» காக்கும் இமை நானுனக்கு 12

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

தனியே கடைக்குச் செல்ல, நளினி பிடிவாதமாக முடிவெடுத்ததின் இன்னொரு காரணம், புவனேந்திரன் ஊரில் இல்லாதது.

இருவருக்கும் அறிமுகமாகி இந்தச் சில மாதங்களில், அவன் சொல்லாமலும், எங்கே என்ன காரியம் என்று விவரம் சொல்லாமலும், குறைந்தது ஐந்து முறையேனும் புவனேந்திரன் வெளியூர் சென்றிருப்பான். திரும்பி வந்த பிறகும், அது பற்றி அவன் பேசுவதில்லை.

திருமணம் நிச்சயம் ஆன பிறகும், அவன் அப்படிச் சென்றது, அவளுக்கு வருத்தத்தோடு சற்றுக் கோபமாகவும் இருந்தது.

புவனேந்திரனின் கடந்த காலம் அவளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலம்? அதிலிருந்து அவன் அவளை எப்படி ஒதுக்கலாம்?

அவளுக்கு மட்டும் அத்தனை கட்டுப்பாடுகள், காவலர்களின் கண்காணிப்பா?

எவ்வளவோ ஆத்திரம் வந்த போதும், அவன் சிரிப்பும் விளையாட்டுமாகப் பேசத் தொடங்கியதும், பதிலுக்கு, அவனைப் போலவே பேசத் தோன்றியதே தவிர, கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள அவளுக்கு வரவே இல்லை.

அன்று அவனிடம் பேச வேண்டும் போல, நளினிக்கு ரொம்பவும் ஆவலாக இருந்தது.

ஒரு கருநீல வண்ணச் சுரிதார் செட்டுக்கு, வண்ணக் கல்லாலேயே வட்ட வட்டமாய் அங்கங்கே பூவேலை செய்து முடித்திருந்தாள். அணிந்து பார்க்கும் போது மிக அழகாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை புவனனோடு கலந்து கொள்ள, அவள் மிகவும் விரும்பினாள்.

அதற்காக, அவனை செல்லில் பிடிக்கலாம் என்று பார்த்தால், செல்லை அணைத்து வைத்திருந்தான். ஃபோன் செய்து பார்த்தபோதுதான், அவளிடம் சொல்லாமலே, புவனேந்திரன் வெளியூர் சென்றிருந்தது, அவளுக்குத் தெரிய வந்தது.

மீண்டுமா என்று எண்ணியவளுக்கு, முகம் கறுத்துச் சிறுத்துப் போயிற்று.

அவள் மட்டும், அவளது ஒவ்வொரு கணத்துக்கும், பாதுகாவல் என்ற பெயரில், அவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அவன் விருப்பம் போலச் சுற்றுவானா?

குறைந்த பட்சமாய், வெளியூர் போகிறேன் என்று கூடவா சொல்லக் கூடாது?

அதையெல்லாம் அறியும் உரிமை உனக்குக் கிடையாது என்று வாய் வார்த்தையாகச் சொல்லாமல், செயலில் செய்து காட்டி, அதற்கு அவளைப் பழக்குகிறானா? இன்னொருவர் மூலம் அறிய நேரும் போது, இன்றைய நிலையில், அவளுக்கு அது எவ்வளவு பெரிய அவமானம் என்று கூடவா யோசிக்கக் கூடாது?

இதையெல்லாம் ஏற்று வாழ்வதற்கு அவள் ஒன்றும் முதுகெலும்பே இல்லாத புழு அல்லவே!

அல்லது, அவனது பணத்துக்காக அவள் எதையும் பொறுத்துப் போவாள் என்று எண்ணினானா?

அப்படி மட்டும் எண்ணியிருந்தான் என்றால், அவனுக்கு விரைவிலேயே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

இது பற்றிக் கட்டாயமாகப் புவனனிடம் பேசியாக வேண்டும் என்று எண்ணியவளுக்குத் தனக்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களை உதறி விட்டுத் தனியே கடைக்குச் சென்றாக வேண்டும் என்பதும் உள்ளூர உறுதியாயிற்று.

புவனனிடம் ஊதியம் பெறுகிறவர்களிடம் தன் அதிகாரம் செல்லாது என்பதால், அவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாள். தவிர, மற்ற யாரிடமும், புவனனிடம் கூடத் தான் தனியே செல்வதை மறைக்க அவள் எண்ணவில்லை.

அவளிடம் தெரிவியாமல் அவன் வெளியூருக்கே சென்று வரும் போது, அவள் உள்ளூரில் ஒரு கடைக்குச் செல்வதில் என்னவென்று தப்புக் காண முடியும்?

