» காக்கும் இமை நானுனக்கு 17

ஆசிரியர் : ரமணிசந்திரன்.

இந்தப் பொல்லாத அரக்கர்களிடம் புவனேந்திரன் மாட்டிக் கொண்டு விட்டான் என்பது ஒன்று தவிர, நளினிக்கு வேறு எதுவுமே கண்ணிலோ கருத்திலோ படுவதாகவே இல்லை.

அவளை அணைத்துப் புவனேந்திரன் ஏதோ சொல்ல முயன்றதையும் கூட, அவளால் கவனிக்க முடியவில்லை.

அறைக்குள் இருந்த நால்வரும், எந்த வினாடியில் புவனேந்திரன் மீது பாய்வார்களோ என்ற ஒரே பயத்தில் அவர்கள் மீதே பார்வையைப் பதித்தபடி, "நீங்கள் ஓடிப் போய்விடுங்கள். உங்களைக் கொல்வதுதான் இவர்களது முக்கியத் திட்டம். நான் இவர்களைச் சில நிமிஷங்கள், எப்படியாவது தடுத்து நிறுத்துகிறேன். அதற்குள், நீங்கள் தப்பி ஓடி விடுங்கள். புவன்! ப்ளீஸ். எனக்காகப் பாராதீர்கள். போங்கள்! போங்கள்! தயவு பண்ணிப் போங்களேன்!" என்று, அவனது பிடியிலிருந்து விடுபடத் துடித்ததோடு, அவனைப் பின்புறமாகத் தள்ளவும் முயற்சித்தாள்.

"ஷ்! ஷ், நளினிமா, கண்மணி! கொஞ்சம் அமைதிப் படுத்திக் கொள். இனி ஒன்றும் பயமில்லை," என்று புவனேந்திரன் சொன்னது, அவள் காதுகளில் விழவே இல்லை.

ஆனால், அறையின் உள்ளே இருந்தவர்கள், கையில் அகப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, அவனைத் தாக்குவதற்காக இன்னும் ஏன் ஓடி வரவில்லை?

மாறாக எல்லோரும், தடிக்கம்பை வைத்துக் கொண்டு இருந்தவன் கூட, அதையும் கீழே போட்டு விட்டு, ஏன் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்க வேண்டும்?

ஏன்?

ஒன்றும் புரியாமல் அவள் திகைப்புடன் விழித்த போது, அவளைத் தன்புறம் திருப்பி, லேசாக அணைத்தவாறு, வாயில் வழியிலிருந்து, ஒரு புறமாக ஒதுங்கி நின்றான் புவனேந்திரன்.

வழி கிடைத்ததும், போலீஸ் உடையில் நிறையப் பேர், அந்தக் குடிசைக்குள் செல்வதையும், வன்முறைக் கும்பலுக்கு விலங்கு மாட்டுவதையும், விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கண் சிமிட்டக் கூடத் தோன்றவில்லை.

அவ்வளவு பிரமிப்பு!

இதெல்லாம் எப்படி நடந்தது?

இன்ன இடத்துக்கு, இப்படி வா என்று புவனனிடம், அந்தக் கொலைகாரன் சொல்லவே இல்லையே.

புவனேந்திரனுடன், அவன் பேசிச் சில வினாடிகளுக்குள், இவன் இங்கே வந்தது எப்படிச் சாத்தியப்பட்டது? எப்படி முடிந்தது?

அத்தோடு, இத்தனை போலீஸ்காரர்கள் ஓசைப்படாமல் இங்கே எப்படி வந்தார்கள்?

நளினிக்கு எத்தனையோ கேள்விகள்.

ஆனால், புவனனுக்கு ஆபத்தில்லை என்பதே எல்லையற்ற ஆறுதலைத் தர, சூழ இருப்போரைப் பற்றிய நினைவே இல்லாமல், அவன் தோள் வளைவில் சாய்ந்தபடி நின்றாள்.

கடத்தல் கும்பல் நால்வரையும் கைது செய்து வெளியே கொண்டு வருகையில், போலீஸ் ஜீப் ஒன்று, உறுமிக் கொண்டு வந்து நின்றது.

