» இனி எல்லாமே நீயல்லவோ 7

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

மும்பையில் இருந்து, பூபாலன் பள்ளி எண்ணுக்கு போன் செய்த போது, மீனாட்சி அம்மாவைப் பற்றிய எதையுமே, சந்தனா அவனிடம் சொல்லவில்லை!

திருட்டு, எதிர் வீட்டாரின் உதவ முடியாத நிலை பற்றியெல்லாம் சொன்னால், மற்றதை மறந்து, உடனேயே சென்னைக்கு வந்து நிற்பான்! அவனது எதிர்காலம், பாழாகிப் போகும்!

எனவே, எந்தவிதச் சந்தேகமும் தோன்றாதபடிக்கு, முன்பு திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதுபோலத் தோன்றுமாறு, பேசிவிட்டு போனை வைத்தாள்.

அன்று பள்ளி முடிகிற நேரத்துக்கு, மீனாட்சியும் வந்து விட, இருவருமாகச் சந்தனாவின் வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டைப் பார்த்த பிறகு, தன் வீட்டுக்கு வருமாறு மீனாட்சி அவளை வற்புறுத்தத் தேவையே இருக்கவில்லை!

இங்கே, தனியே இருக்க முடியாது என்பது, சந்தனாவுக்கு, சர்வ நிச்சயமாகத் தெரிந்து போயிற்று!

அதே போல, மீனாட்சி அம்மாவைப் பிரிந்து, ஏதோ ஒரு புதிய இடத்தில் வசிப்பது முடியாது என்றும், அடுத்த மூன்று நாட்களில், அவளுக்குத் தெரிந்து போயிற்று!

அந்த அளவுக்கு, மீனாட்சி பிரியமாக இருந்தாள்!

பிரியம் என்றால், அன்பைக் கொட்டி அமுக்குவது போல அல்ல! சும்மா கேலியும், சிரிப்புமாகவே!

விருந்தோம்பல் என்கிற பெயரில், அளவு மீறித் திணிப்பது இல்லை!

அவள் நினைத்ததற்கு ஓர் இட்லியோ, ஒரு ஸ்லைஸ் ரொட்டியோ, சந்தனா குறைவாக உண்டாள் என்றால், "எனக்கும் ஒரு டிக்கெட் இலவசமாகத் தருவாய் அல்லவா?" என்று கேட்பாள்!

முதலில் புரியாமல், "எதற்கு டிக்கெட்?" என்று சந்தனா கேட்டதுண்டு!

பதிலாக, "அதுதானம்மா, நீ கலந்து கொள்கிற அழகிப் போட்டிக்கு!" என்பாள் சாதாரணமாக.

"நானா? அழகிப் போட்டியா?" என்று சந்தனா குழம்புகையில், "ஆமாம்மா! அதற்குத்தானே, ஒல்லியாக ஒடிந்து விழுகிற மாதிரி இருக்க வேண்டும்? அப்படி மெலிவதற்காகத்தானே, நீ இப்படிச் சாப்பாட்டைக் குறைக்கிறாய்?" என்று அப்பாவி பாவனையில் மீனாட்சி கண்ணை உருட்ட, சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிடும்!

முதல் தடவை இப்படிக் குழம்பிய போதும், அடுத்த முறை "தரலாம்! ஆனால் அப்புறம் உங்களுக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை வந்துவிட்டால், எனக்குப் பரிசு எப்படிக் கிடைக்கும்? அதனால், தரவே மாட்டேன்!" என்று சந்தனா பதில் கொடுக்க, மீனாட்சி விழுந்து விழுந்து சிரிப்பாள்!

நேரமாகிவிட்டது என்று வேகமாகச் சென்றால், "பார்த்துப் போம்மா! எங்கள் அண்ணா நகரில், நிறையப் புதையல்கள் உண்டு. அங்கங்கே விழுந்து, அதையெல்லாம் நீ தட்டிக் கொண்டு போய்விட்டால் எப்படி?" என்பாள்.

"பரவாயில்லை! உங்களுக்கு மட்டும், புதையலில் கொஞ்சூண்டு பங்கு தருகிறேன்!" என்று சந்தனாவும் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போவாள்!

