» இனி எல்லாமே நீயல்லவோ 6

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

மீனாட்சி அம்மாளின் வீட்டுக்குக் கிளம்பிய போது, அன்று ஒரு நாளை மட்டும் தான், சந்தனா மனதில் எண்ணியிருந்தாள்.

அன்றைக்கு அந்த அவர்களது ஃப்ளாட்டில் தங்குவது, தன்னால் முடியாது என்பது மட்டும் தான் அவள் மனதில் இருந்தது.

அதற்குச் சரியாக, மீனாட்சி அம்மாளும் அவளது வீட்டுக்கு அழைக்கவும், வேறு எதையும் யோசியாமலே, அவள் கிளம்பி விட்டாள்.

எதிர் வீட்டுப் பெண்மணியும், அதற்குச் சாதகமாகப் பேசினாள் என்பது நிம்மதியைத் தந்தது.

இல்லையென்றால், நல்லது நினைக்கும் ஒருத்தியை எதிர்த்துக் கொண்டு வந்தோமே என்று, அவளுக்கு உறுத்தியிருக்கும்.

ஆனால், அவளது ஒப்புதல், சந்தனாவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரவே, புது இடத்துக்குப் போகிறோம் என்கிற உணர்வே இல்லாமல், காரிலேயே, அவளுக்குத் தூக்கம் வந்து விட்டது.

"அதிர்ச்சியின் பின் விளைவு!" என்று மீனாட்சி சொன்னது, லேசாகக் காதில் விழுந்தது. அப்புறமாக, அண்ணா நகரில் மீனாட்சி அம்மாளின் வீட்டு வாயிலில், அவள் எழுப்பியது தான் சந்தனாவுக்குத் தெரியும்.

அவ்வளவு ஆழ்ந்த தூக்கம்!

மீனாட்சி அம்மாளின் வற்புறுத்தலுக்காக இரண்டு தோசைகளை விழுங்கி விட்டுப் பழக்க தோஷத்தில் பல்லைத் துலக்கி, அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் கிடந்த படுக்கையில் விழுந்தவள், மீண்டும் சில மணி நேரம், உலகை மறந்து உறங்கினாள்.

அதன் பிறகு... அந்தக் கனவு!

ஏதோ ஒரு பயணம்!

சந்தனாவும், அவளுடைய தந்தையும் சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்! வண்ண வண்ணப் பூக்களுடன் கூடிய செடிக் கொடிகளும், மரங்களும் நிறைந்த மலையில், அவற்றை ரசித்தபடி, ஆனந்தமாக ஏறிப் போகிறார்கள்!

திடுமென பேய்மழையுடன் சூறைக்காற்று எங்கிருந்தோ வீசக் கண் மண் தெரியாமல் ஓடுகிறார்கள்! ஓடிக் கொண்டே பார்த்தால், அவள் மட்டுமாய்த் தனியே ஓடிக் கொண்டு இருக்கிறாள்! அவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தெரிகிறது!

அந்த இருட்டு, மழையில் பதறிக் கொண்டு, தந்தையைத் தேடுகிறாள்! திடுமென அவரது திகைத்த முகம் மட்டும் தூரத்தில் தெரிகிறது! ரத்தக் காயங்களுடன்!

ஓடி அவரை அடைகிற வேகத்தில் கீழே விழுந்து, உடல் நடுங்க எழுந்து அமர்ந்த சந்தனாவுக்குச் சற்று நேரம், சுற்றுச் சூழல் ஒன்றுமே புரியாத நிலை! கண்களைக் கசக்கி, கைகால்களை உதறி, தலையை உலுக்கி, ஒருவாறு தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்ட பிறகே, கனவு வேகத்தில் படுக்கையில் இருந்து, உருண்டு கீழே விழுந்திருப்பது அவளுக்குப் புரிந்தது!

இங்கே எப்படி வந்திருக்க முடியும் என்பதும்!

இது, அந்த நல்ல பெண்மணி மீனாட்சி அம்மாளின் வீடு!

திருட்டு நடந்த வீட்டில், சந்தனா தனித்திருக்க வேண்டாம் என்று, தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

அந்தப் பர்சைத் திருப்பிக் கொடுத்த ஒரே காரணத்தால்! நல்லது செய்தால், நல்லதே நடக்கும் என்று, தந்தை சொல்வது சரிதான்!

