» இனி எல்லாமே நீயல்லவோ 5

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

சந்தனாவின் உள்ளே புழுவாய் அரித்துக் கொண்டிருந்த வலி மட்டும் இல்லை என்றால், வீட்டில் ஒரு வேறுபாட்டை, அவள் முதலிலேயே கண்டிருப்பாள்.

அவர்களது வீட்டின் முன் கதவுக்கு மூன்றடி முன்னதாகத் தொடங்கி, வழி முழுவதும், இரும்பு கிரில் போடப் பட்டிருந்தது. கதவும் கிரில் தான். அந்தக் கதவின் பூட்டு, சாவியால் தொட்டதுமே முன்பே திறந்து கொண்டதே!

பூட்டவில்லைபோல என்று அரைகுறையாக எண்ணினாளே தவிர, அவளோ, அண்ணனோ அப்படிக் கவனம் அற்றவர்கள் அல்ல என்பது, தோன்றவில்லையே!

யாரோ... யாரோ என்ன, திருடர்கள், அந்தப் பூட்டை உடைத்து, அடுத்து, கதவிலேயே பதித்திருந்த தாளையும் எப்படியோ திறந்து, உள்ளே வந்திருக்கிறார்கள்! வந்து, பூபாலனும் அவளுமாக ஒதுக்கிக் கட்டி வைத்திருந்த எல்லாவற்றையும் பிரித்து, கலைத்து வீசி எறிந்து வீட்டைக் களேபரமாக்கிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்!

எதையெல்லாம் திருடிப் போனார்களோ?

கண்டபடி குப்பையாய் வீசி இறைத்திருக்கும் இந்தக் குவியலில் என்ன காணாமல் போயிருக்கிறது என்று எப்படித் தெரியும்?

அதற்கு முன், அந்தத் திருடர்கள் போய் விட்டார்களா? அல்லது இங்கேயே ஒளிந்து...

நெஞ்சு படபடக்க, சந்தனாவின் பார்வை அங்குமிங்கும் பாய, அவள் அச்சத்துடன் பின்னடைகையில், பின்புறம் இருந்து அழைப்பு மணி ஓசை கேட்கவும், உடல் நடுங்கப் பற்றி அலறி விட்டாள்!

அவளது அலறல் சத்தம் கேட்டு, எதிர் வீட்டில் இருந்து, அந்த வீட்டு அம்மாளும், மகனும் ஓடி வந்தார்கள்!

"சந்தனா, என்னடியம்மா? என்ன? எதற்குக்... கத்..." என்றபடி ஓடி வந்த அம்மாள், வீடு கிடந்த நிலையைப் பார்த்ததும், "ஐயோ!" என்று தானும் அலறினாள்!

"என்னடி இது? நாங்கள் சுந்தரியையும் பிள்ளையையும் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு, கொஞ்சம் முன்னால் தான் வந்தோம்! அப்போ... அம்மாடியோவ்! நம்ம ஃப்ளாட்டிலே கூடத் திருட்டா? எத்தனை பேர் வந்தார்களோ? நல்லகாலம், நீ தனியாக இருந்து, அவர்களிடம் மாட்டியிருந்தால், கடவுளே! உன்னைக் கொன்று கூட..." என்று அவள் ஏதேதோ சொல்ல, "அப்பா, அப்பா, இங்கே சந்தனக்கா வீட்டில் திருட்டு!" என்று மகன் கத்த, "என்னது? என்னது? திருடன் உள்ளே இல்லையே, முதலில் அதைப் பார்! சுந்தரிம்மா, உள்ளே பூட்டிக்கொள்!" என்று உரக்கக் கூவியபடி, எதிர் வீட்டுக்காரரும் வந்து சேர்ந்தார்.

"என்னென்ன போச்சோ தெரியலியே!"

"இரண்டு பக்க வீட்டிலும் ஆள் இல்லாதது தெரிந்துதான், திருடன் வந்திருக்கிறான்! எத்தனை பேரோ தெரியலியே!"