இந்தக் கேலி, சிரிப்புகளூடே, மீனாட்சியை உள்ளூர ஒரு சோகம் அரிப்பதைச் சந்தனா கண்டு பிடித்திருந்தாள்.

யாரும் கவனியாத போது, எங்கேயோ நிலைக்கும் பார்வை, ஒரு சின்ன வார்த்தையில் கண்ணில் தோன்றும் நிராசை...

காரணம் என்னவாக இருக்கும் என்று தெரிந்தால், இந்த வருத்தத்தை குறைக்க முயற்சி செய்யலாமே என்று தோன்றினாலும், அது பற்றிக் கேட்க, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது! அதிகப்படி உரிமை எடுத்துக் கொண்டு மூக்கை நுழைப்பது போலத் தோன்றி விடக்கூடாதே என்ற பயம்!

அந்தரங்கங்களை, அவரவராகத்தான் சொல்ல வேண்டும்! தூண்டித் துருவி அதிகப்படுத்தி விடக் கூடாது என்கிற இன்னோர் அச்சமும் அவளுக்கு இருந்தது!

எனவே, எதையும் பாராதது போலக் காட்டிக் கொண்டு, பெரியவளைச் சிரிக்க வைப்பதில் முனைவாள் சின்னவள்!
மீனாட்சியும் முட்டாள் அல்ல! சந்தனாவின் முயற்சியைப் புரிந்து கொண்டு, தானும் முயன்று எதையாவது சொல்லி நகைக்க முயற்சிப்பாள். சற்று நேரத்தில் அது மெய்யான சிரிப்பாகவே மாறிவிடும்!

உடல்நிலையைப் பற்றி அதிக அக்கறையற்று மீனாட்சி அம்மாள் இருப்பதைக் கவனித்து, அவளது மாத்திரை, மருந்துகளைப் பற்றிக் காலை, இரவு வேளைகளில் நினைவூட்டுவதையும், சந்தனா வழக்கமாக்கிக் கொண்டாள்.

அந்த மூன்று தினங்களிலேயே, இப்படி ஒருவருக்கொருவர் காட்டிய அக்கறையும், கரிசனமும், இருவரையும் பிணைத்து விட, தன் வீட்டிலேயே தங்கி விடும்படி மீனாட்சி மீண்டும் கேட்ட போது, சில நிபந்தனைகளோடு, சந்தனாவும் விருப்பமாகவே சம்மதித்தாள்.

முதலாவதாகத் தன் முடிவின் காரணங்களை, அண்ணன் பூபாலனிடம் தெரிவித்தாள்.

தங்கையின் மன அமைதி, மகிழ்ச்சி, பதுகாப்பு முதலியவற்றை முக்கியமாகக் கருதிய பூபாலனும், தன் நண்பர்கள் மூலம் மீனாட்சி அம்மா பற்றி விசாரித்து விட்டு, அவளது முடிவை நல்லவிதமாகவே ஏற்றான்.

அடுத்து, தன் செலவுக்கான பணத்தை மீனாட்சி வாங்கிக் கொண்டே ஆகவேண்டும் என்பதில் சந்தனா பிடிவாதமாக இருந்தாள்.

"என்னம்மா, வீட்டில் பொதுவாகச் செய்வதுதானே? உன் ஒருத்திக்காக, அதிகமாக என்ன ஆகிவிடப் போகிறது?" என்று பெரியவள் ஆட்சேபித்த போது, "ஒட்டுண்ணியாக உறிஞ்சி வாழ என்னால் முடியாது ஆன்ட்டி! அங்கே, அண்ணன் பார்த்து வைத்திருக்கும் விடுதியில் உள்ள கட்டணம் நீங்களும் வாங்கிக் கொள்ள வேண்டும்!" என்றாள் உறுதியான குரலில்.

"இல்லாவிட்டால், நான் இங்கே இருக்க முடியாது, ஆன்ட்டி!" என்றாள் மென்மையாகவும்.

"சரிம்மா!" என்று விட்டுக் கொடுத்த போதும், "ஆனால் அந்த மாதிரி விடுதி எல்லாம் லாப நோக்குடன் நடத்தப்படுகின்றவை! உன்னிடம், நான் சம்பாதிக்க வேண்டுமா? குறைத்துக் கொடு!" என்றாள் மீனாட்சி.

