» வெஃகாமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௱௭௰௧)

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.

மு.வ உரை:நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

௱௭௰௨)

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.

மு.வ உரை:நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

௱௭௰௩)

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.

மு.வ உரை:அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை:அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

௱௭௰௪)

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.

மு.வ உரை:ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

சாலமன் பாப்பையா உரை:ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

௱௭௰௫)

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.

மு.வ உரை:யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.

௱௭௰௬)

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.

மு.வ உரை:அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

௱௭௰௭)

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.

மு.வ உரை:பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.

௱௭௰௮)

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.

மு.வ உரை:ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை:செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

௱௭௰௯)

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு.

மு.வ உரை:அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

௱௮௰)

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.

மு.வ உரை:வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

Advertisement