"நல்ல வேளை! எதிரே நம் வீட்டை உடைக்கவில்லை! பூட்டு உடைந்திருந்ததா?"

"எதெது திருட்டுப் போயிருக்கிறது என்று பார்த்தாயா?"

"அச்சோ! எதையும் தொடக்கூடாது! போலீசுக்குச் சொல்லி விட்டாயா?... டேய், நீ போய் செகரட்டரியைக் கூட்டி வா!"

இப்படி ஆளாளுக்கு ஏதேதோ பேசினார்களே தவிர, சந்தனாவின் நடுக்கம் அதிகமாவதை யாருமே கவனிக்கவில்லை!

காற்றில் ஆடும் சருகைப்போல, அவளது உடம்பு தூக்கிப் போடுகையில், "நீ முதலில் உட்காரம்மா!" என்று சோஃபாவில் கிடந்த துணிகளை ஒதுக்கி, யாரோ அவளது தோளைப் பற்றி உட்கார வைத்தார்கள்!

அப்பாடி என்று கண் மூடித் தலை சாய்த்து அமர்ந்தாள் சந்தனா.

"ஐயையோ, எதையும் தொடக்..." என்று பதறிய எதிர் வீட்டு அம்மாளின் பேச்சில் குறுக்கிட்டு, "அவளுக்கு அதிர்ச்சி! உடம்பு நடுங்குவதைப் பாருங்கள்! உடனே, குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடுக்க வேண்டும்! நிறையச் சர்க்கரை போட்டு, டீ... இங்கே சமையல் அறை எங்கே இருக்கிறது?" என்று கேட்டபடி, சந்தனாவின் சில்லிட்டிருந்த கையைப் பற்றி, வேகமாகச் சூடு வரத் தேய்த்து விட்டாள், அவளை உட்கார வைத்த பெண்மணி.
"நான் கூடப் பார்த்திருக்கிறேன் அம்மா! இனிப்பாக டீ குடித்தால், அதிர்ச்சி குறைந்து, தெம்பு வரும் என்று, வகுப்பில் முதல் உதவியில் சொல்லிக் கொடுத்தார்கள்! ஆன்ட்டி இங்கே கிச்சன், அது!" என்று காட்டினான் சுதாகர், எதிர் வீட்டுப் பையன்!

"ஏய், பொறுடா! ஏதேனும் பெரிய பொருள் போயிருந்தால், ரேகையைக் கெடுத்து விட்டீர்கள் என்று போலீஸ் தகராறு பண்ணுவார்கள்! கனகம், நீ போய் நம் வீட்டில் டீ போட்டு எடுத்து வா!" என்று மனைவியை அனுப்பினார் எதிர் வீட்டுக்காரர். "அங்கே பேத்தியைக் கொஞ்ச உட்கார்ந்து விடாமல், சீக்கிரமாக வா! சுதா, நீயும் கூடப் போய், அம்மாவை விரட்டிச் சீக்கிரம் கொண்டு வரச் சொல்லு!" என்று மனைவியையும், பின்னோடு மகனையும் அனுப்பி வைத்தார்.

அதன் பிறகே, சந்தனாவின் அருகில் அமர்ந்து, அவளது கைகளைச் சூடு வரத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணியைச் சரிவரக் கவனித்து, "நீங்கள் யார் என்று தெரியவில்லையே! இந்த வீட்டில், இதற்கு முன்னால், உங்களைப் பார்த்ததாக..." என்று இழுத்தார் அவர்!

"பார்த்திருக்க மாட்டீர்கள்!" என்றாள் அந்த அம்மாள். "இப்போதுதான், முதல் தடவையாக வருகிறேன்! நன்றி சொல்ல வந்தால், பாவம், பலன் கருதாமல் எனக்கு உதவி செய்த இந்த நல்ல பெண்ணுக்கு இப்படியொரு பிரச்சினை!" என்றாள் வருத்தத்துடன்!

