» காக்கும் இமை நானுனக்கு 13

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

சக்திவேலின் காவல் தேவையில்லை என்று, புவனேந்திரனிடம் அவள் கேட்கப் போனபோது நடந்தது, நளினிக்குத் தெள்ளத் தெளிவாக நினைவு இருந்தது.

அவனது விஷயங்கள் எதையுமேதான் அவள் மறப்பது இல்லையே.

அதிலும், இது அவனது முதல் இதழொற்றுதல்.

பிரிவைத் தேர்ந்தெடுத்து விடாதே என்று, அவன் எப்படிக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான்.

அந்த அன்பு பெரு மரமாய் இவ்வளவு வளர்ந்த பிறகு, அவனுக்கு மட்டும் பிரிவது எளிதாகவா இருக்கும்? அதற்காக, அவனும் அவள் பக்கம் வரலாமே.

ஆனால், புவனேந்திரன் ஒரு மாதிரிப் பிடிவாதக்காரன். பெற்றோருக்கு அநியாயம் செய்தார் என்று, பாட்டியைக் கடைசி வரை... மரண வாசலில் ஒரு தரம் எட்டிப் பார்த்தது தவிர, இன்னமும் கூட, அவன் மன்னிக்கவே இல்லை.

ஆனால், முன்பின் பார்த்தே அறியாத பாட்டியின் பாசமும், அவளது காதலும் ஒன்றல்ல.

அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பின் வலிமை பெரியது. அது, அவனை அவள் பக்கம் இழுத்து வந்து விடும் என்று நளினி பிடிவாதமாக எண்ணமிடும் போது, அதை நிரூபிப்பவன் போன்று, புவனன் அவள் புறமாக ஓர் எட்டு எடுத்து வைத்தான்.

ஆனால், அவள் ஆவலாக நோக்குகையிலேயே, கைகளை இறுக மூடிக் கொண்டு, திரும்பி நடந்து அறையை விட்டு வெளியேறி விட்டான்.

வெளியே சென்றவன், அறைக்குள் நடப்பதைக் கவனியாதிருக்க மிகவும் முயன்று கொண்டிருந்த சுதர்சனத்திடம் போனான். "பாருங்கள், அங்கிள்! என் கடந்த காலத்தில் நடந்தது பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். விளக்கி, விலாவாரியாக விவரிக்க முடியாத சிலதைத் தேவையில்லை என்று விட்டிருந்தேன்... அதில்... அங்கிள், நளினிக்கும் இது தெரிய வேண்டியதுதான்..." என்று மேலும் சற்றுத் தடுமாறி விட்டு, அவனே தொடர்ந்து பேசினான்.

"அங்கிள்! ரதிக்குப் பூ மாதிரி முகம். இளமை, சந்தோஷம் எல்லாமாக, அன்றலர்ந்த பூ தவிர, அவள் முகத்துக்கு வேறு உவமை கிடையாது. ஆனால், அவள் காணாமல் போய்... இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு, பிணக் கிடங்கில் பார்த்தபோது, அந்த முகம் எப்படி இருந்தது, தெரியுமா? எனக்கு மறக்காது. இந்தப் பிறவியில் அது மறக்கக் கூடியது அல்ல, அங்கிள். என்னை மணந்த ஒரு காரணத்துக்காக... அவள்... அந்தப் புதுமலர்... கடவுளே..." என்று, மேலே பேச முடியாமல் தவிப்புடன் அவன் நிறுத்திய போது, எல்லோருக்கும் மூச்சடைத்துப் போயிற்று.

சகுந்தலா ஓசையற்று அழவே தொடங்கி விட்டாள்.

முதலில் சமாளித்துக் கொண்டவனும் புவனன் தான்.

தொண்டையைச் செருமிச் சரிப்படுத்திக் கொண்டு, "அங்கிள், ஆன்ட்டி! நீங்கள் இருவரும் என்னைப் போலவே, நளினி மீது நீங்களும் மிகுந்த அன்புள்ளவர்கள் என்பதால், நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நளினி என் மனைவியாக இருப்பதை விட, அவள்... நல்லபடியாக உயிரோடு இருப்பது எனக்கு முக்கியம். இன்னொரு... அதுபோல, இன்னொரு தப்பு நடக்க விட முடியாது, அங்கிள். அதனால் நான் இந்தத் திருமண நிச்சயத்தை முறிக்கிறேன்!" என்று முடித்தான்.