இப்படித்தான் நளினி நினைத்தாள்.

ஆனால்...
சக்திவேலுக்கும், அவனுடைய கூட்டாளிக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது, நளினிக்கு அப்படி ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.

காவலர்கள் இருவரும் இருப்பது, பெரும்பாலும் முன் வராண்டாவில் தான். நளினியும், புவனேந்திரனும் உட்கார்ந்து வேலை செய்த இடம்.

வாயில் வழியே, உள்ளே, வெளியே யார் சென்றாலும், இவர்களது பார்வைக்குத் தப்ப முடியாது.

ஆனால், 'லிஃப்ட்' வேலை செய்யாத போது செல்வதற்காக, வீட்டின் பின்புறமாக ஒரு படிக்கட்டி இருந்தது. அதற்குச் செல்ல ஒரு கதவும் எல்லா வீடுகளுக்கும் உண்டு.

பாதுகாப்புக் கருதி, அந்தப் பின்புறக் கதவைப் பூட்டி விடும்படி பாதுகாப்பு நிறுவனத்தால் ஆலோசனை கூறப்பட்டு, அப்படி அந்தக் கதவு பூட்டப்பட்டும் இருந்தது.

எப்போதாவது மின்சாரம் தடைப்பட்டு, லிஃப்டைப் பயன்படுத்த முடியாத போதும் கூட, சக்திவேலிடம் தெரிவித்து விட்டே அந்தக் கதவைப் பயன்படுத்தும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தச் சமயங்களில் இருவரில் ஒருவர் அந்தப் பக்கம் காவலிருப்பார்கள்.

பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளைப் புவனேந்திரன் அப்படியே கடைப்பிடிப்பான். அதில் அரை குறைத்தனமே கிடையாது. அவன் ஏற்பாட்டில் ஏற்ற பணி என்பதால், அவனுடைய வருங்கால மனைவியின் வீட்டிலும் அதே நிலைமையைப் பாதுகாப்பு நிறுவனமும், அதனுடைய பணியாளர்களும் எதிர்பார்த்தனர்.

அன்றுவரை, அவர்கள் குறைப் படும்படியாக எதுவும் நடக்கவும் இல்லை. அதனால், அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவும் இல்லை.

எனவே, அந்தக் கதவின் வழியே, வீட்டை விட்டு வெளியேறி, நளினி கடைக்குச் செல்வது இலகுவாகவே முடிந்து விட்டது.

என்ன வாங்க வேண்டியிருந்தது என்பதைச் சொல்லியதால், மகளை அறிந்த தாயும் அவளைத் தடுக்கவில்லை. பிளஸ் டூ தங்கைக்கும் அதுவே சரியாகப் பட்டது.

பல நாட்களுக்குப் பிறகு, காவலர் புடைசூழச் செல்வது, அதை யார் யார் பார்த்து என்னென்ன கிண்டலடிக்கிறார்களோ என்பன போன்ற எந்த விதக் கட்டுப்பாடோ, குன்றலோ இல்லாமல் வெளியே செல்கையில், வெகு சுதந்திரமாக, மிகச் சுதந்திரமாக நளினி உணர்ந்தாள்.

அந்தச் சுகத்தில், திட்டமிட்டதை விடவும் அதிக நேரம் வெளியே சுற்றியலைந்து, இன்னும் பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு, அவள் வீடு திரும்பினால், சிவந்த கண்களுடன், இறுகிய முகத்துடன் புவனேந்திரன் அவள் வீட்டில் உட்கார்ந்திருந்தான். உண்ணவும், அருந்தவுமாக, அவன் முன்னே வைக்கப்பட்டிருந்தவை தொடக்கூடப் படாமல், அப்படியே இருந்தன.

ஒரு கணம், நளினிக்குத் திக்கென்றுதான் இருந்தது.

ஆனாலும், அவள் அப்படியென்ன தப்பு செய்து விட்டாள்? அவனது அசட்டுப் பாதுகாவலை ஒரு தரம் மீறியிருக்கிறாள். மற்றபடி ஒன்றுமில்லையே என்று தோன்றிவிடவும், தானாக அவளது தலை நிமிர்ந்து விட்டது.

வீட்டில் அவளுடைய தந்தை, தாய் இருவருமே பெரும் சிக்கல் தீர்ந்த பெருமூச்சுடன், "வாம்மா!" என்று அவசரமாக அவளை எதிர் கொண்டனர்.

