» காக்கும் இமை நானுனக்கு 14

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

கடந்த நாலைந்து நாட்களைப் போலவே, அன்றும் நளினி சில பெரிய கடைகளுக்குள் சென்று சுற்றியலைந்தாள்.

ஒரு கடையில், ஏதோ பேருக்கு ஒரு வேலை கேட்டாள்.

நளினியின் ஃபைலைப் பார்த்து ஆவலோடு, அவளது திறமை, தகுதி முதலியவற்றை விசாரித்த கடை நிர்வாகி, அவளது ஈடுபாடற்ற அரைகுறையான பதில்களில் அதிருப்தியுற்றுக் கையை விரித்து விட்டார்.

நளினியும் அதற்காகப் பெரிதாக வருந்தி விடவில்லை.

'உன்னத'த்தில் பணி புரிந்த பிறகு, அதே போன்ற இன்னோர் இடத்தில் வேலை செய்ய அவளுக்கும் மனமில்லை தான்.

ஏன், வேறு யாரிடமும், எந்த விதமான வேலை செய்யவுமே, அப்போதைக்கு அவளுக்குப் பிடிக்கவே இல்லைதான்.

இந்த வேலை தேடும் படலமே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, மற்றவர்களை வருத்துவதைத் தவிர்ப்பதற்கான சாக்காகத்தான் இருந்தது.

இந்த வருமானம் வந்துதான் வாழ வேண்டும் என்கிற நிலை இல்லாத காரணத்தால், வேலை கிடைக்காததை யாரும் பெரிதாகக் கருதவும் இல்லை.

நளினியுடைய பெற்றோருக்குமே மகள், வெளியே சென்று, நாலு பேர் முகத்தைப் பார்த்துப் புவனேந்திரனின் இழப்பை மறக்க மாட்டாளா என்பதுதான் முக்கியமாக இருந்தது.

இந்தச் சில நாட்களின் பழக்கம் போலவே, ஓரிரு பெருங்கடைகளில் ஏறி இறங்கியதும், தன் கால் போன போக்கில் நளினி நடக்கலானாள்.

மனமும் வழக்கம் போலவே, புவனேந்திரனிடம் ஓடியது.

காவல், காவல் என்று வீதிகளில் சுதந்திரமாக நடக்கக் கூட முடியவில்லையே என்று அவன் மீது எரிச்சல் பட்டாளே! இப்போது சுதந்திரமாக நடப்பது சுகமாகவா இருக்கிறது? இல்லவே, இல்லையே...

நேரே செல்ல முடியாமல், எதுவோ வழியில் தடுப்பதை உணர்ந்து, நின்று நிமிர்ந்து பார்த்தாள் நளினி.

அறிமுகமற்ற ஒரு மனிதன், கையில் ஒரு துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு, "இந்த முகவரி தெரியுமா, மேடம்?" என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

நடைபாதைகளில் கூட்டமில்லாத நேரம். ஆனாலும், அங்கொருவர், இங்கொருவர் போய்க் கொண்டு தான் இருந்தார்கள்.

அருகே நடைபாதை ஓரமாகக் கூடவே, மெல்ல நகர்ந்து வந்த காரும், அந்த அன்னியன் குறிப்பாக அவளை நிறுத்திக் கேட்ட விதமும், மனதை உறுத்த, சட்டென விழிப்புற்று, அவள் வேகமாக விலகிச் செல்ல முயன்றாள்.

ஆனால், அதே வேகத்தில் இலகுவாக அவளோடு கூட நடந்தபடி, "கவனி பெண்ணே, அந்தப் பக்கம் பார்த்தாயானால், துப்பாக்கியில் கை வைத்தபடி, எங்கள் ஆள் நிற்பது தெரியும். மறுப்பின்றி எங்களோடு இந்தக் காரில் ஏறி வந்து விட்டாயானால், உனக்குப் பிரச்சனை இராது! இல்லாவிட்டால், கை, கால், உயிர் என்று என்னவெல்லாம் போகும் என்று சொல்ல முடியாது," என்று புன்னகையோடு பேசி மிரட்டினான்.

ஆனால், அந்த மிரட்டலுக்குப் பயந்து நளினி அவன் காட்டிய காரில் ஏறி விடவில்லை. ஏனெனில், அப்படி அந்தக் காரில் ஏறிச் சென்ற பிறகு, அவள் சொன்ன எதுவும் அவளை விட்டுப் போகாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லையே!

