» பேதைமை

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௮௱௩௰௧)

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.

மு.வ உரை:பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை:அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

௮௱௩௰௨)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.

மு.வ உரை:ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

௮௱௩௰௩)

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.

மு.வ உரை:தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

சாலமன் பாப்பையா உரை:தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

௮௱௩௰௪)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.

மு.வ உரை:நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

௮௱௩௰௫)

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.

மு.வ உரை:எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

சாலமன் பாப்பையா உரை:அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

௮௱௩௰௬)

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.

மு.வ உரை:ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

சாலமன் பாப்பையா உரை:செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

௮௱௩௰௭)

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.

மு.வ உரை:பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

சாலமன் பாப்பையா உரை:அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

௮௱௩௰௮)

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.

மு.வ உரை:பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

௮௱௩௰௯)

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.

மு.வ உரை:பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

சாலமன் பாப்பையா உரை:அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.

௮௱௪௰)

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.

மு.வ உரை:சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

Advertisement