» இனி எல்லாமே நீயல்லவோ 2

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை, பிழைத்து விடுவாள் என்று எலிசா சொன்னாள் தான்! ஆனால், அப்படிச் சொன்னதில் இருந்தே, உயிருக்கு ஆபத்தான நிலையும் இருந்தது என்று அர்த்தமாகவில்லையா?

முழுக்க ஆபத்து நீங்கியிருக்குமா?

காட்! இந்த எலிசா எப்போது வந்து சேருவாள்?

கண்களோடு, முக அடையாளத்தையும் மறைத்த கறுப்புக் கண்ணாடி, தூக்கிவிட்ட கோட் காலரோடு, பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அவன் காத்திருந்தான்!

எலிசா காரோட்டியோடு வந்ததும், அவனது காரை, எலிசாவின் டிரைவரிடம் கொடுத்துவிட்டு, எலிசாவின் காரில், அவன் கிளம்பினான்.

முதலிலேயே கேட்டுவிட்ட போதும், கார் கிளம்பியதும், மீண்டும் ஒரு தரம், மகளது உடல்நிலை பற்றி, அவன் விசாரித்தான்.

"சொன்னேனே, டீப்! கார் பக்கவாட்டில் பட்டு, அவளைத் தூக்கி எறிந்து விட்டது. விழுந்த வேகத்தில், சில எலும்பு முறிவுகள்! அதிர்ச்சி வேறு! இரவில் உன்னைத் தேடினாள் போல! அக்கறையற்ற தகப்பனாக நீ தோன்றுவது, உன் புகழைக் கெடுத்துவிடும்! அடுத்த பட வசூலையும் கெடுக்கக் கூடும்! அதனால், நீ மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்... என்ன பார்க்கிறாய்? ஓ, இந்தப் போஸ் சரிதானா என்றா? ரொம்ப சரி! டைரக்டர் நீ. உனக்கு, இன்னொருவர் கற்றுத் தர வேண்டுமா?" என்று, முதல் தடவையாக, அவனுள் இருந்த வேதனையை உணர முடியாமல் பேசினாள் எலிசா.

ஆனால், அவளையும் குற்றம் சொல்லுவதற்கு இல்லை!

மனைவி பிரிந்த போது, 'விட்டது தொல்லை' என்பது போலச் சாதாரணமாக இருந்தவன் தானே? அந்த மனைவி பெற்ற பிள்ளையிடம் மட்டும் என்ன, பெரிய பாசம் வந்து விடும் என்று எண்ணியிருப்பாள்!

எலிசாவின் கவலையெல்லாம், மீடியா அவனைத் தவறாகச் சித்தரித்து விடக் கூடாது!

இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றபடி இருந்தாலும், அவனது படங்களில், உள்ளூர ஓர் ஒழுக்கம், நியாயம் இருக்கும்! அதைத் தருகிறவன் கெட்டவனோ என்று ரசிகர்களுக்குத் தோன்றிவிடக் கூடாது! தோன்றினால், அவனது படங்களைப் பார்க்கும் ஆவலும் குறைந்து போய் விடக் கூடும்! எனவே, அந்த நிலை வர விட்டுவிடக் கூடாது!

அவளது கருத்தில் இருப்பது, இதுதான்!

இந்த அக்கறை, அவனுக்காக மட்டுமானது அல்ல!

அவனது வருமானத்தில் பத்து சதவீதம் பெறும் ஏஜண்ட் அவள்! அவனது வருமானம் கூடக் கூடத்தானே, அவளுக்கும் லாபம்?

இன்னும் சில சினிமாத் துறையினரின் ஏஜண்டாக அவள் செயல்பட்டாலும், அவன் வழி கிடைப்பதுதான் பெருந்தொகை! அதற்காகவே...

தலையை உலுக்கிக் கொண்டான் அவன்!

மனம் சரியில்லாமல் இருப்பதால், இப்படியெல்லாம் தோன்றுகிறது போலும்! மற்றபடி, அவனை இந்த நிலைக்கு உயர்த்துவதற்கு, எலிசாவும் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறாள் என்பது, அவனும் அறிந்ததே!

