» முல்லை

ஆசிரியர் : மாறன் பொறையனார்.

இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

௧)

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார்

௨)

அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி !
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீர்மை கொண்டன தோள்

௩)

மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன
கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை
முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று
நமர்சென்ற நாட்டுள்இக் கார்

௪)

உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்
வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி
நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார்

௫)

கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்
கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி
வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்
துளிகலந்து வீழ்தருங் கண்

௬)

முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி
செல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று)
யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை
ஈரும் இருள்மாலை வந்து

௭)

தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்
சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு)
எறிவது போலும் எனக்கு

௮)

பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாய
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா
கானம் கடந்துசென் றார்

௯)

வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)
உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல்
பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றன
வம்ப மறையுறக் கேட்டு

௰)

நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக
தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்ற
கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி
நிற்பாள் நிலையுணர்கம் யாம்

Advertisement