ஆனால் அவன் காட்டிய பக்கமாக அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, உடனே தவறுணர்ந்து, அவள் அவசரமாகத் திரும்புமுன் கிடைத்த சில கணங்கள், அந்தக் கடத்தல்காரனுக்குப் போதுமானதாக இருந்தன.

மென்னியோரமாக விழுந்த அளவான சிறு தட்டில், நளினி உணர்வு மயங்கிச் சரிய, சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த ஓரிருவர் என்னவென்று எட்டிப் பார்க்கும் முன்னதாகக் கார் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளி ஏற்றிக் கொண்டு, கார் பறந்து விட்டது.

போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருந்த சமயம் என்பதால், கார் வேகமெடுப்பதற்கு வசதியாகவும் இருந்தது.

சிறு கூச்சலிடக்கூட நளினிக்கு அவகாசம் இல்லாது போக, இங்கே ஓர் அநியாயம் நடக்கிறது என்று யாருக்கும் தெரியவும் வழியே இல்லாது போயிற்று.

எனவே, புவனேந்திரனிடம் அவள் பெரிதாகச் சொன்ன பொதுமக்களின் உதவி அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

ஆகச் சில மணி நேரம் கழித்து, நளினிக்கு முழுமையாகச் சுய உணர்வு வந்த போது, அவள் கை, கால்கள் கட்டப்பட்டு, ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தாள்.

வலிக்கும் அளவுக்கு இறுக்கமாக இல்லை என்றாலும், தானாக அவிழ்த்துக் கொள்ள முடியாத கட்டுகள் என்று, உடனேயே புரிந்தது.

அவளுக்கு அறிமுகமே இல்லாத சில மனிதர்கள், அந்த அறையில் அவரவர் வசதிக்கு ஏற்ப நின்று கொண்டோ, உட்கார்ந்தோ இருந்தார்கள்!

நளினிக்கு விழுந்த அடி வலுவானது அல்ல.

மன வலிமையும், உடல் ஆரோக்கியமும் உள்ளவள் என்பதால், நளினிக்கும் விரைவிலேயே மயக்கம் தெளியத் தொடங்கிவிட்டது.

சில மணி நேரத்தில், தானாகவே தெளிந்து விடக் கூடிய அளவிலேயே, அந்தக் கடத்தல்காரன் அவனது வலுவைப் பயன்படுத்தியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.

அதனாலேயே, அவன் இந்தப் போர்க்கலையில் எவ்வளவு வல்லவன் என்பதும் புரிபட்டது. புரிந்த அளவில், அவள் மனம் சோர்ந்தது.

இதைத்தானே புவனனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னான். அப்போது அதை அசட்டுத்தனம் என்று எண்ணியதை நினைத்து, இப்போது மனம் வேதனைப் பட்டது.

ஆனால், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் அசட்டுத்தனம் தான். இப்போது என்ன செய்வது என்று யோசிப்பதில் மூளையைப் பயன்படுத்தினால், கொஞ்சமேனும் பலன் இருக்கக் கூடும் என்று யோசிக்கத் தொடங்கினாள் நளினி.

எதிரிக்கு முழுப் பலத்தைக் காட்டுவது முட்டாள்தனம். அதிலும், மயங்கித் தெளிந்து, இப்போதிருக்கும் பலவீனமான நிலையில், உறுப்புகள் வசப்படும் வரையேனும், வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது.

எனவே, அவள் உடனே கண்ணைத் திறந்து பார்த்து விடவில்லை. கண் மூடிய அதே நிலையில் இருந்தவாறே, காதுகளைப் பயன்படுத்திச் சுற்றுப் புறத்தை ஆராயத் தொடங்கினாள்.

இந்தக் கடத்தல் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது பற்றித்தான் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நிச்சயமாக முழுப் பலன் கிடைக்கும் என்பது பெரும்பான்மை அபிப்பிராயமாக இருந்தது.

ஆனாலும், "... இவள் வெறும் காதலிதானே? எத்தனையோ பேரில் ஒருத்தியாகக் கூட இருக்கலாம். இவளுக்காக, அவன், நாம் கேட்கிற பிணைத் தொகையைக் கொடுப்பானோ, என்னவோ. எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது," என்று ஒரு குரல் சந்தேகமும் பட்டது.

காதலிதானே என்று, சற்று இளப்பமாகப் பேசியது, தன்னையா? அதுவும், எத்தனையோ பேரில் ஒருத்தியாமே.

புவனேந்திரன் அப்படிப்பட்டவன் அல்ல என்று கத்த வேண்டும் போல, அவளுக்கு ஆத்திரம் வந்தது.