முதல் படத்து டைரக்டர் தொடக்கத்திலேயே நோய்வாய்ப்பட்ட போது, இவனைக் கொண்டே படத்தை முடிக்கலாம் என்று மற்றவர்களை ஒப்ப வைப்பதற்கு, எவ்வளவு வேலை செய்தாள்!

புறம் திரும்பி, "என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினான் அவன்!

"சாலையோரத்து காஸ் ஸ்டேஷன் ஒன்றில், ஒரு காபி மட்டும் குடித்துக் கொள். ஷேவ் பண்ண வேண்டாம்! யார் என்ன கேட்டாலும், இடையூறின்றிக் கதை 'ஸ்கிரிப்ட்' தயார் பண்ணப் போனதாக, அதையே திருப்பித் திருப்பிச் சொல்லு! எங்கே என்பது வேண்டாம்! கூடவே இருந்து, நானும் கவனித்துக் கொள்கிறேன்!"

"சரி."

"மேலே எதுவும் கிளறினால், 'நோ கமென்ட்ஸ்' என்று விடு."

"சரி!"

"வரும் காலத்தில், இப்படி எதுவும் என்றால், என்னோடு தொடர்பு கொள்ளும்படி, உன் 'ஹவுஸ்கீப்'பரிடம் சொல்லி வை! சத்தமின்றிச் செய்ய வேண்டிய வேலையை, ஊரறியச் செய்து விட்டாள்!"

ஹவுஸ்கீப்பர் நல்ல பெண்மணி! வீட்டை முழுதும் அவள் பொறுப்பில் விட்டுவிட்டு, அவன் கவலையற்றிருந்தான்!

எலிசா, ஹவுஸ்கீப்பரைக் குற்றம் சொன்னது, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால், அவள் சொன்னதிலும் தப்பில்லைதான்!

ஓசையற்றுச் செய்திருக்க வேண்டிய வேலை!

அவன் இல்லாத நேரத்தில், பிள்ளைக்குப் பெரிதாக ஒன்று என்றதும் பதறிப் போயிருப்பாள்!

ஆனால், அதையெல்லாம் சொல்லி, எலிசாவிடம் வாதாட மனமற்று, வெறுமனே தலையாட்டி வைத்தான் அவன்!

ஓரளவு, அவன் எதிர்பார்த்தது தான்! விவாகரத்தின் போது எதிர் கொண்டதுதானே?

ஆனால், ஆஸ்காரின் விளைவோ, என்னவோ, பன்மடங்கு அதிகமாகி இருந்தது!

காமிரா ஃப்ளாஷ்களின் கண்ணைக் குருடாக்கும் ஒளி வெள்ளம்! முண்டியடித்தபடி கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு, படை அரணாய் அவனை நெருங்கிய ரிப்போர்ட்டர்கள் கூட்டம்!

அவர்களுக்குள்ளே புகுந்து, மருத்துவமனைக்குள் செல்ல முயன்றான் அவன்!

முன்னும் பின்னுமாக அட்டையாக ஒட்டிக் கொண்டு... அவன் அதைப் பெரிதாகக் கருதவில்லை! இதை விடக் கொஞ்சம் சின்ன அளவில் என்றாலும், ஐந்தாண்டுகளாக அன்றாடம் அனுபவிப்பதுதானே!

ஆனால், அவர்கள் கேட்ட கேள்விகள்!

இப்படி ஓர் அவசரத்துக்குக் கூட அணுக முடியாமல், ரகசியமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

மகளின் விபத்து பற்றிச் சரியாக எத்தனை மணிக்குத் தெரியும்?

தெரிந்த போது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆபத்தான நிலைமையாமே! பிழைப்பாள் என்று தோன்றுகிறதா? பிழைக்காவிட்டால், எப்படி இருக்கும்?

இந்த மாதிரி நிலைமையில், மகள் கூட இருக்க முடியாமல் போகக் காரணம் என்ன? இனி இந்தத் தொழிலில் இருந்து விலகி விடுவீர்களா?

