னைத் தேடி எப்படி வருவார் என்று..."

அவன் முகத்தில் கடுப்பு தெரிந்தது! "ஆனால், எத்தனை மில்லியன் டாலர் செலவு செய்து படம் எடுக்கிறவனுக்கும், மனைவி குழந்தை இருக்கலாம் தானே?" என்றான் கிண்டலும் எரிச்சலுமாக.

அவளுக்கும் ஆத்திரம் வந்தது! "இருக்கலாம், இருக்கலாம்! ஆனால், அந்த டைரக்டர் தான் யார் என்பதையே மனைவியிடம் மறைப்பாரா, என்ன?" என்றாள் வெடுக்கென.

அவளை ஆழப் பார்த்து, "ஆக மறைத்ததுதான் தப்பாகி விட்டதா? ஏன் மறைத்தேன் என்று யோசிக்கலாம் தானே அல்லது அப்படி யோசிக்கிற அசட்டுத்தனங்கள் எல்லாம், அங்கே இல்லையா?" என்று பழைய மாதிரியே கேட்டான் தீபன்.

அவனுள்ளே கோபம் இருந்தது! தன் குறைகளைக் கூட மறையாது சொல்லியும், தன்னை நம்பவில்லையே என்ற கோபம்! நம்பாமல், தாயையும் வருத்தி, தன்னையும் வருத்திக் கொண்டு இப்படி இருக்கிறாளே என்ற கோபம்!

"எல்லாம் யோசித்தேன்!" என்றாள் அவள் சுருக்கமாக!

"என்னவென்று?" என்று அவளை விடச் சுருக்கமாகக் கேட்டான் அவன்

சொல்லத் தயங்கினாள் சந்தனா!

எவ்வளவு மோசமாக நினைத்தாள்! அதைக் கூசாமல் எப்படிச் சொல்வது?

பதில் சொல்லாமல் அவள் தயங்கினால்