ஆனால், அந்தக் கனவு!

வாழ்நாள் முழுவதும், அது அவளைத் தொடருமா?

திருப்பித் திருப்பி, அதே கனவு என்று இல்லை!

முந்தியது, கடலில் ஒரு படகுப் பயணம்!

புயலில், ஒரு பனிப் பாறையில் படகு மோதிக் கவிழ்கிறது!
ஆனாலும், அதிலும், இதே போலத் தந்தையைத் தேடி அலைகிறாள்! கடைசியில் ரத்தம் வழியத் தந்தையின் திகைத்த முகம்.

அண்ணன் கூட இருந்தபோது, தந்தையின் பகுதியை மட்டும் விட்டுவிட்டு, அவனிடம் தன் கனவை விவரித்தாள்.

வேடிக்கையில் பிரியம் உள்ள அவன், "பனிப் பாறையா? டைட்டானிக் எத்தனை தடவை பார்த்தாய், அருமைத் தங்கையே? அதில் உள்ள காட்சி கனவாகவே வரத் தொடங்கி விட்டதே!" என்று சிரித்தான்.

கூடச் சேர்ந்து முறுவலித்துவிட்டு, சந்தனா சும்மா இருந்து விட்டாள்.

இது, தந்தையின் மறைவுடன் தொடர்பு உள்ள ஒன்று என்பது, அவளுக்கு நிச்சயம்! அதைச் சொல்லி, அவனையும் புண்படுத்துவானேன்?

ஆனால், இன்றையக் கனவில், சந்தனா சற்று அதிகமாகவே மிரண்டு போனாள். வாழ்க்கை முழுவதும், இந்தப் பயங்கரமான கனவுகள், அவளை வருத்தப் போகின்றனவா?

மெல்ல எழுந்து, படுக்கையில் அமரப் போனவள் தயங்கினாள்.

இத்தோடு, அப்படியே படுத்துத் தூங்கி, மறுபடியும் அந்தக் கனவு வந்து விட்டால்?

கனவில் தந்தையைப் பார்க்கையில், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது! அதுவும், அப்பா இறந்து விட்டதாக நினைத்தோமே இதோ இருக்கிறாரே என்று இரட்டிப்பு சந்தோஷம்!

ஆனால், அவரைக் காணாமல், அதுவும் பயங்கரமான சூழ்நிலையில் இங்கும் அங்குமாய், அவரைப் பதற்றத்துடன் தேடும் போது... இன்னொரு தரம் அதைத் தாங்க முடியாது!

இன்னமும், குளிர் காய்ச்சல் வந்தது போல, உள்ளே நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.

கொஞ்சம் நடந்து உடலில் சூடேறினால், இந்தப் படபடப்பும், பதற்றமும் குறையக் கூடும்! ஆனால், அடுத்தவர் வீட்டில், அதுவும் முதல் முதலாக வந்திருக்கையில், இரவில் தனியே அங்குமிங்கும் அலைவதும் தப்பு! யாரும் பார்த்தால் தப்பாக எண்ணத் தோன்றும்!

அதுவும், முதல் முதலாக அன்றுதான் சந்தித்த ஒருத்தியை, அந்த அம்மா நம்பி வீட்டுக்குக் கூட்டி வந்திருப்பதே அதிசயம் என்கையில்...

யோசித்துவிட்டு, விளக்கைப் போட்டவள், படுக்கையில் தலைப்புறமாக ஒரு சிறு முக்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தோட்டத்துப் புறமாக இருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி நின்றாள்.

தோட்டத்திலிருந்து வந்த மிதமான குளிர் காற்று, முகத்தில் மோதிச் செல்கையில், உடலும் மனமும், மெல்ல இறுக்கம் தளர்வதை உணர்ந்தாள்.

இந்தப் பெரிய தோட்டத்தில் காலார நடந்தால், இன்னமும் நன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணியபடியே பார்த்தவளுக்கு, உள்ளூர ஒரு திகைப்பு உண்டாயிற்று!

