» காக்கும் இமை நானுனக்கு 16

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

என்ன என்பதை அந்த வன்முறைக் குழுவுடைய தலைவனே சொன்னான்.

இப்போது அவர்களுக்குப் பணம் வேண்டாமாம். பதிலாக, அந்தக் குழுவினரின் பின்னணி பற்றிய உண்மை விவரங்களைத் திரட்டிப் புவனேந்திரன் ஒரு ஃபைல் வைத்திருக்கிறானாம். அது போலீசுக்குப் போனால், பலருக்குப் பிரச்சனை ஏற்படக் கூடுமாம். அந்த ஃபைலை அவன் வேறு யாரிடமும் கொடுத்து அனுப்பி, அது எங்கேயேனும் தவறி விட்டால் என்ன செய்வது?

அதை அவனே கொண்டு வந்தால், நளினியைக் காப்பாற்றுவதற்காக, முழுக் கவனத்துடன் கொண்டு வருவான் அல்லவா?

அதனால், அவனுக்கு போன் செய்து, அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு நேரில் வருமாறு, அவளே சொன்னால், அவனும் அதன்படி ஃபைலைப் பத்திரமாகக் கொண்டு வந்து தருவான்.

அப்படிப் புவனேந்திரன் ஃபைலைக் கொணர்ந்து தந்ததும், இருவரையும் ஜோடியாகத் திருப்பி அனுப்பி வைப்பார்களாம்.

எங்கே அனுப்பி வைப்பார்கள் என்று தெளிவாகத் தெரிந்திருந்த நளினி, இந்தத் திட்டத்தை எப்படி முறியடிப்பது என்று யோசித்தாள்.

தன்னைப் பொறுத்த வரையில், இந்தக் கொடியவர்களிடம் இருந்து தப்புவது மிகக் கடினம் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

இனிப் பெற்றோரை, தங்கையைச் சந்திப்பது நடக்கக் கூடியது அல்லதான்.

சும்மா என்றால், இதுவே அவளை இடிய வைத்திருக்கும்.

ஆனால், ஒரு கோடு, அதை விடப் பெரிய கோடு ஒன்றுடன் ஒத்திடும் போது, சின்னதாகி விடுவது போல, புவனேந்திரன் உயிருக்கு ஆபத்து என்ற பெரிய துன்பத்தின் முன், தன் வீடு குடும்பம் போன்ற பிரச்னைகள் அவளுக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றியது.

ஏனெனில், அவர்களுக்குள் நால்வர் அழியக் காரணமானவனை, அவர்கள் நிச்சயமாக உயிரோடு விடப் போவது இல்லை.

எனவே, அவளுக்கு என்ன நேர்ந்தாலும், எப்படியும், புவனனைக் காப்பாற்றியாக வேண்டும் என்பது மட்டிலுமே மனதில் நின்றது.

ஆனால், கை கால் கட்டப்பட்டிருந்த இந்த நிலையில் அவளால் என்ன செய்ய முடியும்?

அவளுக்கு இப்போது உதவிக்கு இருந்தது வாய் மட்டுமே.

அதைக் கொண்டும், கத்தி அலறிப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.

ஏதேனும் மாயமாலம் செய்து, கட்டுகளை அவிழ்க்கச் செய்தாலும் கூட, இந்தக் கட்டைத் தடியர்களில், ஒருவர் இருவரை அவளால் தாக்க இயலலாம். அதுவும், நால்வரும் சேர்ந்து எதிர்த்தால், அவளால் பத்து நிமிஷம் தாக்குப் பிடிக்க முடியாது. பத்தென்ன? ஐந்து கூட அதிசயம் தான்.

எனவே, அந்த வழி பிரயோஜனம் இல்லை.

