» இனி எல்லாமே நீயல்லவோ 3

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

அன்றைக்கு, அண்ணன் வெளிநாட்டுக்குக் கிளம்பி விடுவான். முன் மதியத்தில் கிளம்பும் ரயிலில் மும்பைக்குப் போய், அங்கே அவனது தலைமை அலுவலகத்தில் விவரம் தெரிவித்துவிட்டு, அப்படியே அமெரிக்காவுக்கு விமானம் ஏறி விடுவான்!

பூபாலன் ரயிலில் ஏறும் வரையில், ரயில் புறப்படும் வரையிலும் கூட, அவனோடு கூடவே சந்தனா இருக்கலாம்!

அதன் பிறகு?

பத்து நாட்களுக்கு முன்பாக, அவளுடைய தந்தை, அந்த ஃப்ளாட்டில், அவளோடு இருந்தார். பிறகு...

ஒரே இடத்தில் வேலை. தந்தை தலைமை ஆசிரியர். மகள் ஐந்தாம் வகுப்புக்குப் பாடம் எடுத்தாள். தலைமை ஆசிரியர் மகள் என்பதால், அவளுக்குப் பல சலுகைகளை மற்றவர்கள் அளித்த போதும், முடிந்த வரையில், அவள் அதைப் பயன்படுத்துவது இல்லை! இந்தக் குணமே, அவளுக்கு நிறைய நலம் விரும்பிகளைச் சம்பாதித்துத் தந்தது எனலாம்.

கலகலப்பான தந்தை, சிதம்பரநாதன்! சில தலைமை ஆசிரியர்களைப் போலப் பள்ளியைத் தன் தலை மேலேயே தாங்க முடியாமல் சுமப்பவர் போல முகத்தை உம்மென்று வைத்திராமல், சாதாரணமாகவே இருப்பார், சும்மாவே, சிரித்த முகம் அவருக்கு!

அப்பா, மகள், இருவரும் சேர்ந்தே வேலைக்குப் போனார்கள். கடை கண்ணிக்குப் போனார்கள்.

அதிலும், அவளுடைய அண்ணன் பூபாலன் வெளியூர்க் கல்லூரியில் இடம் கிடைத்துப் படிக்கப் போன பிறகு, தந்தை தான் அவளுக்கு எல்லாம் என்கிற மாதிரி! அப்போதெல்லாம், அந்தத் தந்தையும் இல்லாமல் தவிக்கும் ஒரு காலம் விரைவிலேயே வரப் போகிறது என்று, அவள் கனவில் கூட நினைத்ததில்லை!

கலகலவென்று எத்தனை கதைகள் சொல்வார்!

வில்லி பாரதத்தையும், கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்து மனதிலும் இருத்திக் கொண்டவர், அவர். மக்களுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார்.

நாட்டின் இதிகாசங்களை அறியும் போது தான், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு புரியும் என்பார்! ஆயிரம் நீதி நூல்களைப் படித்தும் மனதில் பதியாத நியாய அநியாயப் பாகுபாடுகள், இவற்றைப் படித்தால் தெரியும் என்பது அவரது கருத்து!

அதனாலேயே, மக்கள் இருவருக்குமே, அவற்றைக் கதைகளாகவே கற்றுக் கொடுத்தும் இருந்தார்!

திடுமென, "மகாபாரதப் போர் நிகழாமல் எப்படித் தடுக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்று கிருஷ்ணரிடம், சகாதேவன் சொன்னான்?" என்று கேட்பார்!

"'பாராளக் கர்ணன், இகல் பார்த்தனை முதலில் கொன்று அணங்கின் காரார் குழல் களைந்து, காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் நான் பிடித்துக் கட்டுவனேல், வாராமல் தடுக்கலாம் மாபாரதம்' என்றான்" என்று பாடலைச் சொல்லி, விளக்கமாக 'கர்ணனுக்குப் பட்டம் கட்டி, அவனை எப்போது இகழ்ந்து பேசும் அர்ஜுனனை முதலில் கொன்று விட்டு, விரித்துப் போட்ட கூந்தலை காட்டி சபதத்தை நினைவூட்டும் திரௌபதியைச் சிறையிட்டுக் கடைசியாக எல்லோரையும் ஆட்டி வைக்கும் உன்னையும், நான் கட்டி விட்டால், பாரதப் போர் மூளாமல் தடுக்க முடியும்' என்று சகாதேவன் சொன்னதையும் சேர்த்து, அவரிடம் தெளிவாகக் கூற வேண்டும்!