ஜீப்பைத் தூர நிறுத்திவிட்டு, காவலர்கள் எல்லோரும் சத்தமின்றி வந்து, அந்தப் பாழடைந்த வீட்டைச் சூழ்ந்திருக்கிறார்கள்! கண்டபடி வளர்ந்திருந்த காட்டுச் செடி கொடிகளும், மரங்களும், அவர்கள் ஒளிந்து மறைந்து வர வழி வகுத்திருக்கின்றன.

ஆக, ஒரு விஷயம் - போலீஸ்காரர்கள் எப்படி வந்தார்கள் என்பது தெளிவாயிற்று.

ஆனால், மற்றது?

அவளைக் கூட, எச்சரிக்கையோடு கைப்பற்றியதாக, அந்தக் கடத்தல் குழுத் தலைவன் சொன்னானே! சக்திவேல், கண்ணன் போல யாரும் தன்னைப் பின் தொடர்ந்து, அவளும் பார்க்கவில்லையே!

பின்னே எப்படி?

ஆனால், எதைப் பற்றியும் தீவிரமாகக் கேட்டறியும் ஆர்வம் கூட அவளுக்கு வரவில்லை.

கடந்த சில மணி நேரமாக அனுபவித்த மன உளைச்சலுக்குப் பிறகு, புவனனின் அருகாமை தவிர, வேறு எதையும் நினைக்கக் கூட, அவளுக்குப் பிடிக்கவில்லை! தோன்றவுமில்லை!

பேசாமல், அவனையும், அவளையும் தனியே விட்டு விட்டு, எல்லோரும் இங்கிருந்து போய் விட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்.

ஆனால், அவளது மனநிலை புரியாமல், போலீஸ் அதிகாரி ஒருவர் அவர்கள் அருகே வந்தார்.

"வாழ்த்துக்கள் புவனேந்திரன்! ஐந்து ஆண்டுகள் அயராது பாடுபட்டு, இந்த வன்முறைக் கும்பலைப் பிடித்து விட்டீர்கள். இனி, நிம்மதியாக இருங்கள். இவர்கள் தான் வருங்காலத் திருமதி புவனேந்திரனா? அதிர்ஷ்டக்காரர் நீங்கள். இப்போதே, உங்கள் மீது, உயிரை வைத்திருக்கிறார்களே! அருமையான மண வாழ்வுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!" என்று முறுவலித்தார்.

அதே போல, இன்னோர் அதிகாரியும் வந்து, ஆங்கிலத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். அவரும், 'இனி நிம்மதியாக இருங்கள்!' என்று முன்னவரைப் போலவே சொன்னார்.

"இவர் குஜராத்தில் பெரிய அதிகாரி. முதலிலிருந்து இந்தக் குழுவைப் பிடிப்பதில் உதவி செய்து வருகிறவர். அந்தக் குழு சென்னைக்கு வந்ததில் இருந்து, இந்த அதிகாரியும் சேர்ந்து முழு மூச்சாக உதவி செய்தார்," என்று அதிகாரிகள் இருவரையும் புவனேந்திரன் நளினிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அவர்கள் மூவருமாகப் பேசியதைக் கவனிக்கையில், நளினிக்கு இன்னொரு முடிச்சு அவிழ்ந்தது.

புவனேந்திரன், அவ்வப்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் சென்ற விவகாரம்.

வேட்டை நாயாகத் துரத்தியதாக அந்த வில்லன் தலைவன் சொன்னானே, மோப்பம் பிடித்து, மோப்பம் பிடித்து, அவர்களைத் துரத்திப் பிடிக்கத்தான் சென்றிருக்கிறான்!

"அவர்களில் நாலு பேரை, நீங்கள்... உங்களால் அவர்கள் செத்ததாகச் சொன்னார்கள்..." என்றாள் அவள் மெல்லிய குரலில்.