சற்று யோசித்துவிட்டு, "நீங்கள் தப்புக் கணக்குப் போடுகிறீர்கள். புவனேந்திரனும் நானும் காதலித்தது கடந்த காலத்தில்தான். என்னைப் பிடிக்காமல், எங்கள் திருமண நிச்சயத்தை அவர் முறித்துப் போய் விட்டார். அவர் எனக்காக எதையும் செய்யப் போவது இல்லை!" என்றாள் சோகத்தைப் பிழிந்தெடுத்த குரலில்.

"பார்த்தாயா, பார்த்தாயா, எங்களையே ஏமாற்றப் பார்க்கிறாய். இப்போதுதானே, அவனை இந்திரன், சந்திரன் என்றாய், அதற்குள் மாற்றிப் பேசுகிறாயே!" என்றான் தலைவன்.

தவளையாய் வாயை விட்டதை உள்ளூர நொந்தபடி, "இன்றைக்கும் நான் அவரைக் காதலிப்பது உண்மைதான். அவருக்குத்தானே என்னைப் பிடிக்காமல் விலகினார் என்றேன்," என்று, அவள் பிடிவாதமாகத் தன் கதையையே தொடர்ந்து உரைத்தாள்.

"அதையும் தான் பார்க்கலாமே! நாங்கள் சொல்லுகிற மாதிரி, போனில் சொல்லு! அவன் வருகிறானா, இல்லையா, பார்ப்போம்."

வருவான். வந்தே விடுவான். அவளை உயிராய் நேசிக்கும் அவளுடைய அன்பன், அவனது உயிரைக் கொடுத்தேனும், அவளைக் காப்பாற்ற, நிச்சயமாக வந்து விடுவான்.

ஆனால், அவனுக்கு இங்கே மரணம் காத்திருக்கிறதே.

"வரத்தான் செய்வார். ஆனால், போலீசோடு வருவார். உங்களைப் பிடித்து, ரதியின் மரணத்துக்குப் பழி வாங்க வேண்டாமா?"

காட்டுப் புலியாய் ஓரிருவர் உறும, "ஆனால் உன்னைக் கொன்று விடுவோமே!" என்றான் தலைவன்.

தொண்டையில் அடைத்ததைச் சமாளித்துக் கொண்டு, "செய்யுங்கள். இன்னொரு கொலைக்காகச் சேர்ந்து மாட்டுவீர்கள். எப்படியும் நீங்கள் மாட்டப் போவது நிச்சயம் தானே?" என்றாள் நளினி, அலட்சியம் போலக் காட்ட முயன்றபடி.

"ஏ...ய்...!" என்று கையை ஓங்கிக் கொண்டு முன்னே வந்தான் ஒருவன்.

அந்த அறை விழுந்திருந்தால், அவள் என்ன ஆகியிருப்பாளோ? கழுத்து ஒடிந்திருக்கும். அல்லது, குறைந்த பட்சமாகச் செவிப்பறை கிழிந்திருக்கும்.

ஆனால், "வேண்டாம், பொறு," என்று அவனைத் தடுத்தான் தலைவன். "இதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். எனக்கென்னவோ, இவள் இப்போது நடிக்கிறாள் என்று தான் தோன்றுகிறது. அந்தப் பயலுக்குப் போன் பண்ணாமல் இருப்பதற்காக, இப்படிக் கதை விடுகிறாள்."

"ஆனால், இவள் வீட்டோடு இருந்த காவலர்களை நீக்கியது உண்மைதானே? நாமே பார்த்து அறிந்ததுதானே? அப்புறம்தானே, இவளைப் பின் தொடர்ந்து, நாம் பிடித்து வந்தது?"

சற்றுத் தயங்கி, "உண்மைதான்..." என்று இழுத்தான் தலைவன். "ஆனால், அது நம்மைப் பிடிப்பதற்காக ஏதாவது தந்திரம் என்பதுதான், என் கருத்து. அதனால் தான், இவளைக் கடத்துவதில், இவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தது."