அவள் இருந்த அறைக்கு, ஓர் அறை தள்ளி, இன்னோர் அறையில் இருந்தும், ஜன்னல் வழியே, விளக்கொளி, தோட்டத்தில் விழுந்து கொண்டிருந்தது!

ஒரு பெண் தலையின் நிழலும் கூட!

அது மீனாட்சி அம்மாளாக இருக்கும் என்று சந்தனாவால், ஊகிக்க முடிந்தது! ஆனால் இரவில் தூக்கமின்றித் தவிக்கும் அளவுக்கு அந்த அம்மாவுக்கு என்ன துன்பம்? மருத்துவமனைக்குக் கூடப் போயிருந்தாரே?

எந்தத் துன்பமும் இருக்கக் கூடாது கடவுளே என்று வேண்டிக் கொண்டு, கூடவே, வேறு கனவு எதுவும் வரக் கூடாது என்று தனக்காகவும் கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு, சந்தனா, விளக்கை அணைத்து விட்டுப் பிடிவாதமாகப் படுக்கப் போனாள்.

இன்னும் ஓரிரு மணி நேரமாவது, கட்டாயமாகத் தூங்கியாக வேண்டும்!
ஒழுங்கான உறக்கம் இல்லாவிட்டால், பள்ளியில் சரியானபடி பாடம் எடுக்க முடியாது! அத்தோடு, அங்கே வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை வேறு இருக்கிறது!

சற்று அதிகாலையிலேயே எழுந்து, ஒட்டியிருந்த குளியலறையில் குளித்து, மீனாட்சி அம்மாளின் உந்துதலின் பேரில், முந்திய நாள் இரவு எடுத்து வந்திருந்த சல்வாரில் அவள் வெளியே வந்த போது, பணியாள் போலத் தோன்றிய ஒரு பெண் அவளை அழைத்துப் போக வந்திருந்தாள்.

"அம்மா கூட்டி வரச் சொன்னாங்க."

சாப்பாட்டு அறையில், வீட்டு எஜமானி காத்திருந்தாள்.

இரவு சரியாக தூங்காததின் அடையாளமாக அவளது கண்களைச் சுற்றிலும் கருவளையத்தைக் கண்ட சந்தனாவுக்கு, அதன் காரணம் தானோ என்று ஒரு சந்தேகம் திடுமெனத் தோன்றி வாட்டிடலாயிற்று!

என்னவோ இரக்க குணத்தினால், அவளை அழைத்து வந்து விட்ட போதும், அவளைப் பற்றி மீனாட்சி அம்மாளுக்கு என்ன தெரியும்? இந்தப் பெண் எப்படிப் பட்டவளோ, என்னவோ என்று, அதன் காரணமாக விழித்திருந்தாள் என்றால்?

ஆனால், சந்தனாவைக் கண்டதும் மீனாட்சி முகம் மலர்ந்த விதம், அந்தக் குன்றலைப் போக்கி, அவளுக்கு நிம்மதி அளித்தது.

"வாம்மா! வா, உட்கார். காலையில் உனக்கு என்ன சாப்பிட்டுப் பழக்கம்? காபியா? டீயா? பலகாரத்தோடா? அப்புறமா அல்லது..." என்று கேட்டுக் கொண்டே போனவளைப் புன்னகையோடு, இடைமறித்து, "எப்படி என்றாலும் ஒன்றுதான் ஆன்ட்டி! எப்படியும் பள்ளிக்குக் கிளம்புமுன், ஒரு காபி பழக்கம்! அவ்வளவுதான்! இப்போது வெறும் காபி மட்டும் தந்தீர்களானால், சீக்கிரமாக வீட்டுக்குப் போய், பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு, பள்ளிக்குப் போக நேரம் சரியாக இருக்கும்..." என்றவள், மீனாட்சி அம்மாளின் கண்கள் பளிச்சிடவும், சிறு திகைப்புடன் அவளை நோக்கினாள்.

"நீ அவசரப்படுவது சரிதான் என்று நினைத்தேன்! பள்ளிக்குத் தாமதமாகப் போனால் பெஞ்சில் ஏற்றிவிட மாட்டார்களா, என்ன?" என்று பெரியவள் முறுவலிக்கவும், சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிட்டது!

அவள் ஆசிரியை! அவளைப் போய்ப் பெஞ்சில்...

