» இனி எல்லாமே நீயல்லவோ 4

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

ரயில் கண்ணுக்கு மறைந்த பிறகும் கூட சந்தனாவுக்கு, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்லப் பிடிக்கவில்லை!

எங்கே செல்வது?

வீட்டை நினைக்கவே, மனம் கலங்கியது.

அவளது வெகு சிறு வயதில் மறைந்து விட்ட தாயின் நினைவு அவளை அதிகம் வருத்தியதில்லை!

ஆனால், தந்தை, அண்ணன் இருவருமே இல்லாமல், தன்னந் தனியே, அந்த வீட்டில், அவள் எப்படி இருப்பாள்?

புரிந்துதான், அவள் தங்குவதற்காக, வேலை பார்க்கும் மகளிர் விடுதிகளை அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல விடுதியில், பூபாலன் அவளுக்கு இடம் பிடித்துத் தந்திருக்கிறான்!

ஆனால், அந்த இடத்துக்குப் போவதற்கு, இன்னும் மூன்று நாட்கள் இருந்தன.

அந்த மூன்று நாட்கள், எப்படியோ சமாளித்து, அவள் இந்த வீட்டில் தான் இருந்தாக வேண்டும்!

இருபத்தியிரண்டு வயதில், இதைவிட, எவ்வளவோ மனோதிடம், தைரியம் இருக்க வேண்டும் என்று, தனக்குத் தானே எவ்வளவோ சொல்லிக் கொண்ட போதும் வீடு திரும்ப, அவளுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது!

எதிரே ரயில் நிலையக் கடிகாரம், மணி பனிரண்டைக் காட்டியது!

பள்ளியில், மதிய உணவு இடைவேளை நேரம்!

தந்தையின் அறையை ஒட்டியிருந்த வராந்தாப் பகுதியில் அமர்ந்து சாப்பாட்டுப் பாத்திரத்தைப் பிரிப்பது நினைவு வந்தது!

எளிய உணவுதான்! ஏதாவது கலந்த சாதம் அல்லது, இட்லி தோசை! அதுவே, அமிர்தமாகத் தோன்றும்!

அன்று கூட...

இல்லை, நினைக்கக் கூடாது! அன்றைய தினத்தை இயன்றவரை நினையாதிருப்பது நல்லது! நினனவு வந்துவிட்டால், அப்புறம் இந்தக் கனவுகளால் வேறு நஷ்டம்!

முயன்று, மனதை வேறுபுறம் திருப்பினாள் சந்தனா.

இன்னமும், அரைநாள் வகுப்புகள் இருந்தன...

'நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம், அம்மா! குறைந்தது, ஒரு மாதத்துக்கேனும் வேலை கொடுத்தாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு, உன் இடத்துக்கு, நாங்கள் யாரையும் நியமிக்கவில்லை! நாங்களே, ஒருவர் மாற்றி ஒருவர் உன் வகுப்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்! அதனால், உன்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வந்து, வேலையைப் பார்! வேலையில் ஈடுபடுவது, உன் மனதுக்கும் நன்றாக இருக்கும் என்பதால்தான் சொல்லுகிறேன்' என்று முன்பு உதவித் தலைமை ஆசிரியையாக இருந்து, இப்போது தந்தைக்குப் பதிலாகத் தலைமை ஆசிரியை ஆகியிருக்கும் சரசுவதி ரங்கநாதன் ஏற்கனவே, சந்தனாவிடம் சொல்லியிருந்தார்!

எனவே, அவள் பள்ளிக்குப் போவது, யாருக்கும் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை! சொல்லப் போனால், அவளது பொறுப்பைப் பகிர்ந்து கொண்டு, அதிக வேலை செய்யும் மற்றவர்களுக்குப் பளு குறையும்!

அப்போது பள்ளிக்குப் போனால், ஒன்றிலிருந்து, மூன்று வரையிலான வகுப்புகளை எடுக்கலாம்!

அப்புறம், அங்கே மற்றவர்களோடு வேலை, மறுநாள் பாடம் பற்றிப் பேசிவிட்டு, சற்றுத் தாமதமாகவே வீடு திரும்பலாம்!

எப்படியும், குறைந்தது நாலு மணி நேரம், அவள் வீட்டுக்குப் போகத் தேவையிராது!

முன்புறமாகச் சென்று, வரிசையில் நின்று, ஆட்டோ பிடித்துப் போவதை விட, கார் பார்க் வழியே பக்கவாட்டில் சென்றால், பள்ளிக்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரலாம்! அன்று எடுக்க வேண்டிய பாடம் பற்றித் தயார் பண்ணவும் சற்று அவகாசம் கிடைக்கும்!

