» பிள்ளைத்தமிழில் நிகழ்ந்த மாற்றங்கள்

கடவுள் அல்லது மனிதர்களுள் சிறந்தவரைக் குழந்தையாகப் பாவித்துப் போற்றிப் பாடுவதே பிள்ளைத்தமிழின் சிறப்பாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு பருவங்களில் மிகவும் இனிய பருவமாக எல்லோராலும் போற்றப்படுவது குழந்தை பருவமாகும். எனவே இறைவனையும், மனிதரையும் குழந்தையாகக் கற்பனை செய்து பாடி அதனால் கிடைக்கும் பொருளையும் புகழையும் பெற்று புலவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளைத்தமிழ் பருவ வரையறையில் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை ஆராய்கின்றது.
பிள்ளைத்தமிழின் தோற்றம்:
பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகை தமிழில் மட்டுமே காணப்படும் இலக்கிய வகையாகும் என்று மு. வரதராசனார் கூறியுள்ளார். பெரியாழ்வாரின் திருமொழியில் கண்ணனின் பிள்ளைத் பருவத்தைப் போற்றிப் பாடியுள்ளார். அழகிய பாடல்களே பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகை தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் சிற்றில் பருவச் செய்தியும், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் தாலப்பருவச் செய்தியும் இடம் பெற்றுள்ளன. பிள்ளைத்தமிழ் பருவங்களில் கூறப்படுகின்ற பல கூறுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இப்பிள்ளைத் தமிழக் கூறுகளெல்லால் வளர்ச்சி பெற்றுப் பின் தனி இலக்கிய வகையாக உருப்பெற்றிருக்கலாம்.
தொல்காப்பியமும் பிள்ளைத் தமிழும்:
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே பிள்ளைத்தமிழ் இருந்திருக்கலாம். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் செய்தல் மரபாகும். எனவே, தொல்காப்பியர் பிள்ளைத்தமிழுக்குரிய இலக்கணக் கூறுகளைச் சுட்டிச் செல்கிறார்.
“குழவி மருங்கினும் கிழவதாகம் (தொல்.புறம் 24)
என்னும் நூற்பாவிற்கு “குழவியைப் பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும் பாராட்டும் இடத்துச் செங்கீரையும், தாலும், சப்பாணியும், முத்தமும், வரவுரைத்தலும், அம்புலியும், சிற்றிலும், சிறுதேரும், சிறுபறையும் எனப் பெயரிட்டு வழங்குதலாலும் என்பது” என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். எனவே, மேற்கூறிய நூற்பாவால் பிற்காலத்தில் தோன்றி வளர்ச்சி பெற்ற பிள்ளைத்தமிழுக்கு உரிய இலக்கணத்தை ஒரளவு தொல்காப்பியம் கூறுவதாகக் கொள்ளலாம்.
பிள்ளைத்தமிழின் யாப்பமைதி:
பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே அமைந்துள்ளன. ஆசிரிய விருத்தம் என்பது ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை, தொடை முதலியன ஒருங்கே, பெற்று நான்கு அடிகளுக்கு மிகாமலும், ஓர் அடியில் எத்தனை சீர்கள் வேண்டுமானாலும் கொண்டிருப்பதாகும், பிற அடிகளும் முதலடியில் வந்த சீர்களின் எண்ணிக்கையினையே பெற வேண்டும். பிள்ளைத்தமிழுக்குரிய யாப்பு ஆசிரிய விருத்தம் என்பதைச் சுவாமிநாதமும், இலக்கண விளக்கப் பாட்டியலும் குறிப்பிடுகின்றன. மேலும் பன்னிரு பாட்டியல் ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா, கலிவிருத்தம் ஆகியவற்றாலும் பிள்ளைத்தமிழ் பாடலாம் என்று கூறுகின்றது. ஆனால் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே பாடப் பெற்றுள்ளன.
பிள்ளைத்தமிழில் பாடப்பெறும் பருவங்கள்:
பிள்ளைத்தமிழில் பாடப்பெறும் பருவங்கள் பத்து. அவற்றுள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பொதுவான நிலைப் பருவங்களாகும். இந்த ஏழு பருவங்களுடன் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்ற மூன்று பருவங்களையும் சேர்த்துப் பத்துப் பருவங்களாக ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பாடப் பெறும் என்று பன்னிருபாட்டியல் கூறுகிறது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் முதல் ஏழு பருவங்களை அடுத்து கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்கள், இறுதியாகப் பாட வேண்டும் என்று இலக்கண விளக்கப் பாட்டியல் கூறுகிறது. இப்பாட்டியல் நூல் கூறும் கழங்கு, அம்மானை போன்ற பருவங்களைப் பன்னிரு பாட்டியல் கூறவில்லை. மாறாக, சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், ஊசல், காமன் நோன்பு, போன்ற பருவங்களைக் கூறுகிறது. இதன் மூலம் பிள்ளைத்தமிழில் பாடப்பெறும் பருவங்களைக் கூறுவதில் பாட்டியல் நூல்கள் சிற்சில வேறுபாடுகள் உடையனவாக இருக்கின்றன என்பதை அறியலாம். பாட்டியல் நூல்கள் கூறிய பருவ அமைப்பையும், யாப்பமைதியையும் பெற்று குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ் முதல் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றி வளர்ச்சியுற்றன.