விலகிய பிறகு, என்ன செய்யப் போகிறீர்கள்?

மித்ராவின் நிலைமைக்கு, என்ன காரணம்?

ஆஸ்கார் கிடைக்காத ஆத்திரத்தில், யாரோ முக்கியமானவர்கள் செய்திருப்பதாக எண்ணுகிறீர்களா? அவர்கள் பெயர் சொல்ல முடியுமா?

அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்?

மனைவியோடு, என்ன தகராறில் பிரிந்தீர்கள்?

இந்த விபத்தைப் பயன்படுத்தி, மனைவியோடு சேர்வீர்களா... மனைவி வேறு யாரோடும் வாழ்கிறாளா? விட்டுவிட்டு வருவாளா?

வராவிட்டால், மகளோடு, தாய்நாட்டுக்கே போய் விடுவீர்களா?

அவனை மூட்டை கட்டிக் கடலுக்கு அடியில் புதைக்காத குறை!
ஆத்திரத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதைப் பிடித்துக் கொண்டு, பிலுபிலுவென்று உலுக்குவார்கள்!

யாரிடமும் கை நீட்டிவிடக் கூடாது என்று மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, பிடிவாதமான இறுகலுடன், அதிகம் நெருங்கியவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறி, ஒருவாறு மருத்துவமனைக்குள் சென்றான் அவன்.

"பொறுங்கள், ஜென்டில்மேன்! டீப் அதிர்ச்சியுற்றிருக்கிறார்! மகளைப் பற்றிய கவலை சற்றுக் குறைந்ததும், உங்களைச் சந்தித்து, எல்லா விவரமும் சொல்வார்!" என்று பத்திரிகை, டீ.வி. ரிப்போர்ட்டர்களைச் சமாதானப்படுத்திவிட்டு, எலிசா அவனிடம் ஓடி வந்தாள்!

"'நோ கமென்ட்ஸ்' சொல்லு என்றேனே! மீடியாவிடம் பதமாக நடக்க வேண்டாமா? மகளைப் பற்றிய அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்து வைத்திருக்கிறேன்! வா!" என்று, மித்ராவுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றாள்.

உயிருக்கு ஆபத்து நீங்கி விட்டது என்று, நல்ல சேதியை முதலில் தெரிவித்து விட்டு, "ஐசியுவில் இருந்து மித்ராவை வார்டுக்கு மாற்றி விடலாம். ஆனால், உங்களைப் போன்ற பிரபலங்கள் வந்து போவது, மருத்துவ வார்டு சூழ்நிலையைப் பாதிக்கக் கூடும்! கொஞ்சம் தனிமை காப்பதாக, தனிப்பட்ட வார்டு ஒன்று இருக்கிறது! உங்கள் மகளை, அங்கே மாற்றலாமா?" என்று கேட்டார் வைத்தியர்.

"இன்னும் தனியாக..." என்று தொடங்கியவனை இடையிட்டு, "இப்போதைக்கு, அவளுக்கு மருத்துவக் கண்காணிப்பு அதிகம் தேவை, மிஸ்டர் டீப்! பிரத்தியேக வார்டில் இருப்பது, அவளுக்கு நல்லது!" என்றார் மருத்துவர்!

மாற்றத்துக்கான பணம் கட்டுவது போன்ற வேலைகளைக் கவனிப்பதற்காக எலிசாவை அனுப்பிவிட்டு, அவள் சென்றதும், "டாக்டர், உண்மையைச் சொல்லுங்கள்! என் மித்ராவுக்கு மெய்யாகவே, இனி எந்த ஆபத்தும் இல்லைதானே? இந்த விபத்தின் பின் விளைவாக, வேறு எதுவும் வந்து விடாதே!" என்று கவலையுடன் கேட்டான் அவன்!

தன்னை மீறி, அவன் குரல் கரகரத்தது!