"ஒருவேளை, நாம் அவனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து விட்டோம் என்று தெரிந்ததும், தனக்கும் இவளுக்கும் ஒன்றும் இல்லை என்று நமக்குக் காட்டுவதற்காகப் புவனேந்திரன் திருமணத்தை முறித்திருப்பானோ என்று எனக்குச் சந்தேகம்," என்றான் இன்னொருவன்.

குழப்பம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் நிம்மதிதான். ஆனால், இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வகை அறியாமல், நளினி திகைத்தாள். ஏனெனில், அவர்கள் பேச்சில் அவளுக்குச் சாதகம், பாதகம் இரண்டுமே இருந்தது.

மதில் மேல் பூனை எந்தப் பக்கம் பாயும் என்று யார் சொல்லக் கூடும்?

அந்த வில்லன்கள் எல்லோருமாக எந்தப் பக்கம் சாயக் கூடும் என்று தெரியாததோடு, கட்டுப்பட்டுக் கிடந்த அவளது நிலைமை எப்படியும் மிக மோசமாக இருந்தது.

புவனன் மெய்யாகவே அவளைப் பிரிந்து விட்டான் என்று நம்பினாலும் கூட, அதற்காக அவர்கள், அவளைக் கட்டவிழ்த்து, நல்லபடியாக வீட்டுக்கு அனுப்பிவிடப் போவதில்லை. அதிலும், அவர்கள் நால்வரின் முகங்களையும் தெளிவாகக் கண்டுவிட்ட அவளது உயிர், எந்த வினாடியும் வானத்தில் பறக்கப் போவது நிச்சயம் தான்.

எனவே, அதைக் காப்பது பற்றி நினைத்துப் பார்ப்பது கூட நேர விரயம்.

அந்த நேரத்தில், ஏதாவது செய்து புவனனைக் காப்பாற்ற முடிந்ததானால், அது போதும். அவள் பிறந்ததன் பயனே, அப்போது கிட்டிவிடும்.

மூளையைக் கசக்கி, வேகமாக யோசித்துக் கண்களை மலர்த்தி, "நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? ஐயோ! இது தெரியாமல், அன்றிலிருந்து நான் அழுது கரைந்து, என் எடையே நாலு கிலோ குறைந்து போயிற்றே! இப்படியே சும்மா இருந்தால், வயிற்றுப்பாடு என்ன ஆகும் என்று, வேலைக்காக எத்தனை படி ஏறி இறங்கினேன், தெரியுமா? பேசாமல் வீட்டோடு கிடந்திருந்தால், உங்களை விரட்டியடித்துப் பிடித்துக் கொடுத்து விட்டு, என் புவனனே என்னைத் தேடி வந்திருப்பார் போலத் தெரிகிறதே! அத்தோடு, நானும் உங்களிடம் மாட்டிக் கொண்டு, இப்படிக் கைக்கட்டும், கால்கட்டுமாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேனே, அடடா!" என்று பெரிதாக வருத்தம் காட்டிப் புலம்பினாள்.

"ஆனால்..." என்று, உடனேயே சந்தேகம் காட்டி, "அப்படிக் கொஞ்சமேனும் அன்பு மிச்சம் இருந்திருந்தால், உங்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியிருப்பாரா? ஊம், இந்தப் பணக்காரப் பசங்கள் எல்லோரும் இப்படித்தான். பிடித்து விட்டால், ஓகோ என்று உருகுவது. பிடிக்கவில்லை என்றால் ஒரு வார்த்தையில் வெறுத்து, அப்படியே கை கழுவி விடுவது. அதுவே, அவர் விட்டுப் போனதே, எனக்குப் பெரும் வேதனை! அதற்கு மேல், விஷயம் புரியாத உங்களைப் போன்றவர்கள் பண்ணும் அநியாயம் வேறு!" என்று விசும்பினாள் அவள்.

