» இனி எல்லாமே நீயல்லவோ 9

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

மீனாட்சி அம்மா மிகவும் நல்லவள்! பல தரும காரியங்களில் ஈடுபட்டிருந்தாள்.

நூறு சதவீதம் ஆரோக்கியமான உடல்நிலை கிடையாது!

ஆனாலும், அதற்காக, முகத்தை சீர்யசாக வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்.

கேலியும் சிரிப்புமாக, மிகவும் சந்தோஷமான மனோ பாவம் உடையவள்!

அதனாலேயே சந்தனாவுக்கும், அவளை மிகவும் பிடித்துப் போய், வேற்று வீடு என்கிற எண்ணமே இல்லாமல், சந்தனா அந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள்!

தந்தையைப் பற்றிக் கூடப் பல சந்தோஷமான சம்பவங்களை, அவ்வப்போது பெருமையாகவும், சிறு ஏக்கங்களுடனும் மீனாட்சி அம்மாளிடம் பேசி, அவளால் ஆறுதல் அடைய முடிந்திருக்கிறது!

இப்போது, மகன் வரவினால், அந்த நிலை மாறிவிடும் போல இருக்கிறதே என்று சந்தனா வருத்தத்துடன் நினைத்தாள்.

அண்ணன் வரும் வரை, பாதுகாப்பாக இங்கேயே இருப்பது, அவன் வந்த பின்னும் அந்தப் பக்கத்திலேயே வீடு பார்த்து வசிப்பது என்று எண்ணியதெல்லாம், தலைகீழாக மாறியது.

அந்த வீட்டில் தீபனுக்கு எந்த அளவு அதிகாரம் உண்டோ, சந்தனாவுக்குத் தெரியாது! ஆனால், ஒரு மகனின் உரிமை, மற்ற எதையும் விட அதிகம் தானே?

வீட்டு அம்மாவுடைய மகனுக்கு அடியோடு பிடிக்காத போது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, அவளுக்கும் விருப்பம் இருக்கவில்லை!

அதுவும், அவன் தாயுடன் தொடர்ந்து தங்கும் விருப்பத்துடன் வந்திருந்தால், அவனது விருப்பத்துக்குத்தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும்! பானகத் துரும்பு மாதிரி, அவன் முகம் சுளிக்க, அவள் அங்கே இருப்பது சரியல்ல!

இந்தப் பிரச்சினைக்குச் சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவாறே, மெல்லக் கீழே இறங்கிச் சென்றாள் சந்தனா.

படிகள் ஹால் பகுதிக்குத் திரும்பும் போதே, யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு சந்தனாவுக்கு.

தீபனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, சோஃபாக்கள் போடப்பட்டிருந்த பக்கம் பாராமலே, உட்புறம் திரும்பியவளின் பார்வை வட்டத்தில், அவனது நெடிய உருவம் போல எதுவும் தெரியாது போகவும், விழி திருப்பிப் பார்த்தாள் அவள்.

அந்தப் பெரிய சோஃபாவுக்குள் புதைந்து விடுவாள் போல, ஒரு சிறுமி!

அவளது நாலைந்து வயதுக்குரிய ஆரோக்கியமோ, துறுதுறுப்போ தெரியவில்லை!

ஒரு துணிப் பொம்மையை அணைத்தபடி, தன் நீல நிறக் கண்களால், சந்தனாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்கள் அன்னியமாய் நீல நிறமாக இருந்த போதும், அறிமுகமான ஏதோ அவளிடம் இருப்பதாகத் தோன்ற சந்தனா அவளைப் பார்த்துப் புன்னகை செய்து, "ஹல்லோ?" என்றாள்.

பள்ளியில் புது மாணவிகளிடம் பேசி, இளக வைத்துப் பழக்கம் தானே?

ஆனால், இந்தச் சிறுமியின் பாணி வேறு மாதிரி இருந்தது! சந்தனாவை ஒரு தரம் சந்தேகமாக நோக்கிவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

ஆனால், அந்த சந்தேகமான பார்வையே, அவள் யாரென்று சந்தனாவுக்குக் காட்டிக் கொடுத்தது! அறிமுகமான சாயலும் புரிந்தது!

இவள் தீபனுடைய மகள்! மீனாட்சி ஆன்ட்டியுடைய பேத்தி!

தந்தையின் அதே சந்தேகத்தைச் சிறுமியின் கண்களில் பார்த்ததும், சந்தனாவின் முடிவு இன்னமும் வலுப்பெற்றது!