கூர்ந்து நோக்கிவிட்டு, "எல்லாச் சோதனையும் செய்தாயிற்று, மிஸ்டர் டீப்! பின் விளைவாக எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம் இல்லை! ஆனால், இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீங்கள், அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட நேற்றைய இரவில் எங்கே போனீர்கள்? சின்னக் குழந்தைப் பருவத்திலேயே, மித்ராவுடைய தாயார் பிரிந்து போய் விட்டதாகக் கேள்விப்பட்டேன்! அவளே, அன்னையைத் தேடவே இல்லை! ஆனால், பின்னிரவில் மயக்கம் தெளிந்து, வலியும், ஏக்கமுமாக, அப்பா, அப்பா என்று அவள் புலம்பிய போது, நீங்கள் அருகில் இருந்திருந்தால், அப்போதே, சில மணி நேரம் முன்பாகவே, குழந்தை திடப்பட்டிருக்கக் கூடும்!" என்றார் வைத்தியர்!

அந்த நேரத்தில்...

இடையூறு வரக்கூடாது, என்று, அந்தப் பெண்னின் செல்லைக் கூட வாங்கி, அணைத்து வைத்தது, அவனுக்கு வலியுடன் நினைவு வந்தது!

வலி மட்டுமல்ல! குன்றலோடும்!

அவனது ஆறடி உயரம் அரையடியாகக் குறுகிவிட்ட உணர்வு!

விடிகாலையில் எப்போதோ அவள் எழுந்து போட்டோவை எடுத்துவிட்டு, செல்லையும் 'ஆன்' பண்ணியே வைத்திருக்கிறாள்! யாருடைய அழைப்பையும் எதிர்பார்த்திருந்தாளோ என்னவோ? இந்த மாதிரித் தொழிலுக்கு, நேரம் காலம் ஏது?

ஒரு வகையில் அவளது திருட்டுத்தனமும் நல்லதாயிற்று! அல்லது, விபத்து பற்றிய விவரம், அவனுக்கு இன்னமும் தெரிந்திராது!

என்ன கேவலம்!

கேவலம் அவனது நடத்தையில்! மகள் இங்கே உயிருக்குப் போராடுகையில், அவன் சே!

இன்று வரை, தப்பாக நினைத்திராதது, இன்று வேறு மாதிரித் தெரிந்தது!

பத்திரிகையாளர் தொல்லைக்காக மட்டும் தானே, அவன் ரகசியம் காத்தது?

ஆனால், நடந்ததில் தப்பில்லை என்றால், இப்போது இந்த டாக்டரிடம் ஏன் சொல்ல முடியவில்லை?

நடந்த உன்மை மட்டும் வெளியே தெரிந்தால், எல்லோரும், அவனை என்ன நினைப்பார்கள்?

நல்லவேளை! அப்படி எதுவும் நேராமல், எலிசா காப்பாற்றினாள்!

படுக்கையில் கிடந்த மகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கையில் அவனுக்கு என்னென்னவோ தோன்றிற்று!

இந்த வயதில், அவன் எப்படியெப்படி வளர்ந்தான் என்பது நினைவு வந்தது!

விளையாடும் போது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டு அழுத போது, "விளையாட்டில் பட்டதற்கெல்லாம் அழக்கூடாதும்மா!" என்றவாறே தலையைத் திருப்பித் தன் கண்ணைத் துடைத்துக் கொண்ட, தாயின் நினைவு!

கதை சொன்னபடி, வலிக்காமல் ஊசி போட்ட தந்தை!

காயம் நன்றாக ஆறி, தோல் நிறம் மாறும் வரைக் கவனித்த விதம்!

வெறும் சிராய்ப்புக்கே இந்தப் பாடு! அவனுடைய மகள் மறுபிறவி எடுக்கையில், அவன் அந்தப் பகுதியிலேயே இல்லை!

பிரத்தியேக வார்டு, ஸ்பெஷல் அறை என்று மித்ரா மாற, மாற, அவன் மருத்துவமனையே கதியென்று கிடந்தான்!