உள்ளூர இருந்த பயமும், கலக்கமும் சேர்ந்து கொள்ளக் கண்களை அழுந்த மூடித் திறந்து, கொஞ்சம் கண்ணீரையும் கொண்டு வர முடிந்ததால், இந்த நால்வரும் நம்பும்படியாக நடித்து விட்டதாகத்தான் நளினி நினைத்தாள்.

தொடர்ந்த சில வினாடி நேர அமைதியில், அந்த வன்முறையாளர்களின் ஆராய்ச்சிப் பார்வையைத் தாங்கவும் அவளால் முடிந்தது.

"இவள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்குமோ பாஸ்?" என்று ஒருவன் கேட்க, "அவளை அவிழ்த்து விடு!" என்று தலைவன் சொல்லவும், வியப்பும் மகிழ்ச்சியுமாக, அவள் மனம் துள்ளிக் குதித்தது.

"பாஸ், இவள் சொன்னது பொய்யாக இருந்தால்?" என்று கேட்டவாறே, தயக்கத்துடன் அவர்களுள் இன்னொருவன் அவளை நெருங்கினான்.

அவளைக் கொண்டு வந்த புது மீசைக்காரன் அவன் என்பதைக் கண்ட நளினிக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது.

ஏனெனில், அவன் போர்க் கலைகள் தெரிந்தவன். சட்டென்று செயல்படுகிறவன். எனவே, தட்டு, வெட்டு என்று எதையாவது படபடவென்று செய்து திகைக்க வைத்துவிட்டு அவனிடம் இருந்து தப்பி ஓடுவது கடினம்.

தப்பி ஓடுவது பற்றி, நளினி எண்ணமிடுகையிலேயே, "இவள் ஏதாவது தில்லு முல்லு செய்தால், பட்டென்று மண்டையிலேயே போடுவதற்குத் தயாராகத் தடிக் கம்புடன் இவளுக்குப் பின்புறமாக நில்லுங்கள். என்னப்பா, சீக்கிரமாகக் கட்டை அவிழ்க்கிறாயா? இவளது பேச்சு உண்மையா, பொய்யா என்று, இப்போது பார்த்து விடலாம்," என்றான் தலைவன்.

எப்படித் தெரியும்? என்ன செய்யப் போகிறான்?

இவ்வளவு நேரம் பேசிய பாணியைக் கைவிட்டு, தடிக்கம்பு, மண்டையில் போடுவது என்றெல்லாம் சொல்கிறானே!

அவசரப்பட்டு அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்து, கட்டவிழ்த்த பிறகும், நளினி நாற்காலியில் இருந்து எழக்கூட இல்லை. அப்படியே அமர்ந்து, ஒரே நிலையில் இருந்த கை கால்களைத் தளர விட்டபடி, கூட்டத் தலைவனைப் பார்த்தாள்.

"கெட்டிக்காரி. அப்படியே இரு!" என்று விட்டு ஓர் ஓரமாகக் கிடந்த சாக்குப் பையிலிருந்து, ஒரு செல்போனைத் தேடி எடுத்து வந்தான் அவன். "புவனேந்திரன் நம்பரைப் போட்டுத் தருகிறேன். அவனை ஃபைலுடன் இங்கே வரச் சொல்லு."

உள்ளூரத் திகைத்த போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "எனக்காக அவர் வர மாட்டார் என்றேனே!" என்றாள் நளினி, வருத்தப் பாவனையையே தொடர்ந்து.

"அதையும் தான் பார்ப்போமே! அவன் வந்தாலும், வராவிட்டாலும், அது உனக்கு லாபமாகத்தான் முடியும். எங்கள் கருத்துப்படி, அவன் வந்தான் என்றால், நீ அவனோடு சேர்ந்து போகலாம். அப்படி அந்த ராஸ்கல் வராவிட்டால், நீ சொன்னது உண்மை என்று ஆகும். அப்போது, உன்னைக் கடத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, நாங்களே உன்னைத் தனியாக அனுப்பி வைத்து விடுவோம். அதனால், எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்பதில் உனக்கு என்ன பிரச்சனை, சொல்லு."

