» மருதம்

ஆசிரியர் : மாறன் பொறையனார்.

இடம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

௨௰௧)

கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி
நுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும்
வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்
தேற எமக்குரைப்பாய் நீ

௨௰௨)

போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்
அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய்
நெறிஅதுகாண் எங்கையர் இற்கு

௨௰௩)

யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்
பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாண
அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று

௨௰௪)

கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை
நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம்
சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம்
காரத்தின் வெய்யஎம் தோள்

௨௰௫)

அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்
விழைதரு மார்பம் உறுநோய் - விழையின்
குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்
மழலைவாய் கட்டுரை யால்

௨௰௬)

பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்ற
செய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக்
கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்
எய்தி இடருற்ற வாறு

௨௰௭)

தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ
நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்
வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய
வண்ணம் உடையேம்மற்(று) யாம்

௨௰௮)

ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு
வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து)
ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்
நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு

௨௰௯)

ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்
புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன்
எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்
தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன்

௩௰)

குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்
வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய் !
ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி
கூடல் இனிதாம் எனக்கு

Advertisement