» சங்ககால மகளிர்

சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழந்தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்ககால மகளிரின் அரும்பண்புகள். ஆணும், பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு என மேற்கொள்ளப்பட்டது. மகளிருக்குத் தொல்காப்பியர் பின்வரும் பண்புகள் இன்றியமையாதன என எடுத்தோதுகின்றார்.
“உயிரினும் சிறந்தன்ற நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று” (தொல், களவியல் - 23)
“அச்சமும் நாணும் மடனுமுந் துறதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (தொல், களவியல் - 8)
இதன் வழி ஆண்களுக்குப் பெருமையும் வீரமும் வேண்டப்படுவன போல பெண்களுக்கு அச்சமும் நாணமும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். எனவே சங்ககால மகளிரின் செயற்பாடுகளையும் அவர்களுடைய பண்புகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
அழகு:-
பெண்ணொருத்தியின் அழகினை மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதன் என்ற புலவர்
“பூவொடு புரையுங் கண்ணும் பேயென விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலும்” (குறுந். 226 1-3) என வருணித்துள்ளார்.
மென்மையான உடலமைப்பு:
மகளிர் மென்மையான உடமைப்பிற்குரியவர். புறவுலகின் பொய்மையும் சூதும் அறியாதவர். உலகின் இடையூறு நிலைகளையும் விலங்கு முதலியவற்றால் நேர்ந்திடும் இடுக்கண்களையும் உணராதவர். ஆனால் உள்ளத் திண்மையால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு இல்லறத்தினை நல்லறமாக ஒம்பும் ஆற்றல் உடையவர்கள் அவர்களேயாவர். இவ்வாறு மகளிர்பாற் காணத்தகும் மென்னீர்மையினைச் சாயல் என்ற சொல்லால் நந்தமிழர் வழங்கினார்.
“நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனலித் தன்றே” (குறந். 95. 4-5)
என்ற குறுந்தொகைப் பாடலின் அடிகள் இக்கருத்து நுட்பத்தினைப் புலப்படுத்துகிறது.
இசை:
பெண்களுக்கு குரல் இயற்கையாகவே இனிமை நிரம்பியிருந்தது. எனவே, இசைத்தமிழ், மகளிர் வழிப் பெரிதும் வளர்ந்தது. தாலாட்டுப் பாடல் தாய்மார் வளர்த்த இயலிசைத் தமிழ் இலக்கியம் ஆகும். யானை முதலிய காட்டு விலங்குகளும் மற்றவர்களும் அவர்தம் இசைக்கு வயப்பட்டுத் தம் கொடூரத்தன்மை மறந்து நின்றமையைச் சங்க இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.
“ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் கருவின் பாலை” (பொருநர் - 11-12) என்ற பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது.
விளையாட்டு:
மலைவாழ் மகளிர் தினைப் புனங்களில் கிளியோட்டி தினைப் புனத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.
“களைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்புனக்கிளி படியும் பூங்கட் பேதை” (குறுந். 141 1-2)
களைப்பூவினைப் பறித்து மாலைதொடுத்தாலும், தினைப் புனத்தில் கிளி ஓட்டுதலும் மலைவாணர் மகளிரின் விளையாட்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இளமகளிர் அக்காலத்தே கவலையில் தோயாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் என்பதனை நற்றினைப் பாடல் கொண்டு அறியலாம்.
“விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத்திற் சென்றிருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேயமெனப்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்” (நற் 68. 1-5)
இந்நற்றிணைப் பகுதி கொண்டு மகளிர் வீட்டின் வெளியே சென்று விளையாடமலிருப்பது அறமாகாது என்பதும் அதனால் செல்வமும் தேய்ந்துவிடும் என்பதும் தெரியவருகின்றன. விளையாடும் மகளிர் கூட்டத்தினைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சங்க காலப் புலவர்கள் “ஒரையாமம்” என்றும் “பொய்தன் மகளிர்” என்றும் குறிப்பிடுகின்றனர். பஞ்சாயக் கோணுப்பல் கொண்டு செய்யப்பட்ட பாவை கொண்டு மகளிர் அந்நாளில் விளையாடிய விளையாட்டு ஓரை எனப்பட்டது. வண்டலயர்தல், சிற்றில் இழைத்தல், துணங்கையாடுதல், குரவையாடுதல் முதலிய விளையாட்டுகள் மகளிர் விளையாட்டுகளாகக் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெறுகின்றன.
“பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் (குறுந். 239. 1-3) என்ற குறுந்தொகைப் பாடற்பகுதியும்,
“அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல்” (பதிற். 2. 1-3)
என்ற பதிற்றுப்பத்து பாடற்பகுதியும், மகளிர் விளையாட்டினைக் குறிப்பிடுகின்றது. சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை,
“செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்” (புறம். 312 5.6)
என்ற புறநானூற்றுப் பாடற்பகுதி கொண்டு அறியலாம். சிறுமகளிர் வீட்டின் முற்றத்தில் கழங்காடுகின்றதை,
“கூரை நல்மலைக் குறுந்தொடி மகளிர் மணலொடு கழங்கு”
பருவ வயது வந்துற்ற பெண்கள் தங்களுக்கேற்ற காளைகள் மீது காதல் கொண்டனர். அக்கால ஆடவனுக்கு வீரமே வாழ்வாக விளங்கியது. பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் வயது நிறைந்த இளைஞன் ஒருவனைக் குறிப்பிடுகின்ற பொழுது,
“ஒளிறுவாள் அருஞ்சாம முருக்கிக்களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312. 5-6) என்று கூறியுள்ளார்.
முல்லை நில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சா நெஞ்சமும் ஆற்றலுமுடைய காளையரையே மணக்க விரும்பினர். இதனை,
“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” (கலி. 103. 63-64)
என்று முல்லைக்கலி குறிக்கின்றது. இந்நாளைப் போல் அல்லாமல், அக்காலத்தே மகளிரை மணந்துகொள்ள ஆடவரே மகளிர்தம் அணிகலன்களுக்கெனப் பெரும் பொருளினைப் பரிசமாகத் தந்தார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்து போற்றுகின்றோம். ஆனால் அதற்காகத் தகுதியில்லாதவன் ஒருவன் பெரும் பரிசுப் பொருளைக் கொணர்ந்து தந்தாலும் தங்கள் மகளைப் பழந்தமிழ்ப் பெருமக்கள் மணஞ்செய்து கொடுத்தார்களில்லை. இதற்குப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி சான்று கூறும்.
“முழங்கு கடன் முழவின் யன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்
தந்தையும் கொடா அன்” (புறம்.334. 10-13)
இறை நம்பிக்கை:
சங்ககால மகளிர், இறை நம்பிக்கை உடையவர்கள், மணமாகாத மகளிர், முருகனை நோக்கி, யாம் எம் நெஞ்சமர்ந்த காதலரைக் கனவிற் கூடியுள்ளோம். அது பொய்யாகாமல் நனவின் கண்ணும் எம் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என வேண்டினர். மணமான மகளிரோ, தமக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டும் என் நோன்பிருந்தனர். மேலும், தம் கணவர் மேற்கொண்ட செயல்கள் செம்மை பெறவும், போரில் வெற்றி கிட்டவும் வரம் அருள வேண்டும் என்றும் திருமுருகனை ஒருமனமாக இறைஞ்சி நிற்கின்றனர். திருப்பரங்குன்றத்திலே நடைபெறும் வழிபாடு இது.
“அருவரைச் சேரத் தொழுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற்சே எப்பநின் னளிபுனல் வையை
வரு புனலணிலென வரங் கொள்வோரும்
கருவ யிறுறுகெனக் கடம் பட வோரும்
செய்பொருள் வாய்க்கெனச் செவி சார்த்துவோரும்
ஐய மடுகென வருச்சிப போரும்” (பரி. 8.102-108)
சங்க கால மகளிர் உயிரை விடவும், நாணத்தை விடவும் கற்புடைய மகளிராக விளங்கினர். மகளிர் பொழுதுபோக்காவும் மனம் மகிழ்ச்சியாகவும் விளையாடி மகிழ்ந்தனர். சங்க கால மகளிர் வீரமுடைய ஆண்மகனை மணந்தனர். சங்க காலத்தில் மகளிருக்கு இறை நம்பிக்கை மிகுந்திருந்தது.

Advertisement