அவன் ஏதோ விட் அடித்து விட்டாற் போல, எல்லோரும் சேர்ந்து சிரிக்கக் காரணம் புரிந்து, நளினிக்கு வாய் உலர்ந்தது.

அவளைப் பரலோகத்துக்கு அனுப்பி வைப்பது பற்றியல்லவா, அவர்களுடைய தலைவன் பேசுகிறான். அவர்களுக்குச் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

இப்போது அவள் வகையாக மாட்டிக் கொண்டாளே!
இவ்வளவு புத்தி இல்லாமலா, இவர்கள் இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் எல்லாம் செய்ய முடியும்?

இப்போது போன் பண்ண மறுத்தால், அவள் சொன்னது அத்தனையும் பொய் என்று உடனேயே தெளிவாகிவிடும். அதற்காக வேறு, அவளை என்ன மாதிரிக் கொடுமைகள் செய்வார்களோ?

ஆனால், அந்தக் கொடுமைகளுக்குப் பயந்து போன் பண்ணினாலோ, புவனேந்திரன் நிச்சயம் வந்து விடுவான். இந்த அரக்கர்கள் அவனை அழிக்காமல் விட மாட்டார்கள்.

சட்டென ஒன்று அவள் மனதில் பட்டது.

எப்படியும், அவளது சாவு உறுதிதானே! அதைத்தானே, 'அனுப்பி வைப்பதாக'ச் சொல்லி அவர்கள் விலா வெடிக்கச் சிரித்தது.

புவனன் வந்தால், அவனோடு அல்லது தனியாகவேனும் அவளைச் சாகடித்து விடுவது என்பது, இவர்களது முடிவு. இங்கே, இவர்கள் முடிவுதான் நடக்க முடியும்.

எப்படியும் அவள் சாகத்தான் வேண்டும் என்றால், தனியாகச் சாவதே மேல் அல்லவா?

அதிலும், புவனனைக் காப்பதில் சாவது என்றால், அந்தச் சாவுக்கே பெருமைதான்.

அவனோடு சேர்ந்து வாழ முடியாது போகிறதே என்று நெஞ்சை அடைத்துக் கொண்டு வரத்தான் செய்தது. ஆனால், அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இது நேரம் அல்ல.

சுருள முயன்ற முதுகுத் தண்டை நிமிர்த்தி அமர்ந்து, "என்னால் முடியாது. உனக்குத் தேவை என்றால், நீயே புவனனுக்கு போன் செய்து கொள்!" என்றாள் அமர்த்தலாக.

ஆனால், கொத்தாக அவளது கூந்தலைப் பிடித்துத் தூக்கி, அவளை அவன் நிறுத்திய விதத்தில், வலியால் நளினியின் கண்களில் நீர் சுரந்தது.

எட்டி உதைப்பதற்கு வழியின்றி, அந்தத் தலைவன் எச்சரிக்கையோடு நின்றான். மற்ற மூவரும் கூட, அவளைத் தாக்குவதற்குத் தயாராகவே இருந்தார்கள்.

"கிண்டலாடீ? அவன் நம்ப மாட்டான் என்று, உனக்குத் தெரியாது? உன் குரல் அவனுக்குக் கேட்கா விட்டால், நீ எங்கள் வசம் இருப்பதையே, அவன் நம்பப் போவதில்லை. அதிலும் உயிரோடு இருக்கிறாய் என்று, நிச்சயமாக நம்பமாட்டான். ஒரு மடத்தனத்தை, இரண்டாம் முறை செய்து ஏமாற, அவன் ஒன்றும் முட்டாள் அல்ல என்பது, எங்களுக்குத் தெரியும்."

கடவுளே! என்னவோ, அவளே கேட்டால்தான் கவனமாக புவனனே ஃபைலை எடுத்து வருவான், அது இது என்று கதை விட்டானே. கடைசியில், இதுவா விஷயம்?