அவசரமாகத் திரும்பிப் பக்கவாட்டு வழியில் வேகமாகச் சந்தனா நடக்கலானாள்.

கார்ப் பார்க்கின் முதல் மூலை திரும்புகையில், செல்லில் பேசியவாறே, கைப்பையை மூடியபடி, காரினுள் ஏறிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி!

அவளது பெயரின் மூலமான சந்தன வண்ணச் சேலை!

ஐம்பதைத் தாண்டியவளாகத் தோன்றிய அந்தப் பெண்மணி, கார் கதவைச் சாத்தவும் கார் வேகமெடுத்து அங்கிருந்து வெளியேறியது!

டிரைவர் காரை ஏற்கனவே ஸ்டார்ட் செய்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவாறே முன்னேறிய சந்தனா திடுக்கிட்டு நின்றாள்!

அந்தப் பெண்மணி, காரில் ஏறிய இடத்தில் ஒரு பர்ஸ் கிடந்தது!

ஏதோ கொஞ்சம் சில்லரையை மட்டும் வைக்கிற மாதிரிச் சின்னது அல்ல, அது! நிறைய ரூபாய் நோட்டுகளை ரகம் வாரியாக வைக்கக் கூடிய தினுசு.

பணம் நிறைய இருந்து, தப்பான யார் கையிலாவது மாட்டிக் கொண்டு விடப் போகிறதே என்று எண்ணிய சந்தனா, வேகமாகச் சென்று அந்தப் பர்சை எடுத்தாள்.

பர்சோடு வேகமாகச் சாலையை அடைந்து, இரு புறமும் ஆராய்ந்தாள். அந்தக் கார் சென்ற இடமே தெரியவில்லை!

அருகில் வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி, பள்ளி முகவரியைக் கொடுத்துவிட்டு, பர்சை நிதானமாகத் திறந்து பார்த்தாள்.

நல்ல வேளையாக, அவள் அஞ்சியது போலப் பர்சில் அதிகப் பணம் இருக்கவில்லை!

பர்சைத் தவறவிட்ட பெண்மணி யார் என்று அறிய வசதியாக, அந்தப் பெண்மணியின் விசிட்டிங் கார்டு பையினுள் இருந்தது!

அதன்படி, அடையாறுப் பக்கமாக, அந்தம்மாவின் வீடு இருந்தது! பள்ளி தாண்டிப் பாதி தூரம், மறுபுறம் செல்ல வேண்டும்!

செல்லலாம்! அந்த வீட்டைத் தேடிச் சென்று, நேரிலேயே கொடுத்துவிட்டு, அதன் பிறகே வீடு திரும்பலாம்! இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் கழியக் கூடும்! என்றாலும் கூட அதைச் செய்ய, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது.

அந்த அம்மாள் கட்டியிருந்த சேலை, ஏறிய கார், கைப்பை, பையைப் பற்றியிருந்த கையில் அணிந்திருந்த கடிகாரம், மோதிரம் அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், அந்தப் பெண்மணி, சற்று அதிகப்படிப் பணம் படைத்தவள் என்பது, நன்றாகவே தெரிந்தது!

பணக்காரர்களைக் கண்டால், சந்தனா சத்தமின்றி ஒதுங்கி விடுவாள்! படிக்கிற காலத்திலேயே!

ஒரிரு முறை கவனித்து விட்டு, அவளுடைய தந்தையே, அவளிடம் கேட்டிருக்கிறார்!

"பாவம்மா, அந்தக் கோகிலா! ஆசையாக உன்னிடம் பேசவந்தால், காது கேளாத மாதிரி, ஒதுங்கி ஓடிவிட்டாயே! அவள் என்ன, சிங்கமா? புலியா?" என்றவருக்கு, "அவள் பணக்காரிப்பா!" என்று சந்தனா கூறியிருக்கிறாள்.

"அந்தக் கோகிலாவுடைய தலையாட்டிக் கூட்டத்தைக் கவனித்திருக்கிறீர்களாப்பா? அவள் எழுந்தால், எல்லோரும் எழ வேண்டும். அவள் பொட்டு வைக்காமல் வந்தால், இவர்கள் வைத்திருந்த பொட்டைக் கூட, எடுத்து எறிந்துவிட வேண்டும். மணியடித்தால் கூட, வகுப்பறைக்குள் அவள் தான் முதலில் செல்ல வேண்டும்! மற்ற எல்லோரும், அவளுக்கு அப்புறம்தான்! ஏன், ஓர் ஆசிரியருக்கு வணக்கம் சொல்வதானாலும் கூட, அவளுக்குப் பிறகுதான் மற்றவர்கள் சொல்லலாம்! இன்றைக்கு, அவளாக என்னைத் தேடி வந்தாலும், விரைவிலேயே, மற்றவர்களைப் போல, நானும் அவளுக்கு வாலை ஆட்ட வேண்டும் என்று கோகிலா எதிர்பார்ப்பாள் தானே? அதெல்லாம், என்னால் முடியாதுப்பா!" என்று அவள் உறுதியோடு கூறிய போது தந்தை அவளை மாற்றச் சற்றும் முயற்சிக்கவில்லை!