உட்கார்ந்ததிலும், தொடர்ந்து, அந்த அம்மாள் கைகளைத் தேய்த்து விட்டதிலுமாக, ஓரளவு சுரனை வந்திருக்கவே, சந்தனாவும், தலை திருப்பி, அந்தப் பெண்மணியைப் பார்த்தாள்.

என்ன உதவி?

யார் இந்த அம்மாள்?

சந்தனாவின் கண்களில் கேள்வியைக் காணவும், லேசாக முறுவலித்து, "நான் தானம்மா, நீ கண்டெடுத்துக் கொடுத்த பர்சின் சொந்தக்காரி! அதில் இருந்த பணம் ஒன்றுமில்லாவிட்டாலும், அந்தப் படங்கள், எனக்கு விலை மதிப்பற்றவை!... அதற்காக நன்றி செலுத்த வந்தேன்! என் பெயர் தான், கார்டில் பார்த்திருப்பாயே, மீனாட்சி!" என்றாள் பெரியவள்.

பேச்சின் நடுவில் மீனாட்சி அம்மாளின் முகத்தில் இருள் படிந்து விலகினாற் போல, ஒரு தோற்றம்! கூடவே, இன்னும் ஏதோ புரியாதது போன்ற சிறு உறுத்தல்!

எதையும் முனைந்து கேட்கத் தோன்றாமல், அப்படியே அமர்ந்திருந்தாள், சந்தனா.

சற்றுக் கவலையுடன் எதிர் வீட்டுக்காரர் எட்டிப் பார்க்கும் போதே, ஆவி பறக்கும் டீக்கப்புடன் எதிர் வீட்டுக் கனகம் வந்து சேர்ந்தாள்! பின்னோடு, ஒரு ட்ரேயில் இன்னும் சில கப்புகளுடன், சுதாகரன்.

சந்தனாவிடம் முதல் கப்பைக் கொடுத்துவிட்டு, மீனாட்சியைப் பார்த்து, "நீங்களும் குடியுங்கள்!" என்று, அவளிடமும் ஒரு கப்பை நீட்டினாள்.

"சந்தனாதான் முக்கியம்! ஆனால், எனக்கும் தேவை போலத்தான் தோன்றுகிறது! நன்றி!" என்று கப்பை வாங்கிக் குடித்தாள் மீனாட்சி.

குடித்தபடியே, சந்தனாவின் முகத்தைப் பார்த்து, "என்னம்மா, எப்படி உன் வீட்டைக் கண்டு பிடித்தேன் என்று குழப்பமாக இருக்கிறதா? பள்ளிக் கவரில்தானே பர்சைப் போட்டுப் பாக் பண்ணியிருந்தாய்! நேரே, உன் பள்ளிக்குப் போனேன். உன் பெயரைத்தான், மருத்துவமனையில் அந்தப் பெண் வாங்கி வைத்திருந்தாளே! பள்ளியில் உன் பெயரைச் சொன்னதுமே, வீட்டு முகவரியைத் தந்தார்கள்! வந்தால்... இப்போது, கொஞ்சம் பரவாயில்லையாம்மா? என்னென்ன போயிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறாயா? போலீசுக்குத் தெரியப்படுத்தும் போது கேட்பார்கள்..." என்றாள்.

இனிப்பான டீ உள்ளே போகவும், சந்தனாவுக்குப் பழைய தெம்பு, ஓரளவு திரும்பியது போல இருந்தது!

