» தூது

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௬௱௮௰௧)

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

மு.வ உரை:அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

௬௱௮௰௨)

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.

மு.வ உரை:அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

௬௱௮௰௩)

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.

மு.வ உரை:அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

௬௱௮௰௪)

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.

மு.வ உரை:இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

சாலமன் பாப்பையா உரை:இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

௬௱௮௰௫)

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது.

மு.வ உரை:பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

சாலமன் பாப்பையா உரை:அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

௬௱௮௰௬)

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.

மு.வ உரை:கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை:அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

௬௱௮௰௭)

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை.

மு.வ உரை:தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை:தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

௬௱௮௰௮)

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.

மு.வ உரை:தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

சாலமன் பாப்பையா உரை:பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

௬௱௮௰௯)

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்கணவன்.

மு.வ உரை:குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

சாலமன் பாப்பையா உரை:தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

௬௱௯௰)

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது.

மு.வ உரை:தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை:தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

Advertisement