யோசனையாகப் பார்த்துவிட்டு, குஜராத் அதிகாரி சொன்னார், "ஒரு வகையில், அவர்கள் சொன்னது நிஜம். ஆனால், அவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரவே, புவனேந்திரன் முயன்றார். தப்பிக்க முடியாதபோது, எட்டாம் மாடியிலிருந்து குதித்தும், சயனைட் கடித்தும், தங்களுக்குள்ளேயே சுட்டுக் கொண்டும், அவர்களாகவே செத்தார்கள்," என்று விளக்கினார்.

"எப்படியோ, பிரச்சனை சரியான விதமாக முடிந்தது. இனி, இந்தச் சள்ளையெல்லாம் மறந்து சந்தோஷமாக இருங்கள்," என்று கூறி, இரு அதிகாரிகளும் விடைபெற்றுச் சென்றனர்.

புவனனோடு காரில் திரும்பி வரும்போது, நளினி, தன் குழப்பத்தைச் சொன்னாள். "நீங்கள் எப்படி என்னைத் தொடர்ந்து வந்தீர்கள், புவனன்? அவர்கள் வெகு எச்சரிக்கையோடு என்னைக் கடத்தியதாகச் சொன்னார்களே! நீங்கள் சக்திவேல், கண்ணனையும் விலக்கி விட்டிருந்தீர்கள். பிறகெப்படி உங்களுக்கு விஷயம் தெரிந்தது?" என்று விவரம் கேட்டாள்.

"வெளிப்படையான பாதுகாப்பைத்தான் நான் விலக்கியிருந்தேனம்மா. ஆனால், உன்னைப் பாதுகாப்பின்றி, வினாடி கூட, நான் விடவே இல்லை. இவர்களை நான் விடாமல் தொடர்ந்ததால், பாதிப்பேரை அழித்து விட்டதால், இவர்கள் என்னை அழிக்க முயற்சிப்பார்கள் என்று எனக்கு நிச்சயம். இவர்களின் வழி என்ன? 'பிணைக்கைதி' பிடித்துக் காரியம் சாதிப்பதுதானே, கை வந்த கலை? இவர்களைப் பொறுத்தவரையில், இந்தப் பயம் எனக்கு எப்போதும் இருந்தது.

"கோகுலை அனுப்பி விட்டு ஒதுங்க முயன்றேனே, நினைவிருக்கிறதா? என் நெருக்கம் உனக்கு ஆபத்தாக முடியலாம் என்பதுதான், அப்போதே எனக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

"பிறகு, நாம் பிரிவது என்று முடிவு செய்தேனே, அன்று, இந்தக் குழுவினர் சென்னைக்கு வந்து விட்டதாக எனக்குத் தகவல் வந்திருந்தது. உனக்குப் பாதுகாப்பை அதிகரிக்கலாம் என்று வந்தால், உன்னை ஆளையே காணோம்," என்றவன். அவளது கையை இறுகப் பற்றி, "அன்று என்னமாகக் கலங்கித் தவித்துப் போனேன், தெரியுமா?" என்ற போது, அவனது குரல் கரகரத்துக் கனத்தது.

பற்றியிருந்த கையைத் தன் மறுகரத்தால் அவள் அழுத்தச் சட்டென, அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன்.

"புவன்!" என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள் நளினி.

"என்ன?"

"நாம் கொஞ்ச நேரம்... வந்து, இதையெல்லாம் தனியே இருந்து பேசுவோமா?"

அவளை விடுவித்து விட்டு, டிரைவரிடம், "வீட்டுக்குப் போப்பா!" என்றான் புவனேந்திரன்.

கூடவே, செல்லை எடுத்து நீட்ட, அதை வாங்கி, வீடு திரும்பச் சற்றுத் தாமதம் ஆகும் என்று தாயிடம் தெரிவித்தாள் நளினி.

அவன் முறுவலிக்கவும், வாய்ச் சொற்கள் அவசியமே படாமல், ஒருவர் மனதை ஒருவர் சரியாக உணர்ந்து செயல்படுவதை, உள்ளூர வியப்புடன் உணர்ந்தாள் அவள்.