சந்தனாவும் இறங்கி வந்து, விடுதிச் செலவில் எழுபத்தைந்து சதவீதம் கொடுப்பதாக முடித்தார்கள்!

அதே போல, அவளுக்காக காரை அனுப்புவதையும், சந்தனா ஒப்புக்கொள்ளவில்லை.

ஏனெனில், மீனாட்சியின் பார்வைக்கான காகிதங்கள், காரில் அனுப்பப்படுவது இல்லை என்று அதற்குள் அவள் கண்டுபிடித்திருந்தாள். ரகசியமான குறிப்புகள் கூரியர் மூலமும் மற்றவை, அந்தப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பணிகுச் சென்று வரும் ஒருவரிடமும் அனுப்பப்பட்டன. திருப்பி அனுப்புவதும், அப்படித்தான்.

எனவே, பள்ளிக்குச் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் வேன் ஒன்றில் ஏற்பாடு செய்து கொண்டாள்.

தடுக்க மாட்டாமல், "ஆனாலும், உனக்குக் கொஞ்சம் அதிகப்படியான சுதந்திர புத்திதான்! உன் அப்பா உன்னைப் பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டார்!" என்று மீனாட்சி குறைப்பட்ட போது, "இல்லாவிட்டால், இந்தக் காலத்தில் வாழவே முடியாது ஆன்ட்டி! நசுக்கி விடுவார்கள்! தைரியம், புருஷ லட்சணம் மட்டுமல்ல, இப்போது பெண்கள் லட்சணமும் கூடத்தான்!" என்று சந்தனா சிரிக்க, மற்றவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்!

இரு பெண்களுக்கும், வயது வேற்றுமையை மீறிப் பல விஷயங்களில் மனம் ஒத்துப் போயிற்று!

பொது விஷயங்களில், உணவுச் சுவையில்... இலகுவாகப் பேசியபடி காலாற நடப்பதில்கூட!

'பெஞ்சில் ஏற்றுவது' என்று, மீனாட்சி கூறிய அப்போதிலிருந்தே, அவளுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்ற ஊகம், சந்தனாவுக்கு இருந்தது! அவளுடைய தந்தையும், மகளுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார்!

எனவே, வீட்டில் அடிக்கடி சிரிப்புச் சத்தம் கேட்கலாயிற்று!
ஒரு நாள் பள்ளி வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தைத் திருத்திக் கொண்டிருந்த சந்தனா, திடுமென வாய்விட்டுச் சிரித்தாள்!

கேள்வியாக நோக்கிய மீனாட்சியிடம், "ஒன்றுமில்லை, ஆன்ட்டி! குறிக்கோளை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று கேள்வி. இவன், முதலில் நாம் தாயாராக வேண்டும் என்று எழுதியிருக்கிறான்," என்று விளக்கவும் "தயார், தாயாராகிவிட்டதா?" என்று மூத்தவளும் சேர்ந்து நகைத்தாள்.

அதே போலச் சந்திரனில் பேசினால் கேட்காது. ஏன் என்று கேட்டால், பேசுவதற்கு அங்கே மனிதர்கள் இல்லாததுதான் காரணம் என்று பதில் சொன்ன புத்திசாலியைப் பற்றி, ஒருநாள் சந்தனா மீனாட்சியிடம் விவரித்தாள்.

"ஒலி பயணம் செய்யத் தேவையான காற்று இல்லாததால் தான் என்று சொல்லிக் கொடுத்தாலும், ஒத்துக் கொள்ளாமல் எப்படியும் பேசுவதற்கு மனிதர்கள் இருந்தால் தானே, அவர்கள் பேசுவது கேட்கும் என்று அதிலேயே நிற்கிறாள். ஆன்ட்டி! சொல்லிச் சொல்லிப் பார்த்து, அலுத்துப் போய், காற்று பற்றி எழுதினால், மதிப்பெண் கிடைக்கும் மற்றது எழுதினால் முட்டை கிடைக்கும் என்ற பிறகுதான், அவள் ஓரளவு வழிக்கு வந்தாள், ஆன்ட்டி! இத்தனைக்கும், கண்ணாடிக் கதவுக்கு அந்தப் பக்கம் நின்று, பேசிக் கூடக் காட்டிவிட்டேன். அப்படியும் சந்திரனில், கண்ணாடிக் கதவு கிடையாது மிஸ், என்று எனக்குக் கற்றுத் தருகிறாள், அந்த புத்திசாலி!" என்றாள் சந்தனா, சிரிப்புடனேயே.