ஏனெனில், அவருக்கும் கிட்டத்தட்ட அதே குணம் தான்!

பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு, பணக்காரர்களை ஒதுக்க முடியாது என்றாலும், நெருப்பில் குளிர் காய்கிற மாதிரிதான், அவர் செல்வந்தர்களிடம் பழகுவார்!

வெளிப்படையாக விலகுவதும் கிடையாது, ஒட்டுவதும் இல்லை! ஆனால், எல்லோருக்கும் பிரியமானவர்!

எப்பேர்ப்பட்ட மனிதர்! அவரைப் போய்... என்று பெருமூச்சு விட்ட சந்தனா, சட்டெனத் தலையை உலுக்கி, மீண்டும் கையில் இருந்த பர்சைப் பார்த்தாள்.

விசிட்டிங் கார்டில் உள்ள டெலிபோன் எண்ணுக்கு போன் செய்து, பர்சை வாங்கிப் போக, யாரையேனும் அனுப்பச் சொல்லலாமா என்று யோசித்தபடி பர்சை மேலும் ஆராய்ந்த போது, விசிட்டிங் கார்டோடு, ஒரு சிறுவனின் படம், அந்தச் சிறுவனோடு கூடிய ஒரு குடும்பப் படம். சிறுவன், இளமைப் பருவத்துள் காலடி எடுத்து வைத்த போது எடுத்த படம், ஒரு கிரெடிட் கார்டு, கூடவே மருத்துவமனையின் அடையாள அட்டை ஒன்றும் இருப்பதைப் பார்த்தாள் அவள்!

சந்தனாவின் பள்ளிக்கு அடுத்த தெருவில் இருந்த மருத்துவமனைதான்! 'சுகம்' என்று பெயர் வெளியே இருந்து பார்க்க, நன்றாகத்தான் இருக்கும்.

அட்டையைத் திருப்பிப் பார்த்தால், அன்று மாலை ஆறு மணிக்கு, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரோடு சந்திப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது!

பர்சை, அதற்கு உரியவரிடம் சேர்ப்பிக்கும் வழி, இப்போது சந்தனாவுக்குப் புரிந்து போயிற்று!

பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியையிடம் 'ரிப்போர்ட்' செய்த போது, சந்தனாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார் அவர்!

தானே ஆசிரியர்கள் அறைக்கு அவளை அழைத்துச் சென்று, "உங்கள் அதிகப்படி வேலைப் பளுவைக் குறைப்பதற்காகத் தன் துயரத்தை ஒதுக்கி வைத்துவிட்டுச் சந்தனா சீக்கிரமாகவே வேலைக்கு திரும்பியிருக்கிறாள்! பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனைவி இறந்து ஒரே வாரத்தில், சிதம்பரம் சார் வேலைக்குத் திரும்பியது, எனக்கு இப்போது நினைவு வருகிறது! நாங்கள் எல்லோரும் ஒரே செட்! உன் அம்மா சாருவுக்காக அவர் உள்ளூர உருகியது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை வெளிக் காட்டாமல், சிதம்பரம் சார் அவ்வளவு வேலை செய்வார்! கடமை உணர்ச்சி மிகுந்த அந்தத் தந்தைக்கு ஏற்ற மகள்!" என்று பாராட்டவும், சந்தனாவுக்குச் சற்று வெட்கமாக இருந்தது!

அவள் ஒன்றும் வெறும் கடமை உணர்ச்சி மட்டுமே காரணமாய், அதற்காக மட்டுமாகப் பள்ளிக்கு வரவில்லையே! அந்த வகையில், இந்தப் புகழ்ச்சிக்கு அவள் ஏற்றவளும் அல்ல!

ஈடு செய்வதற்கு, முழுக் கவனத்துடன் வேலை செய்ய வேண்டும் என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டு, அதன்படியே வேலையையும் தொடங்கினாள் அவள்.