புவனேந்திரனின் செல்லில் பேசுவதாகச் சொன்னபின், என்ன, எங்கே என்று சகுந்தலா எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

உயரமான சுற்று மதில், வாயில் காவலர்கள், நாய்கள், கிரில் அடைத்த சுற்று வராண்டா, காவலர் உடையையும், கிரில் அமைப்பையும் சற்று மாற்றி விட்டால், பழைய காலத்து அரண்மனைதான்!

இந்த மனநிலை எப்போதேனும் மாறக் கூடுமா?

கவனம் இருக்க வேண்டியதுதான். ஆனால்...

தனியறைக்குச் சென்றதும், "அப்புறம்?" என்று கேட்டாள் அவள்.

"அதை அவ்வளவு தூரத்தில் இருந்து கேட்டால் எப்படிச் சொல்வது?" என்று கண்ணில் சிரிப்புடன் கேட்டான் புவனன்.

பிகு பண்ணாமல் புன்னகையோடு அருகில் வந்தவளை உட்கார வைத்துத் தானும் அருகமர்ந்து, விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.

"ஆனால், உனக்கு வரக்கூடிய ஆபத்து, அதற்குத் தேவையான பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவம் பற்றிச் சொன்னாலும் உனக்குப் புரியவில்லை. அடிப்படை புரிந்தால்தானே, அதற்கு மேல் விஷயத்தை விளக்கிப் புரிய வைக்க முடியும்? புரிந்து கொள்ளப் பிடிக்காததுதான் பெரும் அபாயமாக இருந்தது. நெருங்கி வந்துவிட்ட கொடியவர்களிடம் இருந்து, உன்னைக் காப்பது பெரிய பிரச்சனையாகக் கண் முன்னே நின்றது. அவர்கள் எப்பேர்ப்பட்ட கொடுமைக்காரர்கள் என்று நேரடியாக அறிந்திருந்ததால், பாதுகாப்பின்றி, உன்னை ஒரு வினாடிக் காலம் சும்மா விடவும் எனக்கு மனமில்லை. எனவே, செக்யூரிட்டி நிறுவனமும், நானும் சேர்ந்து, அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தோம்.

"உனக்குக் காவலாக, ஒருவரையோ, இருவரையோ மட்டுமாக வைக்கவில்லை! அங்கங்கே ஆட்கள், ஒருவர் கண்ணுக்கு நீ மறைகிற போது, செல்லில் அடுத்தவருக்குத் தகவல் போய்விடும். அங்கிருந்து அடுத்த ஆள்! அடுத்த வாகனம்! தொடர்வதாகத் தோன்றாதபடியே, முன்னும் பின்னுமாகத் தொடர்ந்து பாதுகாத்தார்கள்."

"ஆனால், செலவு நிறைய ஆகியிருக்குமே!"

அவளது முகத்தை ஏந்தி, அவன் சொன்னான், "எவ்வளவு ஆனாலும், அதைவிட, நீ முக்கியம் அல்லவா?"

விழிகளில் லேசாக நீர்த் திரையிட, "அப்புறம்?" என்று கேட்டாள் நளினி. "இந்தப் படையினர் இவ்வளவு கவனமாக இருந்ததால்தான், அந்தக் கடத்தல் கும்பலுக்கும், இவர்களைக் கண்டு கொள்ள முடியவில்லை போல!" என்றாள் அவள் வியப்புடன்.

"ஆனால், நாலே பேராகிவிட்டிருந்த அவர்களை, நம் ஆட்கள் கண்டு கொண்டனர். விஷயம் தெரிந்ததும், இன்னொரு திட்டம் போட்டோம். அவர்களைப் பிடித்து உள்ளே போடுவது மட்டும் தான் உன்னை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வழியாகத் தோன்றிற்று. எனவே, உன்னைக் கடத்திச் செல்லும் அளவுக்கு, அவர்களுக்கு இடம் கொடுத்தோம். அதே சமயம், உனக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக, 'முன்னைப் போல, நான் ஏமாற மாட்டேன்! பிணை, கிணை என்று எனக்கு வேண்டிய யாரையும் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டினால், கடைசி வரை என் ஆட்களே என்னிடம் தொடர்பு கொண்டால் ஒழிய நம்ப மாட்டேன் என்று நான் சொன்னதாக, அவர்கள் காது கேட்கப் பேச வைத்தேன். கடத்தியதும், உடனே அறிந்து, அங்கங்கே ஒவ்வொரு திசையில் இருந்தும் ஆட்கள் சேர்ந்து, அங்கே வந்து சேர்ந்தோம்."