சிரித்துவிட்டு, "அப்பா அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆன்ட்டி! கற்றுக் கொடுப்பவர்களே தாமதமாகப் போனால், பிள்ளைக்கு நேரம் தவறாமை எப்படி வரும் என்று இதில் ரொம்பக் கண்டிப்பு" என்ற பெண்ணின் முகம், தந்தையின் நினைவில், லேசாக வாடியது!

கவனியாதது போல, "முதலில் சாப்பிடு நேற்றுக்கூட இரவில் சரியாகச் சாப்பிடவில்லை! இப்போதும் பட்டினியாகப் போனால், பிள்ளைகளுக்குச் சரியாகக் கத்த எப்படி முடியும்? கார், அந்தப் பக்கம் போக வேண்டியிருக்கிறது! அப்படியே, உன்னைக் கொண்டு விடச் சொல்லுகிறேன். இப்போது நாம் சாப்பிடுவோம்!" என்ற மீனாட்சி, உட்புறமாகப் பார்த்து ஏதோ சைகை செய்யவும், உள்ளிருந்து வந்த பணிப்பெண், தட்டு வைத்துப் பரிமாறலானாள்.

இதற்கு மேல் மறுப்பது நன்றாயிராது. கூடவே, காரைக் கூடத் தனக்காக மட்டுமே தான் அனுப்புகிறாள் இந்த அன்பான பெண்மணி என்றும் தோன்றிய போதும், இன்னொரு காரணம் சொல்லும் போது, அதையும் தான் எப்படி மறுப்பது?

இரவு தூங்காதது பற்றிக் கேட்கலாமா என்று சந்தனா யோசிக்கும் போதே, "இரவில் நீ சரியாகத் தூங்கவில்லையேம்மா! புது இடம் என்பதாலா? அல்லது... அப்பா... அங்கே வீடு பற்றியா?" என்று மீனாட்சி வினவினாள்.

"எ... எல்லாம் சேர்ந்து என்று நினைக்கிறேன்..." என்ற பதிலுடன், ஒரு கணம் மௌனமாக இருந்தவள், உடனேயே, "நீங்களும் தூங்கவில்லையே, ஆன்ட்டி?... உடம்புக்கு ஒன்றுமில்லையே? டாக்டரிடம் வேறு போய் வந்திருக்கிறீர்கள்?" என்று மனதில் சிறு உறுத்தலோடு வினவினாள்.

உச்சுக் கொட்டிவிட்டு, "கொஞ்ச நாளாக சிறு படபடப்பு! அது, பெரிதாக ஒன்றும் இல்லை!" என்றாள் விட்டேற்றியாக.

ஆரோக்கியம் பற்றி மீனாட்சி காட்டிய அலட்சியத்தோடு, வீட்டு மனிதர்களாக அதுவரை யாரும் கண்ணில் படாததும் மேலும் மனதை உறுத்த, "வீட்டில் வேறு யார்... நீங்கள் த... தனியாகவா இருக்கிறீர்கள், ஆன்ட்டி?" என்று கவலையுடன் வினவினாள் சின்னவள்.

"தலைவிதி!" என்றாள் மீனாட்சி கசந்த குரலில், சுருக்கமாக.

"ஆன்ட்டி..."

சந்தனாவை நிமிர்ந்து பார்த்த மீனாட்சியின் முகத்தில் சிந்தனை தெரிந்தது!

"வாம்மா... ஹாலில் உட்கார்ந்து காபியைக் குடிப்போம்! அப்படியே, நானும் உன்னோடு கூட வருகிறேன்.. உனக்குத் துணையாக இல்லை! மருத்துவமனையில் சில கணக்குகள் பார்க்க வேண்டும்! அத்தோடு... ஒரு யோசனை! வாயேன் யோசிப்போம்!"

காரில் செல்லும் போதுதான், மீனாட்சி தன் யோசனையைச் சொன்னாள்.

சந்தனா தன்னந் தனியே அந்த வீட்டில் மூன்று தினங்களைக் கழிப்பதை விட, மீனாட்சியின் வீட்டிலேயே இருந்து விட்டால் என்ன?

