» நடுவு நிலைமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௱௧௰௧)

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.

மு.வ உரை:அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

௱௧௰௨)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

மு.வ உரை:நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

௱௧௰௩)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.

மு.வ உரை:தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

௱௧௰௪)

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.

மு.வ உரை:நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை:இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

௱௧௰௫)

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை:கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

௱௧௰௬)

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.

மு.வ உரை:தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

௱௧௰௭)

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

மு.வ உரை:நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

சாலமன் பாப்பையா உரை:நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

௱௧௰௮)

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை:முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

௱௧௰௯)

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.

மு.வ உரை:உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

சாலமன் பாப்பையா உரை:மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

௱௨௰)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.

மு.வ உரை:பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

Advertisement