அவனுக்கு, இவள் ஒரு மகள் தானா? வேறு பிள்ளைகளும் இருக்கிறார்களா? மனைவி?

யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?
சாப்பாட்டு அறைக்குள் சென்று, மீனாட்சி அம்மாள் சொன்னதற்காக, இரண்டு பணியாரங்களைக் கொறித்து விட்டு, பரீட்சை நோட்டுகள் திருத்தும் வேலை இருப்பதாகச் சொல்லிக் கையில் காபியை வாங்கிக் கொண்டு சந்தனா மீண்டும் அவளது அறைக்குத் திரும்பும் வரை, வேறு யாரும் அவள் கண்ணில் படவில்லை!

ஆனால், அதற்குள் வேறு யாரும் குறுக்கிடாத அந்தத் தனிமையில், "சந்தனாம்மா, தீபன் என்ன சொன்னாலும், அதைப் பெரிதாக நினைக்காதே! இந்த நாட்டுப் புத்தியும், அந்த நாட்டுப் பழக்கமுமாக, அவனுக்குள் ஒரே குழப்பம்! அதில், யாரைப் பார்த்தாலும், சந்தேகம்! அவன் மனைவி பிரிந்துவிட்ட விவகாரம் விஷயத்தை... விஷத்தை என்று தான் சொல்ல வேண்டும்... அதை ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிறது! இந்தக் குழப்பத்தில் அவன் ஏதாவது உளறினால், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதேம்மா! எனக்காக, இங்கே இருந்து விடும்மா! ப்ளீஸ்!" என்று மீனாட்சி, மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள்.

அப்படியே, வீட்டின் முன்புறமாக, அதட்டலாக மகனின் குரல் கேட்கவும், "அங்கேயே யாரைப் பார்த்துக் கத்துகிறானோ..." என்றவாறு அவசரமாக எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றாள்!

தீபனோடு வேறு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று மீனாட்சி சொல்லவே இல்லை!

அப்படியே யார் யார் வந்திருந்த போதும், ஆன்ட்டி அறிமுகம் செய்து வைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு, சந்தனா அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவை மீனாட்சியுடனே சேர்ந்து உண்பது, அங்கே வந்த பின் அவளது வழக்கம்!

இருவரும் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கலகலப்பாகப் பேசியபடி, உண்ணும் அந்த நேரத்தைச் சந்தனா ஆவலாக எதிர்பார்ப்பாள்!

ஆனால், இன்று தயக்கமாக இருந்தது!

சாப்பாட்டு மேஜையில் அவளை வீட்டை விட்டு வெளியேற்றச் சொன்ன மகனும் இருப்பானே!

தந்தையின் மனதைப் பிரதிபலிக்கும், அவனுடைய மகளும் கூட இருக்கலாம்!

இவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்பது, எவ்வளவு சங்கடமாக இருக்கும்!

சங்கடம் அவளுக்கு மட்டுமல்ல!

மகனை எதிர்த்துப் பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்கச் சொன்ன மீனாட்சி அம்மாவுக்கும், கஷ்டம்தான்!

பசியில்லை என்று, பேசாமல் அறையில் இருந்து விடலாமா என்று கூட, ஒரு தரம் அவளுக்குத் தோன்றியது!

ஆனால், இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று யோசித்து, அறையில் கொஞ்சம் பிஸ்கட்டுகளைக் கூடச் சந்தனா வாங்கி வைத்திருக்கவில்லை!

பட்டினியும், அதன் விளைவாகச் சரியாகத் தூங்காமலும் இருந்துவிட்டு நாளைக்குப் பள்ளிக்குப் போனால், வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாகப் பள்ளியில் உருப்படியாக என்ன வேலை செய்ய முடியும்?

அது மட்டுமல்ல!

மீனாட்சி ஆன்ட்டி முட்டாள் அல்ல!

எதற்காகப் பசியில்லை என்கிறாள் என்று புரிந்து, நிச்சயமாக வருத்தப்படுவாள்.

பட்டினியாக இருக்க விடவும் மாட்டாள்! அந்தப் பெரியவள் வந்து, அவளை வருந்தி அழைத்துச் சாப்பிட வைத்து, அதெல்லாம் வேறு ஆன்ட்டிக்குக் கஷ்டம்!