தடுமாறினால், திரும்பச் சொல்லிக் கொடுப்பார்! ஆனால், பத்துக்கு மூன்றைச் சரியாகச் சொல்லி விட்டால் கூடச் சிதம்பரம் பூரித்துப் போவார்!

தந்தையைப் பார்த்து, விரும்பி ஆசிரியை ஆன சந்தனா, மாணவ மணிகளின் பல்வேறு பிழைகளைப் பொறுத்துப் போகப் பயின்றதே, அவரைப் பார்த்துதான், அவரது போதனையால்தான்!
"முப்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் எடுத்தாலே, அடுத்த வகுப்புக்குப் போக முடியும் என்று ஏன் வைத்திருக்கிறார்கள்? நூறு மதிப்பெண் எடுக்க, முயற்சி செய்ய வேண்டியதுதான். ஆனால், கவனக் குறைவு, மறதி என்று, மனிதனிடம் எத்தனையோ குறைபாடுகள்! ஆயினும், முப்பத்தைந்து சதம் எடுத்து விட்டாலே, மனிதனாக முன்னேறுவதற்கு, அவன் முயற்சி எடுக்கிறான் என்று நிரூபிக்கப்பட்டு விடுவதாகக் கொள்ளப் படுகிறது! எல்லோருக்கும் ஒரே மாதிரிதானே கற்றுத் தருகிறோம். ஏன் எல்லோரும் நூறு மார்க் வாங்கவில்லை என்று எரிச்சல் படக் கூடாது! ஒவ்வொருவர் ஒவ்வொன்றை, உள்ளே வாங்கிக் கொள்ளும் திறனில் வேறுபாடு உண்டு. கணக்குப் பாடத்தில் முட்டை வாங்குகிறவன், தொழிலில் பெரிய பணக்கணக்கை, மனதிலேயே பிரமாதமாகப் போட்டு, முன்னேறப் பார்த்திருக்கிறேன். யார், யாரிடம் என்ன திறன் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பாராட்ட, ரசிக்க, நீ முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்..."

இப்படி நிறைய, அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்!

அதனாலேயே, வகுப்பில் ஒரு வம்புக்கார வால், "திருவள்ளுவர் தப்பாக எழுதிவிட்டால், எந்த ரப்பரை வைத்து, எப்படி அழித்திருப்பார் மிஸ்?" என்று சந்தேகம் கேட்ட பிறகு, வகுப்புப் பிள்ளைகளுடன் சந்தனாவும் சேர்ந்து நகைத்திருக்கிறாள்.

அது மட்டுமல்ல! வீட்டுக்கு வந்து, தந்தையிடமும் வகுப்பில் நடந்ததைச் சொல்ல, இருவருமே ரசித்துச் சிரித்தார்கள்!

"என்ன கற்பனையெல்லாம் வருகிறது பாரேன்!" என்று வியந்து, இன்னொரு முறை சிரித்துவிட்டு, அவரிடமே இன்னோர் ஐயமும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

"சந்தனா என்று, இது என்ன பெயர், அப்பா? இப்படிப் பெயர், நான் கேட்டதே இல்லை!"

பழைய நிகழ்ச்சியை மனதில் நினைத்து, சன்னமான முறுவலுடன், "நீ, பெண்ணாகப் பிறந்ததும், உனக்கு ஊர்த் தெய்வமான, முப்பிடாரி அம்மனின் பெயரை வைக்க வேண்டும் என்று, உன் தாத்தா ஆசை! ஆனால், அரைத்த சந்தனத்தில் செய்த சிலை போல, அழகாகக் கிடந்தாயா, உன் அம்மாவுக்கு அந்தப் பெயர் தான் தோன்றி விட்டது!" என்றார் அவர். தொடர்ந்து, "அம்மா சொன்னது, எல்லோருக்குமே பொருத்தமாகத் தோன்றிவிட, அதுவே உன் பெயராகிப் போயிற்று! அதுவும், உன் தாத்தா, உன்னைச் சந்தனச் சாந்துக் கட்டி என்று நீளமாகத்தான் கொஞ்சுவார்!"

தொடர்ந்து, நரை மீசையுடன் திடகாத்திரமான ஒருவர், அவளைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொஞ்சிய சந்தோஷமான நினைவுகள், அவளுக்குத் தோன்றும்!

அதுதான் அப்பா!

துன்பங்களைப் பேசுவதும் இல்லை. கற்பனை செய்ய விடுவதும் இல்லை!