ரதியைக் கொன்ற பிறகும், அவளைக் கொன்று விடப் போவதாக மிரட்டியே புவனனிடம் பல லட்சங்கள் பறித்தார்களே. அப்போது, இருபத்தோரு வயது இளைஞனாக இருந்த புவனனும், ரதி உயிரோடு இருப்பதாக நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தான்.

ஆனால், இன்றையப் புவனனை அப்படி ஏமாற்ற முடியாது.

தன்னை இவர்கள் முன்பே கொல்லாததன் காரணம் நளினிக்கு இப்போது புரிந்தது. நல்ல விதமாகப் பேசியதன் காரணமும்.

இப்போது புவனனைப் பிடிப்பதற்கு, இவர்களுக்கு அவளது குரல் தேவைப்படுகிறது. அதாவது, அவனைப் பிடிக்கும் வரை, அவளது குரலுக்காக வேனும், அவளைக் கொல்ல மாட்டார்கள்.

ஆனால், தன் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்பதை விடவும், இதில் புவனனைக் காப்பாற்ற ஒரு வழி கிடைத்ததை எண்ணியே, நளினிக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது.

அவனுடன் பேச மாட்டேன் என்று, அவள் பிடிவாதமாக இருந்துவிட்டால், இவர்களால் புவனனை நெருங்க முடியாது.

என்ன, சில பல உதைகள், சித்திரவதைகள் தாங்க வேண்டியிருக்கும். அவ்வளவுதானே? தாங்கிக் கொண்டால் போகிறது.
எனவே, தலைநிமிர்ந்து, "என்ன ஆனாலும், புவனனுக்கு நான் போன் செய்யப் போவது இல்லை. அவரை இங்கே வரவழைக்கப் போவதும் இல்லை," என்றாள் அவள்.

அடி உதைகளை எதிர்பார்த்துதான் நளினி இதைச் சொன்னது.

ஆனால், இந்தத் துறையில் தாங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று அவர்கள், மறுபடியும் அவளுக்கு நிரூபித்தார்கள்.

ஆத்திரத்தில் முகம் சிவக்க, "அவனை நீ என்னடி வரவழைப்பது? இந்த போனில் உன் கதறலைக் கேட்டு, அவனே இங்கே ஓடி வரப் போகிறான். அவனுக்கு, நீ அழைப்பதை விட, நீ உயிரோடு இருக்கிறாய் என்பதற்கான ஆதாரம் தான் தேவை. உன் அலறலும், கதறலும் அதற்குப் போதும்," என்று அவளிடம் சொல்லிவிட்டுத் தன் கூட்டாளிகளைப் பார்த்தான், குழுத் தலைவன்.

பார்வையிலேயே அவனது மனதை அறிந்தவர்கள் போல, இருவர் அவளது கரங்களை இறுகப் பற்றினார்கள்.

"இவள் சாதாரண அடி உதைக்கெல்லாம், வாயைத் திறக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். ஆனால்..." என்று ஒரு குரூரத்துடன் அவளை நோக்கி, "நாங்கள் நாலு பேர் வக்கிரம் பிடித்த நாலு ஆண்கள். நீ ஒரு பெண். எங்களால் உன்னை என்னென்ன மாதிரிக் கேவலப்படுத்திக் கதற வைக்க முடியும் தெரியுமா?" என்று அவன் மிரட்டுகையில் நளினிக்குச் சட்டென ரதியின் நினைவு வந்தது.

'காட்டுப் பூனை போல அலறியடித்துக் கடித்துப் பிராண்டி ஆர்ப்பாட்டம்' செய்தாள் என்று ரதியைப் பற்றிச் சொன்னானே! இப்படித்தானே, அவளையும் மிரட்டியிருப்பார்கள். இருபத்திரண்டு வயதில் தனக்கே வயிறு கலங்கும் போது, பாவம்! உலகம் அறியாத பதினெட்டு வயதுச் சின்னப் பெண் ரதி எப்படி அரண்டு போயிருப்பாள். அதில் பதறியடித்து கண்மண் தெரியாமல் ஓடி, சிக்கி, விடுபடத் துடித்து, கடித்து, பிராண்டி, ஒன்றும் பலனின்றி... கடவுளே! என்ன பரிதாபம்.