"இதோ வந்து விடுவாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்! அதே போல, வந்து விட்டாய். எல்லாம் கிடைத்ததாடா?" என்றாள் சகுந்தலா. "போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. புவனேந்திரன் அப்போது பிடித்துக் காத்திருக்கிறார்!" என்றாள் குறிப்பாக.

புவனேந்திரன் வெறுமனே காத்திருக்கவில்லை, பார்த்து நடந்து கொள் என்று தாயார் சொல்வது நளினிக்குப் புரிந்தது.

ஆனால், இந்த மூன்று மணி நேரம் சுதந்திரமாகச் சுற்றியலைந்தது, நளினியை வேறு விதமாக எண்ண வைத்தது.


பாதுகாப்பு, பாதுகாப்பு என்று புவனேந்திரன் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. பொன் வண்ணம் பூசியதாலேயே, சிறைக் கம்பிகள் வேறாகி விடுமா? சொந்த வீட்டிலேயே, காசு கொடுத்துக் கைதிகளாக வாழ்வதா?

அவசியமற்றுத் தன்னைத்தானே கைதியாக்கிக் கொண்டதோடு, அவளையும் அந்த நிலைக்கு அவன் தள்ள முயற்சிக்கிறான்.

அந்த நிலையிலிருந்து, தன்னோடு, பாவம்! அவனையும் காப்பாற்ற வேண்டும்.

ஒரு ரதி கடத்தப்பட்டதாலேயே, எல்லாப் பணக்காரர்களுடைய மனைவிமாரும் கடத்தப்பட்டு விடுவார்களா, என்ன? மாட்டார்கள் என்று, அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.

அவனிடம் என்ன மாதிரிப் பேசிப் புரிய வைப்பது என்று, அவள் அவசரமாக மனதுள் ஒத்திகை பார்க்கையில், "உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். சற்று வெளியே போய் வரலாமா?" என்று உணர்ச்சி அடைத்த குரலில் கேட்டான் அவன்.

ஒரு கணம் நளினி யோசித்தாள்.

புவனனோடு எங்கே சென்றாலும், அவனுடைய மெய்க்காவலர்கள் கண் பார்க்கும்... ஏன், காது கேட்கும் தொலைவிலேயே இருப்பார்கள். அப்படி இரு பார்வையாளர்களை அருகில் வைத்துக் கொண்டு, அவளால் இலகுவாகப் பேச முடியாது.

எனவே, "நிஜமாகவே தனியாகப் பேசுவது என்றால், வெளியே போவதை விட, அப்பாவின் அலுவல் அறையில் இருந்து பேசுவது மேல்..." என்றாள், அவனுக்குப் பதிலாக.

அவளது பேச்சின் பொருள் புரிந்தாற் போலப் புவனனின் முகம் சற்றுக் கடுத்தது.

ஆனாலும், அவளது யோசனையை மறுக்காமல், சுதர்சனத்தின் அலுவலக அறைப் பக்கமாக நடந்தான்.

அறைக் கதவுக்கு முடிந்தவரை உட்புறமாகத் தூரச் சென்றவன், அவளும் அருகே வந்ததும், "நான் சொன்னது எதுவுமே, உன் மூளையை எட்டவில்லையா? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று தணிந்த குரலில் சீறினான்.

முட்டாளே என்கிறானா?

"அன்னிய ஆண்களைப் பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு உள்ளாடைகளை வாங்கும் பழக்கம் எனக்குக் கிடையாது!" என்றாள் இவள் வெடுக்கென.

"ஓகோ! நீ உள்ளாடைகளை வாங்கும் போது, உன்னைக் கடத்தக் கூடாது என்று, ஏதேனும் சட்டம் இருக்கிறதா?" என்றான் அவன் எகத்தாளமாக. "அப்படியே ஒரு சட்டம் இருந்தாலும், அவர்கள் வன்முறையாளர்கள். அந்தச் சட்டத்தை எப்படியும் மீறிகிறவர்கள். இது கூடவா உனக்குப் புரியவில்லை?"

பொறுமையிழந்து, "நிறுத்துங்கள், புவனன்! என்ன இது, எப்போது பார்த்தாலும், கடத்தல், கடத்தல் என்று கொண்டு!" என்று ஆத்திரப்பட்டாள் நளினி.

"என்ன செய்வது? எத்தனை முறை சொன்னாலும், அது உன் மண்டையோட்டைத் தாண்டி, உள்ளே போவதாகத் தெரியவில்லையே! அதனால் தான், திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது," என்றான் புவனேந்திரன் பதிலுக்கு ஆத்திரமாகவே. ஆனால், உடனே தணிந்து, "சொன்னால் புரிந்து கொள், நளினி. ஏற்கெனவே பட்ட கடனே எனக்கு முழுதாகத் தீரவில்லை. இன்னும் உனக்காக வேறு கடன்பட வைத்துவிடாதே!" என்றான் கனத்த குரலில்.

