» வினைத்திட்பம்

ஆசிரியர் : திருவள்ளுவர்.
௬௱௬௰௧)

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.

மு.வ உரை:ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

௬௱௬௰௨)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

மு.வ உரை:இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை:பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

௬௱௬௰௩)

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.

மு.வ உரை:செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

௬௱௬௰௪)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

மு.வ உரை:இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை:நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

௬௱௬௰௫)

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.

மு.வ உரை:செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

௬௱௬௰௬)

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.

மு.வ உரை:எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

௬௱௬௰௭)

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.

மு.வ உரை:உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

௬௱௬௰௮)

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.

மு.வ உரை:மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

௬௱௬௰௯)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.

மு.வ உரை:(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

௬௱௭௰)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.

மு.வ உரை:வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை:எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

Advertisement