ஒன்றாம் தேதி குடிவரும் ஆட்களுக்காக வீட்டை ஒதுக்கிக் கொடுப்பது ஒன்றுதானே, அந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலை? சந்தனாவின் துணிமணிகளை எடுக்கச் செல்லும் போது, இரண்டு ஆட்களைக் கூட்டிப் போய், அதைச் செய்து விடலாம்!

சந்தனா அந்த வீட்டில் தனியே இருக்க வேண்டாம் என்பதற்காகச் சொல்லுகிறாள்! ஆனால், ஒரு பிரியமாக இருக்கிறாள் என்பதற்காக அவள் தலையிலேயே சுமையாய் ஏறி உட்காரலாமா? அது தப்பு அல்லவா?

"ஆன்ட்டி, வேண்டாம். என்னைத் தூண்டாதீர்கள்! என் பொறுப்பை நான் தான் செய்ய வேண்டும்! உங்களிடம் தள்ள முடியாது! அத்தோடு, இந்த ஒரு நாள் நீங்கள் செய்ததே பெரிய உதவி! இதற்கு மேல், நான் உங்களைத் தொல்லை செய்வது தப்பு!" என்றாள் சந்தனா.

"தொல்லையே அல்லம்மா!" என்றாள் பெரியவள், "வீட்டில், எந்த வேலையையும் நான் செய்வது இல்லை! அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வீட்டில் நான் தனியாக அல்லவா இருக்கிறேன்! நீயே கவலையாகக் கேட்டாயே, அப்படிக் கேட்க நாதியற்ற தனிமை! சந்தனா எனக்கு என்னவோ, உன்னைப் பார்த்ததுமே, முற்பிறவிப் பந்தம் போல மிகவும் பிடித்துப் போயிற்று! நீ, இங்கே சில நாட்கள் இருப்பாய் என்றால், சில நாட்கள் என்ன? எப்போதுமே இருந்தாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. எனவே உனக்காக என்று எண்ணாமல், எனக்காக, என் மகிழ்ச்சிக்காக, இங்கே வாயேன்!" என்றாள் வற்புறுத்தலாக!

"ஆன்ட்டி, நீங்கள் சொல்வதைக் கேட்டால், என்னவோ, உங்களுக்காக நான் தான் தியாகம் பண்ணுகிற மாதிரி, எனக்கே தோன்றிவிடும் போல இருக்கிறது! ஆனால், அது பொய் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்! அத்தோடு அண்ணா நகரில் இருந்து, எங்கள் பள்ளிக்கு வருவதும் ரொம்பக் கஷ்டம், ஆன்ட்டி! நேர் பஸ்சில் கூட, ஒரு மணி நேரத்துக்கு அதிகம் ஆகும்."

"பஸ்சில் போனால்தானே? தினமும், 'சுக'த்திலிருந்து எனக்குக் கணக்கு வழக்குகளும், அன்றாட நிலவரங்களும் வரும். அவைகளில் கையெழுத்திட்டுக் காலையில் அனுப்புவேன்! அதே காரில், நீ பள்ளிக்குப் போய் வாயேன்! முதலில், இன்றோடு சேர்ந்து இந்த மூன்று நாட்கள் நம் வீட்டிலேயே இரு! அதன் பிறகு மற்றதைப் பார்ப்போம்!"

மீனாட்சி அம்மாள் தனிமையின் கொடுமையில் மிகவும் நொந்து போயிருக்கிறாள் என்பது, சந்தனாவுக்குப் புரிந்தது!

பார்க்கப் போனால், சந்தனாவுக்கும், இப்போது கிட்டத்தட்ட அதே நிலைதான்! அக்கறை காட்ட யாருமற்ற தனிமை!

ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்! மீனாட்சி அம்மா, ஓர் இக்கட்டில் உதவியவளும் கூட! ஒரு மூன்று நாட்கள், அவளோடு கூட இருப்பதில் என்ன தப்பு?

இப்படித்தான் சந்தனா, மீனாட்சி அம்மாவின் வீட்டுக்கு வந்தது! மூன்று நாட்களுக்காக மட்டுமே என்று!

ஆனால், அந்த மூன்று நாட்களில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், பெண்கள் விடுதியைப் பற்றிய நினைவையே, சந்தனாவின் மனதில் இருந்து அகற்றி விட்டது!