பள்ளி நேரம் முடிந்ததும், இந்தப் பத்து நாட்களாக அவளது வகுப்புகளில் நடந்த பாடம், அடுத்துச் செய்ய வேண்டியது பற்றி உடனொத்த ஆசிரியர்களோடு பேசி விட்டு, அவர்கள் கிளம்பிய பிறகே, சந்தனா பள்ளி அலுவல் அறைக்குச் சென்று, அங்கே ஒரு பெரிய கவரை வாங்கி வந்து, ரயில் நிலையத்தில் கண்டெடுத்த பர்சை அதனுள் வைத்து ஒட்டினாள்.

முகவரியைக் குறித்து வைத்துக் கொண்டு, பர்ஸ் உர்மையாளரின் விசிட்டிங் கார்டைப் பார்சலின் மீது ஒட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி, 'சுகம்' மருத்துவமனைக்குச் சென்றாள்.

அங்கே, அந்தப் பர்ஸ்காரப் பெண்மணி அறிமுகம் ஆனவராக இருந்தாள்!

"மாதாமாதம் பரிசோதனைக்காக வருகிறவர்கள் ஆயிற்றே! அத்தோடு, பெரிய டாக்டருக்கு வேண்டியவர்கள் வேறு! இன்றைக்கு ஆறு மணிக்கு அந்தம்மா வருவார்கள். வந்ததும் தன்னிடம் கூட்டி வரவேண்டும் என்று, பெரிய டாக்டர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்! அப்போது உங்கள் பார்சலைக் கட்டாயமாக, மேடத்திடம் கொடுத்து விடுகிறேன்!" என்று உறுதி கூறிய வரவேற்புப் பெண், சிறு தயக்கத்துடன், "நீங்கள், மிஸ்?..." என்று வினவினாள்.


ஒரு கணம் குழப்பத்துடன் நோக்கிய சந்தனாவுக்கு உடனே அந்தப் பெண்ணின் தயக்கம் புரிந்தது.

லேசாக முறுவலித்து, தன் கைப்பையைத் திறந்து, தன் ஆசிரியப் பதவிக்கான அடையாள அட்டையை எடுத்துக் காட்டினாள்.

"தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், மேடம்! அடையாளம் தெரியாமல், யாரிடமும், எதையும் வாங்கி வைக்கக் கூடாது என்று எங்களுக்குக் கட்டளை இருக்கிறது! வெடிகுண்டு மிரட்டல் கலாச்சாரம் பெருகிவிட்டதல்லவா? அதனால்தான்..." என்றபடி, சந்தனாவின் பெயரையும், வேலையையும் குறித்துக் கொண்டாள் அவள்.

"பயங்கரவாதம் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த எச்சரிக்கை அவசியம் தானே?" என்று, அவளோடு ஒட்டிப் பேசிவிட்டு, "மறக்காமல் கொடுத்து விடுங்கள். நான் அப்புறமாக அவர்களிடம் போன் பண்ணிப் பேசிக் கொள்கிறேன்!" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள் சந்தனா!

எப்படியும், பர்ஸ் கிடைத்துவிட்டதா என்று, அந்தப் பெண்மணியிடம் உறுதிப் படுத்திக் கொள்ளும் கடமை அவளுக்கு இருக்கிறதுதானே? என்னதான் மெதுவாகப் பார்சல் பண்ணி, மெதுவாக நடந்து வந்து கொடுத்த போதும், மணி ஐந்து கூட ஆக மறுத்தது!

இப்போதும், மறுபுறம் திரும்பி நடந்தால், பத்தே நிமிஷத்தில் வீடு வந்துவிடும்!

அவ்வளவு பக்கம் தான்!

ஆனால்...

இன்னொரு கிளை வழியே சென்று, தெரு மூலையில் இருந்த பூங்காவுக்குப் போய், உள்ளே இருந்த இரும்பு பெஞ்ச் ஒன்றில், அலுப்புடன் அமர்ந்தாள்!

நல்ல வேளையாகச் சிறுவர், சிறுமியர் சிலர் பூங்காவுக்கு வந்திருந்தனர்!

அவர்கள் விளையாடுவதைப் பார்த்திருப்பதில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்லபடியாகவே, கழிந்து விட, லேசாக இருள் பரவத் தொடங்கியதும், எழுந்து வீட்டை நோக்கிச் சந்தனா நடக்கத் தொடங்கினாள்.

இரவில், ஒரு வேளை பசித்தால்... என்று, தெருமூலைக் கடையில் சின்னதாகப் பாதி ரொட்டியை வாங்கிக் கொண்டு மெதுவாகவே நடந்து வந்தாள்.

படியேறிப் போய், யந்திரமாய் கதவைத் திறந்து, கதவருகே இருந்த ஸ்விட்சைக் கையால் தடவிப் போட்டவள், கண் முன்னே தென்பட்ட காட்சியில் விதிர்வித்து, மூளைமரத்துச் சிலையாகிப் போனாள்!

Advertisement