ஆனால், அவளது வேஷம் கலைந்து போகுமே, ஏமாற்றினாயா என்று ஆத்திரத்தில் என்னவேனும் சித்திரவதை செய்தால்?

சிரமப்பட்டு, எந்தவித மாற்றமும் இல்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு நளினி இருக்க, நல்ல வேளையாக, அவர்களில் ஒருவனே, முன்னவனை மறுத்துப் பேசினான்.

"சே, புவனேந்திரன் அப்படிப்பட்ட ஆள் இல்லையடா. ஐந்து ஆண்டுகளாகப் பெண் வாசனையே இல்லாமல் இருந்திருக்கிறான். அதனால் தான், இவளை வைத்து அவனைப் பிடிக்கும் ஐடியா வந்ததே. சரியான குரங்குப் பயல். பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை என்று இன்னொருத்தியை மணந்து கொண்டு, சும்மா இருப்பதுதானே. அதை விட்டு, நொட்டு, நொசுக்கு என்று கண்டதையும் நோண்டிக் கொண்டு. அந்த முட்டாளுக்கு உயிரை விடுவதற்கு வேறு வழியா கிடைக்கவில்லை?"

உயிரை விடுவதா? யாருடைய உயிர்? புவனேந்திரனின் உயிரா? கடவுளே!

அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல், நளினியின் முகம் மாறிவிட்டது.

அவளைக் கவனித்திருந்த யாரோ, "ஷ்... மயக்கம் தெளிகிறது," எனவும், இனி நடிப்பதில் பலனில்லை என்று உணர்ந்து, அப்போதுதான் மயக்கம் தெளிகிறவள் போன்ற பாவனையுடன், முக்கலும் முனகலுமாக நளினி மெல்லக் கண்ணைத் திறந்தாள்.

போடுகிற வேஷத்தை ஒழுங்காகப் போட வேண்டும், அல்லவா?

கண்ணைத் திறந்தவள், கண் முன்னே காண்பதை நம்ப முடியாதவள் போலக், கண்ணைக் கசக்கிக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தாற்போல, மேலும் முகத்தில் திகைப்பைக் காட்டினாள்.

திகைப்பும் பயமுமாக, "ஐயோ! நீங்களெல்லாம் யார்? என்னை... என்னை ஏன் இங்கே... கடவுளே! என்னை ஒன்றும் பண்ணி விடாதீர்கள். ப்ளீஸ்!" என்று பதறினாள்.

தன்னை என்ன செய்யப் போகிறார்களோ என்பதோடு, புவனேந்திரனின் உயிரைப் பற்றிய அச்சமும் உள்ளே நிஜமாகவே மிக அதிகமாக இருந்ததால், அவளது கலக்கம் பெருமளவு உண்மையாகவே இருந்தது. பார்த்தவர்களுக்கும் அப்படியே தோன்றிற்று.

அவர்கள் நாலு பேர் இருந்தனர். அவர்களுள் தலைவன் போலத் தோன்றியவனை மற்ற மூவரும் பார்க்க, அவன் பேசினான்.

"பாரம்மா, உனக்கும் எங்களுக்கும் இடையே ஒன்றுமே இல்லை..."

அவனது பேச்சில் குறுக்கிட்டு, "பி...பின்னே என்னை ஏன் இப்படி... இப்படிக் கடத்தி வந்திருக்கிறீர்கள்?" என்று, பாதிப் பயமும், பாதி நடிப்புமாகக் கேட்டாள் நளினி.

தன் விதியைக் காட்டிலும், புவனேந்திரனுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறதோ என்பதை அறிந்து கொள்ளும் துடிப்பு அவளுக்கு.

"பாஸ் பேசும் போது, யாரும் குறுக்கே பேசக்கூடாது," என்று அதட்டியவனின் குரலில் நளினி திகைத்து நோக்கினாள்.

அவளிடம் வழி கேட்டவனின் குரல்.

இப்போது, அவனது குறுந்தாடி காணாமல் போயிருந்தது. பதிலாகப் பெரிய மீசை முளைத்திருந்தது.

எவ்வளவு இலகுவாக வேஷம் மாறுகிறார்கள். அவளைக் கடத்தும் போது யாரேனும் பார்த்திருந்தால் கூட இப்போது அவனை அடையாளம் கண்டு, பின் தொடர்ந்து, அவளைக் கண்டு பிடிப்பது கடினம்.