இதுபோல, மீனாட்சியும் சொல்லுவாள்!

அவளுடைய தோழி ஒருத்தியைப் பெண் பார்க்க வந்தார்களாம்! "அப்போதெல்லாம், ரேடியோதான் சந்தனா. தோழி வீட்டில் புதிதாக ரேடியோ வாங்கியிருந்தார்கள்! சத்தமாக வைத்திருந்தார்கள்! விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சி! அப்போதே பழைய பாடல் ஒன்று, ரொம்பப் பிரிபலமானது! 'வாட்டசாட்டமான காட்டுப் பயல் வந்தானம்மா, இந்த வீட்டில் நுழைந்தானம்மா' என்று ரேடியோ பாடுகிறது. மாப்பிள்ளை வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார்! நாங்களெல்லாம் எப்படிச் சிரித்திருப்போம் என்று, நீயே கற்பனை செய்து பார்!"

சிரித்து விட்டு, "கற்பனை செய்யும் போதே, ஒரு சின்ன சந்தேகம், ஆன்ட்டி! பெண் பார்க்க வந்தது, தோழியையா? அன்றி, உங்களையா?" என்று சாதுவாய் விசாரித்தாள் சந்தனா.

"போக்கிரி, வாயைப் பார்! அங்கிள், அந்தக் காலத்து டாக்டர்! முழுக்கைச் சட்டையும், டையுமாகக் கம்பீரமாக இருப்பார்! அவரைப் போய்க் காட்டுப் பயல் என்கிறாயா? உன்னை..." என்று சந்தனாவின் காதைத் திருகுவது போலப் பாவனை செய்தாள், மீனாட்சி!

"ஐயோ!" என்று வலிப்பது போல், சின்னவள் நடிக்க, இருவருமே, சிரிப்பில் மூழ்கினர். இப்படிப் பழைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்கையில், ஒரு நாள், "முன்பு ஒரு விளம்பரம் வரும், சந்தனா, 'நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? பலவீனமாக இருக்கிறீர்களா?' என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டுவிட்டுக் கடைசியாக, இந்த டானிக்கைச் சாப்பிடுங்கள் என்று, விளம்பரம் முடியும்! விளம்பரங்களைக் கிண்டலடிப்பது, தீபுவுக்கு, மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு!..." என்று தொடங்கி, முதல் முறையாக மகனைப் பற்றி, மீனாட்சி அம்மா பேசினாள்!... "இந்த ஒவ்வொரு கேள்விக்கும், 'ஆமாம்... ஆமாம்.. அட ஆமாம்ப்பா' என்று சொல்லிக் கொண்டிருப்பான்! இன்று, ஒரு கேள்வியாக, 'நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறீர்களா?' என்று விளம்பரத்தில் கேட்க, இவனும் சற்றும் யோசியாமல், 'ஆமாம்ப்பா, ஆமாம்!" என்று சொல்லிவிட்டு, அதே சமயத்தில் அறைக்குள் தற்செயலாகச் சென்றுவிட்ட என்னைப் பார்த்து விழித்தான் பார்! இப்போதும், அந்த முகம் கண்ணிலேயே நிற்கிறது!" என்று நகைத்தாள் பெரியவள்.

கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு, "தீபு என்றால் உங்கள் மகனா ஆன்ட்டி?" என்று வினவினாள் சந்தனா.

கண்களில் மெல்லச் சிரிப்பு மறைய, "ஆமாம்! பிள்ளையே பிறக்காதோ என்றிருந்த சமய்ம் உண்டாகிப் பிறந்தான்! எங்கள் வாழ்வில் ஒளியேற்றப் பிறந்தவன் என்று, இந்தப் பெயர் வைத்தோம்! ஆனால், அவன் அயல் நாட்டுக்கு ஒளியேற்றப் போய்விட்டான்..." என்ற மீனாட்சி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிப் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பது போலும் என்று சந்தனாவுக்குத் தோன்றியது.
இப்போது ஒரு நெகிழ்வில் வாயை விட்டுவிட்டு, அப்புறம் ஏன் சொன்னோம் என்று வருந்துவது, அன்பில் விரிசல் விழ வைத்துவிடும்! அப்படி விரிசல் விழுந்து, கிட்டத்தட்ட தாய் போல எண்ணத் தொடங்கியிருந்த, இந்தப் பிரியமான பெண்மணியைப் பிரிய நேருமானால்?

