» இனி எல்லாமே நீயல்லவோ 8

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

அன்று சந்தனா வீடு திரும்பக் கிளம்பிய நேரம், வழக்கம் போலத்தான்.

ஆனால், வெகு அதிசயமாக வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவாக இருக்கவே, எப்போதும் வரும் நேரத்துக்குக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் முன்னதாகவே, சந்தனா வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.

ஆனால், அதிலும் ஒரு சிறு பிரச்சினையாக, கேட்டைத் திறந்து விடுவதற்கு, வாயில் காவலன், கேட் அருகே இல்லை!

பெரிய கேட், சின்ன கேட் இரண்டின் அருகிலும் இல்லாமல், பின்புறமாக அவன் ஏதோ தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான்!

பொதுவாக ராசையா வேலையில் அலட்சியம் காட்டுகிறவன் இல்லை!

ஆனால் தோட்டக்காரனுக்கு உதவியாக கொத்திக் கிளறி, முரட்டு வேலை ஏதாவது செய்து கொடுப்பான்!

அன்றும் அது போலச் செய்து கொண்டிருந்த போதுதான், சந்தனா திரும்பி வந்தது!

ஆனால், கேட் திறந்து விட அவன் இல்லாததையும் அவளுக்குப் பிரச்சினை என்று சொல்லிவிட முடியாது!

அப்படி வாயில் கதவருகில் யாரும் இல்லாதபோது, தடையின்றி உள்ளே வருவதற்கு, அந்த வீட்டு மனிதர்கள் அறிந்த ரகசியம் ஒன்று உண்டு!

சின்ன கேட்டின் உட்புறமாகக் கையை நன்றாக நீட்டிப் பக்கவாட்டுச் சுவரில், சற்றுத் தள்ளிப் பதித்திருந்த தாளைத் திறந்து கொண்டு, உள்ளே செல்வார்கள்.

கேட் தாண்டி, நாலு எட்டுதான் உள்ளே வைத்திருப்பாள்!

அதற்குள், "இவ்வளவு தூரம் தாண்டி, இங்கேயுமா இந்தத் தொல்லை? மரியாதையாக, வந்த வழியே திரும்பிச் செல்! அல்லது, உன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்!" என்று அதட்டியது, ஓர் ஆண் குரல்!

குரல் ஆணினதாக இருந்ததோடு, வெகு கடுமையாகவும் இருக்கவே, பக்கத்து வீட்டில் தான் ஏதோ, காற்று வீசிய தினுசில், இந்த வீட்டில் இருந்து பேசுவது போல் தோன்றிவிட்டது என்று எண்ணியவளாய், சந்தனா மேலும் வீட்டை நோக்கி நடக்கலானாள்.

"சொல்லிக் கொண்டே இருக்கிறேன், திமிராக உள்ளே வருகிறாயா? பெண் என்பதால், சும்மா இருப்பேன் என்று நினைத்தாயா? ஏய் ராசையா, இவளைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைப் பூட்டு!" என்றபடி, வீட்டின் உள்ளிருந்து வாயில் வராந்தாவுக்கு வந்து, வாயில் காவலனுக்கு ஒருவன் உத்தரவிடவும், சந்தனாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போயிற்று.

இந்த வீட்டில், யார் இவன்? அதுவும், இந்த அதட்டலோடு?

அவள் வியந்து நோக்குகையிலேயே, அவனது குரலுக்கு ஓடி வந்த ராசையா, சந்தனாவைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றான்.

"என்னடா, பெண்ணைப் பார்த்ததும் விழித்துக் கொண்டு நிற்கிறாய்? இதுகள் எல்லாம், பெண்களே அல்ல! பிசாசுகள்! காரியம் சாதிப்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்! திருட்டுத்தனமாகக் கதவைத் திறந்து கொண்டு வருகிறாள், பார்! போ! போய் அடித்து விரட்டு! மீண்டும் இந்தப் பக்கம் வரவிடாதே!" என்று மீண்டும் அவன் அதட்டிய விதத்தில், சந்தனாவுக்கு ஒரு விஷயம் தெளிவாயிற்று.

இந்த அளவுக்கு உரிமையோடு வீட்டு வேலையாளை விரட்டுவது என்றால், இவன் இந்த வீட்டுக்கு உரியவனாகத் தான் இருக்க வேண்டும்!

அப்படியானால், எங்கோ விளக்கேற்றப் போய்விட்டதாக, மீனாட்சி அம்மா வருத்தத்துடன் சொன்ன அந்த தீபன், இந்த மனிதனா? ஆன்ட்டியுடைய சொந்த மகன்!

ஆன்ட்டியின் அமைதிக்கும் இவனது ஆத்திரத்துக்கும்!