அத்தனையையும் யோசிக்கையில், கௌரவம் பாராமல், பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு போய், இரண்டு வாய் எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவது மேல் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

ஒரு வேளை, தீபனே, அவனுடைய அன்னைக்காகச் சற்று இளகி, நல்லபடியாக நடந்துகொள்ளலாம்!
நல்லதே நினைக்கலாமே என்று எண்ணினால் கூட, அவளுக்கு அதில் நம்பிக்கை வர மறுத்தது! அவளது ஜன்னலை நிமிர்ந்து பார்த்த அவனது கோப முகம், அவ்வளவு எளிதாக மாறக் கூடியது அல்ல!

ஆனால், சந்தனா அஞ்சிய மாதிரி, அசம்பாவிதமாக, அவளை வாயிலில் வைத்து விரட்டியது போல, உணவருந்தும் போது, நிகழவில்லை! 'டேபிள் மானர்ஸ்' என்பார்களே, அது போல சாப்பிடுகையில் தீபன் உணவு வேலை நாகரிகம் கடைப்பிடித்தான் போலும்! சந்தனாவிடம் தனியாக எதுவும் பேசவில்லை என்றாலும், கடுகடுக்கவும் இல்லை!

அவன் தாயிடம் 'சுகம்' மருத்துவமனையைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டான்.

ஆனால் அப்படி அவன் விசாரித்தது, வெறும் உரையாடலுக்காக மட்டுமாகக் கேட்டது போலத் தோன்றாதது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பல ஆண்டுகளாக எட்டிக் கூடப் பாராத, என்னவென்று கேட்டுக் கூட இராத தொழில் மீது, அவனுக்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?

மீனாட்சி அம்மாவுக்கும் அதே ஆச்சரியம் இருந்ததோ என்னவோ, முதலில் சற்று விட்டேற்றியாகவே பதில் சொன்னவள், தொடர்ந்து மகனின் கேள்விகளில் வியப்பும், திருப்தியும் அடைந்து, விவரமாகவே விடை கூறலானாள்!

தொடர்ந்து, தாயும் மகனுமாக, மருத்துவமனை, அதில் புதிதாகத் தொடங்கி இருக்கும் சில துறைகள், அவற்றின் வேலை முறைகள் பற்றி, அலசி ஆராயத் தொடங்கினார்கள்.

விஷயம் எதுவும் புரியாததால், இந்த உரையாடல் போரடித்த போதும், ஒரு வகையில், சந்தனாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது! அவள் காரணமாகப் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையே, மனவேறுபாடு வந்து விடவில்லை! நல்லபடியாகப் பேசுகிற நிலையில் தான் இருக்கிறார்கள்! பெரு நிம்மதி!

ஆனால், இந்த நிம்மதி நிலைக்க வேண்டுமானால், ஆன்ட்டியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது! அதை மீறி, அவளது திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும்!

அதன் முதல்படியாக, மாலையில் மீனாட்சி அம்மா மருத்துவமனைக்கு வருவதாகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரித்தாள்.

மீனாட்சி விவரம் கேட்டதற்கு, "ஒரு சின்ன வேலை! கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது! ஆனால், டெஸ்ட் நோட்டுகள் திருத்த வேண்டும். வெளியே போவதால், திரும்பி வருவதற்கு, வேனைப் பிடிக்க முடியாது! நீங்கள் வருவது தெரிந்தால், மருத்துவமனையில் வைத்து விட்டு என் வேலையைப் பார்க்கப் போவேன்! நீங்கள் வரும்போது, கொண்டு வந்துவிடலாம்! எனக்குச் சுமை மிச்சம்!" என்றாள் சின்னவள்!

"கொண்டு வந்துவிடலாம்! ஆனால், அவ்வ்...வ்ளோ நோட்டுத் திருத்துவாயே! நோட்டிகளின் பளு தாங்காமல், டயர் வெடித்துவிட்டால், என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது!" என்றாள் மீனாட்சி சோகமாக!

"அதெல்லாம் வெடிக்காது, ஆன்ட்டி! குறைந்தது நூறு கிலோ கனத்தில், நான் உங்களோடு வரும்போதே வெடிக்காத டயர், வெறும் இந்த மூன்று கிலோ சுமையில் தானா வெடிக்கப் போகிறது? நடக்கவே நடக்காது! பயமே படாதீர்கள்!" என்று சிரித்தாள் சந்தனா.

வழக்கமாக, மீனாட்சியும் அவளும் பேசிக் கொள்கிற தினுசில்தான்!

