» பழைமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௮௱௧)

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

மு.வ உரை:பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

௮௱௨)

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.

மு.வ உரை:நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

௮௱௩)

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை.

மு.வ உரை:பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.

சாலமன் பாப்பையா உரை:தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.

௮௱௪)

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.

மு.வ உரை:உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

சாலமன் பாப்பையா உரை:தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

௮௱௫)

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.

மு.வ உரை:வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

௮௱௬)

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

மு.வ உரை:உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

௮௱௭)

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்.

மு.வ உரை:அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

௮௱௮)

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்.

மு.வ உரை:பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

சாலமன் பாப்பையா உரை:நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

௮௱௯)

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.

மு.வ உரை:உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை:உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

௮௱௧௰)

விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.

மு.வ உரை:(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

Advertisement