அவரது அலுவல் அறை வாயிலில், முகத்தில் ரத்தப் பசையே இல்லாமல் வெளுத்த முகத்துடன், ஓர் ஆவியைப் போன்று நின்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார், சுதர்சனம்.

மகளின் மனம் அவர் அறியாதது அல்ல.

அது, இப்போது என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கும் என்று உணர்ந்து, "பாருங்கள் புவனேந்திரன். அவள் சின்னப் பெண்! இந்த ஒரு தடவை யோசியாமல்..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.

"இல்லை, அங்கிள். நன்கு யோசித்துத்தான், தனக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்று, நளினி செயல்பட்டிருக்கிறாள். வரக்கூடிய ஆபத்து பற்றி அவளுக்குப் புரியவில்லை என்பதோடு, எதையும் புரிந்து கொள்ளப் பிரியமும் இல்லை. அவசியமற்ற அசட்டுத்தனமாக நிச்சயமாக நினைக்கிறாள். எனவே, மீதம் இருக்கும் ஒரே வழி, ஆபத்துக்கு ஆளாகாத, பாதுகாப்புத் தேவையற்ற ஒரு நிலையை, அவளுக்கு உருவாக்கிக் கொடுப்பதுதான். அதனால் தான், விலகிப் போக முடிவு செய்திருக்கிறேன். இன்னொன்று அங்கிள். இதுவே, இன்னொருவர் என்றால், நிச்சயித்த திருமணத்தை நிறுத்துவதற்காக, நஷ்ட ஈடு எவ்வளவு வேண்டும் என்று நேரடியாகக் கேட்டிருப்பேன். ஆனால், இந்தக் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், சில ஏற்பாடுகளுக்காக நீங்கள் செய்திருக்கும் அதிகப்படிச் செலவுகளை ஈடு செய்யவே நான் விரும்புகிறேன். அதனால்..."

பணமா தருகிறேன் என்கிறான்? பணம் எல்லாவற்றையும் ஈடு செய்து விடுமாமா?

நளினியின் தவிப்பு கொதிப்பாக மாறியது.

அவன் பேச்சில் குறுக்கிட்டு, "அவரது பணம் இங்கே யாருக்கும் தேவையில்லை. அது இல்லாமலே இதுவரை வாழ்ந்தது போல, இனியும் நம்மால் வாழ முடியும் என்று சொல்லி, அவரை வெளியே அனுப்புங்கள், அப்பா!" என்று சீறீனாள்.

அவளை நேராகப் பாராமலே, "இது, இப்படிப் பிரிய நேர்வது, எனக்கும் மிகுந்த வேதனைதான், அங்கிள். மீண்டும், பழைய பாலைவன வாழ்க்கைக்குத் திரும்புவது எனக்கு மட்டும் மகிழ்ச்சியா? ஆனால், அவள் மேல் உள்ள அக்கறையினாலேயே, இதை விடப் பெரிய துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே, வேறு வழியில்லாமல், மனதைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்திருக்கிறேன்! பணம் பற்றிக் கூட, உங்களுக்குத் தேவை என்று நான் அதைக் கூறவில்லை. நொந்த என் மனதிற்கு ஒரு சிறு ஆறுதல் கிடைக்கக் கூடும் என்றுதான். இதற்கு மேல், நான் வேறு என்ன சொல்லட்டும்? கிளம்புகிறேன்," என்ற புவனேந்திரன் அதற்கு மேல் நில்லாமல், அங்கிருந்து போய்விட்டான்.

புவனேந்திரன் இப்படிச் சொல்லிச் சென்றது, வீட்டினர் எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.

அவர்களிலும், நளினிக்கு, ஒரு பயங்கரக் கனவை நிறுத்த முடியாமல், தொடர்ந்து கண்டு கொண்டே இருக்கும் உணர்வு.

புவனனின் அசட்டுப் பயத்தைப் போக்குவதாக எண்ணி அவள் செய்த முயற்சி, இப்படிப் பூமராங்காகத் திருப்பி அடிக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லையே.

அவள் மீது அவனுக்குள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, அந்த அன்பை இழக்க விரும்பாமல், புவனன் தன் வழிக்கு வருவான் என்று அவள் கருதியது மாறி, அந்த அன்புக்காகவே, அவளைப் பிரியத் துணிவான் என்று அவள் நினைக்கவில்லையே.

இது கனவாகத்தான் இருக்கும், அல்லது ஏதோ மனப் பிரமையோ என்றெல்லாம் கூட, அவளுக்குத் தோன்றியது.