ஆனால், "நூறு கிலோவா? சேச்சே! அவ்வளவு மோசமாகக் கற்பனை கூடப் பண்ண முடியாது!" என்று விட்டு, அவளை ஏற இறங்க அளவிடுபவன் போலப் பார்த்து, "மிஞ்சி மிஞ்சி அறுபது கிலோ சொல்லலாம்! அதுவும் உயரத்தைக் கொண்டுதான்!" என்று தீபன் கூறவும், பிரமிப்பை மீறிக் கொண்டு, அவனது அளவிடும் பார்வையில், சந்தனாவின் உடல் சிலிர்த்தது.

ஆனால் உடனேயே, "புதிதாகத்தானே, இந்த வேலையில் சேர்ந்திருப்பாய், அதற்குள் டெஸ்ட் வைப்பதையெல்லாம் உன் பொறுப்பில் விடுகிறார்களா?" என்று அவன் சந்தேகத்துடன் கேட்கவும் அவளுக்கு எரிச்சல் வந்தது!

இவன் புத்தி என்ன மாதிரியெல்லாம் வேலை செய்கிறது!
இவனைப் பற்றித் துப்பறிந்து, ஏதோ பத்திரிகை, டீவிக்கு விவரம் கொடுப்பதற்காக, அவள் இந்த வேலையில் சேர்ந்து, அவன் தாயின் கவனத்தைக் கவர்ந்து இந்த வீட்டிற்குள் புகுந்திருக்கிறாளாம்!

"நான் சென்ற ஆண்டிலிருந்தே வேலை பார்க்கிறேன்!" என்று ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள் அவள்!

அயராமல், "ஓ அப்போதே, இதற்காகத் தொடங்கிவிட்டாயா?" என்று தீபன் கேட்கவும், அவள் தான் அயர்ந்து, வாயடைத்துப் போனாள்!

மீனாட்சி ஆன்ட்டி சொன்ன மாதிரி, இவனுக்குப் பைத்தியம் தான் பிடிக்கப் போகிறது!

பெரியவளின் கண்களிலும் ஒருவிதச் சலிப்பைக் காணவும், சட்டென விழி தாழ்த்தித் தட்டில் பார்வையைப் பதித்தாள் சந்தனா.

ஆனால், திருத்த வேண்டிய நோட்டுப் புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி, 'சுகம்' மருத்துவமனையில் கொடுத்து விட்டு, அண்ணன் இடம் பார்த்து வைத்திருந்த விடுதிக்குப் போய்க் கேட்டால், அங்கே இடமே இல்லை என்றார்கள்!

"எங்கள் இடத்துக்குப் போட்டி அதிகம்மா! அப்போதே, உங்கள் அண்ணன் பெரிய சிபாரிசோடு வந்ததால், இடம் கொடுத்தோம்! நீங்கள் தான் வரவே இல்லையே! அப்போதே, அந்த இடத்துக்கு வேறு ஆள் வந்துவிட்டது! இனி, இப்போதைக்கு, இங்கே இடம் கிடையாது!" என்றார்கள் கண்டிப்பாகவே!

அதை மட்டுமே நம்பிச் செல்லவில்லை அவள்!

உடன் வேலை செய்வோர், இன்னும் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சென்று, வேறு சில இடங்களில் விசாரித்ததிலும், அவளுக்குத் தோல்விதான் கிடைத்தது!

இல்லை, இல்லை என்று கேட்கக் கேட்க, அவளுக்குத் தன் மீதே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது!

தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஓடுகிற கதையாக அண்ணன் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தை அலட்சியமாக விட்டுத் தொலைத்து விட்டு, இப்போது இப்படி அலைகிறாளே!

எவனோ ஒரு மடத் திருடன் உருப்படியாய் ஒன்றும் இல்லாத வீட்டுக்குத் திருட வந்தான் என்றால், அவன் மீண்டும் வருவானோ என்று பயப்படுகிறவள், அவனை விடவும் எவ்வளவு பெரிய மடச்சி!

அப்படிப் பயந்து, அடுத்தவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு, இடம் கொடுத்த நல்ல பெண்மணிக்கு, இப்போது எவ்வளவு தொல்லை!

தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி, அவள் சோர்வுடன் வீடு திரும்பினால், கண்ணில் ஆவல் மின்ன, அவளைத் தேடி வந்தாள், தீபனுடைய மகள் மித்ரா!