உள்ளே கைவிட்டுக் கதவைத் திறந்ததால், தப்பாக நினைத்து விட்டானா?

இப்படிக் குற்றவாளி போல, வீட்டுக்கு வெளியே நின்று விளக்கம் சொல்ல, சந்தனாவுக்குப் பிடிக்கவில்லை.
அதைவிடத் தன்னைப் பற்றிய விளக்கத்தைத் தானே சொல்வதை விட, வேலையாள் சொல்வது நல்லது என்றும் தோன்றவே, தீபனுக்குப் பதில் சொல்ல முயற்சி கூடச் செய்யாமல், சும்மா பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

அதற்கு ஏற்ப ராசையாவும், "அய்யா, இந்த அம்மா கொஞ்ச நாளா, நம்ம வீட்டிலேதான் இருக்கிறாங்க. இவங்க கிட்டே, அம்மாவுக்கு ரொம்பப் பிரியம். இந்தம்மா வந்தப்புறம்..." என்று விளக்கத் தொடங்கினான்.

ஆனால், அவன் பேச்சை மதியாமல், "ஓகோ! மோப்பம் பிடித்து, முன்பே வந்து காத்திருக்கிறாளோ! பார் பெண்ணே, அதெல்லாம் என்னிடம் ஒன்றும் பலிக்காது! முதலில் இங்கிருந்து வெளியே நட!" என்று உறுமினான் தீபன்.

இப்போது, சந்தனாவுக்கும் கோபம் வந்திருந்தது!

அவனுக்கு முன்பிருந்தே அங்கிருக்கும் வேலையாள் ஒரு விளக்கம் சொல்கிறான். அதை என்னவென்று கூடக் கேளாமல், வாய்க்கு வாய் வெளியேறு, வெளியேறு என்றால் எப்படி?

பிசாசுப் பட்டம் வேறு!

எந்தப் பெண், அவனை எப்படி ஏமாற்றினாளோ?

அதற்காக, என்னமோ இவன் மகா மன்மதன் போலவும், இவனுக்காகவே, சந்தனா இந்த வீட்டுக்கு வந்து, காத்துக் கிடப்பது போல, என்ன அசட்டுத் தனமான பேச்சு!

அப்படி எந்த ஆண் மகனுக்காகவும், அவள் ஒரு போதும் காத்துக் கிடக்கவே மாட்டாள்!

அதை அவனிடம் விளக்கிவிடும் எண்ணத்தில், "பாருங்கள் மிஸ்டர் தீபன்..." என்று சந்தனா தொடங்கும்போதே ஆத்திரத்துடன் குறுக்கிட்டான் அவன்!

"முடியாது! பார்க்கவும் முடியாது! கேட்கவும் முடியாது! முதலில், இங்கிருந்து வெளியே போ! அல்லது, உன்னையும் உன்னை அனுப்பியவர்களையும், கேஸ் போட்டு, உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்!"

அனுப்பியவர்களா?

இவனை வளைத்துப் பிடிக்க, ஒரு கூட்டமே வேலை செய்வதாக எண்ணினானா?

என்ன திமிர்! என்ன கர்வம்!

இனி, இவனிடம் பேசிப் பயன் இல்லை!

பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டு, ஓர் அலட்சிய பாவனையுடன் வீட்டை நோக்கி நடந்தாள் சந்தனா!

அவன் கொதி நிலைக்குப் போய்விட்டான் போலும்! "ஏய்! ஓர் அடி முன்னே எடுத்து வைத்தாலும், அப்புறம் உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..."

தீபன் ஆத்திரத்துடன் கத்திக் கொண்டிருக்கும் போதே, "என்ன இங்கே சத்தம்?" என்ற மீனாட்சியின் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து, அவளும் வெளியே வந்தாள்!

சந்தனாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, "வாம்மா! இன்று சீக்கிரமே வந்துவிட்டாய் போல!" என்று கனிவோடு வரவேற்றாள்.

பதிலுக்கு முறுவலித்து, "இன்னும் ஐந்து நிமிஷம் முன்னாலேயே உள்ளே வந்திருப்பேன், ஆன்ட்டி! ஆனால், உங்கள் பிள்ளைக்குத்தான் ஏதோ பிரச்சினை!" என்று கிண்டலாக, மீனாட்சியுடைய மகனைக் கண்ணால் காட்டினாள் சின்னவள்!

