» செய்யுளியல் சுட்டும் மொழிநடை

தமிழில் முதன் முதலில் தோன்றிய நூலாகக் கருதப்படுவது அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் இலக்கண நூலே ஆகும். அடுத்துத் தோன்றி இன்றும் பெருமையுடன் உலாவரும் இலக்கண நூல் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம். இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டு விளங்கும் பழமையான நூல்.
நடை என்பது பாடுவோன், பாடுபொருள், பாடப்படும் காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் குறிப்பிட்ட கால கட்டங்களில் வடிவங்களும், யாப்பும் சிறப்பிடம் பெற்றிருக்கக் காணலாம். நடை பற்றிய தொல்காப்பியத்தில் காணப்படும் பொருளதிகாரத்தில் செய்யுள் இயல் நடை மட்டும் ஆராய்வதற்கு எடுத்தாளப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தின் இயல்களும் இருபத்து ஏழு, செய்யுள் இயலின் உறுப்புக்களும் இருபத்துஏழு. இந்த இருபத்துஏழு உறுப்புக்களுக்கும் உரிய வரையறைகளையும், இருபத்துஏழு இயல்களுக்கு உரிய விளக்கங்களையும் செய்யுள் இயல் கூறி இருக்கிறது.
நடை பற்றிய பல்வேறு அறிஞர்களின் விளக்கங்கள் கூறப்படுகின்றன. புலவரின் உள்ளத்தில் உண்மையும் உறுதியும் சிறந்து விளங்கினால் அவருடைய நடை திட்பமும் நுட்பமும் அமைந்ததாக இருக்கும். அவருடைய உள்ளத்தில் ஆர்வம் மிகுதியானால் நடையில் ஆற்றல் மிகுதியாகும் என்பார் மு. வரதராசனார்.
தமிழின் தனித்தன்மையை அறிந்த தொல்காப்பியர் தம்கால இலக்கியத்தின் பாடுபொருள், பின்புலம், கதைமாந்தர், யாப்பு ஆகிய மரபுகளைத் தெளிவாக வரையறுத்துள்ளார். இத்தகைய கட்டுப்பாட்டுக்குள் தொல்காப்பியர் தனித் தன்மையைக் காட்டிச் சில நெறிமுறைகளை வகுக்கின்றார்.
நடையின் மிக இன்றியமையாத கூறுகள் இரண்டு என்பர். அவையாவன,
1. சுருங்கச் சொல்லல் (Precision)
2. விளங்க வைத்தல் (Crystallization) என்பனவாகும்.

மொழியானது எளிமைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அம்மொழி மக்களைச் சென்று சேரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மொழி அமைப்பை ஆராய்வதற்கு அமைப்பியல் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.