» காக்கும் இமை நானுனக்கு 15

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

கெட்டிக்காரி என்று, நளினிக்குத் தன்னைப் பற்றி ஒரு அபிப்பிராயம் உண்டு.

அது, தலைக்கனத்தினால் தானாக வந்தது அல்ல.

பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியப் பெருமக்களாலும், நறுவிசாக வீட்டிலும், வெளியிலும் செய்வன திருந்தச் செய்வது பார்த்து உற்றார் உறவினராலும், ஊட்டி வளர்க்கப்பட்ட அபிப்பிராயம் அது.

புவனேந்திரனிடம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் என்று, அவள் தன்னம்பிக்கையோடு சொன்னதன் அடிப்படையும் அதுதான்.

ஆனால், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைத் தன் மடத்தனத்தால், அவள் மூன்றாவது முறையாக நிரூபித்திருக்கிறாள்.

ஆனால், இதற்கு முன் நடந்தது போல, அவளது வேலையோ, சந்தோஷ வாழ்வோ பறி போனால் கூடப் பரவாயில்லையே.

அவளது சொந்த உயிர் கூட இப்போது பெரிதாகத் தோன்றவில்லை!

ஆனால், தான் சிக்கி, அதன் மூலமாய்ப் புவனேந்திரனையும் அல்லவா மாட்டி வைத்து விட்டாள்!

அவளது உயிரேயாகிவிட்ட புவனனை!

அப்போதைய சிக்கலில், எப்படி, என்ன செய்து அவனைக் காப்பது என்று நளினிக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவளை நாற்காலியோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்த இடத்திலிருந்து சுற்று முற்றும் தலையும் கழுத்தும் வலிக்க வலிக்க எவ்வளவு வளைத்து திருப்பிப் பார்த்தாலும், செடி கொடிகளும் மரங்களும் தான் தெரிந்தன. ஏதோ காட்டுக்குள், ஒரு பாழடைந்த சிறு வீடு!

சுற்றிலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஆள் நடமாட்டமே தெரியவில்லை.

இப்படிப்பட்ட இடங்கள், இவர்களுக்கென்று, எப்படித்தான் கிடைக்கின்றனவோ!

இப்போது, இவர்களின் திட்டம் என்னவாக இருக்கக் கூடும் என்று, அவளால் ஊகித்திருக்க முடிந்தது.

அவளை ஏதாவது செய்துவிடுவோம் என்று மிரட்டிப் புவனேந்திரனிடம் முதலில் பணம் பிடுங்குவார்கள். அப்புறம், ஏதாவது சாக்கிட்டு, அவனை வரவழைத்து இருவரையும் கொன்று விடப் போகிறார்கள்.

அவளுக்கு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று, புவனன் வராமல் இருந்தால் நல்லது.

கடவுளிடம் அதை வேண்டிக் கொள்வது தவிர, அவளால் ஆகக் கூடியது ஒன்றும் இல்லை.

அவளைக் கடத்தி வந்தவர்கள், அவளது கை, கால் கட்டுகளைச் சரி பார்த்துவிட்டு, வெளியே நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

பேச்சென்ன? புவனனின் பணத்தை, உயிரை எவ்வளவு, எப்படி உறிஞ்சுவது என்று திட்டமிடுவார்கள்.

சற்றும் மனிதத் தன்மையே இல்லாத இந்த அரக்கர்கள், மற்றபடி மகாத்மா காந்தியைப் பற்றியும், அகிம்சையைப் பற்றியுமா பேசிவிடப் போகிறார்கள்? உழைத்துப் பிழைப்பதற்கு என்ன வந்தது? பாவிகள்!

பதினெட்டு வயதுச் சின்னப் பெண், மணமாகிப் பத்தே நாட்களில் கடத்திக் கொல்வதற்கு, இவர்கள் மனதில் என்ன குரூரம் இருக்க வேண்டும்!

இருந்திருந்து இவர்களிடம் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாளே!

பேச்சு முடிந்து விட்டது போல, நால்வரும் உள்ளே வந்தனர்.

பசிக்கிறதா? தண்ணீர் வேண்டுமா என்று சாதாரண மனிதர்களைப் போல, அவளிடம் வினவினார்கள்.