பிரியமாக அழைத்த போது முகத்தைத் திருப்பிக் கொண்ட மித்ராவிடம், நட்பு, பாசம், பிரியம் என்று சந்தனா பெரிதாக எதையும் எதிர்பார்த்து விடவில்லை!

முக்கியமான காரணம், அவள் தீபனுடைய மகள்!

தன் மனதில் இருக்கும் விஷத்தில், எத்தனை சதவீதத்தை, மகள் மனதிலும் அவன் புகுத்தி வைத்திருக்கிறானோ!

சின்னப் பெண்! உடனடியாகப் புதியவளான சந்தனாவிடம் சிரிக்க வேண்டும் என்றோ, அவளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாதுதான்!

ஆனால், அப்படித் தயங்குகிற குழந்தைகள் வெட்கப்படுவார்கள்... அல்லது பயத்துடன் பார்ப்பார்கள்!

இரண்டும் இல்லாமல், குழந்தை முகம் திரும்பியதே விசித்திரம் தான்! கூடவே, அந்த சந்தேகமான பார்வை வேறு!

அதிலும், உணவருந்தும் போது, சந்தனாவை மித்ரா கண்டு கொள்ளவே இல்லை எனவும், தந்தையின் வெறுப்பு, சிறுமியின் மனதிலும் ஏறியிருப்பதாகவே, அவள் எண்ணியிருந்தாள்!
ஒரு சின்னக் குழந்தையின் மனதைக் கெடுத்து வைத்திருக்கிறானே என்று உள்ளூர, வருத்தமும் இருந்தது!

ஆனால், மித்ராவே அவளைத் தேடி வரவும், ஆச்சரியத்தோடு, சந்தனாவுக்குச் சந்தோஷமும் உண்டாயிற்று!

வீடு வரும் போது இருந்த சோர்வு மறைந்துவிட, முறுவலோடு அவளை வரவேற்றாள்.

மித்ராவின் மனதில் மிச்சமிருந்த தயக்கத்தை நீக்கும் முயற்சியாக, "உன் பாப்பா ரொம்ப அழகாக இருக்கிறாளே! இவள் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் விசாரித்தாள்.

சந்தனா நினைத்தபடியே, மித்ராவின் முகம் மலர்ந்தது! "பாப்பா பெயர் ஜேடி!" என்று சந்தோஷமாகச் சொன்னவள், சந்தனாவை ஆச்சரியமாகப் பார்த்து, "உனக்கு இங்கிலீஷ் தெரிகிறதே! சமையல் லேடி, தோட்டக்காரன் ஒருத்தருக்கும் தெரியலை! கிராண்ட்மா மட்டும் பேசுது! அதுவும், கோயிலுக்குப் போயிருக்குது! அப்பாவும் வேலை செய்கிறப்போ, வேறே யார்கிட்டேயும் பேச முடியலை! ஒரே போர்!" என்று மனதில் உள்ளதைக் கொட்டினாள்.

பாவம்! தனிமையில் போரடித்துப் போயிருக்கிறாள்.

இன்று, ஆன்ட்டி கோயிலுக்குப் போகிற நாள்!

தந்தையும், ஏதோ வேலை செய்யப் போய்விடவே, இவளோடு பேச ஆள் இல்லை!

பாட்டியோடு கோயிலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே யாரும் துப்புத் துலக்க வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், தந்தை அனுமதித்திருக்க மாட்டான்!

என்ன பயம்?

அப்படி என்ன பெரிய மனிதன்... அல்லது, குற்றவாளியேதானா?

சேச்சே! அப்படியெல்லாம் இராது! மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன், கிரிமினலாக இருக்க முடியாது!

தலையை உலுக்கி விட்டுக் கொண்டு, சிறுமியோடு உரையாட முயன்ற சந்தனா திகைத்தாள்!

அங்கே வீட்டில் என்ன செய்வாய்? எப்படிப் பொழுதைப் போக்குவாய் என்று, புதிதாக அறிமுகமான ஒரு சிறுமியிடம் கேட்கும் எந்தக் கேள்வியை மித்ராவிடம் கேட்டாலும், அவளுடைய தந்தை குற்றம் சாட்டியது போல, அவளைப் பற்றித் துப்புத் துலக்குவதாகவே அமைந்தது!

ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியாமல், அவளோடு இணைந்து பேசுவது எப்படி?

யோசித்து விட்டு, "அங்கே உனக்குப் பிடித்த மாதிரி, டீவி நிகழ்ச்சிகள் நிறைய உண்டா? என்று வினவினாள்.

அப்பாடா! குடைவது போல இல்லாத ஒரு கேள்வியைக் கண்டு பிடித்துவிட்டாள்!

தோள் வரை கிடந்த, அடர்ந்த கூந்தல் துள்ளிவிழ, "ஆமாம்! ஆனால் எனக்கு என் கம்ப்யூட்டரில் சிடி போட்டுப் பார்ப்பதுதான் ரொம்பப் பிடிக்கும்!" என்று மித்ரா உற்சாகத்துடன் பதில் சொன்னது மிக அழகாக இருந்தது!

அவளை அள்ளி அணைக்கும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஹாரிபாட்டர் பார்ப்பாயா? ஹாரிபாட்டரில் எது ரொம்பப் பிடிக்கும்?" என்று மேலே விசாரித்தாள் சந்தனா.

"பறக்கும் கார் வருமே! அதுதான் ரொம்ம்...பப் பிடிக்கும்!"

"அப்புறம்?"

"நார்னியா... அது கூட மாஜிக்தான்! அப்புறம் 'டிஜிமோன்'... டிஜிமோன் தெரியுமா?"

நல்லவேளையாக, அந்த ஜப்பானியக் கார்ட்டூன் பற்றி சந்தனா அறிந்து வைத்திருந்தது, மித்ராவின் மனதில், சந்தனாவிடம் மதிப்பை ஏற்படுத்தியது!

இன்னும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகள், அவற்றுள் நான்சிக்குப் பிடித்தது, மிச்சிக்குப் பிடித்தது என்று இருவரும் அரட்டையில் ஈடுபட்டனர்!

இடையே எப்படியோ மித்ரா, சந்தனாவின் மடிக்கு வந்து சேர்ந்திருந்தாள்!

"மிச்சி வீட்டிலே பகல்லே யாரும் கிடையாதா? அவன் பெரியவர்களோட..." என்று சந்தோஷமாக அளந்து கொண்டிருந்த சிறுமியின் குரல் சட்டென நின்று விட, அவசரமாகச் சந்தனாவின் மடியிலிருந்து குதித்துக் கீழிறங்கினாள் அவள்!

"மித்ரா!" என்ற அதட்டலும், மாடிப்படியில் கேட்ட அழுத்தமான காலடிச் சத்தமும் காரணத்தை விளக்கிவிட, அதுவரை மறக்கப்பட்டுப் பக்கத்தில் கிடந்த பொம்மையைத் தூக்கிச் சிறுமியின் கையில் கொடுத்தாள் சந்தனா.

அவசரத்தில் தடுமாறிப் பொம்மையைத் தவற விட்டு, மீண்டும் எடுத்துக் கொண்டு அவள் விரைகையில், அவளுடைய தந்தை அங்கேயே வந்துவிட்டான்!

"இங்கே என்ன வேலை உனக்கு?" என்று அவன் அதட்டிய போது, சந்தனாவுக்கே திக்கென்றது!

அச்சத்தில் கண்கள் விரிய விழித்த மித்ரா, சட்டென, சந்தனாவைக் கை காட்டினாள்!

"இ...இந்த ஆன்ட்டிதான்... ஆன்ட்டிதான் வா வா என்று, என்னைக் கூப்பிட்டு..." என்று குரல் நடுங்கக் கூறினாள்.

ஒரு கணம் பிரமித்த போதும், சந்தனாவுக்கு உடனே விஷயம் புரிந்தது!

தந்தையின் கோபத்துக்கு அஞ்சிய சிறுமி, தான் தப்பிப்பதற்காகப் பொய் சொல்லியேனும், அதைத் திசை திருப்பப் பார்க்கிறாள்!

சந்தனாவின் திசைக்கு!

ஆனால், 'சும்மா ஆடுகிற ஒன்று, கொட்டுக் கண்டால்...' என்று சொல்வார்களே என்று எண்ணியவாறே சின்னவளைப் பார்த்தாள் சந்தனா.

மித்ராவின் பெரிய விழிகளில் கலக்கத்தைக் காணவும், சட்டென சுதாரித்து, "ஆமாம் மிஸ்டர் தீபன், உடன் விளையாட யாரும் இல்லாமல், குழந்தை கீழே போரடித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். அதனால் தான் கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம் என்று கூட்டி வந்தேன்!" என்று பழியைத் தன் பேரிலேயே போட்டுக் கொண்டாள்!

மித்ராவின் பெரிய கண்கள் மீண்டும் விரிந்து, இப்போது தந்தையையும், சந்தனாவையும் மாறி மாறிப் பார்த்தன.

மித்ராவை விடப் பெரியவர்கள் என்றாலும், வகுப்புப் பிள்ளைகளோடு நன்றாகவே பழகும் வழக்கத்தால், அவளது மனதில் இருப்பதைச் சந்தனாவால் ஊகிக்க முடிந்தது!

சந்தனா காட்டிக் கொடுக்காததால், அவளைப் பற்றி நன்றியுணர்ச்சி! அவளைப் பொய்யாக மாட்டி வைத்த கூச்சம்!

கூடவே தந்தை இதை நம்புவானோ, மாட்டானோ என்ற கலக்கம்!

தீபனோ, "அடடா! என்ன இரக்க குணம்! அப்படியே தெருவில் இறங்கிப் போய், அங்கே பிச்சையெடுத்துத் திரிகிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதுதானே?" என்றான் இளக்காரமாக!

பழமொழி ரொம்பவே சரிதான்! ஓர் இணுக்குக் கிடைத்ததும், எவ்வளவு அவமதிப்பாகப் பேசுகிறான்! மித்ராவைக் காட்டிக் கொடுக்காமல், இவனை உணர வைப்பது எப்படி என்று சந்தனா யோசிக்கையிலேயே, அவன் தொடர்ந்தான்.

"குழந்தைக்குப் போரடிக்கிறதே என்று இந்தம்மா விளையாட்டுக் காட்டினாளாமே! யாரிடம் இந்தக் கதை! தனியே இருந்த பிள்ளையை, யாரும் அறியாமல் பிடித்து வந்து, என்னைப் பற்றித் தூண்டித் துருவி, விசாரித்துக் கொண்டிருக்கிறாய்! இப்போது, கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன் என்பதால், இந்தக் கதை விடுகிறாய்! இந்த மாதிரிப் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு, நான் ஆளல்ல! அதை முதலில் தெரிந்து கொள்!" என்றான் கடுமையான குரலில்!

சந்தனாவுக்கும் சீற்றம் மிகுந்துவிட, "அப்படி எதை விசாரித்து அறிந்து விடுவேன் என்று இந்தப் பயம்? அங்கே யுஎஸ்சில் அடுக்கடுக்காய்ச் செய்துவிட்டு வந்த கொலைகளைப் பற்றியா? அல்லது, கொள்ளைகள் பற்றியா? எதற்காக இப்படிப் பயந்து நடுங்குகிறீர்கள்?" என்று ஆத்திரத்துடன் கேட்டு விட்டாள்.

ஒரு கணம் திகைத்துப் பேச்சிழந்து நின்ற தீபன், சட்டெனத் தலையைப் பின்னே தள்ளி, வாய்விட்டு நகைத்தான்!

மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்க்குள் உலகத்தைப் பார்த்த யாசோதைக்குக் கூட, இவ்வளவு பிரமிப்பு ஏற்பட்டிராது!

வரிசைப் பற்கள் பளிச்சிட, கனைப்போ காட்டுத்தனமோ இல்லாமல், இவனுக்குப் போய், இப்படி ஒரு சிரிப்பா?...

சந்தனா வியந்து நிற்க, மித்ரா மகிழ்ச்சியோடு கையைக் கொட்டிக் குதித்தாள்.

"ஹைய்யா! அப்பா சிரிச்சாச்சுது! அப்பாவுக்குக் கோபம் போயாச்சுது!"

'அப்பா' வை மட்டும் தமிழில் சொல்லி அவள் குதித்தது, சந்தனாவிடமும் புன்னகையை வரவழைத்தது!

அவன் சிரிப்பு மறைய, சந்தனாவைக் கூர்ந்து ஆராய்ந்தான்.

அதன் பின் "நடிப்பு பிரமாதம்!" என்றான்.

"என்ன நடிப்பு?" என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டாள் சந்தனா.

பெரியவர்களின் குரல் மாறுபடுவதைக் கவனித்த மித்ரா, அவர்கள் இருவரும் வெட்டுவது போலப் பார்த்து நின்ற அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்!