"அந்தக் கும்பலின் மனோபாவம் தெரிந்து செய்திருக்கிறீர்கள்," என்று மேலும் வியந்தாள் நளினி.

"பின்னே?" என்றான் அவன். "இந்த சுமார் ஐந்தரை ஆண்டுகளாக, அவர்களைத் துரத்துவதுதானே, தொழிலை விடவும், என் முக்கிய வேலையாக இருந்தது. துரத்திப் பிடித்து, ரதிக்குக் கடன் தீர்ப்பது! அவளது மரணக் கடனைத் தீர்த்து விட்டேன்! ஆனால்..." என்று வேதனையோடு பெருமூச்சு விட்டான் அவன்.

ரதியின் நினைவு!

இதில், நளினி என்ன வகையில் ஆறுதல் சொல்ல முடியும்?

பரிதாபத்துக்குரிய அந்தச் சிறு பெண்ணை நினைக்கையில், அவளுக்கே பரிதாபமாகத்தான் இருந்தது.

கூடவே, புவனேந்திரன் வேதனைப் படுவது பொறுக்க முடியாமல், அவன் முதுகை ஆறுதலாக மெல்ல வருடி விட்டாள் அவள்.

மீண்டும் ஒரு பெருமூச்சுடன், புவனனே தொடர்ந்து பேசினான். "என் குற்ற உணர்ச்சி. அதுதான் தாங்க முடியவில்லை. ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு சின்னப் பெண்! என்னவோ அவளைச் சிறப்பாக வாழ வைப்பதாக எண்ணிக் கொண்டு, அவளை மணந்து, அவளைப் பலி கொடுத்து விட்டேன். என்னை மணக்காமல் இருந்திருந்தால், இன்றைக்குக் கூட, எங்கோ அவள் உயிரோடு வாழ்ந்திருக்கக் கூடுமே என்று அதுதான் மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது! வாழ வேண்டிய ஒரு சின்னப் பெண்ணின் அகாலச் சாவுக்கு நான் காரணம் ஆனேனே!" என்று, தன் மனதை மறையாமல் சொன்னான் புவனன்.

"ஐயோ, அது அப்படியில்லை, புவனன்!" என்று தொடங்கி, கடத்தல் குழுத் தலைவன் கூறியதை, அப்படியே சொன்னாள் நளினி. "அவர்கள் செய்த கொலையை, ரதி பார்த்து விட்டாள் என்று அவளைக் கொல்வதற்காகத்தான், அவர்கள் அவளைக் கடத்திச் சென்றது. அதன்படி செய்தும் விட்டார்கள். ஆனால், உங்களிடம் பணம் பறிப்பதே, பிறகு தோன்றிய ஐடியாதான். சரியாகச் சொல்வதானால், ரதியின் வாழ்வு எப்படியும் முடிந்திருக்கும்! ஆனால், அவளது கடைசி நாட்களில், நீங்கள் அவளுக்குச் சொர்க்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று தெளிவாக விளக்கினாள்.

சற்று நேரம் புவனன் ஒன்றுமே பேசவில்லை.

பிறகு, நளினியின் கைகளைத் தன் கரங்களில் எடுத்து, "என் கண்மணி...!" என்று, அந்தக் கைகளில் முகம் புதைத்து, அப்படியே அமர்ந்திருந்தான்.

கைகளில் ஈரம் உணர்ந்த போதும், என்ன சொல்வது என்று புரியாமல், நளினியும் அசையாமலே உட்கார்ந்திருந்தாள்.

உடலை நடுக்கிச் சென்ற ஒரு மிக நீண்ட பெருமூச்சின் பின், புவனன் மெல்ல நிமிர்ந்தான்.