இல்லையென்றால், மனைவியை இழந்து, இந்த பதினெட்டு ஆண்டுகளாகத் தாயுமாகி, இரு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய சிரமம் பற்றி, எவ்வளவோ சொல்லிப் பிள்ளைகளின் மனதில் சுமையேற்றி இருக்கலாம்!

ஆனால், அதெல்லாமே, அவர் ரசித்துச் சொன்ன தினுசில், வேடிக்கை விளையாட்டாக மாறிவிடும்!

இட்லி மிளகாய்ப் பொடியை வாங்கி வந்து, தெரியாமல் ஒரே மாதிரி இருந்த சர்க்கரை டப்பாவில் போட்டு வைத்து விட்டு, அதையும் காலை வேளையில் அவசரத்தில் கவனியாமல், இட்லிக்கு அதே பொடியைப் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தது, இனிப்பும் காரமுமாகப் பிள்ளைகளுக்கு அந்தச் சுவை பிடித்துப் போகவே, ஒரு பெரிய ஜோக்காக மாறியது!

அவ்வப்போது, சுவையில் ஏதாவது கூடக் குறைய இருந்தாலும், 'அதுபோலத்தான்' என்று கிண்டலாகப் பேசும் அளவுக்கு!

பதினைந்து வயதில் தொடங்கி, மெல்ல மெல்லத் தந்தைக்கு உதவியாகத் தொடங்கி, சந்தனா சமையல் செய்கையில் ஏதாவது தப்புத் தவறுகள் நேர்ந்தாலும், இதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டே மூவரும் உண்டு விடுவார்கள்!

அந்த மகிழ்ச்சி, இனி என்றேனும் கிடைக்குமா?
"என்னடாம்மா? அப்பா நினைவா?" என்று கனிவாகக் கேட்டபடி, அண்ணன் அருகில் வந்து அமர்ந்த போதுதான், சந்தனாவுக்குச் சுய உணர்வு வந்தது.

பாவம்! அவள் இப்படிக் கலங்கினால், அவனால் எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல முடியும்?

"சந்தோஷமான நினைவுதாண்ணா! சர்க்கரையும் இட்லிப் பொடியும் சேர்த்து உண்போமே, அதை நினைத்தேன்! இப்படி, அப்பாவைப் பற்றிய எல்லாமே மகிழ்ச்சிகரமான நினைவுகள் தானே? உனக்குச் சாப்பாடு, தனித் தனியாக, மதியத்துக்கு, இரவுக்கு என்று கட்டி வைத்து விட்டேன். நீ சாமான்கள் எல்லாம் எடுத்து வைத்தாயிற்றா?" என்று, அண்ணனுக்கு முகம் காட்டாமல் எழுந்தாள் அவள்.

தந்தையின் வளர்ப்புதானே அவனும்!

கூடவே எழுந்தபடி, "இந்த ஒப்பந்தம் மட்டும் இல்லையென்றால், நான் பேசாமல் இங்கேயே இருந்து விடுவேன்!" என்றான் அவன் வருத்தத்துடன்! "இடையில் விட்டால், நாம் சில லட்சங்கள் கட்ட நேரும். ஆனாலும், இருப்பதை வைத்து, எப்படியோ கட்டி விடலாமே என்று தான் எனக்கும் தோன்றுகிறது! எதற்கும், நிறுவனத்தில் ஒரு தரம் கேட்டுப் பார்க்கப் போகிறேன், சாந்தும்மா. ஏனென்றால்..." என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை அவசரமாக இடை மறித்தாள் தங்கை.

"அந்த மாதிரி மட்டும், எதுவும் கூடவே கூடாது, அண்ணா! உன் எதிர்காலம் நல்லபடியாக அமைந்துவிட்டது என்று, அப்பா எவ்வளவு மகிழ்ச்சியோடு, உன்னை அனுப்பினார்! அதைக் கெடுப்பதா? நினைத்துக் கூடப் பாராதே! அப்படி நீ போகாமல் இருந்தால், அப்பாவின் ஆசையை, நான் தான் கெடுத்து விட்டதாக, அதுதான் எனக்கு அதிக வேதனையாக, குற்ற உணர்வாக இருக்கும்! என்ன? எண்ணி மூன்றே நாட்கள்! அப்புறம், விடுதிக்குப் போய் விட்டால், அங்கே புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், அவர்களோடு பழகுவது என்று மனம் மற்றதில் ஈடுபடத் தொடங்கி விடும். அப்புறம் பார்த்தால், வேலை. இப்படி, என் நேரம் சரியாகப் போய் விடும்! ஓய்ந்த நேரத்தில் நினைக்கக் கூட, நமக்குத் தான் அப்பாவைப் பற்றி எத்தனையோ சந்தோஷமான நினைவுகள் இருக்கின்றனவே! நீ சும்மா தேவையற்று என்னைப் பற்றிக் கவலைப்படாதே!" என்று, உள்ளே இல்லாத தெம்பை, வெளியே காட்டிப் பேசி, அண்ணனின் மனதை அமைதிப்படுத்தினாள்!