படங்களில் வருகிற மாதிரித் தண்ணீரை வாயருகே கொண்டு வந்து, பருகப் போகிற நேரம் பறித்துக் கொடுமை செய்வார்களோ என்று தவிப்பாக இருந்த போதும், தொண்டை காய்ந்து வறண்டு போயிருந்ததால், "தண்ணீர்," என்று சுருக்கமாகக் கேட்டாள் நளினி.
"குடி!" என்று ஒரு புதிய தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறந்து, அவள் கையில் கொடுத்தான், அவர்களுள் ஒருவன்.

சந்தேகமாகப் பார்த்தபடி, அவள் அதை அருந்தவும், "வேறு வழியின்றி உன்னைக் கடத்த நேர்ந்தாலும், நாங்கள் ஒன்றும் ஈவு, இரக்கம் இல்லாதவர்கள் அல்லம்மா. நீ, அனாவசியமாகத் தாகத்தால் தவிப்பதில், எங்களுக்கு என்ன லாபம், சொல்லு," என்றான் தலைவன், நயமான குரலில்.

அதாவது, லாபம் இருக்குமானால், உன்னைத் தாகத்தால் தவிக்க விடத் தயார் என்று, சொல்லாமல் சொல்லுகிறானா?

பதினெட்டு வயதுப் பச்சை மண்ணைக் கொன்றிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈவாவது, இரக்கமாவது!

எல்லாம் பொய்.

இந்த அரக்கர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் தான், புவனேந்திரன், அவளது பாதுகாப்புக்காக, அவளிடமே அவ்வளவு போராடியிருக்கிறான்.

தங்கள் திருமணத்தைப் புவனேந்திரன் நிறுத்தியதன் காரணம் முன்னெப்போதையும் விட, நளினிக்கு, இப்போது மிக நன்றாகப் புரிந்தது. பாவம்! அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினால் அல்லவோ, பிரிந்தேனும் அவளைக் காப்பாற்ற முயன்றிருக்கிறான்.

ஆனால், அவனது அந்த முயற்சி காலம் கடந்து, இப்போது புரிந்து என்ன பயன்?

ஆனால்... முடிந்தால்...

தெளிவான ஊகம் இருந்த போதும், "என்னை எதற்காகக் கடத்தி வந்திருக்கிறீர்கள்?" என்று அந்தத் தலைவனிடம் நேரடியாகக் கேட்டாள் நளினி.

"சொல்லுகிறேன், சொல்லுகிறேன். அதைச் சொன்னால் தானே உனக்குப் புரியும்," என்று தொடங்கினான் அந்தக் குழுவின் தலைவன்.

உயர்ந்த சில நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவினர் அவர்கள். சில கொடிய மனிதர்களைப் பிடித்து வந்து, அவர்களிடம் பணம் பிடுங்குவதும், அதை ஏழைகளின் தேவைக்குக் கொடுப்பதும்.

புவனேந்திரன் கொடிய மனிதன் அல்ல, மிக மிக நல்லவன் என்பது, நளினியின் தொண்டை வரை வந்து அடங்கியது.

ஒரு தரம் தவளையாக வாயை விட்டது போதும், அதே கருத்தை மேலும் வலியுறுத்துவது, மன்னிக்க முடியாத மடத்தனம்.

எனவே, வேறு விதமாக மடக்கினாள். "நீங்கள் எட்டே பேருக்குப் பெரிய குழு என்று பெயரா? எட்டுப் பேர் இருந்து என்ன சாதிக்க முடியும்?" என்றாள் நம்பாத குரலில்.