ஆனால், அவள் ஏதோ கண்ணாடிப் பாத்திரம், உரக்கப் பேசினாலே உடைந்து விடுவாள் போலப் பார்த்துப் பார்த்துப் பெற்றோர் நடந்து கொண்ட விதம், இது கனவோ, பிரமையோ அல்ல என்றது.

வீட்டு வாயிலில் எப்போதும் இருக்கும் சக்திவேலும் அவனுடைய கூட்டாளி கண்ணனும் காணாமல் போனது, எல்லாம் நனவே என்று மேலும் உறுதிப்படுத்தியது.

சூரியன் கிழக்கே உதித்து, மேற்கே மறைவது போல, வெகு நிச்சயமான நடப்பு!

புவனேந்திரன், அவளை விட்டு, நிஜமாகவே பிரிந்து போய் விட்டான்.

எப்படி முடிந்தது?

அவளைப் பார்த்ததுமே, அவன் கண்கள் பளிச்சிட்டதும், முகம் மலர்ந்ததும், எல்லாம் பொய்யா? நடிப்பா? கனவா?

இல்லை. எல்லாமே உண்மையே!

ஆனால், எல்லாவற்றையும் விட, அவர்களது அன்பை விட, அவர்களது ஆனந்தமான எதிர்கால வாழ்வை விட அவனது பாதுகாப்புப் பைத்தியம் பெரிதாக இருந்திருக்கிறது.

அவர்களது வாழ்வில் பூரண மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும் என்று கருதி, அவள் தவிர்க்க முயன்றது, கடைசியில், அவளது வாழ்வையே அழித்து விட்டது.

மெய்யாகவே, வாழ்க்கையே அழிந்து விட்டது போலத் தான் நளினி உணர்ந்தாள்.

புவனேந்திரன் இல்லாமல் சுகமோ, சந்தோஷமோ அவளுக்கு ஏது?

இனிமேல், தன்னால் வாய்விட்டுச் சிரிக்கவே முடியாது என்று, அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

அதை விடவும், இதயம் இருந்த இடத்தில் புழுவாய் அரித்த இந்த வேதனை! அது என்றேனும் மட்டுப் படக் கூடுமா? அந்த நம்பிக்கையும் இல்லை.

புவனேந்திரனைப் பிரியவே நேர்ந்து விடும், அந்தப் பிரிவு இவ்வளவு வேதனையைத் தரும் என்று முன்பே தெரிந்திருந்தால், வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாமே!

'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல நடந்து கொள்கிறாள் என்று, அவன் முதல் நாள் சந்திப்பிலேயே சொன்னானே. அதற்கு உதாரணமாக நடந்து, மீண்டும் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொண்டாளே!

இப்படியெல்லாம் நினைத்துக் கண்ணீர் வடித்துத் தன்னைத் தானே நோகடித்துக் கொண்ட போதும், மனதாரச் சரியானது என்று ஒத்துக் கொள்ளாத ஒன்றைச் சும்மா வாய் மூடி மௌனமாக ஏற்றுக் கொள்வது, தன் இயல்பு அல்ல என்பதையும் நளினி அறிந்தே இருந்தாள்.

புவனனும், பாதுகாப்பு விஷயத்தில் இளகுகிறவன் அல்ல.

எனவே, அன்று இல்லாவிட்டாலும், சற்றுப் பின்னே எப்படியும் ஒரு நாள் இந்த வாக்குவாதமும், அதன் இந்த முடிவும் நிகழ்ந்தே இருக்கும்.

எனவே, இப்படி இருந்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்று எண்ணி மனதைப் புண்ணாக்கிக் கொள்வது மடத்தனம்!

தன்னைப் புண்ணாக்கிக் கொள்வது மட்டும் மடத்தனம் அல்ல. தன் மேல் அன்பு வைத்த பாவத்துக்காகப் பெற்றோரையும், உடன் பிறந்தவளையும் நோகடிப்பது கூட மடத்தனம் தான்.

'நான் பிளஸ் டூ, பிளஸ் டூ!' என்று எப்போதும் புத்தகமும் கையுமாகப் புருவங்களை உயர்த்திக் கொண்டு அலையும் மஞ்சரி கூட, தன் வழக்கத்துக்கு மாறாக, "கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறாயாக்கா? காபி தரட்டுமா?" என்று ஓடி ஓடி வருவது ஒருவாறு, கண்ணிலும், அதைத் தொடர்ந்து கருத்திலும் பட, நளினி தன்னைச் சமாளித்துக் கொள்ள முயற்சித்தாள்.