"இருந்தாலும், சின்னப் பெண் நீ. உன்னைத் தனியாக விட்டுப் போக, மனமே வரமாட்டேன் என்கிறதேம்மா! முன்பாவது, அப்பா இருந்தார்!" என்றவனின் கண்களில் குபுக்கெனக் கண்ணீர் பொங்கியது!

சந்தனாவுக்கும் வேதனைதான்!

ஆனால் அதைக் காட்டினால், காரியம் கெட்டுப் போகும் என்று உணர்ந்து, "ஐயோ! என்னண்ணா இது? ஆண் பிள்ளை அழலாமா? கடல் கடந்து போகிறோமே என்று பார்க்கிறாயா? இந்தக் காலத்தில், அதெல்லாம் ஒரு தூரமே அல்ல! உலகமே ஒரு 'குளொபல் வில்லேஜ்' ஆகிவிட்டது என்று நாம் பேசிக் கொண்டிருந்தது மறந்து விட்டதா? நீ வெளிநாட்டுக்குப் போகாவிட்டாலும், இங்கே சென்னையிலேயா இருக்க முடியும்? மும்பையில் தானே இருக்க வேண்டும்? அதற்கும், வெளிநாட்டுக்கும் ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! அதற்காக, வேலையையே விட்டு விட யோசிக்காதே! மும்பையும் 'சிலிக்கான் வாலி'யும் ஒன்றுதான் என்பேன். இந்தப் ப்ராஜக்டை நல்லபடியாக முடித்து விட்டு வந்தால், சென்னைக்குப் பதவி உயர்வுடன் கூடிய மாற்றம் தருவதாக, உன் அலுவலகத்தில் சொல்லியிருந்தார்களே, நினைவில்லை? அதனால், கண்ணைத் துடை... இல்லை, முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு புறப்படு! வா! அப்பா படத்துக்கு முன்னே நின்று சொல்லிக் கொள்ளும் போது, இப்படி அழுத முகமாகவா, நிற்பது? ம்! போய் முகத்தைக் கழுவு!" என்று பூபாலனை விரட்டினாள்!

பூபாலனுக்கும், ஒருவாறு தங்கை சொல்வது சரியென்று தோன்றிவிட, மெல்லத் தலையாட்டிவிட்டு, முகம் கழுவச் சென்றான்.

ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியெல்லாம், சந்தனாவுக்கு ஒரே அறிவுரை தான். கதவை எப்போதும் உட்புறம் பூட்டிக்கொண்டு இருக்க வேண்டும். பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருக்கும் கிரில் கதவைப் பூட்டுப் போட்டுப் பூட்ட வேண்டும்! எப்பொழுதும்! வேலைக்காரம்மா உள்ளே இருக்கும் போதும், பூட்டுதான்! வேலை முடிந்து, அந்தம்மா போகிறபோது மீண்டும் திறந்து விட்டுக் கொள்ளலாம்! இந்த விஷயத்தில் சோம்பல் படவே கூடாது!
அவன் திரும்பத் திரும்பச் சொன்ன விதத்தில், சந்தனாவுக்குப் போரடித்துப் போயிற்று! சிரிப்புக் கூட வந்தது எனலாம்! ஆனால், அண்ணன் சொல்வது, அவள் மீதுள்ள அக்கறையால் அல்லவா? எனவே, அவ்வப்போது கண்கள் பளிச்சிட்ட போதும், பதில் பேசாமல் சாதுவாய்க் கேட்டுக் கொண்டாள்!

ரயில் நிலையத்திலும், பூபாலன் இன்னொரு தரம் வீட்டுப் பாதுகாப்புப் பற்றித் தொடங்கவும், குறுக்கிட்டு, "அண்ணா, திடீரென்று நான் ரொம்ப மக்காகி விட்டேனோ என்று சந்தேகமாக இருக்கிறது!" என்றாள், அப்பாவி போல.