"...அப்போது நீ அலறுவதைக் கேட்டு அந்தப் பயல் புவனன், அவனாக இங்கே ஓடோடி வருகிறானா இல்லையா என்று நீயே பார்," என்று, அவளை மேலும் மிரள வைத்து விட்டு, செல்லில் புவனேந்திரன் செல் எண்களை அழுத்தினான், அந்தப் படுபாவி.

எதிர்ப்புறத்தில், புவனேந்திரன் போனை எடுத்திருக்க வேண்டும்.

பேசுவது யார் என்றும் கேட்டிருக்க வேண்டும்.

"எல்லாம் உன் பங்காளி தான், தம்பி! உனக்குப் பிரியமான பொண்ணு எங்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் இங்கே எங்களிடம் படுகிற கஷ்டம் என்ன என்று உனக்குத் தெரிய வேண்டாமா? செல்லைக் காதில் வைத்தபடி, அமைதியாக ஓர் ஐந்து நிமிஷங்கள் கேட்டுக் கொண்டிரு. அப்புறமாக, அவளைத் திரும்பப் பெறுவதற்காக நீ என்ன செய்ய வேண்டும் என்று, நான் உனக்குச் சொல்லுகிறேன்," என்று அவனிடம் கூறிவிட்டு, நளினியிடம் திரும்பினான் அந்த அரக்கர் குழுத் தலைவன்.

பதறக்கூடாது. ரதியைப் போல நிலையிழப்பது, இவர்களுக்கு எக்காளமாக இருக்கும்.

பூனை எலியைப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வது போல, இந்த மாதிரி வக்கிரங்களுக்கு, அது உற்சாகமான பொழுது போக்காக இருக்கும்! அதற்கு இடம் தராமல், முடிந்தவரை, இவர்களுக்கு வலி, வேதனை உண்டாக்க வேண்டும்.

கைகளை அசைக்க முடியாத நிலை, ஆனால், எவனாவது அருகில் நெருங்கினால், காலால் எட்டி உதைத்து, அவன் ஒருவன் இடுப்பையாவது உடைத்து விட வேண்டும் என்று நளினி திட்டமிட்ட போது, "ஐந்து நிமிஷங்கள் அமைதியாகக் கேட்பது எதற்கு? நேரிலேயே பார்க்க, நான் தான் இங்கேயே வந்து விட்டேனே!" என்ற குரலில் பிரமித்துத் திரும்பிப் பார்த்தால், அங்கே வாயில் அருகே புவனேந்திரன் நின்றிருந்தான்.

எல்லோருக்குமே பிரமிப்புதான்!

ஆனால், "ஐயோ!" என்று, ரதியைப் போலவே, அரண்டு மிரண்டு, நிலையிழந்து போனாள் நளினி. ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரர்களிடம், புவனேந்திரன் மாட்டிக் கொண்டான் என்பது மட்டும்தான் அவளுக்குப் புரிந்தது.

ஓர் அசுர பலத்துடன், தன் கைகளைப் பற்றியிருந்தவர்களிடம் இருந்து, தன்னை விடுவித்துக் கொண்டு, ஓடியே போய், புவனேந்திரனை மறைத்தாற் போலக் கைகளை விரித்துக் கொண்டு அவன் முன்னே போய் நின்றாள். "அவரை ஒன்றும் செய்யாதே! முதலில் என்னைக் கொன்று விட்டு, அவரிடம் போ! ஐயோ, அதற்குள் நீங்கள் ஓடி விடுங்களேன்," என்று கதறிப் பதறினாள்.

Advertisement