» படைமாட்சி

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௭௱௬௰௧)

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.

மு.வ உரை:எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை:தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.

௭௱௬௰௨)

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.

மு.வ உரை:போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.

சாலமன் பாப்பையா உரை:தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.

௭௱௬௰௩)

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.

மு.வ உரை:எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

சாலமன் பாப்பையா உரை:பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.

௭௱௬௰௪)

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.

மு.வ உரை:(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை:போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

௭௱௬௰௫)

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.

மு.வ உரை:எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை:எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

௭௱௬௰௬)

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.

மு.வ உரை:வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.

சாலமன் பாப்பையா உரை:வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.

௭௱௬௰௭)

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.

மு.வ உரை:தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை:தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.

௭௱௬௰௮)

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.

மு.வ உரை:போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.

சாலமன் பாப்பையா உரை:பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

௭௱௬௰௯)

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.

மு.வ உரை:தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.

சாலமன் பாப்பையா உரை:எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.

௭௱௭௰)

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.

மு.வ உரை:நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

Advertisement