» உட்பகை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௮௱௮௰௧)

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.

மு.வ உரை:இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.

௮௱௮௰௨)

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.

மு.வ உரை:வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.

௮௱௮௰௩)

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.

மு.வ உரை:உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.

௮௱௮௰௪)

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்.

மு.வ உரை:மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

௮௱௮௰௫)

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.

மு.வ உரை:உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.

௮௱௮௰௬)

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.

மு.வ உரை:ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

சாலமன் பாப்பையா உரை:தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

௮௱௮௰௭)

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.

மு.வ உரை:செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.

௮௱௮௰௮)

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.

மு.வ உரை:உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை:அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

௮௱௮௰௯)

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.

மு.வ உரை:எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை:எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.

௮௱௯௰)

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.

மு.வ உரை:அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

Advertisement