» வாழ்க்கைத் துணைநலம்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௫௰௧)

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

மு.வ உரை:இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

சாலமன் பாப்பையா உரை:பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

௫௰௨)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்.

மு.வ உரை:இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

௫௰௩)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை?.

மு.வ உரை:மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

சாலமன் பாப்பையா உரை:நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?.

௫௰௪)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.

மு.வ உரை:இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

சாலமன் பாப்பையா உரை:கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.

௫௰௫)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.

மு.வ உரை:வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

சாலமன் பாப்பையா உரை:பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

௫௰௬)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்.

மு.வ உரை:கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

சாலமன் பாப்பையா உரை:உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

௫௰௭)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை.

மு.வ உரை:மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

சாலமன் பாப்பையா உரை:இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

௫௰௮)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு.

மு.வ உரை:கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

சாலமன் பாப்பையா உரை:பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

௫௰௯)

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.

மு.வ உரை:புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சாலமன் பாப்பையா உரை:புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

௬௰)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்நன்கலம் நன்மக்கட் பேறு.

மு.வ உரை:மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

Advertisement