"பாசமுள்ள தந்தையாக, உன்னைப் பற்றிய செய்திகள் பிரமாதம்! மித்ரா வீட்டுக்கு வரும்வரை, பல்லைக் கடித்துக் கொண்டு, இப்படியே இருந்து விடு!" என்றாள் பூங்கொத்துடன் வந்த எலிசா.

மகளை மெல்ல நடக்க வைத்துக் கொண்டிருந்த அவன், எலிசாவை விசித்திரமாகப் பார்த்தான்!

அவனுக்குப் பல்லைக் கடித்துப் பொறுக்க வேண்டிய அவசியம் இருக்கவே இல்லையே! அந்தச் சின்ன உருவத்துக்கு உதவியும் பணிவிடைகளும் செய்து, அவனுக்குச் சுகமாக அல்லவா இருக்கிறது!

"மருத்துவமனையில் இருந்து, மித்ரா திரும்பி வரும் வரைதான்! அதுவரை இதே விதமான போஸிலேயே இருந்து விட்டால் போதும்! அதுவே, அடுத்த படத்துக்கு அருமையான முன் விளம்பரம் போல ஆகிவிடும்! மித்ரா குணமாகி வீட்டுக்கு வந்துவிட்டால், அப்புறம், நீ பழைய மாதிரியே இருந்து கொள்ளலாம்! நல்ல வேளையாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தான் நடக்கின்றன!"

அவனுள் ஓர் எண்ணம் தலைதூக்கியது!

யோசனையில் இருந்தவனை, வீடு திரும்பிய மறுநாள், குணமடைந்து வந்ததற்காக, மித்ராவை வாழ்த்துவதாக வந்த டெலிபோன் கால் முடிவெடுக்க வைத்தது!

குழந்தைக் குரலில் வாழ்த்திவிட்டு, அப்பா பழகும் ஆன்ட்டிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் ஒருவன்!

யார், யார் வீட்டுக்கு வருவார்கள்? யார் யாரை அப்பா வெளியே கூட்டிப் போவார்? அன்றைக்கு, அவளுக்கு அடிபட்ட போது கூட, அப்பா, அப்படி எந்த ஆன்ட்டியுடனோ தான் போயிருந்தாரா?

மகளின் ஓரிரு பதில்களிலேயே, இன்னோர் இணைப்பைக் காதில் வைத்த தந்தைக்கு விஷயம் புரிந்து போயிற்று!

பரபரப்பான செய்தி வேண்டும்! அது, மட்ட ரகமாக இருந்தால், ரொம்பவே நல்லது! இப்போது, அதற்கான வாய்ப்பு ஒன்று இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

அதைப் பெறுவதற்காக, இந்தச் சிறு குழந்தையைக் கூட விடுவதாக இல்லை!

ஆனால், அந்தக் குழிக்குள், மகளை இழுத்துவிட, அவன் தயாரில்லை! அப்புறம், அவள் வெளியே எங்கேயும் போகவே முடியாது!

இந்தப் பிரச்சினை முடிந்து, மறக்கும் வரையேனும்...

"நீ இப்படி, இந்தச் சூழ்நிலையில், போட்டது போட்டபடி விட்டுவிட்டுக் கிளம்பினால் எப்படி, டீப்?" என்று தொடங்கி, அவனது இந்தியப் பயணத்தைத் தடுக்க, எலிசா எவ்வளவோ முயன்றாள்.

எப்போதுமே, அவன் இந்தியாவுக்குக் கிளம்புகையில், அவள் இப்படி ஏதாவது சொல்வது வழக்கம் தான்! ஓரிரு முறை, பயணமே நின்றிருக்கிறது!

ஆனால், இந்தத் தடவை, அவன் பிடிவாதமாக இருந்தான்.

"ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தானே நடக்கின்றன?" என்று அவள் வார்த்தைகளையே திருப்பிப் படித்து, மேலேயும் சொன்னான் அவன்! "இதற்கு, நான் இங்கே இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே!"

