» பாலை

ஆசிரியர் : மாறன் பொறையனார்.

இடம் - குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி
(நீர்வற்றிய இடம்)
ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

௩௰௧)

உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு)
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்
துன்பம் கலந்தழியும் நெஞ்சு

௩௰௨)

விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்
அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறு
கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு)
உச்சி ஒழுக்கஞ் சுரம்

௩௰௩)

பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்
ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்
காய்ந்து கதிர்தெறூஉங் காடு

௩௰௪)

கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி
வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்
வாள்தடங்கண் மாதரை நீத்து

௩௰௫)

கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த
தடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல்
விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்
பொருள்புரிந்தார் போய சுரம்

௩௰௬)

கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்
பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்
தொடியோடி வீழத் துறந்து

௩௰௭)

தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது
கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை

௩௰௮)

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி

௩௰௯)

மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோ டப்
புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து
விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ
நம்மில் பிரிந்த இடத்து

௪௰)

இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா
நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்
குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலே சேக்கும் இடம்

Advertisement