சற்று யோசித்து விட்டு, மீனாட்சியின் கேள்விக்குப் பதிலாக, "பெரிதாகத் திருட்டுப் போக, வீட்டில் ஒன்றும் கிடையாது!, வீட்டைக் காலி செய்வதால், தங்கம், வெள்ளி எல்லாம் பாங்க் லாக்கரில் வைத்து விட்டோம்! இன்றைக்குப் பணமும் வீட்டில் வைத்திருக்கவில்லை! ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில்தான், திருடன் இப்படி வீசி எறிந்திருக்கிறான் என்று தோன்றுகிறது!" என்றாள் சந்தனா மெதுவாக.
"அதுவும் நல்ல காலம் தான்..." என்று எதிர் வீட்டுக் கனகம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மகள் சுந்தரியின் குரல் அழைக்கவும், "இதோ வந்துவிட்டேன் கண்ணு" என்றவாறு, தன் வீட்டுக்குள் விரைந்தாள் அந்த அம்மாள்.

கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்த மீனாட்சி அம்மாள், நின்று யோசனையோடு பார்க்கையில், "ஒன்றும் போகவில்லை என்றால், போலீசுக்குப் போவானேன்? சுந்தரி வீட்டு மனிதர்கள் வந்து கொண்டு இருப்பதாகத் தகவல் வந்தது! அவர்கள் இங்கே இருக்கும் போது போலீஸ்காரர்கள் வருவதும், போவதுமாக... ஏற்கனவே, ஒருதரம் பட்டாயிற்று! இப்போது எதற்கு சந்தனா?" என்றார் எதிர் ஃப்ளாட்டுக்காரர்!

அவள் தனியே இருப்பதால், சும்மாச் சும்மா தன்னையல்லவா கூப்பிடுவார்கள் என்றும் அவர் தயங்குவது, சந்தனாவுக்குப் புரிந்தது!

சுந்தரியுடைய பிள்ளையைப் பார்ப்பதற்காக, அவருடைய சம்பந்தி வீட்டார் வந்து விட்டால், அவர்களைக் கவனிக்கவே, அவருக்கு நேரம் சரியாக இருக்கும்!

அவர்களை விட்டு, எனக்காக வந்து நில் என்று அழைப்பது தப்பு!

அத்தோடு, சம்பந்தி வீட்டார் முன்னிலையில், அடிக்கடி, போலீசார் வந்து போவது நன்றாக இராது என்றும் எண்ணுகிறார்!

"அத்தோடு நீயும், உடனே ஹாஸ்டலுக்குப் போகப் போகிறாய்! போலீஸ், அது இது என்றால், குடி வருகிறவர்களுக்கு வெறுத்துப் போகும்! ஒன்றும் போகவில்லை என்றால், எதற்கு வீணாக? பேசாமல் வீட்டை ஒதுக்கி விட்டுப் படுத்துத் தூங்கி, நன்றாக ஓய்வெடு, வரட்டுமா? சுதா, கப்புகளை எடுத்துக் கொண்டு வா!" என்று கிளம்பினார் அவர்.

சந்தனாவின் விழிகள் அச்சத்தால் அகன்றன.

படுத்துத் தூங்குவதா?

இந்த வீட்டிலா?

அண்ணன் சொன்ன அடுத்த தெருத் திருட்டு நினைவு வர, அவள் முகம் வெற்றுத் தாளாய் வெளுத்தது!

அங்கே, தனித்திருந்த பெண்ணைக் கொன்றே விட்டார்கள்!

பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அந்தத் திருடர்கள், மறுபடியும் வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

இப்போதே கூட, யாரேனும், எங்கேனும் ஒளிந்திருக்கிறார்களோ, என்னவோ, என்று எண்ணும்போதே, சந்தனாவின் நெஞ்சு படபடத்தது!

அச்சத்துடன் அவளது பார்வை சுழலுவதைக் கவனித்து மீண்டும் அருகமர்ந்து, அவளது கையைப் பற்றி வருடி, "இங்கே, உன்னோடு யாரும் இல்லையாம்மா?" என்று மீனாட்சி வினவினாள்.

"இ... இல்லை..." என்ற சின்னவளின் முகம் கசங்கியது. "அப்பா... அப்பா இறந்து, அதற்கு வந்துவிட்டு, அண்ணன் இன்று தான்..." என்று தொடங்கி கண்ணீரிடையே விவரம் சொன்னாள்.