மற்றவர்கள் கோபமாக முறைத்த போது, குழுத் தலைவன் தலையாட்டி, "நீ சொல்வது சரிதான்," என்று ஒத்துக் கொண்டான். "நாங்கள் எட்டுப் பேருமே, ஒரு பெரிய குழுவின் சிறு பிரிவு தான். இப்படி ஒவ்வொரு பிரிவிடமும், ஒவ்வொரு வேலை ஒப்படைக்கப்படும். அந்த வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவது, அந்தந்தக் குழுவினரின் பொறுப்பு. அதற்குள், எப்படியாவது தப்பிச் சென்று, எங்கள் ஆணி வேரையே எப்படிப் பிடுங்குவது என்று திட்டம் போடாதே. அது முடிகிற காரியம் இல்லை. ஏனெனில், எங்களுக்கு அடுத்த படியில் இருப்பவர்களிடம் கூட, எங்களுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. ஒப்படைக்கப்பட்ட வேலையில் தவறு நேர்ந்தால், அதை வைத்துக் கொண்டு, மேலிடம் வரை போய்விடக் கூடாது அல்லவா? எனவே, தவறின் விளைவையும், நாங்களேதான் அனுபவிக்க வேண்டும். இடையூறுகளை விலக்கி, நிலைமையைச் சீர்ப்படுத்துவதும், எங்கள் பொறுப்பே. இப்படித்தான், புவனேந்திரன் மனைவியை எங்கள் வழியிலிருந்து அகற்ற நேர்ந்தது," என்றான் அவன்.

இடையூறுகளை விலக்குவதா? வழியிலிருந்து அகற்றுவதா? தன்னைப் போல ஒரு மனித உயிரை அழிப்பது பற்றி எவ்வளவு இலகுவாகப் பேசுகிறான்?

புவனனிடம் இருந்து பணம் பிடுங்குவதற்காக ரதியைக் கடத்திச் சென்று, பணத்தையும் பறித்ததோடின்றி, அவளையும் கொன்றுவிட்டு, பாவி அதையும் என்னமாகச் சொல்லுகிறான். மனிதத்தன்மை, மனிதநேயம் எதுவுமே இல்லாமல், மனித உருவில் இப்படி ஒரு மிருகம்.
பிணக் கிடங்கில் ரதியைப் பார்த்தது பற்றிப் புவனன் தவிப்புடன் கூறியது நினைவு வர, "வெளி உலகம் அறியாமல் ஆசிரமத்தில் வளர்ந்த சின்னப் பெண், மணமாகிப் பத்தே நாட்களுக்குள், உங்கள் மாபெரும் பணிக்கு, அவள் எப்படி இடையூறாக இருக்க முடியும்? எனக்குப் புரியவில்லையே!" என்றாள் அவள், சற்றே ஏளனமாக.

"உனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும், அதைப் பற்றி யாருக்கும், எதுவும் இல்லை," என்று உதாசீனமாகப் பேசிய ஒருவனைக் கையுயர்த்தி அடக்கினான் தலைவன்.

"ச்சு! சும்மா இருப்பா. இந்தப் பெண் கொஞ்சம் நல்ல விதமாக, சொன்னால் புரிந்து கொள்கிற விதமாகத் தெரிகிறது. கண்ணில் நேர்மையும் தெரிகிறது. எனவே, எடுத்துச் சொன்னால் புரிந்து கொண்டு, நமக்கு உதவியே செய்யக் கூடும். அதனால், இவளிடம் சொல்வதில் ஒரு தப்பும் நடக்காது. எப்படியும் இவள் நிச்சயமாக, நம்மைக் காட்டிக் கொடுக்கவே மாட்டாள்," என்று தன் தோழர்களை ஒரு பார்வை பார்த்தான்.

அந்தப் பார்வையில், மற்ற மூவரும் சட்டெனப் பணிந்து போன விதம், நளினிக்கு வியப்பூட்டிற்று.

இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களே என்று வியக்கும் போதே, உள்ளூர ஏதோ நெருடியது.

தலைவனுக்குப் பணிவதில் இவ்வளவு கட்டுப்பாடா? அல்லது, அந்தப் பார்வையில் வேறேதும் சேதி இருந்ததா?

இருந்தது, இருந்தது. விரிந்த விழிகள், ஒரு கணம் நின்று திரும்பினவே.

அவளுக்குத் தெரிவிப்பதில் தயக்கம் தேவையில்லை என்ற சேதியா? அப்படியானால், தெரிந்ததை வெளியே சொல்லும் வாய்ப்பு அவளுக்கு இருக்கப் போவது இல்லை என்றானா?

அத்தோடு, அவர்களைக் காட்டிக் கொடுப்பது பற்றி, அவளுக்கே இல்லாத நிச்சயம், இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவளால் இயலாது என்றுதானே, தன் கூட்டாளிகளுக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.

முதுகுத் தண்டில் சிலீரென்றது நளினிக்கு.

அதாவது, ரதியைப் போலவே, அவளையும் கொன்று விடப் போகிறார்கள்.

புவனனைப் பார்த்து, வருத்தம் தெரிவிக்கும் முன்னரா? அவனைப் பாராமலேயா சாவது?

நெஞ்சுக்குள் ரயில் தடதடப்பதைக் குரல் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற அச்சத்தில், இறுகி நளினி வாய் திறவாது, வெறுமனே அவனது பேச்சைக் கவனிக்கும் பாவனையில் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான்.

"அகமதாபாத்தில், ஒரு தரகன். திருட்டுப் பயல். எல்லா வகைத் தரகும் செய்வான். பெண்கள் உட்பட. அவனைப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கொன்றோம். அந்த முட்டாள் பெண், அப்போது பார்த்து, அந்த வழியே போய்த் தொலைத்திருக்கிறாள். எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? இத்தனைக்கும், அவளுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கண்டறிய மட்டும்தான், அவளை முதலில் கடத்தி வந்தது. ஆனால் அவள் உளறிக் கொட்டியதில் தான், அவளுடைய கணவனிடம் இருந்து பெரும் தொகை கறக்க முடியும் என்று தெரிந்தது. எங்களைப் போன்றவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், யோசித்துப் பார். ஒழுங்காக ஒரு வேலை செய்து சம்பாதிக்க முடியாத, ஒளிவு மறைவு வாழ்க்கை. அந்த ஒளிவு மறைவுக்கே செலவோ அதிகம். அதனால், புவனேந்திரனிடம் பணம் கேட்டோம். ஆனால், அதற்குள், அவளைத் தப்பாகத் தொடப் போகிறோம் என்று அந்தப் பெண் நினைத்தாள் போல, காட்டுப் பூனை மாதிரிக் கத்திக் கூச்சலிட்டு, அலறி, அடித்துக் கடித்துப் பிராண்டி அவள் செய்த ஆர்ப்பாட்டத்தினால், வேறு வழியின்றிக் கொல்ல நேர்ந்தது. அ... அது கூடத் தற்செயலாக நடந்ததுதான். மற்றபடி, அவளைப் பலமாக எச்சரித்துத் திருப்பி அனுப்புவதாகத்தான் இருந்தோம்," என்றான் கூட்டத் தலைவன், நல்லவனைப் போல.

இது பொய் என்று நளினி உடனே கணித்தாள்.
அவனது கதையின் முதல் பகுதி உண்மையாக இருக்கக் கூடும். ஆனால், ரதியை வேறு வழியின்றிக் கொன்றதாகச் சொன்னதில் இருந்து, எல்லாமே தலைவனின் கற்பனை என்பதைக் கூட இருந்த மற்றவர்களின் முகங்கள் காட்டிக் கொடுத்தன.

சிறு திகைப்பும், அதையடுத்து, அந்தத் திகைப்பை ஈடுகட்டுவது போலச் சற்று அதிகப்படியான தலையாட்டலும், அவை போன்ற தன்னையறியாத சிறு சிறு மாறுதல்களுக்காகக் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்த நளினியின் கண்களில் தெளிவாகத் தென்பட்டன.

இது பொய் என்றால், இந்தப் பொய்யை அவன் எதற்காகச் சொன்னான்?

அவளிடம் தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொள்வதில், இவர்களுக்கு என்ன லாபம்?

அவள் என்னவோ, அவர்கள் பிடியில் சிக்கியாயிற்று. இனிப் பழைய மாதிரி, புவனனுக்கு போன் செய்து, இத்தனை லட்சம், இங்கே கொண்டு வா என்று பணத்துக்காக மிரட்ட வேண்டியதுதானே?

அதுதானே, இவர்களது செயல்முறையாக, இதுவரை இருந்திருக்கும்? இருந்திருக்கிறது!

இப்போது மட்டும் ஏன் மாறுபாடு?

ஒரு வேளை, அவளும் புவனனும் பிரிந்திருப்பதால், பணம் தருவானோ, மாட்டானோ என்ற சந்தேகமா?

ஆனால், அதையும் தான் அவளே கெடுத்து வைத்திருந்தாளே.

பின் என்ன?