"கடனா? என்ன கடன்?"

"எனக்கு மனைவியான பாவத்துக்கு, ஒருத்தி பலியானது போதாதா? உனக்கும் ஏதேனும் நேர்ந்தால், நான் என்ன செய்வேன்? என்னால் தாங்கவே முடியாதும்மா."

எதுவும் நேரத் தேவையே இல்லை என்றால், இவன் ஏன் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறான்? கீறல் விழுந்த பழைய கிராமபோன் இசைத்தட்டு மாதிரி, அதே 'கடத்தலை' உருப் போட்டால், அவளுக்கு எரிச்சல் வராதா? முதலில், இந்தப் பேச்சை நிறுத்தியாக வேண்டும்.

"நீங்கள் பாதிக்கப்பட்டவர், புவனன்! சூடு பட்ட பூனை மாதிரிப் பட்டறிவில் பேசுகிறீர்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், பூனையை விட, ஓர் அறிவு உங்களுக்கு அதிகம் இருக்கிறதல்லவா? அதைக் கொண்டு, யோசித்துப் பாருங்கள். எந்தப் பணக்காரனுடைய மனைவி எப்போது கிடைப்பாள், கடத்திப் போய்ப் பணம் பறிக்கலாம். கூடவே கொல்லலாம் என்று ஊரெல்லாம் வன்முறையாளர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றா நினைப்பது? அப்படி எல்லோரும் எண்ணத் தொடங்கினால் அப்புறம் தொழில் நடத்துவதிலும், பொருள் ஈட்டுவதிலும், யாருக்கு ஆர்வம் இருக்கும்? மனைவியை நேசிப்பவர்கள் எல்லோரும், கையில் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கத்தானே போவார்கள்? அப்புறம் நாட்டின் பொருளாதாரமே நாசமாகி விடாதா?" என்று மனதில் இருந்ததை மூச்சு விடாமல், படபடவென்று பொரிந்து கொட்டினாள்.

அவள் பேசி முடித்த போது, புவனேந்திரனின் கண்களுக்குச் சமமாக, முகமும் கன்றிச் சிவந்து போயிருந்தது.

இறுக மூடியிருந்த உதடுகளும், கை முஷ்டிகளுமாக, அவன் உணர்ச்சிகளை அடக்கப் பாடுபடுவதைக் கண்ட நளினிக்குச் சற்றுப் பரிதாபமாகக் கூட இருந்தது.

ஆனால், இது சொல்லியாக வேண்டிய விஷயம் அல்லவா?

அவன் கற்சிலையாய் நிற்க, அவனை நெருங்கி அவனது கரத்தைத் தொட்டு, "மெய்யாகத்தான் சொல்லுகிறேன், புவனன். ரதிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம் எல்லோருக்கும் நேர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் அப்படி அஞ்சத் தேவையும் இல்லை," என்றாள்.

அவளது விரல்களுக்கு அடியில், புவனேந்திரனின் தோல் மேலும் இறுகுவதை அவளால் உணர முடிந்தது.

அந்த இறுகலின் அடிப்படையான வேதனை புரியவும், அது தாங்காமல், "ஐயோ, வேண்டாம், புவன்!" என்று இரு கைகளாலும் அவனை இறுக அணைத்தாள்.

அவனது கரங்களும் அவளைச் சுற்றிக் கொள்ள, இருவரும் சற்று நேரம் அப்படியே நின்றனர்.

அவனது இறுக்கம் மெல்லத் தளர்வதை உணர்ந்து, அவனது தோளை மெல்ல வருடி, "அனாவசியமாக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள், புவனன்!" என்று வேதனையோடு வேண்டினாள் நளினி.

ஓரிரு கணங்கள் அசையாமல் நின்று விட்டு, ஆறுதலாக வருடிக் கொடுத்த அவளது கைகளைப் பற்றி நிறுத்தினான் புவனேந்திரன்.

"அனாவசியமாகவா?" என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டவன், அவளை நேராக நோக்கி, "ரதிக்கு நேர்ந்த ஆபத்து எல்லோருக்கும் நேர வேண்டிய கட்டாயம் இல்லை என்றாயே. அப்படி நேரவே நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேட்டான்.

பழைய கதைக்கே வருகிறான்.

இதற்கெல்லாம் என்ன உறுதி கொடுக்க முடியும்? வெகு சில வாய்ப்புகள் மட்டும்தானே உண்டு என்றாலும், அதற்காகவேனும் அவள் காவல் கைதியாக வாழ்ந்தே ஆக வேண்டும் எனப் போகிறான்.