ஆத்திரத்துடன் அன்னையை நெருங்கினான் தீபன். "அம்மா, இவளை நம்பாதீர்கள். பாருங்கள், இங்கே ஏதாவது செய்தி கிடைக்கும் என்று, உங்களோடு ஒட்டிப் பழகிக் கொண்டு, உங்கள் வீட்டிலேயே, குடி வந்து விட்டாள், இவள்! என்ன கதை சொன்னாளோ, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்! முதலில் இவளை வெளியேற்றுங்கள்!"
"சேச்சே, நிறுத்துப்பா! என்ன பேச்சு இது, தீபன்? நீ சொல்லுகிற மாதிரி எதுவும் இல்லை! எனக்குச் சந்தனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்..." என்ற தாயைக் குறுக்கிட்டு, "என்னம்மா தெரியும்? இவளை முதல் தடவையாக இப்போதுதான் பார்க்கிறேன்! அதற்குள், இவளுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது. நான் யார் என்று தெரிந்திருக்கிறது! எப்படி முடியும்? என் வார்த்தைக்கு மாறாக, நீங்களாக என்னைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டீர்கள்! என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகே இங்கே வந்திருக்கிறாள் என்று, இதிலிருந்தே தெரிந்து விடவில்லையா?" என்று வாதாடினான்.

மீனாட்சியிடம் பேசிய பிறகு, சிரித்த முகமாக வீட்டு வாயிலின் படிகளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்த சந்தனா, வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

தன்னைப் பற்றிப் பேசக்கூடாது என்று, இவன் தான் தாயிடம் சொல்லி வைத்திருக்கிறானா?

ஒரே மகன் என்றாலும், அந்த மகன், அவனுடைய குடும்பத்தார் ஒருவரின் புகைப்படத்தைக் கூட, அந்த வீட்டில் பார்த்திராதது நினைவு வந்தது, இன்னமும் அவளது ஆச்சரியத்தை அதிகரித்தது!

இந்தத் தீபன் தான் தடுத்திருக்க வேண்டும்!

இவனைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்று ரகசியம் காக்கும் அளவுக்கு, இவன் அப்படியென்ன கொம்பன்? அல்லது குற்றவாளியா?

அதனால் தான், பர்சில் இருந்த படங்களை, மீனாட்சி ஆன்ட்டி, அவ்வளவு முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும்.

ஆனால் எதற்காக?

"சும்மா, அதையே சொல்லிக் கொண்டிராதே, தீபன். நான் தான் ஒரு தரம், பேச்சு வாக்கில், என் மகன் என்று, உன் பெயரைச் சந்தனாவிடம் சொல்லி விட்டேன்! அது, நீதான் என்று எப்படித் தெரியும் என்று, அடுத்த கேள்வி கேட்காதே! இந்த வீட்டில் நின்று, இந்தக் கத்துக் கத்துகிறவன் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று, ஒரு முட்டாள் கூடப் புரிந்து கொள்வாள்" என்று சற்றே அலுத்த குரலில் கூறிய மீனாட்சி, சந்தனாவிடம் திரும்பி, "நீ உள்ளே போம்மா! இன்றைய சிற்றுண்டி, உனக்குப் பிடித்த குழிப் பணியாரம். இதோ, இவனுக்கும் அது பிடிக்குமே என்று செய்யச் சொன்னேன்! போய், முகம் கழுவிவிட்டுச் சாப்பிடு" என்று கூறவும், அதற்கு மேல் அங்கே நில்லாமல், சின்னவள் உள்ளே சென்றாள்.

மாடியில் வாயிற்புறத்தை நோக்கிய அறை அவளுக்குத் தரப்பட்டிருப்பது! எனவே தொடர்ந்து தாயும் மகனும் பேசியது, அறைக்குள் சென்ற பிறகு, அவள் விரும்பாவிட்டாலும் அவளது காதுகளில் தெளிவாக விழுந்தது!

"உங்களுக்கு உலகம் தெரியாது, அம்மா! இவளை, இங்கே இருக்க விடுவது, நல்லதில்லை!" என்றான் மகன்.

"எனக்கு உலகம் தெரியாதா? அப்படி உலகம் தெரியாத அம்மா எப்படியோ போகட்டும் என்று தானே, இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டாய்! சரி. அது உன் வாழ்வு, உன் விருப்பம்! சந்தனாவுக்கு என்று, இங்கே, இப்போது யாரும் இல்லை! அவள் வீட்டில், திருட்டு வேறு நடந்து, தவித்துக் கொண்டு நின்றாள் பாவம்! எனக்கும், இந்தத் தனிமை, தாங்க முடியாத பாரமாகி விட்டது! அதனால், எனக்குத் துணையாக, அவளை, நான் தான் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்! இரு மாதங்களாக, எனக்கு அவள் தான் ஒரே துணை! இனி, நீ கிளம்பிய பிறகும், அவள் தான் துணையாக இருக்கப் போகிறாள்!" என்றாள் மீனாட்சி அம்மா சற்று அழுத்தமான குரலில்!

