» பழமொழியில் இந்துமதம்

தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில் 400 பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு பதிகம் முழுவதையும் பழமொழிகளை வைத்தே பாடியுள்ளார். இந்த மாதிரி நூலோ பதிகமோ வேறு எந்த மொழியிலும் இல்லை. கம்பரும் இராமாயணத்தில் நிறைய பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

பழமொழி என்றால் என்ன?

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.

இனி இந்து மதத் தத்துவங்களை விளக்கும் சில பழமொழிகளைப் பார்ப்போம்.

1. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது

மஹாபாரதத்தில் கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் எப்படிக் காப்பற்றினான் என்ற கதை எல்லோருக்கும் தெரியும். தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது. அது வரை தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். இந்த சம்பவத்தின் மூலம் கிருஷ்ணன் அவனுக்கு பெரிய உண்மையை உணர்த்தினான். இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்ததது. இப்போது யாருக்கு ஒரு பெரிய ஆபத்து வந்து அதிலிருந்து பிழைத்தாலும் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.

2. கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?

இந்தக் கதையை பொதுவாகவும் திருவள்ளுவர் மனைவியோடு இணத்தும் சொல்வார்கள். கொங்கணவ முனிவர் காட்டில் செல்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே நிமிர்ந்து பார்த்தார். அவரது தவ வலிமையில் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவர் திருவள்ளுவர் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தார். நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி பிச்சை போட வரவில்லை. அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார். பின்னர் வெளியே பிச்சை போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப்பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை. அதுமட்டுமல்ல , வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா என்று கேட்டாராம். பத்தினிப் பெண்களுக்கு முக்காலமும் உணரும் சக்தி உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. முனிவர் தன்னுடையதவ வலிமையை விட கடைமையைச் செய்யும் பெண்ணுடைய தவ வலிமை பெரியது என்பதை உணர்ந்தார்.

3. கற்றவனிடமே வித்தையைக் காட்டுகிறாயா?

சிவ பெருமான் கருணைக் கடல். கேட்டவருக்கெல்லாம் வரம் தருவார். ஒரு முறை
பஸ்மாசுரன் என்ற அசுரன் அவரை நோக்கி தவம் புரிந்து அவரது அருளுக்குப்
பாத்திரமானான். வேண்டிய வரத்தைக் கேள் என்றார். அவன் எவன்
மீது கை வைக்கிறேனோ அவன் எரிந்து போகவேண்டும் என்று கேட்டான். சிவன்
அவ்வாறே ஆகுக என்று வரம் கொடுத்தார். பஸ்மாசுரன் அவர் மீதே அதை சோதித்துப் பார்க்கவிரும்பினான். சிவன் உயிருக்குப் பயந்து ஒட நேரிட்டது. அப்போது விஷ்ணு மோஹினி உருக்கொண்டு அவனை மயக்கி நாட்டியம் ஆடச் சொல்லிக்கொடுத்தார். ஒரு கட்டத்தில் தலை மீது கை வைக்கும் அபினயம் வந்தது. அவனை அறியாமலே அவன் தன் தலைமீது கை வைத்து எரிந்து இறந்தான். இதுதான் கற்றவன் கிட்டேயே வித்தை காட்டுதல். இதில் பல நீதிகள் இருக்கின்றன. கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கும் இதை உதாரணமாகக் கூறலாம்.

4.குருவை மிஞ்சிய சிஷ்யன்

குருவை மிஞ்சிய சிஷ்யனுக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. இராமானுஜர் என்ற சிறுவன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு குரு வந்தார். சிறுவனின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அவனுக்கு ஒம் நமோ
நாராயாயணாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அப்படி சொல்லிக்
கொடுக்கும்போது ஒரு நிபந்தனை விதித்தார். இதை யாருக்கும் சொல்லிக்
கொடுக்கக்கூட்டாது. அப்படி சொல்லிக் கொடுத்தால் மந்திரம் பலிக்காமல் போய் விடும் என்றார். ஆனால் ராமானுஜனோ மந்திரம் பலிதம் அடையும் நிலையில் வந்தவுடன் ஊர் கோவில் கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு எல்லோரையும் அழைத்து மந்திரத்தை உபதேசித்தார். இதைப் பார்த்த குருவுக்கு கோபம் வந்தது. இராமானுஜனிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது உங்கள் கட்டளையை மீறியதற்காக நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை.. இத்தனை பேர் சொர்கத்திற்கு போவார்கள் இல்லையா? என்று ராமானுஜன் கூறினார். இவர் குருவை மிஞ்சிய சிஷ்யர் ஆகி உலகப் புகழ் பெற்றார். இதையே இன்னொரு விதத்தில் பார்த்தால் சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர் ஆகியோரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக விளங்கினவர்கள்தாம்.