சும்மா விழுந்தடித்துப் படுத்திருப்பதும், படுத்துக் கொண்டு அழுவதும், இனிக் கூடாது.

குறுக்கிட்டுக் கொண்டே இருந்த புவனேந்திரன் நினைவைப் பிடிவாதமாக முயன்று ஒதுக்கியபடி, என்ன செய்வது என்று நளினி யோசித்தாள்.

'உன்னத'த்துக்குப் போய்த் தொடர்ந்து பணிபுரிவது முடியாத காரியம்.

தன் நெஞ்சில் தானே கத்தியால் திருகுவது போல, அது முட்டாள்தனமான காரியம்.

வீட்டிலும் வழக்கம் போல எந்த விதமான அலங்காரப் பூ வேலைகளைச் செய்யவும் முடியவில்லை.

அதற்குக் கற்பனா சக்தி வேலை செய்ய வேண்டும். கண்ணும் மனமும் ஒன்றி வேலை செய்ய வேண்டும். எப்போதும் கண்ணுக்குள் புவனேந்திரனை வைத்துக் கொண்டு செய்தால், ஊசி குத்திக் குத்தியே கை புண்ணாகி விடும்.

வேறு என்ன செய்வது என்று அவள் யோசித்த போது, 'உன்னத'த்திலிருந்து அவளது சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஒரு காசோலையும், வேலையைத் திறம்படச் செய்ததற்காக ஒரு நன்னடத்தைச் சான்றிதழும் வந்து சேர்ந்தன.

அங்கே தொடர்ந்து அவள் வேலை செய்வது முடியாது என்று, அவளைப் போலவே, அவனும் எண்ணியிருக்கிறான்.

யாராக இருந்தாலும், அப்படித்தான் யோசித்திருப்பார்கள் என்றாலும், நளினிக்கு என்னவோ, தன்னைப் போலவே ஒத்த மனமாகப் புவனேந்திரனும் நினைத்திருப்பதாகத் தோன்றி, அதற்கோர் அழுகை வந்தது.

ஆனால், அதுவே இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தது.

அடுத்த வேலை தேடப் போவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினாள்.

ஆனால், முழு மனதோடு, நளினி வேலை தேடினாள் என்று சொல்ல முடியாது.

ஆனால், முதல் லாபமாக, அவளது கண்ணீர் நின்றது. வெளியே கண்ட கண்ட அன்னியர்கள் பார்க்க அழ முடியாது அல்லவா? அந்த அளவுக்குச் செல்ல முடியாமல், குறைந்த பட்சமாக, அவளது உடல் உறுப்புகளுக்கேனும் ரோஷம் இருந்தது.

அத்தோடு, அவளது மூளையும் பிடிவாதமாக மற்ற விஷயங்களில் - இந்த உடையில் கழுத்து அமைப்பு நன்றாக இருக்கிறது. இது வண்ணக் கலவை சரியில்லை. இந்த உடல் அமைப்புக்கு இது போலப் பெரிய கட்டங்கள் உள்ள சேலை கட்டவே கூடாது. நீளவாக்கில் கோடுகள் வரும்படி வேலைப்பாடாவது செய்ய வேண்டும்... என்பன போன்ற அவளது வேலை தொடர்பான விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தக் கண் கரிப்பு மெல்ல மெல்ல மறைந்து போகும்.

எனவே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, கண்ணீரும், வேதனையுமாக மற்ற மூவரையும் வருத்திக் கொண்டிருந்தது மாறியது.

வீட்டிலிருந்து கிளம்பியவள், வேலை தேடினாளா, அல்லது சும்மா சுற்றியலைந்தாளா என்று சொல்வதற்கில்லைதான். அலைச்சல் ரொம்பவும் சலிப்பூட்டினால், ஏதாவது பூங்காவிற்குப் போய், அங்கே சும்மா உட்கார்ந்திருப்பதும் உண்டு. சும்மா இருப்பது புவனேந்திரன் நினைவை அதிகமாகக் கொணர்ந்தால், மீண்டும் கிளம்பி ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குப் போய் விடுவாள்.

இப்படி ஒரு குறிப்பின்றி அலைகையில் திடுமென ஒரு நாள், யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவது போல, நளினிக்குத் தோன்றியது.

என்ன இது என்று அவள் மனம் சற்றே படபடத்தது.

அவளை யார் பின் தொடரக் கூடும்?

அதுவும், புவனேந்திரன் அவளைப் பிரிந்து சென்று விட்ட இப்போது!

சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்காக, அவ்வப்போது சடக்கென்று திரும்பிப் பார்த்தால், அப்படி யாரும் அவளைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.

நாலாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.

புவனேந்திரனின் கடத்தல் பிரமை, இப்போது அவளையும் பிடித்துக் கொண்டு விட்டதா?

இந்தப் பைத்தியம் முன்பே அவளைப் பிடித்துத் தொலைத்திருந்தால், பேசாமல் அவனது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தலையாட்டி ஏற்று நிம்மதியாக இருந்திருக்கலாம் என்று தோன்றவும், அவளுக்குத் தொண்டை அடைத்தது.

நடைபாதையில் வைத்து, இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணப் போக்கு, என்று தன்னைத் தானே கடிந்தபடி, நளினி மேலே நடந்தாள்.

மறுநாள் வீட்டை விட்டு வெளியே செல்லுமுன், வாயில்புற ஜன்னல் வழியே, நளினி சுற்றுப் புறத்தை ஆராய்ந்தாள்.

முந்திய நாள் கலக்கத்தை வலியுறுத்தும்படியாக எதுவும் அவள் கண்ணில் படவில்லை... அல்லது தெரு முனைக் கடையின் அருகில் நின்று பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒருவன், பத்திரிகையைத் தாழ்த்தி, அவளது வீட்டை உற்றுப் பார்த்தானோ?


வீட்டைத்தான் பார்த்தானோ, அல்லது தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவன், அலுத்த கண்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகப் பத்திரிகையை விட்டுப் பார்வையை விலக்கியதைப் போய், அவள் தப்பாக எண்ணுகிறாளோ?

அவனை மணக்கப் போகிறவள் என்கிற நிலை மாறினாலே, நளினிக்கு ஆபத்து வராது என்பது, புவனேந்திரனின் கருத்து. அதன்படி, சக்திவேலும், கண்ணனும் அகற்றப்பட்டுப் பத்து நாட்களுக்கு மேலாகிறது.

எனவே, இது, அவளுக்கான காவல் இல்லை என்பது நிச்சயம்.

பின்னே?

மகள் முகத்தில் யோசனையைக் கண்டு, "என்னடாம்மா... கிளம்பவில்லை?" என்று சகுந்தலா வினவினாள்.

தாயிடம் எதையும் சொல்லிக் கலங்க வைக்க மனமின்றி, "ஒன்றும் இல்லையம்மா. ஒரு சேலைக்கு அலங்காரப் பூவேலை செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்," என்று பெற்றவளுக்கு ஒரு காரணம் கண்டு பிடித்துச் சொல்லியபடியே, சும்மா பார்ப்பது போன்ற பாவனையோடு கீழே பார்த்தாள்.

பத்திரிகை படித்தவன் அந்தப் பக்கம் எங்குமே கண்ணில் படவில்லை.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்கிற மாதிரி, அவளுக்கும் தோன்றத் தொடங்கி விட்டது போலும்.

சகவாச தோஷம். புவனனின் சகவாசம்.

முன் தினம் யாரோ பின் தொடர்வது போல, இன்று யாரோ வீட்டைக் கவனிப்பது போல.

இது போன்ற பிரமைகள் தான் புவனேந்திரனுக்கும் இருந்திருக்குமோ? அப்படி ஒரு துக்கமும் நேர்ந்து விட்டதால், இந்தப் பாதுகாப்பு விஷயத்தில், அவன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் போலும்!

மீண்டும் மனம் புவனேந்திரனிடம் சென்று விட்டது மட்டுமின்றி, அவனை நியாயப்படுத்தவும் தொடங்கி விட்டதையும் நளினி உணர்ந்தாள்.

ஆனால், புவனேந்திரனுக்கு இருப்பது, வெறும் பிடிவாதம் மட்டுமல்ல-வெறி, மதவெறி போலத் தீவிரமான ஒன்று.

அந்த வெறிக்குப் பணிந்து, அவன் ஒருவன் கைதி வாழ்க்கை வாழ்வது போதும்.

அவளும் அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.

அந்தப் பயத்தில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவும் கூடாது.

இந்த எண்ணத்தில்தான் உள்ளத்தில் ஆர்வமே இல்லாத போதும், நளினி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றது.

ஆனால், புவனேந்திரனின் அசட்டுப் பயம், வெறி என்று அவளால் வர்ணிக்கப்பட்டது, அன்று அவளுக்கு நடந்தது.

நளினி கடத்தப்பட்டாள்.