அவனது கண்களும் சந்தேகத்தில் இடுங்க, "என்ன பார்க்கிறாய்?" என்று வினவினான்.

தன் மூளைத் திறனைப் பற்றி, அவர்கள் மட்டமாக நினைப்பதே நல்லது என்று நளினிக்குத் தோன்றவும், "ஓ... ஒன்றுமில்லை...உங்களில் யா...யார் பாஸ் என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதனால்தான்... அது, நீங்களா, அவரா? யார் பேசும் போது, நான் குறுக்கே பேசக்கூடாது?" என்று குரல் நடுங்க விசாரித்தாள்.

அவனது பார்வையில் இருந்த ஐயம் மறைய, "அவர்தான்," என்று முதலில் பேசியவனைச் சுட்டிக் காட்டிவிட்டு, ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் புது மீசைக்காரன்.

சும்மா பார்க்கவில்லை, சுற்றிலும் அவனது பார்வை கவனத்துடன் ஆராய்ந்தது.

இவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்கும் இவர்களிடம் இருந்து எபப்டித் தப்புவது?

மனம் சோர்வுறக் கவலையுடன் தலைவனைப் பார்த்தாள், நளினி.

"குறுக்கிடாமல் கவனி, பெண்ணே. நான் சொன்னது போல, உனக்கும் எங்களுக்கும் இடையே, நல்லது கெட்டது ஒன்றும் கிடையாது. இப்போதைக்கு, நீ எங்களுக்கு ஒரு கருவி. அவ்வளவுதான். ஆனால், அந்தப் புவனேந்திரன் விஷயம் வேறு. அவன் எங்களை நாயாகத் துரத்துகிறான். அதுவும் வேட்டை நாயாக. அவனால், எட்டுப் பேராக இருந்த நாங்கள் நாலு பேரை இழந்து விட்டோம். எப்பேர்ப்பட்ட நாலு உயிர்களைக் கொன்று விட்டான், தெரியுமா? அவர்கள் வீராதி வீரர்கள்."

அந்த வீராதி வீரர்களை மரியாதையோடு நினைவு கூர்பவன் போல, சில வினாடிகள் பேச்சை நிறுத்தினான் அவன்.

நளினியின் மனம் படபடப்புடன், படு வேகமாகவும் வேலை செய்தது.

புவனேந்திரனின் கடத்தல் பயமும், காவலும், இவர்களுக்குப் பயந்து தானா? திடீர்த் திடீரென அவன் காணாமல் போனது இவர்களை வேட்டை நாயாக விரட்டத்தானா?

ஆனால், இவன் சொல்வது போல, நாலு பேரை அவன் கொன்றிருக்க முடியுமா?

கொலை செய்வது சாதாரண விஷயம் அல்ல. அதற்குக் குரூரமான மனம் வேண்டும். அது புவனனிடம் கிடையாது. அவன் பிடிவாதக்காரனே தவிர, ஊகூம், நிச்சயமாகக் கொலைகாரனாக இருக்கவே முடியாது.

ஊகூம்... இருக்காது. அத்தோடு, அவன் எதற்காக இவர்களைத் துரத்த வேண்டும்?

எல்லாம் பொய்.

ஆனால், அவனது பாதுகாப்புப் பைத்தியம்...?

இல்லை. அது வேறு விஷயம். அது ரதிக்காக, அவளது மரணத்துக்காக. மற்றபடி, இவர்கள் கொலை கிலை என்கிறார்களே, அதற்கும், அவனுக்கும் சம்பந்தம் இராது.

எது எப்படியானாலும், புவனன் யாரையும் கொன்றிருக்க முடியாது. அது நிச்சயமாகச் சாத்தியம் அல்ல. இவர்கள், ஏதோ தவறாக எண்ணி, அவனை விரட்டுகிறார்கள். உண்மை தெரிந்தால், இந்த விரட்டல், கடத்தல், கோபம், பயம் எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய் விடக் கூடும்.

நிச்சயமாகப் போய்விடும்.

மனம் நினைத்ததையே, அவள் வாய்விட்டும் சொன்னாள். "பாருங்கள், நீங்கள் ஏதோ தவறாக எண்ணிக் கொண்டு, புவ...புவனேந்திரனைக் கொலைகாரர் என்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவர் அல்ல. ரொம்ப நல்லவர். ஒரு காக்காய், குருவிக்குக் கூடக் கெடுதல் நினைக்காத உத்தமர், அவர்!" என்றாள் அழுத்தமான குரலில்.