"பிணக் கிடங்கில் ரதியின் முகத்தைப் பார்த்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அதை நினையாமல் நான் தூங்கியது இல்லை நளினிம்மா! அதன் காரணம் நான், நான் என்று, என்னமாய்த் தவித்திருக்கிறேன்... அப்படியில்லை என்று தெரியும் போது, கடவுளே, எப்பேர்ப்பட்ட விடுதலை உணர்ச்சியை எனக்குத் தந்திருக்கிறாய், தெரியுமா? வாழ வேண்டிய வயதில், ஒரு சின்னப் பெண் உயிரை இழந்தாளே என்று, இப்போதும் பரிதாபம் தான்! ஆனால், அதன் காரணம் நான் இல்லை என்று அறியும் போது... அவளது கடைசி நாட்களைச் சந்தோஷமாகக் கழிக்க உதவினேன் என்பது, எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது, தெரியுமா? நளினி, நீ இன்று என்னை மீண்டும் முழு மனிதன் ஆக்கி விட்டாய், கண்ணம்மா! அதற்காக உனக்கு நான் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். சொல்லு. உனக்கு என்ன வேண்டும்? ஒன்றும் வேண்டாம் என்று சொல்லக் கூடாது! ஏதாவது, கட்டாயம் நீ கேட்டே ஆக வேண்டும்."

சில கணங்கள் மௌனமாக இருந்தவளுக்கு, வீட்டினுள் வரும்போது எண்ணியது நினைவு வந்தது.

அவன் முகத்தைப் பார்த்து, "விஷயமே வேறு என்று ஆனதால், இந்தப் பாதுகாப்புப் பிரமை மாறக் கூடும் அல்லவா, புவனன்?" என்று கேட்டாள் அவள்.

"ஓ!" என்று எழுந்தான் புவனேந்திரன்.

இருமுறை குறுக்கும் நெடுக்குமாக நடந்துவிட்டு, "இப்படி யோசி, நளினி. அங்கங்கே ஆட்களைப் பிடித்துப் போய்ப் பணம் பறிப்பதாய்ப் பத்திரிகையில் படிக்கிறோம் தானே? இனிப் பயம் இல்லை என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அதன் பிறகு, அந்த மாதிரியான நிலை நமக்கு நேர்ந்தால், எப்படி இருக்கும், சொல்லு!" என்று கேட்டான் அவன்.

கண்ராவியாகத்தான் இருக்கும். ஆனால், இப்படிக் கூடவே வைத்துக் கொண்டு அலைவதும்... அதுவும் கண்ராவியாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

நளினி பேசாமல் அமர்ந்திருக்கவும், மேலும் இருதரம் அறையை அளந்துவிட்டு, அவள் அருகே வந்து அமர்ந்தான் அவன்.

"ஓகே! உன் எண்ணமும் எனக்குப் புரிகிறது. அதனால், ஒன்று செய்யலாம். வீடு, தொழில் இடங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கட்டும். அத்தோடு, எலக்ட்ரானிக் கருவிகளையும் பொருத்திக் கொள்வோம். இவை போக, நன்கு பழக்கப்பட்ட நாய்கள் வாங்கித் தருகிறேன், எப்போதும், ஒன்றை அருகே வைத்துக் கொள்வோம். இது கூட வேண்டாம் என்று சொல்லிவிடாதேம்மா! ப்ளீஸ்..." என்றான் புவனன் கெஞ்சுதலாக.

தன்னை மீறிச் சிரிப்பு வந்தது நளினிக்கு.

"ம்ம்ம்..." என்று புன்னகையோடு அவள் யோசிக்க, "புரிகிறது, புரிகிறது..." என்று அவசரமாகக் குறுக்கிட்டான் அவன்.

"அந்த ஓர் அறைக்குள் மட்டும், நம்மைத் தவிர வேறு எந்தப் பிராணியையும், காவலுக்காகக் கூட, நானே விட மாட்டேன், கண்மணி! இது உறுதி!" என்று அவன் சூளுரைக்க, அவள் முகம் செந்தாமரையாய்ச் சிவந்து மலர்ந்தது.

(முற்றும்)

Advertisement