» புகழ்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௨௱௩௰௧)

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

மு.வ உரை:வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

௨௱௩௰௨)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.

மு.வ உரை:புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

௨௱௩௰௩)

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.

மு.வ உரை:உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

௨௱௩௰௪)

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.

மு.வ உரை:நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை:தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

௨௱௩௰௫)

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.

மு.வ உரை:புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

௨௱௩௰௬)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

மு.வ உரை:ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை:பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

௨௱௩௰௭)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.

மு.வ உரை:தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

௨௱௩௰௮)

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.

மு.வ உரை:தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை:புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

௨௱௩௰௯)

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

மு.வ உரை:புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

௨௱௪௰)

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.

மு.வ உரை:தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

சாலமன் பாப்பையா உரை:தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.