5. வினை விதைத்தவன் வினை அறுப்பான்,தினை விதைத்தவன் தினை அறுப்பான்

இந்தக் கருத்து எல்லா மதப் புத்தகங்களிலும் உள்ளது. ஆனால் இந்துக்கள் மறு
ஜன்மத்திலும் இது பொருந்தும் என்று நம்புகிறார்கள். பல புராணக் கதைகளில் இந்த ஜன்மத்தில் ஒருவர் துன்பப்படுவதற்கு காரணம் பூர்வ ஜன்ம வினைதான் என்று காட்டப்படுகிறது. குறள், கீதை, பைபிள் ஆகிய எல்லா நூல்களிலும் இதைக் காணலாம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியும் இதையே விளக்குகிறது. கர்ம வினை பற்றிய கொள்கை சமண மதத்தில் இன்னும் வலுவாக உள்ளது. தமிழ்க் காவியமான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியனவற்றில் வினைப் பயன் நன்றாக விளக்கப் பட்டுள்ளது.

6. உள்ளது போகாது, இல்லாதது வாராது

இது ஆத்மாவின் அழியாத்தன்மையை காட்டுகிறது. அறிவியலில் energy can neither be created nor destroyed என்ற பெரிய தத்துவம் உள்ளது. இதே போலத்தான் ஆத்மாவும். இதை யாரும் அழிக்கவும் முடியாது, ஆக்கவும் முடியாது. இது பரமாத்மாவுடன் ஒன்றுபட முடியும். அவன் மீண்டும் சிருஷ்டி காலத்தில் உலகைப் படைக்கும்போது அவை உயிர்களாக இயங்கும். மதத்தையும் அறிவியலையும் மறந்துவிட்டு சாதாரண உலகை எடுத்துக் கொண்டாலும் மந்திர தந்திரச் செயல்களைச் செய்வோருக்கு இதை பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் உருவாக்கும் பொருட்கள் ஏதோ ஒரு இடத்திலிருந்துதான் வருகின்றன. உற்பத்தி செய்யப்பட்டது இல்லை என்று கொள்ளலாம்.

7. இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்

இராமாயணத்தின் அழியாத் தன்மைக்குக் காரணம் இராம பிரானின் அபூர்வ
குணங்களாகும். எங்கெல்லாம் ஒரு மனிதன் ஆசைக்கு எளிதில் இரையாவானோ
அங்கெல்லாம் இராமன் சூப்பர் மனிதனாகச் செயல் படுகிறான். இதனால் கதைப் போக்கு நாம் எதிர்பாராத விதமாக அமைகிறது. இது உண்மையில் நடந்தது என்று அறியும்போது இராம பிரானின் மீதான அன்பு பெருகுகிறது. இந்தப் பிறப்பில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற அவனது கூற்று அந்தக் காலத்தில் யாரும் செய்யாத செயலாகும். அவனது தந்தை உட்பட எல்லா அரசர்களும் பல மனைவிகளை வைத்திருந்த காலத்தில் அவன் ஒரு மனைவியக் கூட அனுபவிக்க முடியாத நிலையில் இப்படி இரு மாதரைச் சிந்தையாலும் தொட மாட்டேன் என்று சபதம் செய்கிறான். அதனால்தான் இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான் என்ற பழமொழி வந்தது. அவனது தம்பி இலக்குவன் இதற்கும் ஒரு படி முன்னால் சென்றவன். அன்னை சீதா பிராட்டியின் காலில் இருந்த மெட்டியைத் தவிர அவளது உருவத்தையே காணாதவன். இதனால் இராமாயணம் படித்து அதன் கருத்தை உள்ளத்தில் கொண்டவர்களுக்கு காமம் இராது.

8. படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா? விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்றானாம்.

இந்தப் பழமொழிகள் சமுதாயத்தில் இராமாயணம் எந்த அளவுக்கு வேரூன்றி
இருக்கிறது என்பதைக் காட்டுவதோடு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக
இருப்பவர்களை நன்றாக படம் பிடித்துக் காட்டுகிறது. ஒருவன் நீண்ட நேரம் ஒரு
காரியத்தில் செலவு செய்து விட்டு ஒன்றுமே புரியாமல் இருப்பதை இரண்டாவது
பழமொழி நன்றாக எடுத்து காட்டுகிறது.

9. சாது மிரண்டால் காடு கொள்ளாது

இந்து மத சந்நியாசிகள் பொதுவாக சாதுக்கள். சந்நியாசம் எடுக்கும்போது குருவுக்குத் தரும் வாக்குறுதியில் எந்த உயிருக்கும் சிந்தையாலும் தீங்கு செய்ய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். அவர்கள் யார் மீதும் கோபப்படமாட்டார்கள். ஆனால் யாரையாவது சபித்தால் அந்தச் சாபம் பலித்துவிடும். மேலும் ஒரு முறை சபித்து விட்டால் அதை அவர்களேகூட மாற்றமுடியாது. அந்தச் சாபத்திற்கு விமோசனம் மட்டும் தர முடியும். அப்பேற்பட்ட சக்தியுடையவர்களை சில நேரத்தில் மன்னர்கள் கொடுமைப்படுத்தியது உண்டு. வேனன், இந்திரன், நகுஷன் ஆகியோர் சாதுக்களை பகைத்துக் கொண்டு கூண்டோடு அழிந்தரர்கள். திருவள்ளுவர் பெரியோரைப் பகைத்தால் என்னாகும் என்று ஒரு அதிகாரம் முழுவதும் கூறுகிறார். மொகலாய மன்னர்கள் அளவு கடந்து அநியாயம் செய்த போது வித்யாரண்யர் என்ற சந்நியாசியும் சமர்த்த ராமதாச் என்ற சந்நியாசியும் இந்து சாம்ராஜ்யங்களை உண்டாக்கி மதத்தைக் காப்பற்றினார்கள். இதுபோல எத்தனையோ மன்னர்கள் சாதுக்களைப் பகைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு பின்னர் அவர்களிடமே மன்னிப்புக் கேட்ட கதைகளும் இருக்கின்றன.

10. நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

ஆங்கிலத்தில் every sinner has a future and every saint had a past என்று ஒரு
பழமொழி உண்டு. ஆகையால்தான் ரிஷியின் பழைய நிலை பற்றிப் பேசாதீர்கள்.
இப்போது அவர் உள்ள உயர் நிலையைப் பாருங்கள் என்று அறிவுறுத்துகின்றனர். நதியின் மூலத்தைப் பார்த்தால் அது ஒரு சிறிய ஓடையாகத்தான் இருக்கும். ஆனால் அதே நதி சில மைல்களுக்கு அப்பால் பெரிய நதியாகப் பல்கிப் பெருகும். ஆரம்ப நிலையைக் கண்டு யாரும் ஏமாந்துவிடக்கூடாது. இன்று பெரியோராக இருக்கும் பலரை சிறு வயதில் அறிந்தவர்கள் அவர்களது இளமைகாலத்தைப்பற்றி கூறி எள்ளி நகையாடுவார்கள். ஆனால் இது எந்த வகையிலும் அந்தப் பெரியவர்களைப் பாதிக்காது. குறை கூறுவோரின் கீழ் நிலையைத்தான் காட்டும்.

11. இது என்ன சிதம்பர ரகசியமா?

யாராவது எதையாவது திரை போட்டு மறைத்தால் இது என்ன சிதம்பர ரகசியமா? என்று கேட்பார்கள். தில்லை எனப்படும் சிதம்பரத்தில் சிவ பெருமான் ஆகாச ரூபமாக இருப்பதால் வெட்டவெளிக்கு முன்னால் திரை போட்டிருப்பார்கள். இது இறைவனின் பஞ்ச பூதத் தன்மையை விளக்கும் மாபெரும் தத்துவங்களில் ஒன்று. எங்கும் நிறைந்த இறைவனுக்கு உரு ஒன்றும் தேவையில்லை. ஆகையால் திரை மறைவுக்குப் பின்னால் நடப்பனவற்றை சிதம்பர ரகசியம் என்று கூறுவர். இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள் எங்கும் எதிலும் இறைவனை காண்பார்கள்.