அவளைக் கடத்தி வந்த நால்வரும், ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது போல, மற்றவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த விதத்தில், ஏதோ தப்பாக - அவர்களுக்குச் சாதகமாக ஏதோ சொல்லி விட்டோம் என்று நளினி உணர்ந்தாள்.

என்ன அது?

"பரவாயில்லையே, அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாயே! ரொம்...பவே...!" என்று தலைவன் சொல்ல, மற்ற மூவரும் நகைத்தனர்.

குரூரம் கலந்த சிரிப்பு. அவள் நினைத்தது போலக் கொலைக்குத் தேவையான குரூரம்.

ஆனால், இப்போது ஏன் இப்படிச் சிரிக்க வேண்டும்?

உடனடியாகக் கொலை செய்யும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. பி...பின்னே?


அவள் சொன்னது பொய் என்கிறார்களா? அப்படியும் தோன்றவில்லையே.

ஒன்றும் புரியாமல், "ஏ...ஏன் சிரிக்கிறீர்கள்? நான் சொன்னதில் என்ன தப்பு?" என்று திகைப்புடன் கேட்டாள் அவள்.

மறுபடியும் சிரித்துவிட்டு, "நாங்கள் சிரித்தது, அவனைப் பற்றி இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் உன்னால், எங்கள் வேலை இலகுவாக முடியும் போலத் தெரிகிறதே என்ற மகிழ்ச்சியே. ஏனெனில், நீ மிகச் சரியாகச் சொன்னபடி, அவன் நேரடியாக யாரையும் கொல்லவில்லை. ஆனால், சாவது தவிர வேறு வழியில்லாதபடி செய்தான். அவ்வளவே. அப்புறம் என்ன கேட்டாய்? நீ சொன்னதில் தப்பென்ன என்றா? தப்பே கிடையாதும்மா. அந்தப் புவனேந்திரன், ஒரு காக்காய் குருவி என்ன, ஒரு சின்ன ஈ, எறும்பாகவே இருக்கட்டுமே, அவற்றுக்கு ஒரு சின்னக் கெடுதல் செய்வது பற்றியும் கூட, நினைத்தே பார்க்க மாட்டான். நீ சொன்னது சத்திய வாக்கு. ஏனென்றால், காக்காய், குருவி, ஈ, எறும்பையெல்லாம் கொன்று, மனைவி செத்ததற்குப் பழி வாங்க முடியுமா, என்ன?" என்று கேட்டு விட்டு, அவன் அவுட்டுச் சிரிப்பு சிரிக்க, மற்றவர்களும் அதில் கலந்து கொண்டனர்.

ரதி!

அவள் இறந்ததற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இராது என்று எண்ணினாளே. இருந்திருக்கிறது.

இவர்கள் ரதியைக் கொன்ற கொலைகாரர்கள்.

கடன் பாக்கி இருக்கிறது என்றானே, புவனன்.

அந்தக் கடன், மனைவியைக் கொன்ற இவர்களைப் பிடிப்பதுதான் போலும். இவர்களே சொன்னது போல, வேட்டை நாயாக விரட்டியிருக்க வேண்டும்.

அதை நியாயம் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்? இந்த நால்வரையும் சேர்த்துக் கொன்றால் கூடத் தப்பில்லைதான்.

ஆனால், பாதிக் கிணறு தாண்டியவன் கதையாகிப் பாதி ஜெயித்தவனின் தோல்விக்கு, அவள் அல்லவா வழி வகுத்துக் கொடுத்து விட்டாள்.

அவனது நல்லியல்புகளைப் பற்றி அவள் எடுத்துச் சொன்ன விதத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பு பற்றி, இவர்களுக்கு நன்கு தெளிவாகி விட்டது.

அதைப் பற்றித்தான், அவர்கள் நால்வரும் அவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள்.

புவனனின் அன்புக்குரியவளாக இருந்த ரதியைக் கடத்திச் சென்று, அவளை வைத்து மிரட்டி, அவனிடம் இருந்து பணத்தைப் பறித்தது போல, இப்போதும் அவனுடைய அன்புக்குரிய அவளைக் கடத்தி வந்து, மிரட்டி, அவனது உயிரைப் பறிக்கப் போகிறார்கள்.

ஏனெனில், பிரிந்தே போனாலும், அந்தப் பிரிவிற்கான அடிப்படைக் காரணம், அவள் மீது அவன் கொண்டிருந்த அளவில்லாத அன்புதானே?

அந்த அன்பு, அவனது உயிருக்கே உலை வைத்துவிடும் போல இருக்கிறதே!

நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது.