» காக்கும் இமை நானுனக்கு 11

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

ரதியின் பெயர், முன்னொரு தரம் அவர்களிடையே வந்திருக்கிறது. திருமணமாகி அந்தப் பத்து நாட்களுக்குள் அந்த வயதுக்கேற்ப மகிழ்ச்சியோடு இருந்ததாகச் சொன்னான்.

புதுமண மகிழ்ச்சி.

ஆனால், தேவதாசாக, அதே நினைவில் தான் உருகிக் கொண்டிருப்பதாக அவன் கூறவில்லை. அப்படிக் காட்டிக் கொள்ளவும் இல்லை.

இப்போது என்ன சொல்லப் போகிறான்?

அத்தோடு, அவளது இறப்புக்கும், இந்தப் பாதுகாவலர்கள் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்?

மீண்டும் புவனேந்திரன் பேசத் தொடங்குமுன், என்னென்னவோ கேள்விகள் மனதில் குவிந்த போதும், நளினிக்கு எதையும் வாய்விட்டுக் கேட்கத் தோன்றவில்லை.

ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவளைப் போல, அவனையே பாராத வண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

இன்னும் ஒரு சிறு இடைவெளியின் பின், தொண்டையைச் செருமிக் கொண்டு, புவனேந்திரனே தொடங்கினான்.

"ரதியை நான் மணந்தது, அவள் இறந்தது எதுவுமே, கோவையில் கூட யாருக்குமே தெரியாது," என்று தொடங்கியவன், தொடர்ந்து அதன் காரணத்தை விளக்கினான்.

"என் அப்பாவும் அம்மாவும் இறந்தது, என் இருபத்தொன்றாம் பிறந்த நாளைக்கு இரு மாதங்கள் முன்பு. தொழில் துறை நிர்வாகம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும் போதே அப்பாவுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டுமிருந்தேன். நம்முடைய நூற்பு ஆலை, நூல் விற்பனை தொடர்பாக, நான் அகமதாபாத்துக்குப் போய் வருவது உண்டு. அம்மா, அப்பாவுக்குப் பிறகு, பாட்டி வந்து என்னை அழைத்தது, நான் வர மறுத்தது எல்லாம், தண்டோரா போட்டுப் பறையறிவிக்காத குறையாக இங்கே எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

"அம்மா இருக்கும் வரை என்னையும் வெறுத்து இருந்தவர்களுக்கு, இப்போது என்ன திடீர் உருக்கம்? அம்மா இறந்ததால், எனக்கென்ன தீட்டா கழிந்து விட்டது? அம்மா இருந்தாலும், இல்லாவிட்டாலும், என் அம்மாவின் வயிற்றில் நான் பிறந்தது மாறி விடுமா என்ன?

"இப்படியெல்லாம் நினைத்து, அந்த ஆத்திரத்தில் நான் இங்கே வர மறுத்ததோடு, அப்போதைக்கு, அந்த விஷயம் முடிந்து போனது.

"ஆனால், பெற்றோரின் இறப்பு பற்றி வேதனை - அப்போதுதான் கொஞ்சம் அடங்கத் தொடங்கியிருந்தது - இரு மடங்காக மீண்டும் என்னை வாட்டத் தொடங்கிவிட்டது. கோவை வீட்டில் தனியே இருக்கப் பிடிக்காமல், வெளியூர் வேலைகளை அதிகமாக இழுத்துப் போட்டுக் கொண்டு, அங்குமிங்கும் அலைந்து திரிந்து செய்தேன். அப்படி ஒரு தரம் அகமதாபாத் சென்ற போதுதான், ரதியைச் சந்தித்தேன்.

"அவளுக்கும் சின்ன வயதுதான். அப்போது பதினெட்டு தான் ஆகியிருந்தது. என்னைப் போலவே, அவளுக்கும் உறவென்று யாரும் இல்லை. எனக்குப் பாட்டி இருந்தாலும், அவர்களைத்தான் அப்போது நான் உறவாக ஏற்கவே இல்லையே. ரதி இல்லத்தில் வளர்ந்தவள். அலுவலுக்கான படிப்பு கற்றுக் கொடுத்திருந்தார்கள். தற்காலிகமான அலுவலக வேலைகளுக்கு அனுப்புவார்கள். அப்படி எனக்காக வந்தபோது, முதல் பார்வையிலேயே எங்கள் இருவருக்கும் பிடித்துப் போயிற்று. அவளைப் பார்க்கையில், நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த பெற்றோரின் பிரிவுத் துயரத்தை என்னால் மறக்க முடிந்தது. ஒரே வாரத்தில் திருமணம் நடந்தது. எப்படி இருந்தோம் என்று தான் சொல்லியிருக்கிறேனே.

"மணமாகிப் பத்தாவது நாள், அவள் காணாமல் போனாள்!... கடத்தப்பட்டாள்...!"

"என்னது?!" என்று நளினி அதிர்ந்தாள்.

சூனியத்தை வெறித்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தவன், சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான்.

"ஆமாம்! ரதி கடத்தப்பட்டாள். என் மனைவி என்கிற ஒரே காரணத்துக்காக, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பணக்காரனுடைய மனைவியைக் கடத்தினால், அவனிடம் நிறையப் பணம் பறிக்கலாம் என்று திட்டமிட்ட மனிதத்தன்மையே இல்லாத ஒரு கும்பலால் அவள் கடத்தப்பட்டாள். கடத்திக் கொலையும் செய்யப்பட்டாள்."


"ஐயோ!" என்று பதறி எழுந்தாள் நளினி. "கொ...கொலையா?"

அமைதியிழந்து நடந்து கொண்டிருந்தவன், அவள் எதிரில் வந்து நின்றான். "ஆமாம்! கொலை தான். அந்த அரக்கர்களிடம், நான் பணத்தையும் இழந்து மனைவியையும் பறிகொடுத்தேன்.

"அவர்களிடமிருந்து, ரதி தப்ப முயன்றாளா, அன்றி அடையாளம் காட்டி விடுவாள் என்று பயந்தோ, இரண்டு, மூன்று என்று, திரும்பத் திரும்பக் கேட்டு, என்னிடம் பத்து லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அவளையும் கொன்று விட்டார்கள், அந்த வெறியர்கள். பாவம்! ஏழைப் பெண். பணத்துக்குக் கஷ்டப்பட்டாலும், எங்கோ நிம்மதியாக உயிரோடு இருந்திருப்பாள். அவளைச் சிறப்பாக வாழ வைப்பதாக நினைத்துச் சாகடித்து விட்டேன். அந்தக் கொலைகாரர்கள் கையால் கொல்லப்படுமுன், ரதி என்னமாகத் தவித்திருப்பாள். அவளை இழந்து, அந்த இருபத்தோரு வயதில் நான் என்ன பாடுபட்டிருப்பேன்? சொல்லு. என் அன்புக்கு உரியவள் என்கிற காரணத்தால், உனக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று, உன்னை நான் பாதுகாக்க முயல்வது, எப்படித் தப்பாம்?" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அவளது தோளைப் பற்றி உலுக்காத குறை.

ஆனாலும், இப்போதும், இந்தப் பாதுகாவலர்கள் விஷயத்தை அவளால் முழுதாக ஒத்துக் கொள்ள முடியவில்லை.

"ரதி சின்னப் பெண், புவனன். அத்தோடு, இல்லத்தில் வளர்ந்ததால், சில விஷயங்கள் தெரியாமலே வளர்ந்திருக்கக் கூடும்."

"என்னென்ன விஷயங்கள்?"

"எச்சரிக்கை உணர்வு... பாதுகாப்புக் கலைகள். நான் அப்படியில்லை."

அடுத்த வினாடி நடந்ததை, நளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை!

மின்னல் விரைவுடன் அவளது இரு கரங்களையும் பின்புறமாகச் சேர்த்துப் பிடித்து, ஒரு காலால் அவளது இரு கால்களையும் சுற்றிப் பிணைத்து, மறு கையால் அவளது தாடையைப் பற்றினான் புவனேந்திரன்.

அனிச்சையான திமிறல் பலனற்றுப் போகவும், திகைப்புடன் அவனைப் பார்த்தாள் அவள்.

"என்னவோ பாதுகாப்புக் கலைகள் என்றாயே. அவற்றைப் பயன்படுத்தி, உன்னை விடுவித்துக் கொள்ளேன், பார்ப்போம்," என்றான் புவனன் ஏளனமாக.

தன்னால் முடியாது என்று நன்றாகவே புரியவும், பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

பார்வை இளகக் குனிந்து, அவளது இதழ்களில் லேசாக முத்தமிட்டு, அவளை விடுவித்தான் அவன்.

"பார், அவர்கள் வன்முறையைத் தொழிலாகக் கொண்டவர்கள். இந்தப் போர்க்கலைகள் எல்லாம் அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு! அதனால் தான், அதே கலைகளைத் திறம்படக் கற்றவர்களைப் பயன்படுத்தி, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன், நான்! ஒரு முறை சூடு பட்டவன் நான். இன்னொரு பேரிழப்பை என்னால் தாங்க முடியாது. நம் ஈடுபாடு வெளியே பரவிவிட்டது. அதனால், உனக்கு ஆபத்து வந்துதான் தீரும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே, இந்த மனிதர்களின் காவல் உனக்கு இருக்கும்வரை, என்னால் பெருமளவு நிம்மதியுடன் மற்ற வேலைகளைப் பார்க்க முடியும். அதில்லாமல், ஒவ்வொரு கணமும், நீ பத்திரமாக இருக்கிறாயோ, இல்லையோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. அதுவும் உனக்கோர் ஆபத்து நேர்ந்தால், அதைத் தாங்கவும் என்னால் முடியாது. அதனால்... அதனால், ஒன்று, இந்தக் காவலை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது, உனக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய காரணத்தை நீக்க வேண்டும். புரிகிறதில்லையா? நாம் பிரிய வேண்டும். இவை தவிர, மாற்று வழியேதும் கிடையாது!" என்று முடித்தான் அவன்.

ஆனால், அவள் பதில் சொல்லு முன்னரே, அவளது கையைப் பற்றி முத்தமிட்டு, "பிரிவே பரவாயில்லை என்று சொல்லிவிடாதே, கண்மணி!" என்றான் கொஞ்சுதலாக.

கெஞ்சுதலாகவும்.
அவளும் தான் அப்படி எப்படிச் சொல்லுவாள்?

தன் சம்மதத்தைச் சொல்லாமல் சொல்லும் விதமாக அவன் தோளில் சற்று நேரம் சாய்ந்திருந்தாள் அவள்.

ஆனால், அப்போதும் அவளது குடியிருப்புப் பகுதியில் இந்தக் காவலர் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அவளைக் குழப்பியடித்துக் கொண்டிருந்தது.

குடும்ப விவகாரங்களில் தலையிடா விட்டாலும், அங்கே எல்லோருமே ஒருவருக்கொருவர் இலகுவாகப் பேசிப் பழகுகிறார்கள். கேலியும் கிண்டலும் எளிதாக வரும்.

'புதிதாகக் கார் வாங்கியவர், இரண்டே தரம் 'என் கார், என் கார்' என்று விட்டாலே, அவர் 'கார் பந்தா' ஆகி விடுவார். அதற்கு மேல் போனால் 'போர் பந்தா.'

அந்த மாதிரி இடத்தில், முன்னும் பின்னுமாய் மெய்க் காப்பாளர்கள் என்றால், அவளுடைய குடும்பத்துக்கு என்ன பெயர் வைப்பார்கள்? இது ஒரு பக்கம் என்றால், புவனேந்திரன் அஞ்சுகிற மாதிரியான ஆபத்து எதுவும் தனக்கு வரக்கூடும் என்று, அவளால் ஒப்பவும் முடியவில்லை. இதில் எதைச் சொல்லி இந்த அன்பனுக்குப் புரிய வைப்பது?

"என்ன யோசனை, நளினி?" என்று கேட்டான் புவனேந்திரன்.

"வேறென்ன? அங்கே இந்த இருவரையும் எப்படி இயல்பாகப் பொருந்தச் செய்வது என்றுதான்," என்று உண்மையைச் சொன்னாள் அவள்.

"பொருந்துகிறார்களோ, இல்லையோ, அவர்கள் இருக்கப் போவது கட்டாயம்," என்றான் அவன் இறுகிய குரலில்.

கடைசி முயற்சியாக, "அது மிகவும் பாதுகாப்பான பகுதிதான், புவனன். இதுவரை அங்கே சின்னத் திருட்டு கூட நடந்தது இல்லை. அதனால், கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமா?" என்று கேட்டாள் நளினி.

"பொறுத்து? பொறுத்திருந்து எதைப் பார்ப்பது? உன்னை யாராவது கடத்திக் கொண்டு போகிறார்களா, இல்லையா என்றா? ஒரு வேளை, கடத்திப் போய் விட்டால்? உன் விஷயத்தில், ஆபத்து வருகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, நான் தயாரில்லை. அதனால், இந்த மாதிரி அசட்டுப் பேச்சு இனி வேண்டாம்," என்று கண்டிப்பான குரலில் கூறி முடித்தான் புவனேந்திரன்.

நளினியின் கற்பனைதானோ, என்னவோ, குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும் தன்னை இளக்காரமாகப் பார்ப்பது போல, ஓர் எண்ணம்.

சங்கத் தலைவர், செயலாளர் முதலியோரிடம், சுதர்சனம் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சக்திவேல், அவனுடைய கூட்டாளி பற்றிச் சொல்லிவிட்டு வந்தார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டுக்கு வேண்டியவர்கள் என்று மட்டுமே.

ஆனால், அவர்கள் இருவரும் சும்மாவே அங்கே இருப்பதும், அவள் வெளியே சென்றால் மட்டும் கூட வருவதும், பிறர் கவனத்தைக் கவராது இருக்குமா, என்ன?

அவரவருக்கு அவரவர் பிரச்சனை... இதில் நம்மைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஏது நேரம் என்று மகளுக்குச் சமாதானம் சொன்ன போதும், சுதர்சனத்துக்குமே, இந்தப் பாதுகாவல் இந்த இடத்தில் சற்று அதிகப்படியாகத்தான் தோன்றியது.

புவனேந்திரனின் நிலைமைக்கு அது தேவையாக இருக்கலாம். அப்படித்தான் என்று, ஒரு சமயத்தில் மனைவியிடம் அவனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசியவரும் கூட! ஆனால், அவனுடைய மனைவியாக ஆகாத நிலையில் எதற்கு என்ற எண்ணம் தான்.

ஆனாலும் மகளது நன்மைக்காக என்று எண்ணித்தானே செய்கிறான் புவனேந்திரன் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டார்.

பெருமளவு மகளையும்.

ஆனால், இருவருமே, புவனேந்திரனின் பிடிவாதத்துக்காகப் பொறுத்துப் போனார்களே தவிர, இந்தக் காவல் அவசியம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் வரவில்லை.

புவனேந்திரனையே அடியாட்களோடு அலைவது போல இருக்கிறது என்று கூறும் சகுந்தலாவும், கணவனைப் போலவே பொறுத்துப் போனாள்.

பொறுத்துப் போனாலும், சற்று வசதியான மத்திய தரத்து வாழ்க்கையில் பழகியிருந்த அந்தக் குடும்பத்துக்குப் புவனேந்திரனின் அச்சம் புரிபடவே இல்லை.

ஆனால், அவன் அதில் பிடிவாதமாக இருக்கவே, அவனை இழக்க விரும்பாமல், அவனது நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள் எனலாம்.

செல்வம், செல்வாக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், மகள் அவனை விரும்புகிறாள் என்பதும் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆயினும், இந்தக் கூண்டுக் கிளி வாழ்வை மகள் எவ்வளவு நாள் தாங்குவாள் என்று, சகுந்தலாவுக்குச் சந்தேகம் தான்.

நளினியைப் பொறுத்த வரையில், தந்தையுடைய காரில் மட்டுமே வேலைக்குப் போவாள். அப்போதும் காவலர்கள் கூட வருவதுதான். ஆனால், முன் போல ஆட்டோ ஓட்டியிடம் ஏதாவது சொல்வது போன்றவற்றுக்கு இடம் இராதல்லவா?

கார் கிடைக்காத போதும், மற்ற சமயத்திலும் வீடே கதியென்று இருக்கத் தொடங்கினாள்.

ஆனால், அப்போதும் நேரத்தை வீணாக்காமல், தனக்கும் தங்கைக்கும் துணிமணிகளில், மணி, கண்ணாடி, கல், சம்கி போன்றவற்றைக் கொண்டு வேலைப்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள்.

பிடித்தமான வேலைதான். ஆனால், இதுவே சில சமயங்களில் நளினிக்கு எரிச்சலூட்டவும் செய்தது.

முனைந்து வேலைச் செய்கிறபோது, சில சமயம், உரிய கற்கள், கோந்து போன்றவை தீர்ந்து போகும். ஒரு தரம் அந்தக் கோந்து கொட்டிக் காய்ந்து போயிற்று. முன்பானால், உடனே ஆட்டோவிலோ, பஸ்சிலோ சென்று தேவையானதை வாங்கி வந்து, மறுபடியும் வேலையைத் தொடங்கி விடுவாள்.

இப்போதானால், சகுந்தலாவிடம் சொல்லியனுப்பி வாங்க வேண்டியிருந்தது.

அன்றாட வேலைகள், திருமண வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, அவள் சென்று வாங்கி வந்தாலும், சில சமயங்களில் அவை தவறாகிப் போய், நளினியின் பொறுமையைச் சோதித்து, மூச்சு முட்டுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

மற்றப்படி, பட்டுச் சேலைகள், நகைகள் போன்ற அனைத்தையும், தாயையே வாங்கி வரச் சொல்லி விட்டாள், நளினி.

ஏற்கெனவே, மகளின் திருமணத்தின் போது தேவைப்படக் கூடியவை என்று சுதர்சனமும், சகுந்தலாவும் அவ்வப்போது வாங்கிச் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்ததால், அப்போது பெரிய அளவில் எதையும் வாங்கும்படி நேரவும் இல்லை.

ஆனால், நளினியே நேரடியாகச் சென்று வாங்க வேண்டிய சில பொருட்களும் இருந்தன.

அவளது உள்ளாடைகளை எப்போதுமே அவளே தான் வாங்குவது வழக்கம். வாசனைப் பொருட்கள், மேக்கப் சாமான்கள் போன்றவற்றையும் தானே தேர்ந்தெடுப்பாள். இப்போதும், அந்த வழக்கத்தை மாற்ற, நளினி விரும்பவில்லை.

அதிலும் முக்கியமாக உள்ளாடைகளை!

அதே சமயம், இரு அன்னிய ஆண்கள் புடைசூழச் சென்று, உள்ளாடையைத் தேர்ந்தெடுப்பதும் அவளுக்கு மிகவும் அசூசையாகப் பட்டது.

ஆனால், இதைப் புவனேந்திரனிடம் சொன்னால், அவளது உணர்வை அவன் நிச்சயமாகப் புரிந்து கொள்ள மாட்டான் என்று தோன்றவும், அவனிடம் சொல்லாமலே கடைக்குப் போய்த் தனக்கு வேண்டியதை வாங்கி வந்துவிட நளினி முடிவு செய்தாள்.

ஆனால் அந்த முடிவு, அவளது திருமணத்தையே நிறுத்தி விடும் என்று, பாவம் அவள் எதிர் பார்க்கவே இல்லை.

Advertisement