» அழுக்காறாமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௱௬௰௧)

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.

மு.வ உரை:ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

௱௬௰௨)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.

மு.வ உரை:யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

௱௬௰௩)

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.

மு.வ உரை:தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

௱௬௰௪)

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.

மு.வ உரை:பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

சாலமன் பாப்பையா உரை:பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

௱௬௰௫)

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.

மு.வ உரை:பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா உரை:பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

௱௬௰௬)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

மு.வ உரை:பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

௱௬௰௭)

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.

மு.வ உரை:பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

௱௬௰௮)

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.

மு.வ உரை:பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை:பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

௱௬௰௯)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.

மு.வ உரை:பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

சாலமன் பாப்பையா உரை:பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.

௱௭௰)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

மு.வ உரை:பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.

Advertisement