திகைப்புற்று, "ஏம்மா, அப்படி? எனக்கொன்றும் அப்படித் தோன்றவில்லையே! எப்போதும் போலப் பளிச்சென்று தானே, இருக்கிறாய்... ஏன், ஏதேனும் புரியவில்லையா? அப்படி எதுவும் இருந்தால், இப்போதே என்னிடம் கேட்டுவிடு!" என்று, அவளுக்கு மூத்த அண்ணனாய் உதவ முன் வந்தான் அவன்.

"ஆமாம் அண்ணா! இதற்கு விளக்கம் நீதான் சொல்லித் தர வேண்டும்!" என்று கவலையாகத் தொடங்கினாள் தங்கை. "நம் வீட்டில், இந்த மூன்று நாட்களும் எப்படி இருக்க வேண்டும் என்று, கிட்டத்தட்ட முப்பது தடவை சொல்லி விட்டாய்! இன்னமும் என் மண்டையில் அது ஏறிய மாதிரி, உனக்குத் தோன்றவில்லை போல இருக்கிறதே. அதுதான் சந்தேகம் வந்து விட்டது!" என்று சாதுவாகவே கேட்டுவிட்டுச் சட்டெனக் கண் சிமிட்டிக் குறும்பாகச் சிரிக்கவும், அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது!

"வாலு!" என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, "நிஜமாகவே அத்தனை தடவையா சொன்னேன்?... ம்ம்ம்... இருக்கும், இருக்கும்! பத்திரிகையில், அடுத்த தெருவில் நடந்த திருட்டைப் பற்றிப் படித்ததில் இருந்து, எனக்கு அதே நினைவாகத்தான் இருக்கிறது! நீ எச்சரிக்கையோடு இருப்பாயல்லவா?" என்று கவலையுடன் கேட்டான் பூபாலன்.

"என்னண்ணா நீ, இந்த வீட்டில் நான் இருக்கப் போவது, மிஞ்சி மிஞ்சி மூன்றே நாட்கள் தானே? எதிர் ஃப்ளாட்டில் வேறு சுந்தரிக்கா குழந்தை பெற வந்ததில் இருந்து, உறவினர் வருவதும் போவதுமாக நடமாட்டம் நிறைய இருக்கிறது! பயமே படாதே!" என்றவள், அவன் மீண்டும் தொடங்கு முன் அவசரமாக "அண்ணா, அங்கே வேலை, வேலை என்று நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்து விடாதே! 'சுவரை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும்' என்பது போல, ஆரோக்கியத்துக்கு அப்புறம் தான், மற்றது எல்லாம்!" என்றாள் சந்தனா.

"நல்லவேளை, நினைவுபடுத்தினாய்...!" என்று பூபாலன் மறுபடித் தொடங்கினான். "பார் சந்தனா, அந்த வேலை பார்க்கும் மகளிர் விடுதியில் உணவு எல்லாமே நன்றாக இருக்கும் என்று தான் சொன்னார்கள்! ஆனால், எப்படியும், உன் சமையல் போலச் சுவையாக இருப்பது கடினம் தான்! அதற்காகச் சரியாகச் சாப்பிடாமல், உடம்பைக் கெடுத்துக் கொண்டு விடக் கூடாது! ஆனால், மற்ற பல இடங்களுக்கு, இந்த ஹாஸ்டல் உணவு பிரமாதம் என்று கேள்வி. அதைவிட முக்கியமாக, மிகவும் பாதுகாப்பான இடம்! அதனால் தான், கெஞ்சிக் கூத்தாடி, இதில் உனக்கு இடம் பிடித்தேன். சரியாக ஒன்றாம் தேதி மாலைக்குள் போய்விடு! இல்லாவிட்டால், கிடைத்த இடம், வேறு யாருக்காவது போய்விடும்! அங்கே இடம் பிடிக்கப் பெரிய போட்டி இருக்கிறது!"

அன்பும் அக்கறையுமாக, ஒருவருக்கொருவர் இப்படியே ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கையில் திடுமென ரயில் கிளம்பும் நேரம் வந்தது!

தன்னை மீறிக் கண்ணீரைச் சொரிந்த இருவரையும் பிரித்தவாறு, ரயில் கிளம்பிச் சென்றது!

இந்தப் பரந்த உலகில் யாருமே இல்லாதது போன்ற வெறுமையை உணர்ந்தபடி, தூரத்தில் புள்ளியாகி மறையும் ரயிலை வெறித்தவாறு, சந்தனா தனித்து நின்றாள்!