"அது, தேவையில்லை, அம்மா! இதை இப்போதைக்கு மனதோடு வைத்துக் கொள்ளுங்கள்! இந்த முறை, என் மனதில் வேறு கருத்து இருக்கிறது! இனி, இங்கேயே இருந்து விடலாமா என்ற எண்ணத்தில் தான், இப்போது வந்ததே!"

நம்பாமல், 'உச்'சுக் கொட்டினாள் அன்னை!

"கடந்த இரண்டு முறை வந்த போதும் கூட, நீ இப்படித் தான் ஏதோ சொன்னாய்! ஆனால், உன் ஏஜெண்ட் தான், உனக்கு நன்றாக அமெரிக்க மோகத்தை ஏற்றி வைத்திருக்கிறாளே! சுயநலம் பிடித்தவள்! இரண்டே நாளில், ஏதாவது சாக்கிட்டு, அவள் ஒரு போன் பண்ணிக் கூப்பிட்டாள் என்றால், குடிகாரன் பேச்சு மாதிரி, எல்லாம் அத்தோடு சரி! உடனே, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவாய்!..."
"இல்லைம்மா! இந்தத் தடவை மித்ராவுக்காகவேனும்..."

"மித்ராவைக் காட்டி, என்னை மடக்கப் பார்க்காதே! முதலில் ஒரு மாதமேனும் இருந்து காட்டு! அப்புறமாக, உன்னை நம்புகிறேன்! ஆனால், சந்தனா விஷயத்தில் தலையிடாதே! அவளை, நான் தான் கட்டாயப்படுத்தி, இங்கே கூட்டி வந்தேன்! அவள் இங்கே தான் இருப்பாள். அவளைப் போகச் சொல்ல முடியாது!" என்றாள் தாயார் உறுதியான குரலில்!

"என்னவோ, எனக்குப் பிடிக்கவில்லை! எதற்கும், நான் இங்கே தங்க நினைப்பது பற்றி, அந்தப் பெண்ணிடம் வாய் விட்டு விடாதீர்கள்! அப்புறம், அவள் ஏதாவது பத்திரிகைக்குச் செய்தி கொடுத்து, ஒரே களேபரம் ஆகிவிடப் போகிறது!" என்று, தாயை எச்சரித்தான் தீபன்.

"ஆமாம், நீயும், உன் பத்திரிகையும்! யார் யாரோ, எது எதற்கோ பயப்படுகிறார்கள்! உனக்கு, இது ஒரு ஃபோபியா!" என்றாள் தாயார் சற்று அலட்சியமாகவே!

"இந்த மீடியாக்காரர்கள், செய்திக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது! டயானாவின் மரணம் எப்படி நடந்தது, நினைத்துப் பாருங்கள்! அந்தப் பெண்ணின் வீட்டில் நடந்த திருட்டே, அவள் நம் வீட்டில் நுழைவதற்கான நாடகம் என்பது தான் என் கருத்து! ஆராய்ந்து பார்த்தால், அதுதான் உண்மையாகவும் இருக்கும்!" என்றான் மகன்.

என்ன உளறல் இது என்ன சந்தனா யோசிக்கையிலேயே, "முழுப் பைத்தியமாக மாறுமுன், உன் ஃபோபியாவுக்கு ஏதாவது சிகிச்சை செய்!" என்று மீனாட்சி எரிச்சலாகக் கூறிய விதத்தில், அவளுக்குச் சிரிப்பு வர, அந்த சிரிப்புடனேயே திரையை ஒதுக்கிக் கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்!

தாயும் மகனும், அதே இடத்தில், வீட்டின் முன்புறத் தோட்டத்தில் தான் நின்றனர்.

தீபனின் எரிச்சல் மிகுந்த முகம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது!

அதே நேரத்தில், ஜன்னல் திரையின் அசைவை உணர்ந்து விழி உயர்த்தி நோக்கிய தீபனின் பார்வையில், அவளது சிரித்த முகம் பட்டுவிட, அவனது கண்கள் கனலை உமிழ்ந்தன.

எரித்து விடுவான் போல, எவ்வளவு கோபம்!

துணி கொண்டு துடைத்தாற் போல அவளது சிரிப்பு தானாக மறைய, உள்ளூர வாட்டத்துடன், சந்தனா உள்ளே திரும்பினாள்.

மீனாட்சி அம்மாவுடைய மகனுக்கு, அவளிடம் ஏன் அவ்வளவு வெறுப்பு?

காரணம் எதுவாக இருந்தாலும், அவனது வெறுப்பு அவளை மிகவும் பாதித்தது என்பது மட்டும் நிஜம்!

Advertisement