12. திருவுடையார்க்குத் தீங்கு இல்

பழமொழி நானூறு என்னும் நூலில் ஒரு பாடலின் கடைசி அடியாக இந்த அடி
வருகிறது. இறைவனின் அருள் பெற்ற அடியார்களுக்கு எந்தத் தீங்கும் வராது. மதுரைக்கு வருமாறு ஞான சம்பந்தரை பாண்டிய மன்னரின் அமைச்சரும் மனைவியும் அழைத்தவுடன் ஞான சம்பந்தர் புறப்படுகிறார். உடனே அப்பர் பெருமான் அவரைத் தடுக்கிறார். பொல்லாத பாண்டிய மன்னர்களின் ஆட்களும் சமணர்களும் உங்களுக்குத் தீங்கு செய்வார்கள் என்று கவலைப்படுகிறார். ஆனால் சம்பந்தரோவெனில் கோளறு திருப்பதிகம் பாடி மதுரைக்குச் சென்று வெற்றி வாகை சூடுகிறார். ஒன்பது கிரஹங்களின் பெயர்களையும் கூறி இவை அடியார்களை ஒன்றும் செய்யாது என்றும் கூறுகிறார். இதை எத்தனையோ மஹான்களின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கி விடுகிறது. அருணகிரியாரும் நாள் என் செய்யும், எனை நாடி வந்த கோள் என் செய்யும் என்று பாடுகிறார்.

13. ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுதல்

ஏதெனும் ஒன்றைத் தொலைத்து விட்டு சம்பந்தமில்லாத இடத்தில் தேடும்போது
இதைக் கூறுவது வழக்கம். ஆனால் உண்மையில் இது சுந்தரர் வாழ்க்கையில்
உண்மையிலேயே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் பிறந்த பழமொழியாகும். அவர் திருமுதுகுன்றம் என்னும் ஊரில் சிவனை வழிபட்டு பன்னீராயிரம் பொற்காசுகளைப் பெற்றார். அதை பத்திரமாக திருவாரூருக்கு தூக்கி வருவது பிரச்சனை ஆகி விடவே மீண்டும் சிவனிடம் முறையிட்டார். இதை மணிமுத்தா நதியில் போட்டுவிட்டு திருவாருர் குளத்தில் பெற்றுக் கொள்க என்று சிவ பெருமான் ஆணையிட்டார். சுந்தரரும் அப்படியே மணிமுத்தா நதியில் பொற்காசுகளைப் போட்டுவிட்டு அவைகளைத் திருவாரூர்க் குளத்தில் மீட்டுக் கொண்டார். இறைவன் அருள் பெற்ற அடியார்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

14. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

தமிழ் மறைகளும் உபனிஷத்துகளும் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து
இறைவனை சொற்களால் வருணிக்க முடியாது என்றும் சொற்களுக்கு எட்டாத
தூரத்தில் இருப்பவனே இறைவன் என்றும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் சில
அடியார்கள் இறைவனை வருணிப்பதை காண்கிறோம். அது முழுமையான படம்
இல்லை. ஏனெனில் கடவுளைக் கண்டவர் அவனது முழு உருவத்தையும்
சொல்லமுடிந்ததில்லை (விண்டிலர்). அப்படிச் சொல்ல வந்தவர்கள் உண்மையில் இன்னும் அவனது முழு சொரூபத்தைக் காணவில்லை (கண்டிலர்) என்றே சொல்ல
வேண்டும். ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற சில ஞானிகள் இதை சற்று
விளக்கமாகக் கூறுகிறார்கள். முழு சமாதி நிலையில் முழுகுவதற்கு முன்பாக சிலர்
மட்டும் மக்களின் நன்மைக்காக வெளியே வந்து அவ்வாறு சொன்னதுண்டு. அதைத்
தான் நாம் ஜீவன் முக்தர்களின் வாழ்க்கையில் படிக்கிறோம். ஆகையால் கண்டவர்
விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது பெரும்பாலனவர் விஷயத்தில் உண்மையே.