» நெய்தல்

ஆசிரியர் : மாறன் பொறையனார்.

இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

௪௰௧)

தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)
ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த
சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ
பூந்தலை அன்றில் புலம்பு

௪௰௨)

கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியைஎம் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ

௪௰௩)

பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்
தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்
ஆழியால் காணாமோ யாம்

௪௰௪)

கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன்

௪௰௫)

ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்
சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை
மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ
பூந்தண் பொழிலுள் குருகு

௪௰௬)

ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்
பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்
கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி
தோள்நலம் தோற்பித்தல் நீ

௪௰௭)

பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற எமக்கு

௪௰௮)

எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த
நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார்

௪௰௯)

கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்
தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி

௫௰)

அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட
மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் ஆய்

Advertisement