"மூன்று நாட்கள் தானே, சமாளித்து விடலாம் என்று நினைத்தேன், ஆன்ட்டி! ஆனால் இப்போது... பயம்ம்...மாக..."

வாக்கியத்தை முடிக்க முடியவில்லை அவளால்!

ஆறுதலாக அவளைத் தட்டிக் கொடுத்து மீனாட்சி அம்மாள் ஒரு யோசனை சொன்னாள். "பாரம்மா, சின்னப் பெண் நீ! இங்கே, நீ தனியே இருப்பது, அதுவும் இன்றைய நிலையில், சற்றும் சரியல்ல! ஓர் இரண்டு நிமிஷம் உட்கார்ந்திரு! இதோ வந்து விடுகிறேன்!" என்று எழுந்து எதிர் ஃப்ளாட்டுக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் வந்த வீட்டுக்காரக் கனகத்திடம், "இன்று ஒரு நாள், சந்தனா உங்கள் வீட்டில் தங்க வசதிப்படுமா?" என்று வினவினாள்!

"இல்லையே!'" என்று கையைப் பிசைந்தாள் அந்தப் பெண்மணி. "சுந்தரி... என் மகள் வீட்டில், மாப்பிள்ளை, அவர் அம்மா, அப்பா, என்று குடும்பமே வருகிறார்கள்! இரண்டு நாள் இருந்து, புண்ணியாகவாசனம் எல்லாம் முடித்துக் கொண்டு போவார்கள்! அவர்கள் வசதியைப் பார்க்க வேண்டும்!..."

"நிச்சயமாய்!" என்றாள் மீனாட்சி அம்மாள்! "ஆனால், அந்தச் சின்னப் பெண்ணைத் தனியாக விட முடியாது! அதனால்... அவளை, என் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்..." என்றவள், எதிர் வீட்டம்மாவின் முகம் போன போக்கைக் கவனித்து, "காலம் இருக்கிற நிலையில், யாரையும் நம்பி விட முடியாதுதான்! உங்கள் பையனையோ, கணவரையோ விசாரித்துத் திருப்தியானதும், காரிலேயே திருப்பி அனுப்பி விடுகிறேன்! என் கார்டு தருகிறேன். 'சுகம்' மருத்துவமனையில், பெரிய அளவில் எனக்குப் பங்கு இருக்கிறது! அங்கே கூட விசாரிக்கலாம்! அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்று கூடத் தெரியாமல் இருக்கும் எத்தனையோ ஃப்ளாட்வாசிகள் போல இல்லாமல், சந்தனாவிடம் அக்கறையாக இருக்கிறீர்கள்! அதனால் தான் உங்களிடம் கேட்க வந்தேன்!"

மீனாட்சி மேலே பேசிய விதத்தில், கனகத்துக்கு ஒரு மாதிரி மனம் குளிர்ந்தது!

மருமகன் வீட்டார் வர இருக்கும் இந்த நேரத்தில் யாரை அனுப்புவது என்று அவள் யோசிக்கையில், "என்னது?" என்று சுதாகர் அருகே வந்து, அன்னையின் கையில் இருந்த கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, "அட, இங்கேதான் என் சினேகிதன் பரசு இருக்கிறான்! அவன் ஏழில்! நீங்கள் ஆறா? வாசலில் தொடங்கி, வரிசையாக அசோக மரம் இருக்குமே!" எனவும், கனகம் நிம்மதியோடு தலையாட்டினாள்.

"உங்களுக்கு வீண் தொல்லை. ஆனால், நன்றி ஆன்ட்டி! என்னாலும், இன்று, இங்கே தனியாக இருக்க முடியாதுதான்!" என்று எல்லையற்ற ஆறுதலோடு, சந்தனாவும் மீனாட்சியோடு கிளம்பி விட்டாள்.

Advertisement