சந்தனாவால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை!

அத்தோடு, அவரவர் அந்தரங்கங்கள் அவரவருக்கு! இவ்வளவு அன்பிருந்தும், சந்தனா மட்டும், எல்லாவற்றையும் மீனாட்சி அம்மாவிடம் ஒப்பித்து விட்டாளா என்ன?

முறுவலித்து, "எங்கோ ஓர் இடத்தில் ஒளியேற்றினால் சரிதானே ஆன்ட்டி! இப்போது, நீங்கள் அந்தக் 'காட்டுப் பய்ல்' மாதிரி, வேறு கதைகள் இருந்தால், சொல்லுங்களேன்" என்று கேட்டுக் கொண்டாள். "எனக்கு என்னவோ, அந்த நிகழ்ச்சி உங்கள் வீட்டில் தான் நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் போகவே மாட்டேன் என்கிறது!" என்று, ஓரக் கண்ணால், குறும்பாக நோக்கினாள்.

சிரித்தவாறே, கையை நீட்டிச் சின்னவளின் கன்னத்தை வருடினாள், மீனாட்சி.

"அருமையான பெண்ணம்மா நீ!" என்றவள், தொடர்ந்து, தான் சந்தித்த வேறு சில பல வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

அவற்றுள் ஒன்று, அவளது எட்டாம் வகுப்பில், 'ஹோம் சயன்ஸ்' தேர்வில், அவரை நல்ல பலன் தர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, அவரைச் செடிக்குப் பதிலாக, 'அவரை' அதாவது கணவரை என்று எடுத்துக் கொண்டு, சில மாணவிகள் எழுதிய பதில்!

இருவரும் விழுந்து விழுந்து சிரித்த போது, சந்தனாவுக்கு, வீட்டில் தமையன், தந்தையோடு ஜோக்கடித்துச் சிரிக்கும் அதே உணர்வு!

மீனாட்சி அம்மா வீட்டுச் சமையல்காரம்மா கூட, சந்தனாவிடம் தனியே வந்து, "அம்மா இப்படிச் சிரித்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து, ஏழெட்டு வருஷம் ஆகிப் போச்சும்மா! அய்யாவும் போய், சின்னவரும் வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட பிறகு, ஆளே மாறிப் போய், வெறும் எந்திரம் மாதிரி, நடமாடினாங்க. எப்படியோ, அது மாறி அவங்க நல்லா ஆனால் சரி! அதனாலே, நீ மட்டும், எங்கம்மாவை விட்டு, எங்கேயும் போய்விடாதேம்மா!" என்று கூறிவிட்டுப் போனாள்!

இந்த ஆன்ட்டியை விட்டுப் போவதா?

நினைக்கக் கூட முடியவில்லை, சந்தனாவால்!

பெண் துணையின்றி வளர்ந்தவள் சந்தனா! அதனால், மீனாட்சி அம்மாவை, ஒரு தாய் போல என்று அவளால், ஒப்புமை கட்டி நினைக்க முடியவில்லை!

ஆனால், உலகில் யாருமே இல்லை என்று தன்னந்தனியே நின்றவளுக்கு, நானிருக்கிறேன் என்று, ஆதிமூலமாய், அபயகரம் கொடுத்தவள் ஆயிற்றே!

கோடி ரூபாய் கொடுத்தால் கூட, அந்த அபயகரத்தை விட்டுப் போவதா?

"நானாக ஒரு போதும் இங்கிருந்து போகவே மாட்டேன்!" என்று சமையல்காரம்மாவிடம் உறுதி கூறிய போது சந்தனா முழுமனதோடு, தன் வார்த்தைகளை நம்பித்தான் சொன்னாள்!

ஆனால், அங்கே இருக்கப் பிடிக்காமல், மனம் வெறுத்து, அந்த வீட்டை விட்டுத் தானாகவே ஒரு நாள் வெளியேறுவாள் என்று அப்போது அவளுக்குத் தெரியாது!

Advertisement