பருவ வரையறையில் நிகழ்ந்த மாற்றங்கள்:
ஆண்பாற் பிள்ளைத்தமிழாக இருந்தாலும், பெண்பாற் பிள்ளைத்தமிழாக இருந்தாலும் பத்துப் பருவங்களைக் கொண்டமைத்தே பிள்ளைத்தமிழ் பாட வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. பாட்டியல் நூல்கள் குறிப்பிட்ட பருவ அமைப்பில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றி வளர்ச்சியுற்றாலும் ஒரு சில பிள்ளைத்தமிழ் நூல்கள் பருவ அமைப்பில் மாற்றியமைக்கப் பெற்றுள்ளன. காப்புப் பருவத்திற்கு அடுத்து செங்கீரைப் பருவம் பாடிய பின்னரே தாலப்பருவம் பாடப் பெற வேண்டும். கண்ணப்ப முதலியார் இயற்றிய சேக்கிழர் பிள்ளைத்தமிழில் காப்புப் பருவத்திற்குப் பிறகு தாலப்பருவமும் அதற்கு அடுத்து செங்கீரைப் பருவமும் பாடப் பெற்றுள்ளன. சில பிள்ளைத் தமிழ் நூல்களில் உள்ள பத்துப் பருவங்களையும் வௌ;வேறு ஆசிரியர்கள் பாட அதனை ஒருவர் தொகுத்த போக்கினையும் காணமுடிகிறது. கம்பன் பிள்ளைத்தமிழில் பத்துப் பருவங்களையும் முறையே கம்பராமன், சித்தன், தங்கவல்லி, தமிழ்வேள், சிவனடியான்,
இரா. திருமுருகன், அப்துல்காதர், சொ.சொ.மீ.சுந்தரம், இளந்தேவன், மரியதாசு போன்றோர் பாடியிருக்க புலவர் அ. அருணகிரி இப்பருவங்களைத் தொகுத்துள்ளார். திருவள்ளுவர் பிள்ளைத்தமிழில் பத்துப் பருவங்களையும் முறையே க.இரோசேந்திரன், சவகர்லால், சு.சண்முகசுந்தரம், கருப்பட்டிக் கவிராயர், பூமிநாதன், தலைச்செல்வி, சாரதா, சபாபதி சிதம்பரம் வ. கலியமூர்த்தி, க.நாராயணசாமி, அரு. சோமசுந்தரம் போன்ற பத்து ஆசிரியர்கள் பாடியிருக்க இறுதிப் பருவமாகிய சிறுதேர்ப் பருவத்தைப் பாடிய அரு. சோமசுந்தரம் இப்பருவங்களைத் தொகுத்துள்ளார். இதனைப் பருவ அமைப்பில் நேர்ந்த புதிய மாற்றமாகக் கருதலாம்.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சில பிள்ளைத் தமிழ்நூல்கள் பாட்டியல் நூல்கள் குறிப்பிடாத புதிய பருவங்களைக் கொண்டமைத்துப் பாடப் பெற்றுள்ளன. சொ.சொ.மீ. சுந்தரம் இயற்றிய பண்டிதமணி பிள்ளைத்தமிழில் சிற்றில், சிறுதேர், சிறுபறை என்ற இறுதி மூன்று பருவத்திற்கு மாறாகத் தீருநீற்றுப் பருவம், திருவாசகப் பருவம், சன்மார்க்க சபை பருவம் என்ற புதிய மூன்று பருவங்கள் பாடப் பெற்றுள்ளன. பத்துப் பருவங்களுக்கு மேற்பட்ட பருவங்களும் ஒரு சில பிள்ளைத்தமிழ் நூல்களில் பாடப் பெற்றள்ளன. ஆண்டாள் பிள்ளைத்தமிழ் பதினொரு பருவங்கள் கொண்டதாகவும், தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் பன்னிரெண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பெற்றுள்ளன. காவை முருகன் பிள்ளைத்தமிழில் ஆண்பாற்குரிய பத்துப் பருவங்களோடு, துயிலெழல், தகர் அடக்குதல், வேலோச்சுதல் ஆகிய மூன்று பருவங்களோடு பதிமூன்று பருவங்கள் இடம் பெற்றுள்ளன. புலவர் மாவண்ணா தேவராசன் எழுதிய பெரியார் பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் பெற்று மேலும், வாழ்த்துப் பருவம், கூர்ந்துணர் பருவம், வினாவுறுபருவம், கதை கேள் பருவம் என்னும் நான்கு பருவங்களையும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்கள் பாடப் பெற்றுள்ளன. மேலும் இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவம் முதலாகச் சிறுதேர்ப் பருவம் ஈறாக உள்ள பருவங்கள் அனைத்திலும் வரலாறு, பொன்மொழி, புகழ்மொழி, இயற்கை எழில், பருவத்து இயல் என்ற உட்தலைப்புகளும் இடம் பெறுகின்றன. மேற்கூறிய அமைப்புகளைப் பிள்ளைத்தமிழில் பருவ வரையறையில் நிகழ்ந்த நல்ல மாற்றங்கள் என்று கருதலாம்.
சிற்றிலங்கிய வகைகளுள் சிறந்ததெனப் போற்றப்படும் பிள்ளைத்தமிழ், தொடக்க காலத்தில பாட்டியல் நூல்கள் கூறிய இலக்கணப்படி தோன்றி வளர்ச்சியுற்றன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் சில, பருவ அமைப்பில் மாற்றமடைந்தன. ஆசிரியர்களின் மனப்பாங்கிற்கு ஏற்ப புதிய பருவங்கள் தோன்றல், சில பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்துப் பருவங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து மாறுபட்டு 11,12, 13, 14 என்ற பருவ எண்ணிக்கையைப் பெறல், ஒவ்வொரு பருவத்தையும் வௌ;வேறு ஆசிரியர்கள் பாடியிருத்தல் போன்றவற்றைப் பிள்ளைத்தமிழில் பருவ வரையறையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று கருதலாம்.

Advertisement