உள்ளம் சலிப்புறக் கைகளை விடுவிடுத்துக் கொண்டாள் அவள். "அப்படி வெகு அபூர்வமாக ஏதேனும் நேர்ந்தாலும், என்னைக் காப்பாற்றிக் கொள்ள, என்னால் முடியும்," என்றாள் எங்கோ பார்த்தபடி.

"எப்படியாம்? அன்றைக்கு என்னிடம் மாட்டினாயே, அது போலவா?" என்று ஏளனமாகக் கேட்டான் அவன். "உன்னால் முடியாது என்று, அன்று போலவே இன்னொரு தரம் நிரூபித்துக் காட்டினால் அப்போதேனும் மனதில் நிற்குமா?"

அவனது ஏளனம் தைக்க, "தேவையில்லை. ஆனால் நீங்களும் ஒன்றை யோசித்துப் பாருங்கள். நான் ஒன்றும், உங்கள் வில்லாதி வில்லர்களை உற்றவர்கள் என்று நம்பி, உங்களிடம் போலத் தனியாகச் சென்று, அவர்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதில்லையே! பொது இடங்களில், அந்த மாதிரிக் கடத்த முயன்றால், நம் பொதுமக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அதனால், உங்கள் அச்சமும், கவலையும் அனாவசியமேதான்!" என்றாள் அவள் தெளிவாக.


"கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா!" என்று வாசகம் சொல்வார்கள். மதுரையில் பார்த்திருக்கிறாயா? அவ்வளவு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கும் திருமலை நாயக்கர் மகாலிலேயே, அவரது காவல் படையையும் மீறிக் கள்வர்கள் கன்னமிட்ட இடம் இருக்கிறது. சாதாரணப் பொதுமக்கள், எந்த விதத்தில், உன்னைக் காப்பாற்றிவிட முடியும் என்கிறாய்?" என்று கேட்டான் அவன்.

"அப்படிப் பார்த்தாலும், நாயக்க மன்னருடைய பெரும் படை வீரர்களையே மீறி, அந்தக் கள்வர்கள் கன்னம் போட்டிருக்கிறார்களே! உங்கள் இரண்டு பாதுகாவலர்கள் அந்த வன்முறையாளர்களுக்கு எம் மாத்திரம்?" என்று மடக்கினாள் நளினி.

இவளிடம் என்ன சொன்னால் புரிந்து கொள்வாள் என்று அறியாதவன் போலச் சற்று நேரம் அவளைப் பார்த்தபடி, புவனேந்திரன் புருவம் சுழித்து நின்றான்.

பிறகு, "உண்மையாகவே, இந்தப் பாதுகாப்பு தேவை இல்லை என்று உனக்குத் தோன்றுகிறதா, அல்லது இங்குள்ள சூழ்நிலையில் அது சங்கடமாக இருப்பதால், வேண்டாம் என்கிறாயா? நன்கு யோசித்து எனக்குப் பதில் சொல், நளினி," என்று வரண்ட குரலில் வினவினான்.

அவனது குரலில், 'கண்மணி, ம்மா' விகுதியைக் கைவிட்டு வெறுமனே நளினியென்று அழைத்த விதமும், அவளை எச்சரித்திருக்க வேண்டும்.

ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே அசட்டுத்தனம் என்று அவள் கருதியதைப் போக்கிவிடும் வேகத்தில், "தேவையில்லை... தேவையில்லை... நிஜமாகவே, எனக்குப் பாதுகாப்புத் தேவையே இல்லை!" என்றாள் அவள் அவசரமாக!

"நான் உன்னை யோசித்துப் பதில் சொல்லச் சொன்னேன்!" என்றான் அவன் கோபமாக.

"மனதில் எப்போதும் இருப்பதைச் சொல்ல, எதற்கு யோசனை?" என்றாள் நளினி.

"மனதில் எப்போதும் இருப்பதா?" என்று, அவளது வார்த்தைகளையே மெதுவாகத் திருப்பிச் சொன்னான் புவனேந்திரன். "அப்படியானால், ஏற்கெனவே யோசித்து, ஒரு முடிவுடன் தான் இருக்கிறாய் என்று தெரிகிறது."

"நிச்சயமாக! இனி நீங்கள் தான் யோசிக்க வேண்டும்."

"யோசித்து நான் எடுத்த முடிவு பற்றி, முன்பே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்," என்றான் அவன் - இளக்கமற்ற, கனத்த குரலில்.

அவன் சொன்னது நினைவு வர, நளினி அதிர்ந்தாள்.

Advertisement