» ஒப்புரவறிதல்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௨௱௧௰௧)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு.

மு.வ உரை:இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

சாலமன் பாப்பையா உரை:பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.

௨௱௧௰௨)

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

மு.வ உரை:ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

௨௱௧௰௩)

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.

மு.வ உரை:பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

சாலமன் பாப்பையா உரை:தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

௨௱௧௰௪)

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

மு.வ உரை:ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

௨௱௧௰௫)

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.

மு.வ உரை:ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

௨௱௧௰௬)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.

மு.வ உரை:ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

௨௱௧௰௭)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.

மு.வ உரை:ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.

௨௱௧௰௮)

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.

மு.வ உரை:ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

௨௱௧௰௯)

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.

மு.வ உரை:ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

௨௱௨௰)

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.

மு.வ உரை:ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

Advertisement