» பகைமாட்சி

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௮௱௬௰௧)

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.

மு.வ உரை:தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.

௮௱௬௰௨)

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு.

மு.வ உரை:ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

சாலமன் பாப்பையா உரை:மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.

௮௱௬௰௩)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.

மு.வ உரை:ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

சாலமன் பாப்பையா உரை:பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.

௮௱௬௰௪)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.

மு.வ உரை:ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

சாலமன் பாப்பையா உரை:கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

௮௱௬௰௫)

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.

மு.வ உரை:ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

சாலமன் பாப்பையா உரை:நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

௮௱௬௰௬)

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.

மு.வ உரை:ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை:நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

௮௱௬௰௭)

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.

மு.வ உரை:தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.

௮௱௬௰௮)

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து.

மு.வ உரை:ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

௮௱௬௰௯)

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.

மு.வ உரை:அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.

௮௱௭௰)

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி.

மு.வ உரை:(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

Advertisement