» கூடாநட்பு

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௮௱௨௰௧)

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு.

மு.வ உரை:அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

சாலமன் பாப்பையா உரை:மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

௮௱௨௰௨)

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.

மு.வ உரை:இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

௮௱௨௰௩)

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.

மு.வ உரை:பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.

௮௱௨௰௪)

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.

மு.வ உரை:முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

௮௱௨௰௫)

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.

மு.வ உரை:மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.

௮௱௨௰௬)

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.

மு.வ உரை:நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை:நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

௮௱௨௰௭)

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.

மு.வ உரை:வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

௮௱௨௰௮)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.

மு.வ உரை:பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

சாலமன் பாப்பையா உரை:பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

௮௱௨௰௯)

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

மு.வ உரை:புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.

௮௱௩௰)

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.

மு.வ உரை:பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

Advertisement