"என்ன நடிப்பா? அது தெரியாமலா நிஜம்போல, அப்படி நடித்தாய்? அடேயப்பா! ஊகூம்! இவ்வளவு கெட்டிக்கார நடிகையை வீட்டில் வைத்துக் கொண்டு, என்னால் நிம்மதியாக இருக்கவே முடியாது! அதனால், சீக்கிரமே வேறு இடம் பார்த்துக் கொண்டு, இங்கிருந்து போய்விடு தாயே!" என்றான் தீபன்!

வேறு இடம் பார்ப்பதா?

அன்று அடைந்த தோல்விகள் சந்தனாவின் மனதில் பவனி வந்தன!

இவன் வேறு, சும்மாச் சும்மா போ போ என்று கொண்டு!

அப்படிச் சொல்வதைக் கேட்க நேரும் போது, அடுத்தவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று யோசிக்கவே தோன்றாதா?

வருத்தத்தை மறைத்து, எரிச்சலைக் காட்டி, "அதை என்னை இங்கே அன்போடு அழைத்து வந்த உங்கள் அம்மா சொல்லட்டும் போய்விடுகிறேன்!" என்றாள் அலட்சியமாக!

தீபனின் முகம் கன்றியது!

அவனுடைய அம்மாவாவது இவளைப் போகச் சொல்வதாவது! நடக்கிற காரியமா?

"அம்மாவைத்தான் நன்றாக மயக்கி வைத்திருக்கிறாயே!" என்றான் அவன் கைத்த குரலில்.

"ஆமாம்! மீனாட்சி ஆன்ட்டி பச்சைக் குழந்தை! சாக்லேட்டைக் கொடுத்து மயக்கி விட்டேன்!" என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் சந்தனா.

"என்னது?"

நிமிர்ந்து, "இது ஆன்ட்டி எனக்குக் கொடுத்திருக்கும் அறை! இங்கிருந்து நீங்கள் வெளியே போனால், நான் என் வேலையைப் பார்க்க வசதியாக இருக்கும்!" என்றவள், அவன் இளக்காரமாக ஏதோ சொல்ல வாய் திறக்கவும், அவசரமாக, "இந்த வேலையை!" என்று, அருகில் அரை மீட்டர் உயரத்துக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளி நோட்டுப் புத்தகங்களைக் காட்டினாள்!
கட்டின் மேலே இருந்த காகிதத்தில் 'ஐந்தாம் வகுப்பு, மாதத் தேர்வுப் புத்தகம், தமிழ்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை, அவன் உற்றுக் கவனிப்பதைக் கண்டதும், அவளுக்குச் சுருசுருவென்று, உள்ளே புகைந்தது!

எதிலும் சந்தேகமா? விட்டால், மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிட்டுக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தையும் சோதிப்பான் போல!

"நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நான் மனச்சாட்சிப்படி வேலை செய்கிறவள்! இந்தக் காலத்தில், தமிழ் நோட்டுகளைச் சரியாகத் திருத்த, நேரம் அதிகம் பிடிக்கும்! அதனால், தயவு பண்ணிச் சற்று சீக்கிரமாக இடத்தைக் காலி செய்தீர்கள் என்றால், நான் வேலையைத் தொடங்க வசதியாக இருக்கும்!" என்றாள் குரலில் சிறு எள்ளலை விரவி!

ஆனால், "சற்று முன், என் மகளை ஏமாற்றிக் குல்லாப் போட்டுக் கொண்டிருந்த போது, இந்த மனசாட்சி எங்கே...கொஞ்சம் ஓய்வெடுக்கப் போயிருந்தது போல!" என்று தீபன் அவளது குரலிலேயே திருப்பிக் கொடுக்கவும், அவளுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது!

ஆனால், இவன் கூடச் சேர்ந்து சிரிக்கிறவன் இல்லையே!

அல்லது சிரிப்பானோ?

இப்படித்தான் என்று நம்ப முடியாத பிறவி! எதற்கு வம்பு?

முகம் மாறாமல் காத்து, "என்ன செய்வது? சில பேரின் சகவாசத்தில், உலகமே மறந்து போகிறது! வேறு சில பேரைப் பார்க்கிற போது தானே, கஷ்டமான கடமைகள், அவசரமாக நினைவு வருகின்றன!" என்றாள் நக்கலாக அவள்.

இப்போது, அவளைக் கூர்ந்து நோக்கினான் தீபன்.

பிறகு, "கவனி! என் பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு! அளவு மீறி, அதைச் சோதிக்காமல் இருப்பது, உனக்கு நல்லது!" என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து சென்றான்.