அவள் முகம் போன போக்கைப் பார்த்து மனம் இளகி, "எனக்கு என் தாயாரை ஒருதரம் பார்த்தாக வேண்டும், எலிசா! கதைச் சுருக்கத்தைக் காஸ்டிங் டைரக்டரிடம் கொடுத்து விட்டேன். அவர் நடிகர் நடிகைகள் எல்லாம் பேசி முடித்து, அதன் பிறகு, பட்ஜெட் திட்டமிடும் போது, நான் வந்தால் போதுமே!" என்றான் அவன், விளக்கமாக.

"ஆனால், எழுத வேண்டாமா?"

"எழுதுவதுதானே? அதை எங்கே இருந்தும் செய்ய முடியும்! முக்கியமாக, மித்ராவுக்கு முழுமையான இடமாற்றம் வேண்டும் என்பது, என் கருத்து மட்டுமல்ல, டாக்டருடைய அறிவுரையும் கூட அதுதான், எலிசா!"

அவனது பிடிவாத குணமும், எலிசா அறிந்ததே! அவனே, ஈரேட்டாக இருக்கும் வரைதான் மாற்றங்கள் எல்லாம்! அந்த நிலை தாண்டி விட்டால், மாற்ற முடியாது!

புரிந்து விடவே, "சரி சரி போய்வா!" என்று அவனை ஒத்துப் பேசி, "ஆனால், ரொம்ப நாள் அங்கே தங்கி விடாதே! ஹாலிவுட், ஒரு மாதிரி உலகம். யாருக்காகவும் காத்திருக்காது" என்ற ஓர் எச்சரிக்கையோடு, அவனை அனுப்பி வைத்தாள்!

அவளிடம் சொல்லாத இன்னொன்றும் இருந்தது!

மகளைக் குளிப்பாட்டி, உடை அணிவித்து, சேர்ந்து விளையாடி, தூங்குமுன் கதை சொல்லித் தூங்க வைத்து... இப்படிக் கூடவே இருந்து பலவும் செய்யவும், "நான்சி, மிச்சியுடைய அப்பாக்கள் போல, நீயும் எனக்கு நிஜ அப்பா ஆகி விட்டாயாப்பா?" என்று சிறுமி கேட்டது. அவனுக்குப் பொட்டில் அறைந்தது போல ஆகிவிட்டது.

சமாளித்துக் கொண்டு, "எப்போதுமே, அப்பா, உன் நிஜ அப்பாதான் செல்லம்!" என்ற போது, குழந்தை ஒப்புக்கொள்ளவில்லை!

"ஊகூம்! இதெல்லாம் செய்தால் தான், நிஜ அப்பாவாம்! சும்மா, எப்பவாவது பார்த்து, கிஸ் பண்ணிட்டுப் போகிற அப்பா, சினிமா அப்பா... நீ சினிமா எடுக்கிறதாலே, நீயும் அதே மாதிரி, சினிமா அப்பா ஆகி விட்டேன்னு மிச்சி சொன்னான். ஆனால் இப்போ நீயும் நிஜ அப்பா ஆகிவிட்டே! இல்லையப்பா?" என்றாள் மகள்.

இதற்கெல்லாம் கூட, மகளை ஏங்க விட்டுவிட்டு, அவன் என்ன வாழ்க்கை வாழ்ந்தான்?

இங்கேயே இருந்தால், எல்லாம் பழைய மாதிரியே தான் ஆகிவிடும்! கொஞ்ச காலமேனும், இதிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்! அதற்கு, இங்கிருந்து வெளியேறியாக வேண்டும்!

விமானத்தில் ஏறி, மகளுக்கு பெல்ட்டை மாட்டிவிட்டு, தன் சீட் பெல்ட்டையும் மாட்டி, விமானமும் கிளம்பிய பிறகே, அப்பாடி என்று, சீட்டில் வசதியாகச் சாய்ந்தான் அவன்!

என்னமோ, மேலே விழுந்து பிடுங்கும் ஓநாய்களிடம் இருந்து தப்பிய உணர்வு!

மகளைக் காப்பாற்றி விட்டதாகவும்!

Advertisement